மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகப்பட்டினம் காங்கிரஸ் நிறைவேற்றிய அரசியல் தீர்மானம் சமகால நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்த சில பகுதிகளை வாசகர்களின் கவனத்திற்காக கீழே தருகிறோம். இந்த இதழில் வெளிவந்துள்ள ‘ஒரு விரல் புரட்சி’ கட்டுரையின் தொடர்ச்சியாக இதை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஆசிரியர் குழு
10.1 இந்திய சூழலில், இன்றைய இடைமாற்ற காலத்தில் வர்க்க சக்திகளின் பலாபலம் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக மாறியுள்ள நிலையில் நமது நீண்ட காலக் குறிக்கோளை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்திய மக்கள் மத்தியில் வர்க்க சக்திகளின் பலாபலன்களில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு பலரும் ஒன்றுபட்டு முயற்சிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்கு இன்று நாம் வாழும் மெய்யான சூழல்களில் நமது சமுதாயத்தில் வர்க்கப் போராட்டத்த கூர்மைப்படுத்துவதற்கு மக்களின் ஆதரவு பெற்ற சக்திமிக்க மக்கள் போராட்டங்களை கட்டவிழ்த்துவிடுவது அவசியமாகிறது.
10.2 நாடாளுமன்றத்துக்குள்ளேயும், வெளியேயுமான வடிவங்கள்: இக்கடமையை நிறைவேற்றுவதற்கு மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டம் பின்வருமாறு குறிப்பிடுகிறது :
“மக்கள் ஜனநாயகம் மற்றும் சோஷலிச சமூக மாற்றத்தை அமைதியான வழியில் அடையவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) விழைகிறது. வலிமையான வெகுஜன புரட்சிகர இயக்கத்தை வளர்த்தெடுப்பதன் மூலமும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் நடைபெறுகிற போராட்ட வடிவங்களை இணைப்பதன் மூலமும் பிறபோக்கு சக்திகளின் எதிர்ப்பை முறியடிக்க தொழிலாளி வர்க்கமும் அதன் கூட்டாளிகளும் முயல்வதோடு, அமைதியான வழிமுறைகளில் இந்த உருமாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சிக்கும். எனினும் ஆளும் வர்க்கங்கள் தங்களுடைய அதிகாரத்தை ஒருபோதும் தாமாக விட்டுத்தர மாட்டார்கள் என்பதை எப்போதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் விருப்பத்திற்கு மாறாக சட்டத்திற்கு புறம்பாகவும், வன்முறை மூலமாகவும் இதைப் பின்னுக்குத் தள்ள அவர்கள் முயல்வார்கள். எனவே, நாட்டின் அரசியல் வாழ்க்கையில் ஏற்படக் கூடிய திருப்பங்கள் மற்றும் திருகல்களை கவனத்தில் கொண்டு அனைத்து சூழ்நிலைகளையும் சந்திக்கின்ற விதத்தில் புரட்சிகர சக்திகள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்”.
10.3 இவ்வாறு நடைமுறையில் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயுமான நடவடிக்கைகளின் முறையான சேர்க்கையை எட்டுவது என்பது இந்த நிகழ்காலச்சூழலில் கட்சியின் முன் உள்ள ஒரு முக்கிய கடமையாகும். நமது கட்சித்திட்டம் கூறுகிறது: “இந்தியாவில் தற்போதுள்ள நாடாளுமன்ற முறை முதலாளி வர்க்க ஆட்சியின் ஒரு வடிவமாக இருந்தபோதிலும், மக்களின் முன்னேற்றத்துக்கான ஒரு அங்கமாகவும் அது உள்ளது. மக்கள் தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், அரசு விவகாரங்களில் ஓரளவு தலையிடுவதற்கும், ஜனநாயக மற்றும் சமூக வளர்ச்சிக்கான போராட்டங்களை நடத்துவதற்கும், மக்களை அணி திரட்டுவதற்கும், தற்போதுள்ள நாடாளுமன்ற முறை சில வாய்ப்புகளை வழங்குகிறது”. (பத்தி 5.22) ஆனால் பெரும் மூலதனத்தின் வளர்ந்து வரும் ஆற்றலும், அரசியலுக்குள் பெரும் பணம் நுழைவதும், அரசியல் குற்றவாளிகள் மயமாவது அதிகரிப்பதம் ஜனநாயக நிகழ்முறைகளை திரித்தும் சீர்குலைத்தும் வருகின்றன.
