மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஐஃபோன்: லாபம் எங்கிருந்து குவிகிறது?


  • அபிநவ் சூர்யா

ஐஃபோன், ஐபேட், மேக்புக் போன்ற பிரபல மின்னணுக் கருவிகளை விற்பனை செய்யும் ஆப்பிள் நிறுவனமானது, இன்று சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரும் நிறுவனமாக திகழ்கிறது. அது மட்டும் அல்லாது, இந்நிறுவனம் தான் தொழில்நுட்ப ஆய்விலும் உலகின் மிக உயரிய நிறுவனமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் விற்கும் ஐஃபோனின் ஒவ்வொரு புதிய வெளியீட்டையும் வாங்குவதற்காக அமெரிக்காவில் பலர் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை பார்க்கிறோம். இந்த கலாச்சாரம் ஒரு பகுதி இந்தியர்களுக்கும் தொற்றிக்கொண்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த இந்த ஆப்பிள் நிறுவனத்தின், விற்பனைப் பண்டங்கள் அனைத்தும் உற்பத்தி ஆவது சீனா, இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தான். இது போன்ற பன்னாட்டு மின்னணுக் கருவி நிறுவனங்களின் உற்பத்தி தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவே இயங்கி வரும் பல நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து கொள்ளும் ஆப்பிள் நிறுவனம், தன் “ஜாம்பவான்” பிம்பத்தை பாதுகாத்துக்கொள்கிற  அதே வேளையில், வளரும் நாடுகளின் தொழிலாளர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலையற்று, கடும் சுரண்டலின் வாயிலாக தன் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது.

ஆப்பிள் நிறுவனத்திற்கான உற்பத்தியை மேற்கொள்ளும் தைவானை சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனத்துக்கு சொந்தமான ஆலை காஞ்சிபுரத்தில் உள்ளது. அண்மையில் 3,000க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் மிக மோசமான பணிச் சூழல் மற்றும் தங்குமிடம் காரணமாக ஸ்ரீபெரும்புதூரில் போராட்டம் நடத்தி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை ஸ்தம்பிக்க வைத்தார்கள். இதற்கு ஓராண்டு முன்பு தான் ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் வைத்துள்ள ‘விஸ்ட்ரான்’ என்ற நிறுவனம், பெங்களூரு அருகே உள்ள தன் ஆலையின் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் இழுத்தடிக்க,  தொழிலாளர்கள் கொதித்தெழுந்து, பின் அது பெரும் கலவரமாக வெடித்தது. இது போன்ற நிலைமை, ஆப்பிள் நிறுவனத்தால் மட்டும் ஏற்படுவதில்லை என்பதும் உண்மை. நோக்கியா நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்திருந்த ஃபாக்ஸ்கான், 2014-15இல் தன் ஸ்ரீபெரும்புதூர் ஆலைகளை திடீரென மூடி, பத்தாயிரத்திற்கும் மேலான தொழிலாளர்களை நடுத் தெருவில் நிறுத்தியது.

இப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலையும், அதன் பின்னணியில் உள்ள முதலாளித்துவ-ஏகாதிபத்திய செயல்பாடுகளையும் நாம் புரிந்து கொள்வது அவசியம்.

ஆப்பிளின் சுரண்டல் வேட்டை

ஆப்பிள் நிறுவனத்தின் சுரண்டல் வேட்டை இந்தியாவில் மட்டுமல்லாது, பல்வேறு வளரும் நாடுகளிலும் நிகழ்கிறது. சீனாவில் ஷென்சென் மற்றும் ஷெங்ஷூ ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஃபாக்ஸ்கான்  ஆலைகளில் சுமார் 12லட்சத்திற்கும் மேலான தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். இவர்களை ஃபாக்ஸ்கான் நிறுவனம், மிகக் கடுமையான சூழலில் மிக அதிக நேரம் வேலை வாங்கியதால், 2011ல் பதினான்கு தொழிலாளர்கள் தற்கொலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்த சம்பவம் சீன நாட்டையே  உலுக்கியது. அதன் பின் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் மேல் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தொழிலாளர்கள் ஊதியம் உயர்த்தப்பட்டது. அதன் பின், ஃபாக்ஸ்கானும், இதர ஆப்பிள் ஒப்பந்த நிறுவனங்களும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் உற்பத்தியை இந்தியா, மலேசியா, தாய்லாந்து, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுக்கு நகர்த்த தொடங்கின. இந்த வளரும் நாடுகளில் நிலவும் குறைவான கூலி, தொழிற்சங்கங்களுக்கு எதிரான சட்டங்களையும் பயன்படுத்தி, மிக மோசமான சூழலில் தொழிலாளர்களை பணியில் அமர்த்தி கொள்ளை லாபம் ஈட்டுகிறார்கள். தொழிலாளர்கள் ஓரளவு நல்ல வருமானம் பெற வேண்டுமானால் ‘ஓவர் டைம்’ (Overtime) மிக அதிகமாக புரிய வேண்டும். அவர்கள் உழைப்பு சக்தியை மறு உற்பத்தி செய்து கொள்ள கூட முடியாத அளவில் தான் கூலி விகிதம் உள்ளது.

ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளுக்காக ஆப்பிரிக்காவில் இருந்து கனிம வளங்கள் பெறப்படுகின்றன. அந்த சுரங்கங்களில் அடிமை நிலையில் பணி புரியும் ஊழியர்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள். ஆபத்தான சூழலில் குழந்தைத் தொழிலாளர்களும் கூட மிக சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றுகிறார்கள்.

இப்படிப்பட்ட நவதாராளமய சுரண்டலை நியாயப்படுத்தி பல முதலாளித்துவ அறிஞர்களும் பேசுகிறார்கள். அதிலும், பெண்களை பணி அமர்த்துவதன் மூலம் “பெண் விடுதலை”க்கு வழிவகுப்பது போல வாதிடுகின்றனர். ஆனால் அண்மையில் ஸ்ரீபெரும்புதூரில் நாம் அதையா பார்த்தோம்? அடித்தட்டு மக்களின் மோசமான  வாழ்க்கை நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, மோசமான வாழ்க்கைச் சூழலில், கடும் வேலைச் சுமையையும் புகுத்தி, பணி இடம், விதிகள், பெண்கள் – மகப்பேறு நல சட்டங்கள் எதையுமே பின்பற்றாமல், அற்பக் கூலிக்கு (மாதம் ரூ.12,000ற்கும் குறைவு) சுரண்டுவதன் மூலம், தன் லாபத்தை கூட்டிக் கொள்ளத்தான் பன்னாட்டு மூலதனம் முயற்சிக்கிறது.

ஆனால் இவர்கள் அனைவருமே ஆப்பிளோடு ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் மூலம் தான் பணி அமர்த்தப் படுகிறார்கள் என்பதால் ஆப்பிள் நிறுவனம் ஏதோ தன் கையில் எந்த கறையும் படியவில்லை என பாவிக்கின்றது. ஆனால் அதன் கொள்ளை லாபமும், சந்தையில் வகிக்கும் எங்கிருந்து வருகிறது?

தொழிலாளர்கள் கூலியை விட லாபம் எத்தனை மடங்கு அதிகம் என்பதை “சுரண்டல் விகிதம்” (Rate of Exploitation) என மார்க்ஸ் வரையறுத்தார். ஆப்பிள் நிறுவனத்துடைய சுரண்டல் விகிதம் சுமார் 2500% ஆகும். அதாவது, ஆப்பிள் நிறுவனத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உழைக்கும் அனைவரும் தங்கள் சொந்த வாழ்க்கைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக உழைக்கும் நேரம் போக, 25 மடங்கு அதிக  நேரம் உபரி ஈட்டித் தருவதற்காக உழைக்கின்றனர். இதை “கொள்ளைச் சுரண்டல்” என்றும் கூட சில மார்க்சிய அறிஞர்கள் வரையறுக்கின்றனர்.

குறைந்த கூலியில் சுரண்டல்

நவதாராளமய காலத்திற்கு முன்பு மேற்கத்திய நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களின் புகழ் என்பது, தங்கள் தாய் நாட்டில் எத்தனை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் என்பதன் மூலம் கணிக்கப்பட்டது. ஆனால் இன்றோ, மூன்றாம் உலக நாடுகளில், தங்கள் உற்பத்தியை திறம்பட மாற்றியமைப்பதே விதந்தோதப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியும், சோசலிச சக்திகளின் நலிவும் காரணமாக, உலக தொழிலாளர் இயக்க வலிமை குன்றியது இதற்கான காரணங்களில் ஒன்றாகும். கணினி நுட்ப வளர்ச்சியும், தொலைத்தொடர்பு வளர்ச்சியும் காரணமாக உற்பத்தியை உலகின் பல இடங்களிலும் நடத்தலாம் என்ற நிலைமை உருவானது. பல ஆண்டுகளாக, பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்த ஏகாதிபத்திய முதலாளித்துவம், இந்த புதிய சூழ்நிலைகளை பயன்படுத்தி, கூலி விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் உற்பத்தியை மாற்றியமைத்ததன் மூலம் லாப விகிதத்தை உயர்த்திக்கொண்டது.

