மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


லெனின் வாசிப்பு எனும் புரட்சிகர பணி


என்.குணசேகரன்

“என்ன செய்ய வேண்டும்?” என்பது லெனினது நூல் தலைப்பு. அது, அவரது வாழ்க்கைத் துடிப்பாகவும் இருந்தது. ‘என்ன. செய்ய வேண்டும்?’ -கேள்வியை இடையறாது எழுப்புவதும், செயல் வியூகத்தை வகுத்து செயல்படுவதும்தான் லெனினது மகத்துவம்!

சொந்த வாழ்க்கையில் சொந்த நோக்கங்கள் அவருக்கு இருந்ததாக எதிரிகள்கூட எழுதவில்லை. பாட்டாளி வர்க்க விடுதலை, உலகப் பாட்டாளி வர்க்க புரட்சிதான் அவரது மூச்சு.


1917-பிப்ரவரியில் புரட்சி நடந்து, முதலாளித்துவ அரசு பதவியேற்ற, அந்த நொடியிலிருந்து, அடுத்து சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேற வேண்டும் என்று செயல்பட்டார். அப்போது வெளிநாட்டில் இருந்த அவர், ரஷ்யாவுக்கு திரும்புகிற போதும்கூட, பெண் போராளி கொலந்தாயிற்கு அனுப்பிய குறிப்பில் “அதிகமான புரட்சிகர திட்டங்கள், வியூகங்கள் தேவை!!அதிகமான புரட்சிப் பிரச்சாரம் தேவை!! சர்வதேச பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கான கிளர்ச்சியும் போராட்டமும் தேவை!! அதற்கும் மேலாக, சோவியத்துகள் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்!!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் இரண்டு முறை எதிரிகளால் சுடப்பட்டு இருக்கிறார். அவருடைய உடலில் ஒரு குண்டு எடுக்கப்படவில்லை. தனது உடல்நலத்தையும் கூட பொருட்படுத்தாமல் செயல்பட்ட அவரை பல விமர்சகர்கள் ‘மனித வாழ்க்கையின் மீது எவ்வித கருணையும் இல்லாதவர்’ என்று எழுதியுள்ளனர். இது எவ்வளவு தவறான கருத்து என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன.
அவர் தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அவரை சந்திக்க வருபவர்களும், பல கூட்டங்களிலும் அவருக்கு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுவதுண்டு. இந்த பரிசுகள் அத்தனையையும் அவர் உடனடியாக குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்.

மாற்றுத் திறனாளிகளான இளைஞர்கள், இளம் பெண்களுக்கு தேவையான சிறப்பு உதவிகளை கட்டாயமாக செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார்.

ஒருமுறை அவர் படம் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியை ஒரு பெண் கிழித்தெறிந்திருக்கிறார். காவல்துறை அவரை கைது செய்தது. லெனினுக்கு அந்தத் தகவல் கிடைத்தவுடன் இதற்கெல்லாம் கைது செய்யக் கூடாது என்று கண்டித்து அவரை விடுவிக்க செய்தார்.


மாக்சிம் கார்க்கி அவரை மாமுனிவர் என்று புகழாரம் சூட்டினார்.” கடவுளாக்கும் வேலையெல்லாம் கூடாது’ என்று சொல்லி கார்க்கியை லெனின் கடிந்து கொண்டார்.அதுமட்டுமல்லாது இந்தப்போக்கு வளரக் கூடாது என்பதற்காக அரசியல் தலைமைக் குழு சார்பில் தனது உற்ற நண்பரான கார்க்கியை கண்டிக்கவும் செய்தார்.


அவரது 50வது பிறந்தநாள் 1920 ஆம் ஆண்டு வந்தபோது, அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார்.அவருக்கு ஏராளமான வாழ்த்துக் கடிதங்கள், தந்திகள் குவிந்தன. பிறந்த நாள் கூட்டம் மாஸ்கோவில் நடந்தது. அவரைப் புகழ்ந்து உரை நிகழ்த்தினால், அவருக்குப் பிடிக்காது என்பதால், பேசிய தலைவர்கள் புகழ்ச்சிகள் அதிகம் இல்லாமல் பேசினர். முடிவாக, பேசிய லெனின் தன்னைப் புகழாமல் இருந்ததற்கு அனைவருக்கும் நன்றி என்றார்.