10.4 விஜயவாடாவில் நடைபெற்ற மத்திய குழுவின் விரிவடைந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம் குறிப்பிடுவதைப் போல, “நவீன தாராளமயம் மற்றும் உலக நிதி மூலதனத்தின் தாக்கத்தால் நாடாளுமன்ற ஜனநாயகமே அரிக்கப்பட்டு வருகிறது. பணம் மற்றும் அரசியலில் குற்ற நடவடிக்கைகளால் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதுடன், அதனோடு கூடவே ஜனநாயக உரிமைகள் மீதான தடைகள் அதிகரித்து வருகின்றன. ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பொது வேலை நிறுத்தங்களை நடத்துவதற்கான உரிமையானது நிர்வாக நடவடிக்கைகளாலும், நீதிமன்ற குறுக்கீடுகளாலும் வரம்பிடப்படுகின்றன. மக்களின் உரிமைகளின் மீதான இத்தகைய தடைகளுக்கு ஆதரவான கருத்தைப் பரப்பவும் நியாயப்படுத்தவும் தொழில் நிறுவன ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.”(பத்தி 2.35)
10.5 ஜனநாயக அமைப்பு முறை மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கும், விரிவுபடுத்துவதற்குமான போராட்டமும், மக்கள் ஜனநாயகத்தின் கீழ் ஒரு உயர்ந்த ஜனநாயக வடிவத்துக்குச் செல்வதற்கான போராட்டமும் முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ அரசுக்கு எதிராக உழைக்கும் மக்கள் நடத்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். நமது கட்சித்திட்டம் கூறுகிறது: “மக்கள் நலனைப் பாதுகாக்க நாடாளுமன்ற ஜனநாயக முறை மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு எதிராக விடப்பட்டுள்ள இத்தகைய அச்சுறுத்தல்களை முறியடிக்க வேண்டியது ஆகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இத்தகைய நாடாளுமன்ற, ஜனநாயக அமைப்புகளை நாடாளுமன்றத்திற்கு வெளியிலான நடவடிக்கைகளுடன் இணைத்து திறமையான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” (பத்தி 5.23)
10.6 இத்தகைய சமநிலைப் பார்வையுடன் மக்கள் இயக்கங்களை வலுப்படுத்துவதற்கு நாடாளுமன்ற அரங்கப்பணிகள் பயன்படுத்தப்பட வேண்டும். தற்போதைய முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ ஒழுங்கமைவுக்கு ஒரு மாற்றை உருவாக்குவதற்காக, ஒரு சக்திமிக்க இயக்கத்தை வளர்ப்பதற்கு, நாடாளுமன்றப் பணியை நாடாளுமன்றத்துக்கு வெளியேயான செயற்பாடுகளுடனும், போராட்டங்களுடனும் இணைக்க வேண்டும்.
10.7 எனினும், நிகழக்கூடிய சக்திமிக்க பிறழ்வுகளுக்கு எதிராக பாதுகாப்புடன் இருப்பதை நாம் முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். பல வடிவங்களில் இவை வெளிவரும். நாடாளுமன்ற ஜனநாயகம் தன்னளவிலேயே மக்கள் மத்தியில் பிரமைகளை ஏற்படுத்துகிறது. இது குறிப்பாகஅரசு வழங்கும் சலுகைகள் வர்க்க, வெகுஜன போராட்டங்களை மட்டுப்படுத்தவும், பலவீனப்படுத்தவும் முயற்சிக்கின்றன. இத்தகைய பிரமைகளுக்கு எதிராகப் போராடுவது மற்றும் இத்தகைய பிரமைகளைப் பயன்படுத்தி தங்களுடைய வர்க்க ஆட்சிக்கு மக்களை அடிபணியச் செய்வதற்கான ஆளும் வர்க்கங்களின் சூழ்ச்சிகளை சக்திமிக்க வகையில் அம்பலப்படுத்தும் அதே வேளையில், சுரண்டப்படும் மக்களை புரட்சிகர நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான உத்வேகத்தை தூண்டிவிடக்கூடிய சரியான உத்திகளைப் பின்பற்றுவது நம்முன் உள்ள முக்கிய கடமையாகும்.
10.8 மேலும் அமைதியான இடைமாற்றம் குறித்த பிரமைகளும் பலமடையும். இதுகுறித்து நமது மேம்படுத்தப்பட்ட கட்சித்திட்டத்தில் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். கட்சியில் நாம் முறையாக மேற்கொண்டு வரும் நெறிப்படுத்தும் இயக்கமானது நாடாளுமன்ற சந்தர்ப்பவாதத்துக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டத்தை வலியுறுத்துகிறது. நாடாளுமன்றப் பணியுடன் நாடாளுமன்றத்துக்கு வெளியேயான பணிகளையும், பயனுள்ள விதத்தில் இணைக்க வேண்டுமெனில், நாம் நாடாளுமன்றவாதம் மற்றும் நாடாளுமன்ற பிரமைகளை வளர்த்துக் கொள்வதிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
சுயேச்சையான நடவடிக்கையை வலுப்படுத்துவோம்
2.140 இன்றைய சூழ்நிலை என்பது, இடதுசாரிகள் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், கட்சியின் வலுவான தளமான மேற்கு வங்கத்தில் கட்சி தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் உள்ளது. எனவே, மற்ற மாநிலங்களில் கட்சியின் செல்வாக்கு மற்றும் தளத்தை விரிவுபடுத்துவதை அதிமுக்கியமான பணியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதை நிறைவேற்ற கட்சியின் சுயேச்சையான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதும், விரிவுபடுத்துவதும் அத்தியாவசியமானது ஆகும். கட்சியை முன்னெடுத்துச் செல்ல இதுவே திறவுகோலாகும். வெகுஜன மக்களை செயலூக்கப்படுத்தவும், இயக்கங்கள் மற்றும் போராட்டங்களில் இணைவதற்கு மக்களது உணர்வு மட்டத்தை உயரத்திற்குக் கொண்டு செல்லவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளில் கட்சியின் சுயேச்சையான நடவடிக்கை அவசியமானதாகும். பரந்துபட்ட இயக்கங்களின் மூலம் மக்களை அணிதிரட்ட, வெகுஜன அமைப்புகள் சுயேச்சையான அமைப்புகளாக செயல்பட்டு மக்களை அணிதிரட்டுவதும், அமைப்பு ரீதியாக உருவாக்குவதும் அவசியமாகும்.
