ஏகாதிபத்தியமும் இயற்கை வளங்களும்:
ரஷ்யாவை ‘அடக்க முயலும்’ அமெரிக்க ஆட்டம் !
பேரா. பிரபாத் பட்நாயக்
உலக நாடுகள் அடைந்துள்ள ‘வளர்ச்சி’ நிலைக்கும், இயற்கை வளங்களின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கட்டுப்பாட்டிற்கும் இடையில் மிகப்பெரும் அசமத்துவம் நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய பெரும் வளர்ச்சியடைந்த நாடுகளின் குழுவான ஜி-7 நாடுகளை எடுத்துக்கொள்வோம். இந்த நாடுகளில், உலகத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே வாழ்கிறார்கள். ஆனால், 2020 ஆண்டு கணக்கில், உலகத்தின் ஒட்டுமொத்த செல்வ வளத்தில் சரிபாதிக்கும் கூடுதலாக தங்கள் வசம் வைத்துள்ளார்கள். ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் ஐந்தில் இரண்டு பங்கை கொண்டுள்ளார்கள் (இது 32 முதல் 46 சதவீதம் வரை இருக்கும். நான் வசதிக்காக மதிப்பீட்டின் நடுப்பகுதியை எடுத்துக்கொண்டேன்). ஜி-7 நாடுகள் மதிப்பிட முடியாத பொருளாதார வலிமை கொண்டுள்ளன. ஆனால் அந்த நாடுகளில் கிடைக்கும் இயற்கை வளங்களை கணக்கிட்டால், அவை மிகவும் மோசமாக அருளப்பட்டிருப்பது தெரியும்.
சமகாலத்தின் மிக முக்கியமான இயற்கை வளங்களான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எடுத்துக் கொள்வோம். உலகம் முழுவதும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புகளும், நாடுகளிடையே அவற்றின் மதிப்பீடுகளும் ஏறுமாறாக உள்ளன. மதிப்பீடுகளில் காணப்படும் வேறுபாடுகள் அதன் உண்மைத் தன்மையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது தெளிவு. அமெரிக்காவின் எரிசக்தி தகவல் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி உலகில் இதுவரை அறியப்பட்டுள்ள எண்ணெய் இருப்பு விபரங்கள் அடிப்படையில் ஜி-7 நாடுகளில் 13% இருப்பு உள்ளது. அதிலும் சுமார் 10 சதவீதம் இருப்பது கனடா நாட்டில்தான். இந்த கணக்கீட்டில் ஷேல் எண்ணெய் கணக்கு உள்ளடக்கப்படவில்லை. அதை நோக்கி அமெரிக்கா தாமதமாகத்தான் திரும்பியது. பல நாடுகளின் ஷேல் எண்ணெய் இருப்பு பற்றிய விபரங்கள் முழுமையாக தெரியாது. இருப்பினும், அதையும் உள்ளடக்கினாலும் கூட மேற்சொன்ன புள்ளிவிபரத்தில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது. மிகவும் முன்னேறிய நாடுகளின் எல்லைகளுக்கு வெளியில்தான் அதிகமான எரிசக்தி இருப்புக்கள் உள்ளன.