புரட்சிகர சிந்தனை தொகுப்பு
லெனினுடைய எழுத்துக்கள் அனைத்தையும் தொகுத்து வெளியிட வேண்டும் என்று காமனாவ் கூறியபோது,’ முழுக்க முழுக்க தேவையற்ற வேலை’ என்று குறிப்பிட்டார். ‘பழைய எழுத்துக்களை மீண்டும் பிரசுரித்தால் நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருந்திருக்கிறோம் என்று வேண்டுமானால் தெரிந்து கொள்ளலாம்” என்று நகைச்சுவையாக குறிப்பிட்டு, அதனை மறுத்தார்.


பிறகு அவரிடம் ‘உங்கள் எழுத்தை பிரசுரிக்காமல் இருந்தால் எதிரிகளுடைய எழுத்துக்களை வருங்கால தலைமுறை படிப்பார்கள்” என்று சக தோழர்கள் பிடிவாதமாக இருந்ததால், அதனை ஏற்றுக்கொண்டார். அவர்கள் உறுதியாக இருந்ததனால்தான் உலகிற்கு புரட்சிகர சிந்தனை பெட்டகம் கிடைத்தது. 45 தொகுதி நூல்கள் உள்ளன. ஒவ்வொன்றும், ஏறத்தாழ 650 பக்கங்கள் கொண்டவை. இன்னமும் அவரது எழுத்துக்கள் ஏராளமாக வெளிவர வேண்டியுள்ளது.


தன்னுடைய சக தோழர்களிடம் லெனின் கடுமையாக நடந்து கொள்வார் என்றும் எழுதுகிறார்கள். அவரோடு கட்சிக் அமைப்புக் கொள்கைகள் விஷயத்தில் கடுமையாக முரண்பட்ட மார்ட்டாவ் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். அதேபோன்று டிராட்ஸ்கி, ஸ்டாலின், புகாரின், காமனாவ் போன்ற பலர் மீது அவர் கடும் கொள்கை வேறுபாடு கொண்டு, கடுமையாக விமர்சித்திருக்கிறார். ஆனால் அவர்கள் அனைவருமே சோஷலிச உருவாக்கத்தில் முழுமையாக ஈடுபட, அவர்களை முக்கிய பொறுப்புக்களில் அமர்த்தினார். லெனினுக்கு விருப்பு வெறுப்புகளை விட சோஷலிச லட்சியமே பிரதானம்.


ஒரு முறை விளாதிமீர் போன்ச் என்ற அலுவலர் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு ரஷ்ய அதிபரான லெனினுடைய ஊதியத்தை 500 ரூபிளிலிருந்து, 800 ரூபிள் என்று உயர்த்தினார். இதற்காக அவர் மிக கடுமையாக கண்டிக்கப்பட்டார். தனக்கு ஊதிய உயர்வு கொடுத்ததற்காக ஒருவரை ஊதிய உயர்வு பெற்றவர் தண்டித்தது, வரலாற்றிலேயே முதல் தடவையாக நடந்தது.


லெனினுடைய வாழ்க்கையை வெறும் சம்பவங்களின் தொகுப்பாக வாசிப்பது பலன் தராது. கார்ல் மார்க்சின் பெயரால் அழைக்கப்படும் ஒரு தத்துவத்தை, ஒரு நாட்டில் புரட்சியை நிகழ்த்தும் நடைமுறையோடு இணைத்த மகத்தான வாழ்க்கை லெனினது வாழ்க்கை. ஒரு நாட்டில் நிகழ்ந்த புரட்சி அனுபவத்தில் உலகப் புரட்சிக்கான பொதுக் கோட்பாடுகளை உருவாக்கிய படைப்பாற்றலின் சிகரம் லெனினது வாழ்க்கை. இந்த வகையில் லெனின் வாசிப்பு நிகழ வேண்டும்.


