பிரபாத் பட்நாயக்
”ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்” என்ற புத்தகத்தில், எங்கெல்ஸ் தொழிலாளி-விவசாயி கூட்டணியின் அவசியத்தைக் குறிப்பிட்டுள்ளார். 125-இல் ஜெர்மனியில் விவசாயிகள் போராட்டம் தோற்றதற்கான காரணம் நகர்ப்புற சாமானிய மக்களுடன் (ப்ளேபியர்கள்) கூட்டணி இல்லாததுதான் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.
மத்திய அரசாங்கத்தின், மோசமான மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் வீரம்செறிந்த போராட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் கடும்குளிரையும் மழையையும் பொருட்படுத்தாமல் – டில்லியை அமைதியான முறையில் முற்றுகையிட்டுக் கொண்டிருக்கும்போது, நமக்கு ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டத்தின்போது ஃபிரெடரிக் எங்கெல்ஸ் 125ல் நடத்திய ஆய்வு நினைவிற்கு வருகிறது.
அப்போது நிலவுடைமை சமூகத்திற்கு எதிராக, வர்க்கபேதமற்ற ஒரு சமூகத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிகரற்ற தலைவர் தாமஸ் மௌன்சரும் நினைவிற்கு வருகிறார்.
லெனினும் சரி, அவரைத் தொடர்ந்த மாவோவும் சரி, அல்லது மூன்றாம் உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களும் சரி, தொழிலாளர்-விவசாயி கூட்டணியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தி வந்துள்ளனர். சோசலிச சமுதாயத்திற்கான புரட்சியை நோக்கி செல்லும்போது, விவசாயிகளின் முக்கிய பாத்திரம் குறித்தும், அவர்கள் பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டணி வைப்பது குறித்தும் மார்க்சும் எங்கெல்சும் அந்த அளவிற்கு பேசவில்லை என்றும், அவர்களுக்கு இதில் நம்பிக்கையில்லை என்றும், பொதுவாக ஒரு கருத்து உள்ளது. இதற்கு ஆதாரமாக, மார்க்சின் மேற்கோள்களில் ஒன்று, அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்ற புரிதல் இல்லாமல் எடுத்தாளப்படுகிறது.
அராஜகவாதிகள் மார்க்சியத்தை எதிர்ப்பவர்களாக இருப்பதால் இதனை வெகுவசதியாக எடுத்தாள்கின்றனர். பக்குனின் (மார்க்சியத்தின் முக்கிய எதிர்ப்பாளர்- பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தினை எதிர்ப்பவர்) ஜெர்மன் கம்யூனிஸ்டுகளை பற்றி விமர்சிக்கிறார். ”ஜெர்மனியில் விவசாயிகள் போராடும்போது, ஜெர்மானிய கம்யூனிஸ்டுகள் அந்த போராட்டத்தை தாக்குதல்களை எதிர்த்த எதிர் போராட்டமாக மட்டும், பிற்போக்காகத்தான் பார்த்தார்கள். அரசினை நிர்மூலமாக்கும் போராட்டமாக அவர்களது போராட்டத்தினை பார்க்கத் தவறிவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் அரசின் அதிகாரத்தை ஆராதிப்பவர்கள்; அதனால் அவர்கள் ஒவ்வொரு மக்கள் புரட்சியையும் இப்படித்தான் பார்ப்பார்கள்” என்று குற்றம் சாட்டுகிறார்.
மார்க்சையும், எங்கெல்சையும் பற்றிய இந்த கருத்து முற்றிலும் தவறானது. ஜெர்மானிய தொழிலாளி வர்க்கத் தலைவர் பெர்டினன்ட் லாஸ்லே, 16ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் நடைபெற்ற விவசாயிகளின் எழுச்சி என்பது கொள்கைரீதியாகவும் சரி, அதன்சாரத்திலும் சரி, மிகவும் பிற்போக்குத்தனமான எதிர்வினையே அன்றி, புரட்சிகரமானது அல்ல. புரட்சி என்ற தோற்றம் மட்டுமே இருந்தது என்கிறார். லாஸ்லே-யால் முன்மொழியப்பட்ட ”ஊதியங்களின் இரும்புச்சட்டம்” எவ்வாறு தவறாக அடையாளம் காணப்பட்டதோ, அவ்வாறே லாஸ்லேயின் கருத்துகள், மார்க்ஸ் மற்றும் எங்கெல்சின் கருத்துகளாகக் கொள்ளப்பட்டன.
