மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


23வது கட்சி காங்கிரஸ்: முடிவுகளும் – அறைகூவல்களும்!


ஜி. ராமகிருஷ்ணன்

வீரம் விளைந்த கண்ணூர் மாவட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் 23 வது அகில இந்திய மாநாடு, 2022 ஏப்ரல் 6 முதல் 10 வரை நடந்தது.  கேரள மாநிலத்தின் வலிமை வாய்ந்த கம்யூனிஸ்ட் இயக்கம் வேர் பிடித்த இடம் கண்ணூர் மாவட்டம்தான். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சிக்குள் ரகசியமாக இயங்கிய கம்யூனிஸ்ட் குழு,  பரப்ரம் என்ற பகுதியில் 1937 ஆம் ஆண்டில் கூடி, முதல் கட்சிக் கிளையை அமைத்தது. இப்போது கண்ணூர் மாவட்டத்தில் மட்டும் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி உறுப்பினர்கள் உள்ளார்கள்.

கண்ணூரில், வெகு சிறப்பாக நடந்த அகில இந்திய மாநாட்டில், நாடு முழுவதும் இருந்து 729 பிரதிநிகளும், 78 பார்வையாளர்களும் பங்கேற்றார்கள். இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் விவாதிக்கப்பட்ட அரசியல் நகல் தீர்மானம், மாநாட்டு பிரதிநிதிகளாலும் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டது. மாநாட்டுக்கு முன்பாக … திருத்தங்கள் வரப் பெற்றன. மாநாட்டு பிரதிநிதிகள் தங்கள் விவாதத்தில் … திருத்தங்கள் முன்வைத்தார்கள்.

அரசியல் – ஸ்தாபன அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் நடந்தது. அதில் … திருத்தங்கள் பெறப்பட்டன. இவை தவிர, அமைப்புச் சட்ட திருத்தம் முன்வைக்கப்பட்டது, மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு, பொதுச் செயலாளர் தேர்வு மற்றும் மத்திய கட்டுப்பாட்டுக் குழு தேர்வு ஆகியவை நடைபெற்றன. மொத்தத்தில் இந்த மாநாடு ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது.

உலக நிலைமைகள்:

உலக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் தீர்வு இல்லை என்பதை இந்த காலகட்டம் மீண்டும் நிரூபித்துள்ளது. அதேசமயம், சோசலிச நாடுகளின் செயல்பாடுகள், மக்களை பாதுகாத்தபடியே முன்னேற்றம் சாத்தியம் என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்தன.

குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்திலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியமும், பிற முதலாளித்துவ நாடுகளும் மக்கள் நலனை பின்னுக்குத் தள்ளி லாப வெறியோடு செயல்பட்டன. சோசலிச நாடுகள் அதற்கு நேர்மாறாக, களத்தில் முன்நின்று மக்களை பாதுகாத்தார்கள்.

இப்போது உலக பொருளாதார மந்தநிலை இன்னமும் ஆழமாகியுள்ளது. மறுபக்கம், மூலதன குவிப்பு நடவடிக்கை தொடர்கிறது. நிதி மூலதனத்தின் ஆதிக்கப் பிடி அதிகரிக்கிறது. நவதாராளமய கொள்கைகள் இந்த போக்கினை தீவிரப்படுத்துகின்றனவே தவிர, தீர்வு தருவதில்லை. இதனால் உலக மக்களிடையே வறுமையும், வேலையின்மையும் அதிகரிக்கிறது.

கடந்த மாநாட்டின் காலத்தில், உலகம் முழுவதும் வலதுசாரி திருப்பம் நடந்துவரும் போக்கினை கண்ணுற்றோம். இப்போதும் அந்த நிலைமைகள் தொடர்ந்தாலும், எதிர்ப்பு போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. லத்தீன் அமெரிக்காவில் சிலி, வெனிசுவெலா, பொலீவியா மற்றும் ஹோண்டுரஸ் ஆகிய நாடுகளில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்கள் வலிமையடைந்துள்ளன. முற்போக்கு சக்திகளும், இடதுசாரிகளும் தேர்தல் வெற்றிகளை அடைந்துள்ளார்கள்.