சர்வதேச நிதி மூலதனத்தை தங்கள் நாட்டில் ஈர்ப்பதற்கான போட்டியில் வளரும் நாடுகள் ஈடுபட்டன. அதற்காக, இந்நாடுகளில் தொழிலாளர் நல சட்டங்கள் நலிவடையச் செய்யப்பட்டன, சுற்றுச் சூழல் பாதுகாப்பு காற்றில் விடப்பட்டது. 21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து வெறும் பத்து ஆண்டுகளில் (பண வீக்கம் கணக்கில் கொண்ட பின்) தொழிலாளர் ஊதியம் மும்மடங்காக உயர்ந்த சீனாவிலும் கூட, நாட்டின் மொத்த செல்வ உருவாக்கத்தில், தொழிலாளர் ஊதியத்தின் பங்கு குறையவே செய்தது. இதர வளரும் நாடுகளின் நிலை குறித்து கேட்கவே வேண்டாம்.

இந்த பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் அந்நிய நேரடி முதலீட்டின் வழியாக நுழைந்தன. 2013இல் முதல் முறையாக வளர்ந்த நாடுகளை விட வளரும் நாடுகளுக்குச் செல்லும் அந்நிய நேரடி முதலீடு அதிக அளவை எட்டியது. ஆனால் அண்மைக் காலங்களில் இந்த நிலையும் மாறி வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் உள்ள ஒப்பந்த நிறுவனங்களை உற்பத்தி மேற்கொள்ள செய்து, ஏற்றுமதி மூலம் பண்டங்களை வாங்கிக் கொள்கின்றன. இதனால் தொழிலாளர் சுரண்டலின் பழி முழுவதும் மூன்றாம் உலக நாடுகளையும், அந்நாட்டு நிறுவனங்களையும் மட்டுமே சேர்வதாக வியூகம் செயல்படுகிறது.

எல்லா காலங்களிலும் (மார்க்ஸ் மூலதனம் எழுதிய காலம் முதலே) சர்வதேச முதலாளித்துவ சுரண்டலுக்கு முன் மாதிரியாக திகழ்ந்து வரும் ஜவுளி உற்பத்தி நிறுவனம் தான் இப்படிப்பட்ட ஒப்பந்த நிறுவன அடிப்படையிலான உற்பத்தி மாற்றத்தை துவங்கி வைத்தது. பின்னர் வாகன உற்பத்தி நிறுவனங்களும் படை எடுத்தன. இன்று மின்னணு கருவிகள் உற்பத்தி நிறுவனங்கள் இதில் முன்னிலை வகிக்கின்றன.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

காலனிய ஆதிக்க காலம் முதல், ஏகாதிபத்திய நாடுகள் வளரும் நாடுகளை சுரண்டுவதற்காக முக்கிய உத்தி ஒன்றினை கையாண்டு வருகின்றன. வளரும் நாடுகளில் நிலவும் இயற்கை வளங்களை கொண்டு உற்பத்தியாகும் பண்டங்களை (பருத்தி, தேயிலை, கனிம வளம்) பெற்றிடும் ஏகாதிபத்திய நாடுகள், அவைகளை பயன்படுத்தி ஆலை உற்பத்தி மூலம் உருவாக்கிய பண்டங்களை, குறைந்த விலைக்கு கொண்டு வந்து வளரும் நாடுகளின் சந்தையில் குவித்திடுவர். இதனால் வளரும் நாட்டு தொழில் துறை அழிந்து போகும். இதன் விளைவாக வளரும் நாட்டில் உற்பத்தி திறன் உயராமல் இருக்கும். எனவே வளரும் நாடுகளில் கூலி விகிதம் குறைவாகவே இருக்கும். இதன் மூலம் வளரும் நாட்டு மக்கள் உழைப்பை எளிதாக சுரண்டி, இயற்கை வளங்களை மலிவு விலையில் அபகரித்துக் கொள்ள முடியும்.