உண்மையில், தங்கள் மீதான தாக்குதலை எதிர்த்த எதிர்வினையாற்றுபவர்களாகவும், பிற்போக்குத்தனமானவர்களாகவும் மட்டும் விவசாயிகளைப் பார்த்து அவர்களுடன் தொழிலாளி வர்க்கக் கூட்டணி கூடாது என்கிற ஜெர்மானிய இடதுசாரிகளின் பார்வை தவறானது என்று, ஜெர்மனியில் பதினாறாம் நூற்றாண்டில் நடந்த விவசாய எழுச்சியைப் பற்றி எங்கெல்ஸ் மேற்கொண்ட ஆய்வில், துல்லியமாக விமர்சிக்கிறார். ஜெர்மானிய சமூக ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த வில்ஹெம் லிஃப்னெக்ட் போன்ற தலைவர்களால்கூட இது பகிரப்பட்டுள்ளது.
அதேபோல, ஜெர்மானியப் புரட்சி நடக்கவேண்டுமென்றால், அதற்கு தொழிலாளர்கள் – விவசாயிகள் கூட்டணி அவசியம் என்று எங்கெல்ஸ் வலியுறுத்துகிறார். 1525இல் விவசாயிகளின் எழுச்சி தோல்வியுற்றதற்குக் காரணம் அன்றைக்கு அந்த எழுச்சிகள் வெறும் ஸ்தல மட்டத்தில் எழுப்பப்பட்ட தொடர்எழுச்சிகளாக – நிகழ்வுகளாகஇருந்தன. தேசியஅளவில் அவற்றிடையே ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என்கிறார். (அன்றைக்கு ஜெர்மனி ஒரு ஒன்றுபட்ட ஜெர்மன் நாடாக இல்லை). அதுமட்டுமில்லாமல் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்துடன் – பிளேபியர்களுடன் விவசாயிகள் கூட்டணி வைத்துக் கொள்ளாததன் காரணமாக விவசாயிகளின் எழுச்சி தோல்வியடைந்தது என்கிறார். தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்த தாமர் மௌன்சர் இருந்த துருங்கியாவைப் போன்று, எங்கெல்லாம் நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்துடன் கூட்டணி வைக்கமுடியுமோ அங்கெல்லாம் வைத்திருந்தால் இன்னும் வலுவான போராட்டத்தை நடத்தியிருக்க முடியும் என்கிறார்.
1848இல் ஐரோப்பா முழுவதும் புரட்சி தோற்கடிக்கப்பட்ட பின்னணியில், 1850இல் ஜெர்மனியில் விவசாயிகளின் போராட்டம்பற்றி எழுதப்பட்டது. 1870இல் அதனுடைய மறுபதிப்பு வெளிவரும்போது, எங்கெல்ஸ் அந்த புதிய பதிப்பிற்கு ஒரு முகவுரை எழுதுகிறார். அந்த உரையில், 1848 புரட்சியையும் 1525 எழுச்சியையும் ஒப்பிட்டு, தொழிலாளர்-விவசாயக் கூட்டணியின் முக்கியத்துவம் குறித்த தனது வாதத்தை முன்வைக்கிறார்.