உலக அரங்கில், சோசலிச நாடான சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகியிருப்பதுடன், வறுமை ஒழிப்பில் சாதனை புரிந்துள்ளது. இருந்தாலும், அமெரிக்கா தன்னுடைய உலக மேலாதிக்கத்தை பல வழிகளிலும் தொடர்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில், வலதுசாரி அரசியல் சக்திகளை அமெரிக்கா ஆதரித்து ஊக்கமளிக்கிறது. மேற்கு ஆசியாவில் தொடர்ந்து தலையிடுவதுடன், ஆப்ரிக்காவில் ராணுவ தலையீடுகளை கூடுதலாக்கி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் தலைமையிலான  நேட்டோ படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயத்தில் கிழக்கு நோக்கி நேட்டோவை விரிவாக்கம் செய்ய முயற்சிக்கிறார்கள். அதன் காரணமாக எழுந்த  ரஷ்யா – உக்ரைன் இடையிலான முரண்பாடும், அதன் தொடர்ச்சியாக, டாலர் பரிவர்த்தனை வளையத்தை பயன்படுத்துவதில் ரஷ்யாவின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும், ரூபிள் பயன்பாட்டின் மூலமே எரிபொருள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் ரஷ்யாவின் அறிவிப்பும் உலக நிதி பரிவர்த்தனை மீது தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.

சோசலிச நாடுகளான கியூபா மற்றும் வட கொரியாவை  ‘அரச பயங்கரவாத’ நாடுகள் என்று அமெரிக்கா வகைப்படுத்தியுள்ளது. கியூபாவின் மீதான பொருளாதார தடைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இவ்விதத்தில், ஏகாதிபத்தியத்திற்கும், சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருகின்றன. ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான முரண்பாடுகளும் பல்வேறு தளங்களில் தொடர்கின்றன. வளரும் நாடுகளின் மீது அமெரிக்காவின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலைமை, வளரும் நாடுகளுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் இடையிலான முரண்பாட்டினை வெளிப்படுத்துகிறது. மூலதனத்திற்கும், உழைப்புக்கும் இடையிலான முரண்பாடு தீவிரமடைந்து வருகிறது.

நமது அண்டை நாடுகளை பொறுத்தமட்டில், தெற்காசியாவில்  வகுப்புவாத சக்திகளின் வளர்ச்சியும், எதேச்சதிகார போக்கு அதிகரிப்பதையும் 22வது மாநாட்டு அறிக்கை எடுத்துக் காட்டியது. இந்தியாவின் பெரும்பான்மை அண்டை நாடுகளில் மதவழி, இனவழி சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

புவி வெப்பமாதல் காரணமாக, பருவநிலையில் அதிக தீவிரமான தாக்கங்கள் ஏற்பட்டுவருகின்றன. இதனால் ஏற்படும் உற்பத்தி சக்திகளின் நெருக்கடி, பல நூறு கோடி மக்களுடைய நலவாழ்விற்கு ஆபத்தாகி விடக் கூடாது என்றால் – வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையில் சமநீதி அடிப்படையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். இந்த போராட்டம், நீடித்த ஒன்றாக அமைந்திடும்.

மேற்சொன்ன நிலைமைகளை விரிவாக ஆய்வு செய்த அகில இந்திய மாநாட்டில், அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பினை வலுப்படுத்துவதுடன், இந்தியாவை அமெரிக்காவிடம் சரணாகதி அடையச் செய்திடும் பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராக மக்களை திரட்டுவது என்று முடிவு செய்துள்ளது.

உலக சோசலிச சக்திகளோடு ஒற்றுமைப்பாட்டை அதிகரிப்பதுடன். தெற்கு ஆசியாவில் அமெரிக்க தலையீட்டை தொடர்ந்து எதிர்ப்பது, பாலஸ்தீன மக்களின் உரிமைகளோடு உடன் நிற்பது, அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டில் இந்தியாவையும் சேர்த்துப் பிணைக்கும் பாஜகவின் போக்கினை வலுவாக எதிர்ப்பது, ஏகாதிபத்திய தாக்குதலுக்கு எதிராக போராடும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும், வளர்முக நாடுகளுக்கும், சோசலிச நாடுகளுக்கும் ஆதரவினை நல்குவது என்று மாநாடு தீர்மானித்துள்ளது.