இயற்கை எரிவாயு இருப்புக்களை கணக்கில் எடுத்தால், அதிலும் நாம் இருப்புக்கும் விநியோகத்துக்கும் இடையில் மதிப்பீட்டில் ஏறுமாறான நிலைமையையே பார்க்கிறோம். அமெரிக்காவின் எரிசக்தி தகவல் மேலாண்மை அமைப்பின் தகவலின்படி, 2020ஆம் ஆண்டின் இறுதி வாக்கில், உலகத்தின் ஒட்டுமொத்த எரிவாயு இருப்பான 188 லட்சம் கியூபிக் மீட்டர் என்ற அளவில் 8 சதவீதத்திற்கும் சற்று கூடுதலான அளவு மட்டுமே ஜி-7 நாடுகளின் வசம் இருக்கிறது. இதிலும் ஷேல் வாயு இந்த மதிப்பீடுகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளது, ஆனால் அதை உள்ளடக்கினாலும் கூட, உலக எரிவாயு இருப்புக்களில் பெரும்பகுதி மிகவும் முன்னேறிய நாடுகளுக்கு வெளியே உள்ளது என்ற முடிவிற்கே சந்தேகத்திற்கு இடமின்றி வர முடியும். அந்த நாடுகளில் சில, இந்த எரிபொருட்களை பயன்படுத்துவதில் இருந்து விலகிச் செல்லும் முயற்சிகளை தாமதமாகவேனும் முயற்சித்தன. பிரான்ஸ் நாடு அணுசக்தியை அதிகம் நம்பியிருக்கிறது. காலநிலை மாற்றம் பற்றிய அச்சம் காரணமாக பல்வகை எரிசக்தி மூலங்களை பயன்படுத்திய நகர்வு சற்று துரிதப்பட்டுள்ளது. ஆனாலும், முன்னேறிய நாடுகளின் நம்பிக்கை இப்போதும் கணிசமாக எண்ணெய் மற்றும் எரிவாயுக்களின் மீதே உள்ளது. அவர்களின் நாட்டு எல்லைகளுக்குள் இந்த வளங்கள் மிகவும் குறைவாகவே கிடைக்கின்றன.
வேளாண் பொருட்களின் இறக்குமதி
வேளாண் சரக்குகளைப் பற்றி நாம் பெரிதாக பேசவில்லை. இந்த விசயத்தில் முன்னேறிய நாடுகளின் திறன் புவியியல் அடிப்படையிலேயே கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் நடந்த தொழிற்புரட்சியில் பருத்தித் துணி உற்பத்திதான் தொழிற்புரட்சிக்கும் முதலாளித்துவ உற்பத்திக்கும் முன்னோடியாக இருந்தது. ஆனால், பருத்தியை இங்கிலாந்தில் வளர்க்க முடியாது என்பதால், பருத்தி இறக்குமதியையே அது சார்ந்திருந்தது. அதே போலத்தான் முதலாளித்துவ பெருநகரங்கள் ஒவ்வொன்றுமே. அவை முக்கியமாக உலகின் மிதவெப்பப் பகுதிகளில் அமைந்திருப்பதால், அனைத்து பயிர் வகைகளையும் அங்கேயே வளர்த்துக்கொள்ள முடியாது. அல்லது போதுமான அளவுக்கோ அல்லது ஆண்டு முழுவதுமோ அவற்றை வளர்க்க முடியாது; மறுபுறம் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகள் இந்த பயிர்களை விளைவித்து பெருநகரங்களுக்கு வழங்க முடியும். எனவே, பெருநகரங்கள் அனைத்துமே வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலப் பகுதிகளைச் சார்ந்திருப்பது, ஆண்டு முழுவதும், பானங்கள் முதல் நார்ச்சத்து வரை உணவுப் பொருட்கள் வரை பலவகையான பயிர்களின் விநியோகத்திற்காகவும் தொடர்ந்து நடக்கிறது. சமீப ஆண்டுகளில் முன்னேறிய நாடுகள் உணவு தானியங்களை உபரியாக உற்பத்தி செய்ய ஆரம்பித்துள்ளன என்பது உண்மைதான்; ஆனாலும் கூட இந்த உண்மை அவர்கள் வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் அதிக அளவில் சார்ந்திருப்பதை மாற்றாது. முன்னேறிய நாடுகளில் அதிகம் விளைந்த உணவு தானியங்களை அனுப்பிவைத்து, வெப்ப மண்டலத்திலும், மித வெப்ப மண்டலத்திலும் உள்ள மூன்றாம் உலக நாடுகளில் பெருநகரங்களுக்கு தேவையான பயிர்களை விளைவிக்கும்படி நிர்ப்பந்தம் தரப்பட்டதும் உண்மை.