1870ஆம் ஆண்டு முன்னுரையில் எங்கெல்ஸ் கூறுவது: ”ஜெர்மானிய பூர்ஷ்வா வர்க்கம் மிகவும் தாமதமாக அரசியலில் முன்னுக்கு வருகிறது. ஐரோப்பாவின் பிற இடங்களில் முதலாளித்துவ வளர்ச்சியின்போதே பாட்டாளி வர்க்கமும் பெரியஅளவில் உருவாகியிருந்தது. அதனால், அந்த நாடுகளில் முதலாளித்துவம் அரசியல்ரீதியாக பின்வாங்க வேண்டிய நிலை வந்தபோது, தன்னுடைய நிலையை உறுதிசெய்துகொள்ள, பழமைவாத, தொழிலாளிவர்க்க விரோத அமைப்புகளுடன் பூர்ஷ்வா வர்க்கம் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டது. உதாரணத்திற்கு, பிரான்சில் பூர்ஷ்வாக்கள் லூயி போனபார்ட்டின் ஆட்சியைக்கூட ஏற்றுக்கொள்ள வேண்டிவந்தது. ஜெர்மனியில் பூர்ஷ்வா வர்க்கம் அரசியல் அதிகாரம் என்றவகையில் எந்தவகையிலும் முன்னிலையில் இல்லை எனும்போது, அது தனது நிலையில் பின்வாங்கும் சூழல் இல்லாதபோதும், உருவான காலம் முதலே, தனியார் சொத்துக்களை பாதுகாத்துக் கொள்வதற்காக, அது நிலவுடைமை வர்க்கத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டது.
இந்த செயல்பாட்டில், பூர்ஷ்வா வர்க்கம் தங்கள் நலனுக்காக, விவசாயிகளின் நலன்களுக்கு துரோகம் செய்தது. அது அதற்கு அவசியமாகவும் இருந்தது. விவசாயிகளின் நலன் என்பது பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்திற்கு வரும்போதுதான் சாத்தியமாகும். அதற்கு தொழிலாளி – விவசாயி கூட்டணி முக்கியமாகும். அப்படிப்பட்ட ஒரு கூட்டணி வரும்போது எண்ணிக்கையில் மிகுந்த இந்த கூட்டாளிகளால் பாட்டாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்திற்கு வருவது சாத்தியமாகும். எனவே, வரலாற்றுப் பூர்வமாகவே இந்த தொழிலாளி – விவசாயி கூட்டணி என்பது முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ கூட்டணியை முறியடிக்க அவசியமானதும், சாத்தியமானதும்கூட” என்று எழுதியுள்ளார்.
மேலும், எங்கெல்ஸ் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அன்றைக்குள்ள ஜெர்மானிய அரசியல் பொருளாதார சூழலில், பாட்டாளி வர்க்கத்துடன் எந்தெந்த பிரிவினர் எல்லாம் கூட்டணி அமைக்கலாம் என்றும் பட்டியலிடுகிறார். குட்டி முதலாளிகள், நகரங்களின் அடித்தட்டில் உள்ள பாட்டாளி வர்க்கம், சிறு விவசாயிகள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஆகியோர் ஓரணியில் கூட்டணி அமைக்கலாம் என்கிறார். கிராமப்புற மக்களிடையே, இந்த பட்டியலில் இரண்டு வகுப்புகள் மட்டுமே உள்ளன: சிறு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் (எங்கெல்ஸ் விவசாய வர்க்கங்களை விவரிக்க பணக்கார, நடுத்தர மற்றும் ஏழை விவசாயிகள் என்ற பதங்களைவிட பெரிய, நடுத்தர மற்றும் சிறிய விவசாயிகள் என்ற பதங்களைப் பயன்படுத்துகிறார். மேலும், அவர் விவசாயத் தொழிலாளர்களை நிலத்தில் வேலைசெய்யும் கூலித் தொழிலாளர்கள் என்கிறார்).