தேச நிலைமைகள்:

பாசிச வகைப்பட்ட, ஆர்.எஸ்.எஸ்.  வழிகாட்டுதலில் இயங்கும் பாஜக, நாட்டில் இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. 2019ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர்களால் வகுப்புவாத – தேச வெறியை சுற்றி, உணர்ச்சித் தூண்டல் பிரச்சாரத்தை கட்டமைக்க முடிந்தது. மக்களின் துயரங்கள் அதிகரிக்கும் பின்னணியிலும் கூட, தேர்தல் வெற்றியினை சாதித்திட அவர்களால் முடிந்துள்ளது.

வேறுபட்ட பல இன அடையாளங்களையும், சமூக நிலைமைகளையும் கொண்டுள்ள மக்களிடையே ‘இந்து அடையாளத்தை’ உருவாக்குவதில் அவர்கள் வெற்றியடைந்துள்ளனர். பாசிச போக்குகளும், வலதுசாரி அரசியல் போக்கும் தீவிரமடைந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்றினை மிக மோசமாக எதிர்கொண்டு, கோடிக்கணக்கான மக்களை துயரத்தில் தள்ளியது மோடி அரசாங்கம். கடந்த 4 ஆண்டுகளில் இந்திய அரசமைப்பின் மீதும், அரசமைப்பு நிறுவனங்களின் சுயேட்சைத் தன்மையின் மீதும் திட்டமிட்ட விதத்தில் தாக்குதல் நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனநாயகம், கூட்டாட்சி, சமூக நீதி, பொருளாதார சுயச்சார்பு என அனைத்தையும் சிதைக்கும் முயற்சிகள் நடக்கின்றன.

மறுபக்கத்தில், நவதாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் வேகமெடுக்கின்றன. ஆயுத தளவாட உற்பத்தி உள்ளிட்டு அனைத்து துறைகளிலும் நாட்டின் சுய சார்பு அழிக்கப்படுகிறது. மேற்சொன்ன போக்குகளால் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் மோசமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. சமூக நீதி ஏற்பாடுகள் சிதைக்கப்படுகின்றன. பெண்களின் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன.

ஆனால், மோடி அரசாங்கம் தனிநபர் அந்தரங்கத்தை உளவு பார்ப்பது, ஊடக நிறுவனங்களை கட்டுப்படுத்துவது, பத்திரிக்கையாளர்களை கைது செய்வது, அரசு நிறுவனங்களை ஏவிவிடுவது என்று எதேச்சாதிகார பாதையில் வேகமாக பயணிக்கிறது.

கட்சிகளின் நிலை:

பெருமுதலாளிகளுக்கும் – வகுப்புவாத சக்திகளுக்கும் இடையிலான கூட்டு வலுப்பட்டுள்ளது (Corporate – Communal Nexus) . நவதாராளமய சீர்திருத்தங்களை பாஜக மூர்க்கமாக முன்னெடுக்கிறது. இதனால் நெருக்கடி சூழலிலும், பெரும்பணக்காரர்களின் செல்வ வளம் பல மடங்கு அதிகரித்து வருவதை நாம் பார்க்கிறோம்.

பாஜக – ஆர்.எஸ்.எஸ் வலைப்பின்னல் வேகமாக விரிவடைகிறது. அதன் பின்னணியுடன், பாஜக நாடு முழுவதும் தனது செல்வாக்கை பரப்பியுள்ளது. ஆளும் வர்க்கங்களுடைய பிரதான அரசியல் கட்சியாக உருவெடுத்திருக்கிறது.

12 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. 6 மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடத்துகிறது. நாடாளுமன்றத்தில் 2 அவைகளையும் கட்டுப்படுத்துகிறது.

காங்கிரஸ் கட்சி – இந்திய ஆளும் வர்க்கங்களின் நலனை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. காங்கிரஸ் கட்சியின் அரசியல் செல்வாக்கும், அமைப்பு வலுவும் சரிந்து வருகிறது. மதச்சார்பின்மையை பறைசாற்றினாலும், இந்துத்துவா முன்னிறுத்தும் சவாலை திறம்பட எதிர்கொள்வதாக இல்லை. காங்கிரசால் எதிர்க் கட்சிகளை ஓரணியில் திரட்ட முடியாது. பாஜக – காங்கிரஸ் இரண்டு கட்சிகளையும் சம தூரத்தில் வைக்க முடியாது. அதே சமயம் நாம் காங்கிரஸ் கட்சியோடு அரசியல் கூட்டணியை ஏற்படுத்த முடியாது.