ஆனால் இன்றோ உற்பத்தி அனைத்தும் வளரும் நாடுகளுக்கு மாறுவதை பார்க்கிறோமே! இது எப்படி? இங்கு தான் நாம் ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கவனிக்க வேண்டும். இப்போதும், வளரும் நாடுகளை நோக்கி உற்பத்தி வருவதற்கு காரணம், கூலி விகிதம் குறைவாக இருப்பதுதான். ஏகாதிபத்திய சூழலில், வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்களுடைய பிழைப்பு, உலக மதிப்புச் சங்கிலியில் (Global Value Chain) தங்களை பிணைத்துக் கொள்வதைப் பொறுத்ததாகவே உள்ளது. எனவே ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்வதில் போட்டி உருவாகிறது. இந்த கடும் போட்டியின் காரணமாக தொழிலாளர்களுடைய ஊதியத்தை குறைந்த நிலையில் வைக்க ஒவ்வொரு நாட்டு முதலாளிகளும் முயல்கின்றனர்.

இவ்வாறு நடக்கும் உற்பத்தியிலும் கூட, கடும் உழைப்பைச் சார்ந்த (Labour intensive) பகுதிகள் மட்டும் தான் வளரும் நாடுகளை நோக்கி வருகின்றன. முன்னேறிய கருவிகள், தொழில்நுட்பங்கள் சார்ந்த உற்பத்தி வருவது இல்லை. எனவே வளரும் நாடுகளில் உற்பத்தி திறன் உயர்வதில்லை. எந்திரங்கள் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் வழியாக வளரும் நாடுகளின் உற்பத்தி திறன் தொடர்ந்து மேம்படுவதில்லை.

ஆப்பிள் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் பெயரில் ஒரு உற்பத்தி ஆலை கூட கிடையாது! பிறகு இந்த நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றன? எப்படி சந்தையின் உச்சத்தில் உள்ளன? இவை உற்பத்தி செய்வது அனைத்துமே மின்னணு கருவிகளின் வடிவமைப்பு (Design), பிராண்ட் (Brand), மற்றும் அறிவுசார் காப்புரிமம். இவைகளை மட்டுமே வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம், வளரும் நாடுகளில் சொற்ப விலைக்கு உற்பத்தியை நிகழ்த்தி, லாபம் ஈட்டுகிறது. பிராண்ட் மற்றும் அறிவுசார் காப்புரிமங்களை வைத்திருப்பதன் வாயிலாக, சந்தையில் போட்டியில்லாத சூழலை உருவாக்கி, ஏகபோக நிலைமையில், கூடுதலான லாபம் குவிக்கிறது.

ஆனால் இந்த அறிவுசார் காப்புரிமம் அடிப்படையிலான தொழில்நுட்பங்கள் முழுமையாக ஆப்பிள் உருவாக்கியதா? அதுவும் இல்லை. அவர்கள் பயன்படுத்தும் நுட்பங்களான இணையதளம் (Internet), ஜிபிஎஸ், தொடும் திரை (Touch Screen), பேச்சு கணிப்பான் (Siri) போன்ற தொழில்நுட்பங்கள் எல்லாம் அரசு ஆய்வகங்களிலும், மக்கள் பணத்தில் இயங்கும் பல்கலைக்கழகங்களிலும் உருவாக்கப்பட்டவை. இவைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கருவிகளுக்கு, அறிவுசார் காப்புரிமத்தை பன்னாட்டு நிறுவனங்கள் கோரிட, ஏகாதிபத்திய அரசுகள் அனுமதித்து உள்ளன.

உற்பத்தி ஆலைகளை வைத்திருந்த மேலை நாட்டு நிறுவனங்கள், முன்பு, வளரும் நாடுகளின் வளத்தையும் மக்கள் உழைப்பையும் சுரண்டியது போல, இன்று அறிவுசார் காப்புரிமம் வைத்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள் வளரும் நாடுகளில் தொழிலாளர்களுடைய உழைப்பை மலிவான கூலிக்கு சுரண்டுகின்றனர்.