அவர் தனது வாதத்தை பின்வருமாறு விளக்குகிறார்:
”(பெரிய விவசாயிகள் பூர்ஷ்வா வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்) சிறு விவசாயிகள் ஒரே படித்தானவர்கள் அல்ல. அவர்கள் பண்ணையடிமைகளாக நிலப்பிரபுக்களுக்கும் எஜமானர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். அல்லது குத்தகைக்கு நிலம் எடுத்தவர்களாக இருப்பார்கள். குத்தகைக்கு எடுத்தவர்களின் நிலையும் கிட்டத்தட்ட பண்ணையடிமைகளின் நிலையை ஒத்ததாகவே இருக்கும். வாடகை அல்லது குத்தகை பணம் மிக அதிகமாக இருக்கும். ஓரளவிற்கு பயிர் விளையும் காலத்திலேயேகூட ஒரு விவசாயியும் அவனது குடும்பமும் ஏதோ பிரச்சனையில்லாமல் இருக்க முடியும். ஒருவேளை நல்ல விளைச்சல் இல்லாமல் போனால் அந்த விவசாயி பட்டினியில் வாடும் நிலைக்குத் தள்ளப்படுவார். அவரால் குத்தகை பணம் கொடுக்க முடியாமல் போகும்போது அந்த நிலப்பிரபுவின் கருணையில்தான் இந்த விவசாயி வாழவேண்டும். பூர்ஷ்வா வர்க்கத்தினர் இவர்களை பண்ணையடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க மாட்டார்கள். ஏதேனும் நிர்ப்பந்தம் ஏற்பட்டால் ஒழிய அவர்கள் இதனைப்பற்றி சிந்திக்கக்கூட மாட்டார்கள். எனவே, இந்த குத்தகை விவசாயிகளுக்கு விடுதலை என்பது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே சாத்தியம் என்று அறிவுறுத்தி அவர்களைத் திரட்ட முடியும்.
இன்னும் சில விவசாயிகளிடம் சிறு துண்டு நிலம் இருக்கும். பெரும்பாலும் அவர்கள் கடன்சுமைக்கு ஆளாகியிருப்பார்கள். அவர்கள் அதிகவட்டிக்குக் கடன்கொடுக்கும் வட்டிக்காரர்களை நம்பியிருக்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். இவர்களின் நிலையும் குத்தகை விவசாயிகளின் நிலையை ஒத்ததாகவே இருக்கும். அவர்களுக்குக் கிடைப்பது மிகக் குறைந்த கூலியாகவே இருக்கும். ஏனென்றால் பயிர்விளைச்சல் எப்படி இருக்கும் என்று சொல்லமுடியாது. இவர்கள் பூர்ஷ்வாக்களை நம்பியிருக்க முடியாது. ஏனென்றால், அவர்கள்தான் இந்த வட்டிக்காரர்கள்-முதலாளித்துவ கொள்ளைக்காரர்கள். அவர்கள் சிறுவிவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சி எடுப்பவர்கள்.
எனினும், உண்மையில் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமானதாக இல்லாமல் கடன் கொடுத்தவர்களுக்கானதாக மாறிப்போனாலும் கூட, விவசாயிகள் தங்களுடைய சொத்தாக எண்ணி அதனை மீட்டுவிடும் நம்பிக்கையுடன் உழைக்கிறார்கள். மக்களின் அரசாங்கம் அனைத்து அடமானங்களையும் அரசு கடனாக மாற்றி, அதன்மூலம் வாடகையை குறைத்தால் மட்டுமே, அவர்கள் கடன்கொடுத்த வட்டிக்காரரிடமிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள முடியும் என்பதை இந்த விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவது அவசியமாகிறது. இது தொழிலாளி வர்க்கத்தால் மட்டுமே நிறைவேற்றப்பட முடியும் என்பதையும் அவர்களுக்கு விளக்க வேண்டியுள்ளது.