பிராந்திய கட்சிகள் – தொடக்கத்தில் பிராந்திய முதலாளித்துவ-நிலப்பிரபு வர்க்கங்களின் நலன்களுக்காக தங்களை நிலைநிறுத்திக் கொண்ட பிராந்தியக் கட்சிகள், பின்னர் மொத்தமாக, நவ-தாராளமயப் பாதையை ஏற்றுக்கொண்டன. கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், மாநில அரசுகளை வழிநடத்தும் பல பிராந்தியக் கட்சிகளுக்கும் பாஜகவுக்குமான மோதல் கூர்மையடைகிறது.

தமிழ்நாட்டில் திமுக, பீகாரில் ராஷ்ட்ரியா ஜனதாதளம், உ.பி., மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சி ஆகியவை பாஜகவை எதிர்த்து முன்னணியில் உள்ளன. மகாராஷ்ட்டிராவில் பாஜகவிற்கு எதிராக காங்கிரஸ் – சிவசேனா அணியுடன் ஆட்சி அமைப்பதில் தேசியவாத காங்கிரஸ் கட்சி பங்கு வகிக்கிறது. ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப்பில் ஆட்சி அமைத்திருப்பதன் மூலம் முக்கியமான பிராந்திய கட்சியாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் வி.சி.க  போன்ற சில கட்சிகள் மதச்சார்பற்ற ஜனநாயக நிலைப்பாட்டை மேற்கொள்கின்றன.

அதே சமயம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், பிஜூ ஜனதாதளம், தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி, திர்ணாமுல் காங்கிரஸ், ஏ.ஜி.பி., அ.இ.அ.தி.மு.க, தெலுங்குதேசம், அகாலிதளம் ஆகிய கட்சிகளின் நிலைப்பாட்டையும் அரசியல் தீர்மானம் விளக்குகிறது.

சிறுபான்மை அடிப்படைவாத சக்திகளின் வளர்ச்சியை பின்னுக்கு தள்ளுவதில் மதச்சார்பற்ற – ஜனநாயக சக்திகளின் செயல்பாடுகளுக்கு உள்ள முக்கியத்துவம் பற்றியும் தீர்மானம் கவனப்படுத்துகிறது.

பாஜக தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், மதச்சார்பின்மையை பாதுகாக்கவுமான போராட்டங்களை நாம் விரிந்த ஒற்றுமையுடன் முன்னெடுக்க வேண்டும். பிராந்திய கட்சிகளோடு அதற்கான ஒத்துழைப்பை கொடுக்கும் அதே சமயத்தில் மாநிலத்தின் அரசியல் சூழ்நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.

பிராந்திய கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், மக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளை, தனியாகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்தும் எதிர்க்கும் அதே சமயத்தில் – இந்த அரசாங்கங்களை பாஜக வழிநடத்தும் ஒன்றிய/மாநில அரசாங்கங்களுக்கு சமமாக ஒப்பிடக் கூடாது.

இந்துத்துவாவை வீழ்த்திட

மார்க்சிஸ்ட் கட்சியை பலப்படுத்துவது, இந்துத்துவா சக்திகளை தனிமைப்படுத்தி வீழ்த்துவதற்கான அடிப்படைத்தேவையாகும். அரசியல், கருத்தியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில், நிலையான போராட்டத்தை நடத்திட வேண்டும். அதற்கான உறுதியான வழிமுறைகளை அரசியல் தீர்மானம் விவரிக்கிறது.