மார்க்சியம் ஐரோப்பிய தத்துவமா?
உலக கம்யூனிஸ்ட் இயக்கங்களின் ஒரு மிகப் பெரிய சவாலாக நீடித்து வருகிற ஒரு பிரச்னை உண்டு. அது என்ன பிரச்னை? தத்துவத்தையும் நடைமுறையையும் இணைத்து, எவ்வாறு வெற்றியை சாதிப்பது என்பதுதான் ஒரு கம்யூனிஸ்ட் இயக்கம் எதிர்நோக்கும் முக்கிய சவால். இதற்கு லெனினியத்தில் ஆழமான பயிற்சி தேவைப்படுகிறது.


லெனினது எழுத்துக்களை வாசித்து, சமகால பிரச்சனைகளோடு பொருத்தி பார்க்கும் நடைமுறையே ஒரு புரட்சிகரமான பணி.


கல்வியாளர்கள், அறிவுஜீவிகள் என அறியப்படுகிற பலர், மார்க்சியம் பற்றி ஒரு கருத்தை தொடர்ந்து எழுதி வருகின்றனர். ‘மார்க்ஸ் ஐரோப்பிய நிலைமைகளில் எழுதிய கருத்துக்கள் எல்லாம் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தாது; அது மேலைநாட்டுத் தத்துவம்; கீழை நாடுகளுக்குப் பொருந்தாது’ என்ற கருத்துக்களை பல கோணங்களில் வாதிட்டு வருகின்றனர்.


மார்க்ஸ் ஆங்கிலேய தொழிற்சாலை உற்பத்தி முறைகளை ஆராய்ந்துதான் பல கண்டுபிடிப்புக்களை உருவாக்கினார் என்பது உண்மையே. ஆனால் பிரிட்டிஷ் நாட்டு தொழில் நிலைமைகளில் துவங்கி உலக முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சியையும், அது இயங்குகிற அடிப்படை விதிகளையும் உருவாக்கினார். குறிப்பான ஒரு நிகழ்விலிருந்து பொது விதிகளுக்கு வந்தடைந்த மார்க்சின் மேதைமையை மேலோட்டமான சிந்தனைக்கு ஆட்பட்ட அறிவுஜீவிகளால் உணர முடியாது.


அதே போன்று, லெனின், ரஷிய நாட்டின் சமூகப் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பல முடிவுகளுக்கு வந்தது உண்மைதான். ஆனால் உலகளாவிய சோஷலிச மாற்றம் நோக்கிய, புரட்சிக்கு வழிகாட்டுகிற புரட்சியின் பொதுக் கோட்பாடுகளை கண்டறிந்தவர் லெனின். லெனினியத்தின் மகத்துவம் இது. இதனையும், ஆழ்ந்த வாசிப்பு இல்லாத சாதாரண ‘அறிவுஜீவிகள்’ உணர வாய்ப்பில்லை.


முதலாளித்துவத்தின் அழிவும், புரட்சியின் பிறப்பும்
மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் லுகாக்ஸ் “லெனினது ஒருங்கிணைந்த சிந்தனையைப் பற்றிய ஆய்வு (Lenin: A study in the Unity of His thought) என்ற நூலினை எழுதினார். நிலைத்த புகழ்பெற்ற இந்த நூல் அடுத்தடுத்த மார்க்சிய தலைமுறையை லெனினியத்தில் நெறிப்படுத்தியுள்ளது.
ஜார்ஜ் லுகாக்ஸ் எழுதினார்: “லெனின் எப்போதுமே பிரச்சனைகளை இந்த சகாப்தத்தின் பிரச்னைகள் என்ற முழுமைத்தன்மையுடன் பார்த்தார்”என்று எழுதுகிறார்.