வர்த்தகம் – தொழில்நுட்பம் – சுரண்டல்

இந்த நவீன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு, சர்வதேச வர்த்தகமும், தொழில்நுட்பமும் முக்கிய பங்காற்றுகின்றன. குறைவான ‘மதிப்புக்கூட்டல்’ (Value Added) செய்யும், கடும் உழைப்பு தேவைப்படும் உற்பத்திகள், பணிகள் மட்டுமே வளரும் நாடுகளுக்கு வருகின்றன என்பதை முன்பே பார்த்தோம். அதுமட்டுமல்லாமல், கூலியின் அளவுக்கும், வளங்களின் இருப்புக்கும் ஏற்றவாறு பல நாடுகளிலும் உற்பத்தி சிதறியிருப்பதால், பண்டத்தின் சிறு பாகத்தை மட்டுமே குறிப்பிட்ட வளரும் நாட்டில் மேற்கொள்கின்றனர். (உதாரணமாக: ஐபோனுக்கான இடுபொருட்கள் உற்பத்தியும், உதிரி பாக உற்பத்தியும் 30 நாடுகளில் நடக்கின்றன). சர்வதேச வர்க்கத்தகத்தில் 60 சதவீதம் இடைநிலைப் பாகங்களுடைய பரிவர்த்தனையாக இருக்கிறது. சர்வதேச வர்த்தகத்தில் 80 சதவீதம் பன்னாட்டு நிறுவனங்களின் கைவசம் இருக்கிறது. உற்பத்தி இவ்வாறு சிதறிக் கிடைக்கின்ற காரணத்தால், எந்தவொரு நாடும், உதிரி பாக உற்பத்தியில் எவ்வளவு முன்னேறினாலும், மொத்த பண்டத்தின் உற்பத்தியை அறிந்துகொள்ள முடியாது. உற்பத்தியை கற்றுக்கொண்டு, அதே போன்ற பண்டத்தை தங்கள் சொந்த நாட்டில் மேற்கொள்ள முடியாது. இவ்விதத்தில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் பாதுகாக்கப்படுகிறது.

காலனி ஆதிக்கம் நிலவிய காலத்தில், ஏகாதிபத்திய நாடுகள் உற்பத்தி ஆலைகளை கட்டுப்படுத்தி வந்தன. இன்று ஏகாதிபத்திய நாடுகள் தொழில்நுட்பத்தையும் உற்பத்தி திறனையும் கட்டுப்படுத்துகிறார்கள். மேலைநாடுகளே பெரும்பான்மையான தொழில்நுட்பத்தை தங்கள் வசமாக வைத்துள்ளார்கள். அதன் மூலம் உற்பத்தித் திறனை மிக அதிகமாக பராமரிக்கிறார்கள். எனவே வளரும் நாடுகளில் உள்ள நிறுவனங்கள், தங்களின் போட்டியிடும் திறனை உயர்த்த என்ன செய்ய முடியும்? ஒரே வழி, தொழிலாளர்கள் கூலியை குறைந்த நிலையில் வைத்து, சுரண்டல் மூலம் மிக அதிக உபரி ஈட்டுவது தான். இப்படி வளரும் நாட்டு நிறுவனங்கள் ஈட்டும் உபரியில் ஒரு பெரும் பங்கை ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்கள் அபகரித்துக் கொள்கின்றன (எ.கா: ஃபாக்ஸ்கான் ஈட்டும் ஒவ்வொரு டாலர் லாபத்திற்கு ஆப்பிள் 40 டாலர்கள் லாபம் ஈட்டுகிறது).

ஆக, வளரும்-வளர்ந்த நாடுகள் இடையேயான வர்த்தகமானது, மேலளவில் சமமான வர்த்தகம் போல தென்பட்டாலும், வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்தின் காரணமாக, இது ஒரு சமநிலை அற்ற வர்த்தகமாகத் தான் திகழ்கிறது. வளர்ந்த நாடுகளின் தொழில்நுட்ப ஆதிக்கத்திற்கு ஈடு கொடுக்க வேண்டுமானால், வளரும் நாடுகளின் கூலி அளவு குறைவாகவும், சுரண்டல் கூடுதலாகவும் இருக்க வேண்டும். இந்த சுரண்டலின் உபரியை ஏகாதிபத்திய நாடுகள் அபகரித்துக் கொள்கின்றன.

அறிவியலற்ற பார்வை

இப்படிப்பட்ட தொழில்நுட்ப ஏற்றத்தாழ்வு நிலை தான் சமகால ஏகாதிபத்திய சுரண்டலுக்கு அடிப்படையாக உள்ளது. இதனை உணர்ந்த சீனா, மிக துல்லியமான அறிவியல்பூர்வமான வளர்ச்சிப் பாதையை தேர்வு செய்தது. அதன் காரணமாக இன்று தொழில்நுட்ப துறையில் மேற்கத்திய நாடுகளுக்கு சவால் விடும் நிலைக்கு வளர்ந்து நிற்கிறது. இது அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளின் அடிப்படைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அதனால்தான் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள், சீனா மீது தொடர் தாக்குதல் நிகழ்த்துகின்றன.