  1. கட்சியின் வலிமையும், இடதுசாரி சக்திகளின் வலிமையும் அதிகரிப்பது அவசியம். மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை பரந்த அளவில் திரட்டுவதற்கு கட்சி உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  2. நவ-தாராளமய கொள்கைகளுக்கு எதிராக கட்சி முன்னணியில் நின்று போராட வேண்டும். நாட்டின் சொத்துக்கள் அப்பட்டமாக கொள்ளையடிக்கப்படுவதற்கு எதிராக, அண்மையில் நடந்த, வரலாற்று சிறப்பு மிக்க விவசாயிகள் போராட்டத்தைப் போலவே தீவிரமான போராட்டங்களை நடத்துவதன் மூலமாகத்தான் பெருநிறுவன-வகுப்புவாத கூட்டணியை முறியடிக்க முடியும்.
  3. ஒப்புக்கொள்ளப்பட்ட பிரச்சனைகளில், மதச்சார்பற்ற எதிர்க் கட்சிகளோடு நாடாளுமன்றத்தில் கட்சி ஒத்துழைப்பு தரும்.
  4. நாடாளுமன்றத்திற்கு வெளியே, வகுப்புவாத நிகழ்ச்சி நிரலிற்கு எதிராக, அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் பரந்துபட்ட அளவில் அணி திரட்டுவதற்காக கட்சி நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
  5. நவ தாரளமய கொள்கைகளுக்கு எதிராகவும், எதேச்சாதிகார போக்கிற்கு எதிராகவும் கட்சி தனியாகவும், இடதுசாரி – ஜனநாயக சக்திகளோடு கைகோர்த்தும் போராடும்.
  6. வர்க்க – வெகுமக்கள் அமைப்புக்களின் ஒன்றுபட்ட நடவடிக்கைக்கான கூட்டுத் தளங்களை கட்சி ஆதரிக்கும். தொழிலாளர் – விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள் இடையிலான ஒன்றுபட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்துவதை கட்சி ஆதரிக்கும்.
  7. கட்சியின் சொந்த பலத்தை அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  8. முதலாளித்துவ – நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடைய கொள்கைக்கு மாற்றான கொள்கைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.
  9. அத்தகைய, இடதுசாரி ஜனநாயக திட்டத்தை முன்னிலைப்படுத்தி கூட்டுப் போராட்டங்களையும், இயக்கங்களையும் நடத்த வேண்டும்.
  10. தேர்தல்கள் நடக்கும்போது பாஜக எதிர்ப்பு வாக்குகளை ஒருமுகப்படுத்தும் விதத்தில் பொருத்தமான தேர்தல் உத்திகள், மேற்கூறிய அரசியல் கொள்கையின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும்.

நாட்டில் உள்ள அகில இந்திய கட்சிகளும், பிராந்திய முதலாளித்துவ கட்சிகளும் கடைப்பிடிக்கும் கொள்கைகளுக்கும், திட்டங்களுக்கும் மாறுபட்டதுதான் இடதுசாரி மாற்றுக் கொள்கை. அதன் அடிப்படையில் நாம் ஏற்படுத்த வேண்டியதே இடது ஜனநாயக அணி. இவை நம்முடைய உடனடி அரசியல் ஸ்தாபன பணியாகும். அதனை மேற்கொள்வதன் மூலம், வர்க்க பலாபலனில் மாற்றத்தை உருவாக்கிட வேண்டும்.

அதிகரிக்கும் எதிர்ப்புணர்வு:

மோடி அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிரான உணர்வு மக்களிடையே அதிகரித்துவருகிறது. குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுவதும் போராட்டங்கள் எழுந்தன. தொழிற்சங்கங்களுக்கும், விவசாய சங்கங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற நாடு தழுவிய வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியாகவே, வரலாற்றுச் சிறப்புமிக்க விவசாயிகள் போராட்டம் எழுந்தது.

விவசாயிகளின் துயரங்கள் ஆழமடைந்துவரும் பின்னணியில் எழுந்த பொதுவான கோரிக்கைகளின் அடிப்படையில், விவசாய சங்கங்களின் ஒற்றுமை ஏற்பட்டது. 500க்கும் அதிகமான விவசாய சங்கங்களின் மாநாட்டை, விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நடத்தியது. அதிலிருந்துதான் ஐக்கிய விவசாயிகள் முன்னணி உருவானது. விவசாயிகள் போராட்டத்தின் வரலாற்றுச்சிறப்பு மிக்க வெற்றியை இதுவே சாத்தியமாக்கியது. ஒன்றிய அரசாங்கத்தை பணிய செய்தது.

ஆனால் அதே சமயத்தில், மேற்கு உத்திர பிரதேசத்தில் பாஜகவினால் வாக்குகளை பெற்று வெற்றிபெற முடிந்துள்ளது. மத அடிப்படையிலான உணர்வினை உருவாக்குவதன் மூலமே இது  சாத்தியமானது என்பதை நாம் மாநாட்டின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள முடியும்.

இடது ஜனநாயக திட்டம்

முதலாளித்துவநிலப்பிரபுத்துவ கொள்கைகளுக்கு மாற்றான இடது ஜனநாயக திட்டம் பின்வரும் அடிப்படையில் அமைய வேண்டும்.