இதில் முக்கிய சில அம்சங்கள் அடங்கியிருக்கின்றன.
முதலாளித்துவத்தின் இறுதிக் கட்டமாக தற்போதைய காலம் விளங்குகிறது.
இது, பாட்டளி வர்க்கத்திற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, முதலாளித்துவ வர்க்கத்திற்கும், பாட்டாளி வர்க்கத்திற்கான இறுதிப் போராட்டத்தை நடத்திட எண்ணற்ற வாய்ப்புக்களை தவிர்க்க இயலாதவாறு இன்றைய நிலை நமக்கு ஏற்படுத்தி தருகிறது.
இந்த இறுதிப் போராட்டமே, மனித விடுதலைக்கு இட்டுச்செல்லும்.
இதுவே லெனினிய சிந்தனைகளின் அடிப்படை.


வரலாறு உருவாக்கியுள்ள இன்றைய காலம், முதலாளித்துவத்தின் இறுதி கட்டம் என்ற அழுத்தமான இடத்திலிருந்துதான் லெனின் தனது அனைத்துச் செயல்பாடுகளையும் அமைத்துக்கொண்டார். புரட்சியை கனவு என்கிற நிலையிலிருந்து, புரட்சியை சாத்தியமான ஒன்றாக அணுகுகிற தனிச்சிறப்பு கொண்டது லெனினியம்.
புரட்சி என்ற விரிந்த பார்வையிலிருந்து அன்றாடப் பிரச்னைகளை அணுகும் கலையை லெனினியம் கற்றுத் தருகிறது.
புரட்சி எனும் சமூக சித்திரம்
முதலாளித்துவத்தின் அழிவும்,புரட்சியின் பிறப்பும் தவிர்க்க இயலாதது என்ற முடிவினை மார்க்சிய வழியில் வந்தடைந்த லெனின், அடுத்து சில கேள்விகளை எழுப்பினார். புரட்சி எனும் சமுக சித்திரத்தை தீட்டிடும் பணியினை யார் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்? எந்த வர்க்கம் புரட்சிக்கு தலைமையேற்று வெற்றி வாகை சூடிடும்?
லெனினுக்கு முந்தைய தலைமுறையினரும் இதனை சிந்தித்துள்ளனர். பொதுப்படையாக, புரட்சிக்கு,“மக்கள் தலைமை”ஏற்பார்கள் என்று தெளிவற்ற கருத்துக்களை அவர்கள் கொண்டிருந்தனர். ரஷியாவில் தோன்றிய நரோத்னியம் இப்பிரச்னையை வெகுவாக குழப்பிக்கொண்டிருந்தது.


முதலாளித்துவத்தை அழிக்கும் வல்லமையும் ஆற்றலும் கொண்டது பாட்டாளி வர்க்கமே என்ற முடிவுக்கு ஏற்கனவே மார்க்ஸ் வந்தடைந்தார். அதனை முதலாளித்துவம், போர்வெறி கொண்டு, நாடுகளை பங்குபோட்டுக்கொள்ளும் மூர்க்கத்தனத்தோடு, ஏகாதிபத்தியமாக வடிவெடுத்த சூழலில், பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற கருத்தாக்கத்தை லெனின் வளமை கொண்டதாக மாற்றினார்.
அதிலும் ரஷிய நிலைமைகளை துல்லியமாக ஆராய்ந்து, தொழிலாளி வர்க்கத்தின் முக்கிய நேச சக்தியாக விவசாயப் பிரிவினர் விளங்குவார்கள் என்பதையும், புரட்சியை அரங்கேற்றுவது “தொழிலாளி-விவசாயி” கூட்டணி என்பதையும் நிறுவினார் லெனின். இந்த கூட்டணி ஒடுக்கப்படுகிற, சுரண்டப்படுகிற வர்க்கங்களின் புரட்சிக் கூட்டணி என்று கூறினார் அவர். இதனை வார்த்தைகளால் விளக்கியது மட்டுமல்ல; நடைமுறையில் அந்தக் கூட்டணியை உருவாக்கி, ரஷியாவில் பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தினை கைப்பற்றும் புதிய வரலாற்றையும் லெனினியம் படைத்தது.
இது தானாக நிகழ்ந்திடாது. தலைமையேற்கும் தகுதியை பாட்டாளி வர்க்கம் உணர்வுரீதியில் பெற்று உயர்ந்திடவேண்டும். இது புரட்சிகர கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி ஆற்ற வேண்டிய கடமை. அத்தகைய கட்சியை எவ்வாறு கட்டிட வேண்டும் என்பதனையும், லெனினியம் விளக்குகிறது. புரட்சி, இந்த சகாப்தத்தில் பிறப்பெடுக்க உள்ளது என்ற பின்னணியில்தான் கட்சிக் கோட்பாடுகளை லெனின் வரையறுத்தார்.