உலகின் மிகவும் முன்னேறிய நாடுகள், கனிம வளங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் ஆகிய இரண்டிற்காகவும்,மூலப் பொருட்களுக்காகவும் "தமக்கு வெளியே" உள்ள உலகையே முழுமையாக பெருமளவில் சார்ந்து உள்ளன என்பது சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மையாகும். இந்தப் பொருட்களின் விநியோகத்தை குறைந்த விலையிலும், நிலையாகவும் அவர்கள் பெற வேண்டும். காலனித்துவ கட்டத்தில் இந்தப் பண்டங்களின் கணிசமான பகுதியை எந்தக் கட்டணமும் செலுத்தாமல் அவர்களால் பெற முடிந்தது. அதாவது இலவசமாக. காலனிகள் மற்றும் அரை-காலனிகளில் இருந்து "உபரியின் வடிகால்" என்பதன் இயல் வடிவமாக அவை இருந்தன. இப்போது அவர்கள் காலனிகளை வைத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அத்தகைய பொருட்களுக்கான அவர்களின் தேவை முக்கியமானதாகவே உள்ளது. காலனி ஆதிக்கத்தை செயல்படுத்திய ஏகாதிபத்திய அமைப்புமுறைதான் "வெளியில்" இருந்து பெருநகரம் வரை அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த விலையிலோ அல்லது இலவசமாகவோ, சீரான முறையில் கிடைப்பதை தொடர்ந்து உறுதி செய்தது. இப்போது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் உட்பட மூன்றாம் உலக நாடுகளில் ஆட்சிகளை உருவாக்கி நிறுவுவது, பெருநகரத்தின் எல்லைக்கு வெளியில் அதன் விருப்பத்தை திணிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாகும். நவதாராள-உலகமய விதிகளுக்குள் நாடுகளை சிக்கவைப்பதும், அவர்கள் தங்கள் உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை கைவிடவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவதும் தம் விருப்பங்களை திணிப்பதற்கான பொதுவான தந்திரமாகும்.
காலனியமும் அதன் பிறகும்
மூன்றாம் உலக நாடுகளில் நிலவும் ‘அடங்காத’ ஆட்சிகளை அகற்றுவது, சி.ஐ.ஏ ஆதரவு சதித்திட்டங்கள் முதல் அத்தகைய ஆட்சிகளைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது வரை பல்வேறு வழிகளில் செயல்படுத்தப்படுகிறது. பொருளாதாரத் தடைகள் மூலம் குறிவைக்கப்படும் நாடுகளின் எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரிப்பது ஏகாதிபத்தியத்திற்கு கீழ்ப்படிய மறுக்கும் போக்கு அதிகரிப்பதை காட்டுகிறது. அதில்தான் ஏகாதிபத்தியத்தின் உயிர் நாடி உள்ளது.
ஒன்று அல்லது இரண்டு நாடுகளுக்கு எதிராக மட்டும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டால் அவை ஏகாதிபத்தியத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்; ஆனால் தடையால் பாதிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தால் அது ஏகாதிபத்திய உலக விதிகளுக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமையும். குறி வைக்கப்பட்ட நாடுகள், பொருளாதாரத் தடைகளினால் தங்களுக்கு ஏற்படும் ஏற்படும் பாதகமான விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக தனித்தனியாக ஒன்றுபடலாம், அத்துடன் கூடுதலாக முன்னேறிய நாடுகளில் இருந்தும் அல்லது தடையால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்தும், தங்கள் சொந்த பொருளாதாரங்களுக்கு சேதம் விளைவிக்கும் விளைவுகளைத் தவிர்ப்பதற்காக பொருளாதாரத் தடைகளை மீறுவதற்கான ஊக்கத்தைப் பெறக்கூடும். அதேபோல், தடையால் பாதிக்கப்பட்ட நாடு பெரியதாகவும், பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருந்தால், ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் விசயத்தில் நடந்ததைப் போல, அந்தத் தடைகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக திருப்பித்தாக்கவும் வாய்ப்பு உள்ளது.