  1. பொருளாதார இறையாண்மையை பாதுகாத்தல்
  2. அரசமைப்பு சட்டத்தை பாதுகாத்தல்
  3. குடிமை சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமைகளை காத்தல்
  4. கூட்டாட்சி
  5. விவசாயி – தொழிலாளர் நலன்
  6. சமூக நீதி (சாதி, பாலினம், மாற்றுத்திறனாளிகள் பிரச்சனை மற்றும் குழந்தைகள் நலன்)
  7. மக்கள் நல திட்டங்கள்
  8. அனைவருக்கும் மருத்துவம்
  9. சுற்றுச்சூழல்
  10. பண்பாடு – ஊடகம்
  11. வெளியுறவுக் கொள்கை

பொருளாதாரஇறையாண்மை எனும்போது, பொதுத்துறைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல் – குடிநீர், மின்சாரம், பொதுப் போக்குவரத்து, கல்வி மற்றும் மருத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வது. ஆயுத தளவாட உற்பத்தியை பொதுத்துறையில் பாதுகாப்பது. சிறு குறு தொழில் நிறுவனங்களை வளர்த்தெடுப்பது. பெரும்பணக்காரர்கள் மீது வரி விதிப்பது. வேளாண் துறையை பாதுகாப்பது, கூட்டுறவு ஏற்படுத்துவது. மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது ஆகியவையும் அடங்கும்.

விவசாயி – தொழிலாளர் பிரச்சனைகளில், குறைந்தபட்ச கூலி மாதத்திற்கு ரூ. 26 ஆயிரத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டும். விலைவாசி புள்ளிக்கு தக்க உயர்ந்திட வேண்டும் என்பதும் சேரும். இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாய தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை உறுதி செய்வதும் அதில் உள்ளடங்கும்.

இந்தியாவில், சாதிய படிநிலை நீடித்துவரும் நிலையில் சமூக நீதிக்கான போராட்டங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதே நேரத்தில் சமூக நீதிக்கான நம்முடைய கவனம்பெண்கள், குழந்தைகள், பால் சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் என்ற அடிப்படையிலும் செலுத்தப்பட வேண்டும்.

அனைவருக்கும் நியாய விலையில் உணவுப் பொருட்களை உறுதி செய்வதுடன், அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்குதல். ஊரக – நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டங்கள். வேலையில்லாக் காலத்திற்கு நிவாரணம். இவை தவிர அனைவருக்கும் அறிவியல் அடிப்படையிலான கல்வியை உறுதி செய்வதும், தனியார் கல்வி நிறுவனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இணைய இடைவெளிக்கு தீர்வுகாண்பதும் இதில் அடங்கும்.

பண்பாட்டுத் தளத்தில் நமது போராட்டம் வகுப்புவாத தாக்கத்திற்கு எதிரானதாக அமைய வேண்டும். 8வது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளுக்கும் சமமான வாய்ப்புகளை உறுதி செய்வதை முன்னிறுத்திட வேண்டும். ஊடகச் சுதந்திரத்தை பாதுகாப்பது, ஊடகத் துறையில் ஏகபோகத்தை எதிர்ப்பது, சுயேட்சையான கட்டுப்பாட்டு அமைப்புகளை ஏற்படுத்துவது ஆகியவை இதில் உள்ளடங்கும்.

இவ்வாறு, இடது-ஜனநாயக திட்டத்தை முன்நிறுத்திய போராட்டங்களின் வழியாக ஒற்றுமையை கட்டுவதன் மூலமும், மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மாற்று திட்டங்களை செயல்படுத்துவதன் வழியாகவுமே இந்த போராட்டத்தில் முன்னேற முடியும். தத்துவ, அரசியல், பண்பாடு மற்றும் சமூக தளங்களில் போராட்டங்களை இணைத்து முன்னெடுக்க வேண்டும்.