முதலாளித்துவம் வரலாற்றில் அந்திம சகாப்தமாக உள்ளது என்று மார்க்சியம் அறிவியல் பூர்வமாக எடுத்துரைக்கிறது. இயக்கவியல் வரலாற்று பொருள்முதல்வாதம் இந்த முடிவுக்கே இட்டுச் செல்கிறது. இதனை சொல்லுகிறபோது ஒரு தவறான புரிதல் இயல்பாக ஏற்படுகிறது.


முதலாளித்துவம் பொருளாதார ரீதியில் பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, தானாக சோசலிசத்தை வந்தடையும் என்ற கருத்து புரட்சி இயக்கத்தில் தோன்றுகிறது. இதனை எதிர்த்த கருத்துப் போராட்டத்தை ரோசா லக்சம்பர்க் போன்ற போராளிகள் நிகழ்த்தியுள்ளனர்.


லெனினும் தீவிரமாக இதனை எதிர்கொண்டார். பிற்போக்கு நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சித்தந்தங்களிலிருந்து பாட்டாளி வர்க்கம் தானாக மாறி புரட்சிகர வர்க்க உணர்வு பெற்றிடும் என்ற கருத்தை எதிர்த்துப் போராடியதோடு, இப்பிரச்னைக்கு ஒரு தீர்வினையும் லெனினியம் கண்டது.
அதுதான் ”ஸ்தாபனம்” எனப்படும் கட்சி அமைப்பு முறை.


லூக்காக்ஸ் எழுதுகிறார்: “லெனினது ஸ்தாபனம் பற்றிய கருத்தாக்கம் புரட்சி சாத்தியப்படும் என்ற அடித்தளத்திலிருந்து எழுந்தது.”


முதலாளித்துவ அரசு ஒரு மைனாரிட்டி அரசு. ஏனெனில் அது சமூகத்தில் எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் முதலாளித்துவ வர்க்கங்களைப் பாதுகாத்து வளர்த்தெடுக்கிறது. அந்த அரசு உழைக்கும் மக்களை கடுமையாக சுரண்டுவதற்கும் தன்னை பலப்படுத்தி கொள்வதற்கும் இடையறாமல் முயற்சிக்கிறது. அது மட்டுமல்லாது, பாட்டாளி வர்க்கத்தின் ஒற்றுமை வராமல் தடுத்து, அது புரட்சிகர சக்தியாக வளர்ந்திடாமல் தடுக்க, இடைவிடாமல் முயன்று வருகிறது. எனவே அரசு பற்றிய பிரச்னைகளும், அதனை பாட்டாளி வர்க்கம் கைப்பற்றும் பிரச்னைகளும் முக்கியமானதாக லெனினியம் கருதுகிறது.

மானுடம் அடிமைத்தனத்திலிருந்தும், சுரண்டலிலிருந்தும் விடுதலை பெற மார்க்ஸ் ஏங்கெல்ஸ் வடிவமைத்த தத்துவம் வழிகாட்டுகிறது. புரட்சி எனும் வரலாற்று கடமையை பாட்டாளி வர்க்கம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்படும் பிரச்சனைகளை தீர்த்திட லெனினியம் வழிகாட்டுகிறது.


எனவே, லெனினது எழுத்துக்கள் விரிவான வாசிப்பிற்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இது இன்றைய சூழலில் தேவைப்படுகிற உன்னதமான பெரும் பணி.



Leave a comment