2.141 நமது வர்க்கக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் அரசியல் தத்துவார்த்தப் பணி வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அனைத்து முக்கிய பிரச்சனைகளிலும் கட்சியின் அரசியல் ரீதியான தலையீடு இருக்க வேண்டும். இனிவரும் நாட்களில் சுயேச்சையான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொள்ளவும், அரசியல் தளத்தைச் சுற்றி வெகுஜன மக்களைத் திரட்டவும் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் இதர கட்சிகளிடமிருந்து கட்சியை இனம்பிரித்துக்காட்ட இது உதவும். முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அதன் அரசியலை சித்தாந்தரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் கட்சி முறியடிக்க வேண்டும். புதிய பகுதிகளுக்கும், புதிய பிரிவுகளுக்கும் கட்சியின் அரசியல் பிரச்சாரம் கொண்டு செல்லப்பட வேண்டும். தேர்தல் பங்கேற்பு மற்றும் நாடாளுமன்ற அரங்க செயல்பாடு என்பது வெகுஜன இயக்கங்களை வளர்ப்பது மற்றும் அரசியல்ரீதியாக மக்களை அணிதிரட்டுவது ஆகிய பணிகளோடு சரியான முறையில் பொருத்தப்படவேண்டும்.
2.142 அடிப்படை வர்க்கங்களின் மத்தியில் கட்சிப் பணிக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். விவசாயிகள், கிராமப்புற ஏழை மக்களிடையே பணியாற்றுவதிலும், வர்க்க மற்றும் வெகுஜன அமைப்புகளைக் கட்டுவதிலும் உள்ள பலவீனங்கள் களையப்பட வேண்டும். உற்பத்தி மற்றும் கேந்திர தொழிற்சாலைகளில் பணியாற்றும் முறைசார் தொழிலாளர்களிடையே கட்சியின் செல்வாக்கை விரிவுபடுத்த வேண்டும். முறைசாராத் தொழிலாளர்களை அணி திரட்டுவதற்கும், அவர்களிடையே அரசியல் பணியாற்றுவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும், தொழிலாளி – விவசாயி கூட்டணியினை உருவாக்கி வளர்ப்பதில் கட்சி கவனம் செலுத்த வேண்டும்.
2.143 தலித்துகள், சிறுபான்மையோர் மற்றும் பெண்கள் சந்திக்கும் பிரத்யேக பிரச்சனைகளை பொதுவான ஜனநாயக மேடையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளவேண்டும்.
2.144 உள்ளூர் பிரச்சனைகளில இடைவிடாத போராட்டத்தை நடத்துமாறு கட்சியின் கடந்த இரு அகில இந்திய மாநாடுகளும் அழுத்தமாக வலியுறுத்தியபோதும் இந்தப் பணி போதிய அளவு மேற்கொள்ளப் படவில்லை. இந்த பலவீனம் களையப்பட வேண்டும். நவீன தாராள மயமாக்கல் காரணமாக மக்களின் வாழ்வாதாரம், நிலம், பொது விநியோக அமைப்பின் மூலம் உணவுப்பொருள்கள் வழங்கப்படுதல், வேலை, பாதுகாப்பு, நியாயமான ஊதியம், சுகாதாரம், கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பிரச்சனைகள் முன்னுக்கு வந்துள்ளன. இத்தகைய மக்களின் பலதரப்பட்ட பிரச்சனைகளைக் கையிலெடுத்து உள்ளூர் அளவில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருவதோடு, மாநில அளவிலான இயக்கங்களாகவும் நடத்திட வேண்டும். நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளுக்கெதிராக அகில இநதிய அளவிலும், மாநில அளவிலும் இயக்கங்கள் நடத்தப்பட வேண்டும்.
2.145 இளைஞர்கள் மற்றும் வேலையில்லாதவர் மத்தியில் கட்சியின் அரசியல் விரைவுபடுத்தப்பட வேண்டும். நகர்ப்புறப் பகுதியில் குறிப்பாக குடிசைப்பகுதி ஏழைமக்கள் வசிக்கும் பகுதியில் பணியாற்ற கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். மக்களைப் பாதிக்கக்கூடிய சுற்றுச்சூழல் பிரச்சனைகளைக் கையில் எடுத்து போராட வேண்டும். குறிப்பாக ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
Leave a Reply