ஸ்தாபன கடமைகள்:

கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள ஸ்தாபன கடமைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

  • வரும் ஓராண்டு காலத்திற்குள் அனைத்து மாநிலக் குழுக்களும், இடது ஜனநாயக அணி குறித்த  திட்டத்தை விவாதித்து இறுதி செய்வதுடன் அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அணி திரட்டும் சாத்தியமுள்ள சக்திகளை அடையாளம் காண வேண்டும்.
  • மாநிலங்களில் இடது ஜனநாயக மேடையை உருவாக்குவது பற்றி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் பொதுவான புரிதலுக்கு வர வேண்டும்.
  • கேரளா, மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள இடது – ஜனநாயக முன்னணியை வலுப்படுத்துவது பற்றி விவாதிக்க வேண்டும்.
  • வெகுமக்கள் பாதையில் (மாஸ் லைன் ) கட்சி முழுமையான கவனம் செலுத்திட வேண்டும்.
  • வர்க்க அடிப்படையிலான பிரச்சனைகளிலும், வெகுமக்கள் பிரச்சனைகளிலும் (சமூக பிரச்சனைகளிலும்)  உள்ளூர் அளவில் நீடித்த போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
  • கட்சி உறுப்பினர்களின் தரத்தை மேம்படுத்துவது: 2023 ஆம் ஆண்டு கட்சி உறுப்பினர் பதிவு பரிசீலனையின் போது, ஏற்கனவே வரையறுக்கப்பட்டுள்ள 5 வழிகாட்டுதல்களை கண்டிப்பாக அமலாக்கிட வேண்டும்.
  • கட்சியின் கிளைகளை செயல்படுத்துவது: 6 மாத கால வரையறைக்குள் எத்தனை கிளைகளை செயல்படுத்துவது என்ற ஒரு இலக்கினை ஒவ்வொரு மாநிலக் குழுவும் நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். கிளைச் செயலாளர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட வேண்டும்.
  • 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் உறுப்பினர் பதிவு பரிசீலனை மற்றும் புதுப்பித்தலில், இளைஞர்கள், பெண்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • புதிய, இளம் முழுநேர ஊழியர்களை தேர்வு செய்வதற்கு திட்டமிட்ட முயற்சிகள் வேண்டும். தத்துவ, அரசியல் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். அதே போல தற்போதுள்ள முழு நேர ஊழியர்களுக்கு மறு கல்வியும், பயிற்சியும் வழங்குவதில் கவனம் தேவை.
  • ஆர்.எஸ்.எஸ் வகுப்புவாத அரசியலின் செயல்முறை பற்றிய குறிப்பினை இறுதி செய்து, கட்சி அரசியல் கல்விக்கான பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும்.
  • ஊரக தொழிலாளர்களுக்கான சங்கங்களும், கூட்டமைப்புகளும் ஏற்படுத்த வேண்டும்.
  • கட்சி ஸ்தாபனத்துடன், சமூக வலைத்தளங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை மாநிலக் குழுக்கள் வடிவமைத்திட வேண்டும். இதற்காக வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை அமலாக்கும் விதத்தில் பயிலரங்குகள் நடத்திட வேண்டும்.
  • வெகுமக்கள் அமைப்புக்கள் சுயேட்சையாக செயல்பட வேண்டும். வழிகாட்டும் குழுக்களின் செயல்பாடுகளும், கட்சியை வளர்த்தெடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

முடிவுரை

கட்சி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து, மிக அதிகமான சவால்கள் நிரம்பிய சூழலை கட்சி இப்போது சந்தித்துக் கொண்டுள்ளது. இந்திய குடியரசின் தன்மையையே மாற்றியமைக்க முயலும் பாஜக – ஆர் எஸ் எஸ் ஆட்சிக்கு எதிராக நமது கட்சியும், இடதுசாரிகளும், ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு போராட வேண்டியுள்ளது.

இடதுசாரி  – ஜனநாயக மாற்றினை வளர்த்தெடுக்கும் விதத்தில், வெகுமக்களை அணிதிரட்டும் புரட்சிகர கட்சியாக மார்க்சிஸ்ட் கட்சியை வளர்த்தெடுக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் வர்க்க சக்திகளின் பலாபலனில், சாதகமான மாற்றத்தை கொண்டுவர முடியும்.

  • வலிமையான கம்யூனிஸ்ட் கட்சியை கட்டுவதற்கும் வலுப்படுத்துவதற்குமான நம் உறுதிப்பாட்டை இரட்டிப்பாக்குவோம் !
  • வெகுஜன நிலையுடன் கூடிய புரட்சிகரமான கட்சியை நோக்கி முன்னேறுவோம் !
  • இந்தியா முழுவதும், வெகுஜன அடித்தளத்தைக் கொண்ட வலுவான மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்குவதை நோக்கி முன்னேறுவோம் !


Leave a comment