இந்தியாவிலும், மேற்சொன்ன தொழில்நுட்ப சார்பின் ஆபத்து உணரப்பட்டது. எனவே சுதந்திரத்திற்கு பின், வலுவான அரசு ஆதரவு பெற்ற ஒரு அறிவியல் வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்கி முன்னேற துவங்கியது இந்தியா. ஆனால் நவீன தாராளமய காலத்திலோ, தொழில்நுட்ப சுயசார்பு முற்றிலுமாக கைவிடப்பட்டது. இதனால் ஏகாதிபத்திய நாடுகளின் தொங்கு சதையாகவே இந்தியா மாறிப் போனது. 21ம் நூற்றாண்டில், “உயர் தொழில்நுட்ப” பண்டங்களை நாம்   ஏற்றுமதி செய்வதை விட பன்மடங்கு அதிகமாக இறக்குமதி தான் செய்து வருகிறோம் என்பதோடு, இந்நிலை மேலும் மோசம் தான் அடைந்து வருகிறது.

மோடி ஆட்சியின் காலத்தில், இந்த நிலை மேலும் மோசமடைந்துள்ளது. அறிவியல் அடிப்படையிலான சமூகத்தை கட்டமைப்பதற்கு பதிலாக, திரிபுகள் மற்றும் பொய்கள் அடிப்படையிலான அறிவியல், கணித, வரலாற்று கட்டுக்கதைகள் பரப்பப்படுகின்றன. இளைஞர்கள் மத்தியில் மத, பிரிவினைவாத கருத்துகளே  விதைக்கப்படுகின்றன. நாட்டின் அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியை வழி நடத்த வேண்டிய பல்கலைக்கழகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து, இந்த கல்வி அமைப்புகள் காவிக் கூடாரமாக மாற்றப்படுகின்றன.

“மேக் இன் இந்தியா”, “தற்சார்பு” ஆகிய முழக்கங்களை வாய்ச் சவடால் மட்டும் விடும் மோடி அரசு, நம் பொதுத்துறைகளை விற்பதும், குத்தகைக்கு விடுவதும் காரணமாக பொருளாதார இறையாண்மையை கார்ப்பரேட்டுகளிடம் அடமானம் வைக்கிறது. சிறு குறுந்தொழில்கள் முடங்கும் நிலை உருவாகிறது. தொழிலாளர் நல சட்டங்களை அழித்தொழித்து, கூடுதலான ஏகாதிபத்திய சுரண்டலுக்கே வழிவகுக்கப்படுகிறது. மக்களும், அறிவுச் செல்வமும் தான் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதை அங்கீகரிக்க மறுப்பதன் காரணமாக, கார்ப்பரேட் நிறுவனங்களைச் சார்ந்து அடிவருடி அரசியல் செய்கிறது.

நிறைவாக

இந்த உலகமயமாக்கல் சூழலில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் தயாரிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் ‘அப்டேட்’ விடுவதைப் போல, ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் முறைகளும் ‘அப்டேட்’ ஆகிக்கொண்டே போகின்றன. வளரும் நாடுகளின் குறைந்த கூலி தொழிலாளர்கள் கொண்டு இயக்கப்படும் சர்வதேச உற்பத்தி, சசுரண்டலை நவீனப்படுத்தி உள்ளது.

மூலதனத்தின் இந்த இயல்பு புதியது அல்ல. 1867இல் லாசேன் சர்வதேசம் மாநாட்டில் மார்க்ஸ் நிகழ்த்திய உரையில் இவ்வாறு குறிப்பிட்டார், “உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை கொண்டு வரவோ அல்ல; மலிவான உழைப்பு உள்ள இடத்திற்கு உற்பத்தியை நகர்த்தவோ செய்கின்றனர். இந்த சூழலில் தொழிலாளர் வர்க்கம் தனது போராட்டத்தை வெற்றிகரமாக்கிட, தேசிய அமைப்புகள் சர்வதேசியத்தை தழுவ வேண்டும்”

பாட்டாளி வர்க்க சர்வதேச ஒற்றுமை கொண்டு, நம் தேசத்தை சூறையாடும் நயவஞ்சகர்களையும், நம் தொழிலாளர்களை கடுமையாக சுரண்டி கொழுக்கும் ஏகாதிபத்திய மூலதனத்தையும் வீழ்த்துவோம்!

ஆதாரம்:

  1. சுரண்டல் விகிதம் : ஐஃபோன் எடுத்துக்காட்டு – ட்ரைகான்டினன்டல் ஆய்வு கழகம்
  2. 21ம்  நூற்றாண்டில் ஏகாதிபத்தியம் – ஜான் ஸ்மித்


Leave a comment