உக்ரைன் போர் எதற்காக
உக்ரைனில் நடந்துவரும் போர், ஓராண்டுக்கு முன்புதான் தொடங்கியதாகவும், ஒரு சிறிய அண்டை நாட்டின் மீது மிகப்பெரிய சக்தி மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதன் விளைவுதான் இந்தப் போர் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் காட்ட முயற்சிக்கின்றன. ஆனால் உண்மையில், ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பே உக்ரைன் நாட்டில் ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான விக்டர் யானுகோவிச் என்பவர், சி.ஐ.ஏ உதவியில் மேற்கொள்ளப்பட்ட நவீன ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கையின் மூலம் தூக்கியெறியப்பட்ட பிறகுதான், மோதல் தொடங்கியது. தற்போது நடந்துவரும் போருக்கு பின்னணியில், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதல்தான் அடிப்படையாக உள்ளது. இயற்கை எரிவாயு பரந்த இருப்புக்களை தன் வசம் கொண்டுள்ளது ரஷ்யா. இது மொத்த உலக இருப்பில் ஐந்தில் ஒரு பங்காகும். அனைத்து நாடுகளிலும் இதுவே மிக அதிகமான அளவாகும். அதே போல ரஷ்யாவில் உலக எண்ணெய் இருப்பில் சுமார் 5 சதவீதம் உள்ளது.
மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதலின் பின்னணியில் உக்ரைன் – ரஷ்யா இடையிலான போரைக் கண்ணுற்ற கருத்தாளர்களும் கூட, உலகம் ஒருதுருவ போக்கில் இருந்து, பலதுருவ போக்கிற்கு மாறிச் செல்வதற்கான எத்தனிப்பாக பார்க்கிறார்கள். ரஷ்யாவின் வசம் உள்ள பரந்த இயற்கை வளங்களின் மீது தமது கட்டுப்பாட்டைச் செலுத்த வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் அதில் எளிதில் இடம்பெறுவதில்லை. இந்த விருப்பத்தின் வீரியத்தை குறைத்துப் பார்க்க முடியாது. போரிஸ் யெல்சினை கட்டுப்படுத்துவதில் ஏகாதிபத்தியம் வெற்றிபெற்றது. அவர் எப்போதும் ஏராளமான சி.ஐ.ஏவினரால் சூழப்பட்டிருந்தார் என்பார்கள். புட்டின் காலத்தில், வேறு விசயங்களில் தவறு செய்திருந்தாலும், ரஷ்யாவின் உள்விவகாரங்களில் மேற்கத்திய ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது. உக்ரைன் போரில் அமெரிக்காவின் நோக்கம் ‘ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது’, அதாவது முதலாளித்துவ பெருநகரங்களுக்கு ‘அடங்கும்படியான’ ஓர் ஆட்சியை நிறுவுவது என்று அமெரிக்க ஜனாதிபதி (ஒரு ஊடக பேட்டியில்) பேசிவிட்டு பின்னர் மழுப்பியதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
ரஷ்யாவைப் போன்றதொரு பெரிய நாடு உள்ளிட்டு பல நாடுகளின் மீது ஒரே நேரத்தில் விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகள், மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் மீது பாதிப்பை உருவாக்கத் தொடங்கியுள்ளன. இந்த தடைகளினால் இலக்கு நாடுகளில் உள்ள மக்கள் மட்டுமே பாதிக்கப்படுவதில்லை. தடைகளை விதிக்கக் கூடிய நாடுகளில் உள்ள உழைக்கும் மக்களும் கூட, இயற்கை எரிவாயு இறக்குமதி இல்லாததால் கஷ்டங்களில் தள்ளப்பட்டுள்ளனர். போருக்கு எதிராகவும், பணவீக்கத்திற்கு எதிராகவும் நடக்கும் ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஐரோப்பிய நாடுகளின் தெருக்களில் திரண்டுள்ளனர். 1970களுக்கு பின், அந்த எண்ணிக்கை இணையற்ற விதத்தில் அதிகரித்துள்ளது. பொருளாதார தடையினால் குறிவைக்கப்பட்ட ஒரு நாட்டின் நாணய மதிப்பு சரியும்; பணவீக்கம் வேகப்படும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் டாலருடன் ஒப்பிடும்போது ரூபிள் மதிப்பு உயர்ந்துள்ளது. மேலும் பொருளாதார தடைகளை விதித்துள்ள நாடுகளிலேயே பண வீக்கம் அழிவினை உருவாக்கியுள்ளது. ஏகாதிபத்தியம் தற்போது ஒரு சோதனையான காலகட்டத்தில் நுழைந்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
தமிழில்: சிந்தன்
Leave a Reply