நடுத்தர மற்றும் பெரிய நிலஉடமையாளர்கள் எங்கிருந்தாலும், நிலத்தில் வேலைசெய்யும் கூலித்தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஜெர்மனியின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி முழுவதிலும் இதுதான் நிலைமை. இதுமாதிரியான இடங்களில்தான் நகரத்தின் தொழில்துறை தொழிலாளர்கள் தங்களது இயற்கையான கூட்டாளிகளைக் கண்டெடுக்கின்றனர். ஒரு முதலாளி தொழில்துறை தொழிலாளியை எதிர்ப்பதுபோல, பெரிய நிலஉரிமையாளர் அல்லது பெரிய குத்தகைதாரர் நிலத்தின் கூலித்தொழிலாளர்களை – விவசாயக் கூலிகளை எதிர்ப்பவராக இருக்கிறார். ஒருவருக்கு உதவும் நடவடிக்கைகள் மற்றவருக்கும் உதவ வேண்டும். தொழில்துறை தொழிலாளர்கள் முதலாளித்துவத்தின் மூலதனத்தை, அதாவது மூலப்பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள், உற்பத்திக்குத் தேவையான உணவுப் பொருட்கள் போன்றவற்றை சமூகத்தின் உடமையாக்குவதன் மூலம் – அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்வகையில் பொதுவாக்குவதன் மூலம் தங்களை விடுவித்துக் கொள்ளமுடியும். இதேபோல, விவசாய கூலித்தொழிலாளர்கள் பெரிய விவசாயிகள் மற்றும் அவர்களைவிட இன்னும் பெரிய நிலப்பிரபுத்துவ எஜமானர்களின் கைகளில் இருந்து நிலத்தை விடுவித்து, அதாவது தனியார் சொத்துடமையிலிருந்து விடுவித்து, சமூகத்தின் சொத்தாக நிலம் மாற்றப்படும்போதுதான் அவர்களின் கொடூரமான துயரத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். அப்படி சமூக உடமையாக்கப்பட்ட அந்த நிலத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்களின் கூட்டுறவு அமைப்பு ஒரு பொதுவான அடிப்படையில் பயிரிட முடியும்” என்று எங்கெல்ஸ் வாதிடுகிறார்.
எங்கெல்ஸ் இரண்டு கட்ட புரட்சியை பற்றி ஆலோசிக்கவில்லை. அவர் சொல்வது புரட்சி ஒரேகட்டத்தில் நடத்தப்படவேண்டும் என்றுதான். அந்தப் புரட்சிதான், சோசலிசப்புரட்சி. அதாவது புரட்சியின் மறுநாளிலிருந்து, எல்லா முயற்சிகளும் சோசலிசத்தின் வளர்ச்சியை நோக்கியதாகவே இருக்க வேண்டும். சோசலிசத்தை நோக்கிய இடைப்பட்ட காலத்தில் முதலாளித்துவத்தை கட்டமைக்க இடம் கொடுத்துவிடக் கூடாது. அதனால்தான் அவர் பெரிய விவசாயிகளை மட்டுமல்லாமல், நடுத்தர விவசாயிகளையும்கூட புரட்சிகர கூட்டணிகளின் பட்டியலில் இருந்து விலக்கி வைக்கிறார். நிலப்பிரபுத்துவத்தை உடைத்தவுடன், நிலப்பிரபுக்களின் தோட்டங்களை கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, தீவிர நில விநியோகத்தை விட நிலத்தையே தேச உடமையாக்க வேண்டும் என அவர் பரிந்துரைக்கிறார்.
தெளிவாகச் சொல்வதென்றால், தொழிலாளர்-விவசாய கூட்டணியின் துல்லியமான கலவை என்பதும், அதன் துல்லியமான நிகழ்ச்சிநிரல் என்பதும், நாட்டிற்கு நாடு மாறுபடும். ஒவ்வொரு நாட்டின் திட்டவட்டமான நிலைமைகளைப் பொறுத்து அமையும். தவிர, இன்றைய சூழலில், விவசாயிகளின் பிரச்சனை என்பது நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல, உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு வேளாண் வணிகங்களின் பெரும் மூலதனத்திடமிருந்தும் விடுதலையை பெறுவதாக இருக்க வேண்டும்.
எனவே, எங்கெல்சும் மார்க்சும் ஒரு பொருத்தமான தொழிலாளி – விவசாயக் கூட்டணி என்பது சோசலிச சமூகத்தை கட்டமைப்பதற்கு ஒரு அடிப்படையான முக்கியமான நிபந்தனை என்று அங்கீகரித்துள்ளனர். (இந்தப் புத்தகம் ஆரம்பத்தில் எங்கெல்ஸின் நிலைப்பாட்டை மார்க்சே வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட நியூரைனிஷ் ஜெய்துங் இதழில்கட்டுரைகளாக வெளிவந்தது)
தமிழில்: ஆர். எஸ். செண்பகம்.
Leave a Reply