மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்


ச. லெனின்

குரல்: தோழர் பீமன்

சென்னை உள்ளிட்டு தமிழகத்தின் பல இடங்களில் வாழ்விட பாதுகாப்பிற்கான போராட்டங்கள் முன்னுக்கு வந்துள்ளது. குறிப்பாக, நீர்நிலைப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மேம்பட்ட வாழ்விடம் வழங்குதல் என்ற பெயரில் ஏழை எளிய மக்களின் குடியிருப்புக்கள் அகற்றப்படுவதும், அதை எதிர்த்த மக்களின் போராட்டங்களும் தொடர்கின்றன. நகர்ப்புறங்களின் மையத்திலிருந்து, உழைக்கும் மக்களின் பெரும்பகுதியினர் நகரங்களின் விளிம்பிற்கு துரத்தப்படுகின்றனர். இதுபோன்ற நிலைகள் எதுவும் திடீர் நிகழ்வுகளோ, தவிர்க்க முடியாத விஷயங்களோ அல்ல. இதன் பின்னால் உள்ள அரசியல் பொருளாதாரத்தை விளக்கிடும்  சிறு முயற்சியை இக்கட்டுரை மேற்கொள்கிறது.

சென்னை (மெட்ராஸ்), கல்கத்தா, மும்பை உள்ளிட்ட நகரங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே துறைமுகம், வர்த்தகம் சார்ந்து வளர்ச்சிபெற்று வந்தன. இந்திய விடுதலைக்கு பிறகான காலப்பகுதியில் புதிய வளர்ச்சிப் போக்குகளின் விளைவாக நகரங்கள் விரிவடைந்தது. அதன் முக்கிய விளைவாக, நகரத்தின் வளர்ச்சிக்கான அடித்தளமாக விளங்கிய உழைக்கும் மக்களும் நகரங்களில் குவிந்தனர். அதேநேரம் சுரண்டல் நிறைந்த முதலாளித்துவ அமைப்பு முறையில் அவர்களுக்கு கிடைத்த குறைந்த கூலியில் குடிசை பகுதிகளில்தான் குடியிருக்க முடிகிறது. கூவம் ஆற்றங்கரையிலும், நெருக்கடி நிறைந்த, காற்றோட்டம் இல்லாத, குடிநீர், கழிப்பிடம், அடிப்படைகள் வசதிகள் ஏதுமற்ற, குறுகிய சந்துகளையே சாலைகளாக கொண்ட, மழை / வெயில் என எந்த காலத்திலும் வாழ தகுதியற்ற மூச்சுத்திணறும் சிறு அறைகளை கொண்ட அல்லது அறைகளற்ற வீடுகளில், அங்கு நிலவும் சுகாதாரமற்ற சூழலில் வாழவேண்டும் என்பது அவர்களது விருப்பமல்ல. உழைப்பாளிகளின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படாத சூழலே அவர்களை ஏழ்மையில் தள்ளியது. அதுவே மோசமான வாழ்நிலையிலும் குடியிருப்புக்களிலும் அவர்களை வாழவைக்கிறது. ஆனால், முதலாளித்துவமும் அதன் கண்ணோட்டம் கொண்ட மேட்டிமை சிந்தனையுடையவர்களும், ஏதோ குடிசை பகுதி மக்களின் தவறான போக்கின் விளைவாகவே அவர்கள் அங்கு இருப்பதுபோன்ற கருத்துக்களை பதிவு செய்கின்றனர். முதலாளித்துவம்தான் அவர்களின் அப்படியான வாழ்நிலைக்கு காரணம் என்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அரசியலும் அதில் உள்ளது.  இன்று நேற்றல்ல; மார்க்ஸ், எங்கெல்ஸ் காலத்திலேயே இப்படியான கருத்துக்களை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

“வாடகையில் சிறிதளவு பணத்தை மிச்சப்படுத்த முடியுமென்றால், அவர்கள் இருண்ட, ஈரப்பதமான, போதுமானதாக இல்லாத, சுருக்கமாகச் சொல்வதென்றால் சுகாதார நிபந்தனைகள் அனைத்தையும் கேலிக்கூத்தாக்குகின்ற குடியிருப்புக்களை வாடகைக்கு எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலானவற்றில் சில குடும்பங்கள் ஓர் அறைக்கட்டை, ஒரு சிறு அறையைகூட எடுத்துக் கொள்கிறார்கள். வாடகையை இயன்ற அளவுக்குக் குறைக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள். ஆனால், மறு பக்கத்தில் அவர்கள் தம்முடைய வருமானத்தை உண்மையிலேயே பாபகரமான வழியில் குடிப்பதிலும் எல்லா விதமான சிற்றின்பங்களிலும் விரயம் செய்கிறார்கள்.” என்று ஸாக்ஸ் என்பவர் பதிவு செய்கிறார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் “சாதாரண மக்கள் மதுக்கடைக்குப் போகிறார்கள். அந்தஸ்துடையவர்கள் மனமகிழ் மன்றங்களுக்குப் போகிறார்கள்” என்று தனது ஆசிரியர் இவ்வாறு கூறுவார் என்று எங்கெல்ஸ் அதை நையாண்டி செய்கிறார். மேலும் “முதலாளிகளை பொறுத்தமட்டில், குற்றம் அறியாமையாகக் குறைந்துவிடுகிறது; ஆனால் தொழிலாளர்களைப் பொறுத்தமட்டில், அறியாமையே அவர்களுடைய குற்றத்திற்குக் காரணமாகிவிடுகிறது” என்கிறார் எங்கெல்ஸ்.

துவக்கத்தில் குடிசை பகுதிகள் இருந்த இடங்களிலேயே அதை மேம்படுத்திடும் திட்டங்களை ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். புதிய பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் உழைக்கும் மக்கள் குடியிருக்கும் நிலத்தின் மதிப்பின் மீது தனது பார்வையை செலுத்தியது. அதன் விளைவாக, குடிசை பகுதிகளை மேம்படுத்துவது என்பதிலிருந்து குடிசை பகுதிகளை அகற்றுவது  என்கிற நிலைக்கு அரசும் ஆட்சியாளர்களும் வந்தனர். அதற்கு தேவையான காரணங்களையும் கட்டமைத்தனர். தற்போது குடிசை பகுதிகளை அகற்றுவது என்பதை கடந்து இது ‘ஆக்கிரமிப்பு’ பகுதி, நீர்நிலைகள், மேய்ச்சல் நிலம் என அதன் கைகள் நீள்கிறது. அதுவும் சாஸ்தா பல்கலைக் கழகம் போன்ற பெருநிறுவனங்களின் மீது அவை நீள்வதில்லை. இருக்க இடமின்றி ஒண்டிக்குடித்தனம் செய்யும் எளிய மக்களின் வீடுகள் மீதே அரசின் புல்டோசர்களின் கைகள் நீள்கிறது. இதுவே குடியிருப்புக்கள் மீதான அரசின் வர்க்க கண்ணோட்டத்தை வெளிப்படுத்திவிடுகிறது.

குடியிருப்புகள் குறித்த அரசின் கொள்கைகள்

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் குடியிருப்புகள் குறித்த ஒரு விரிவான அணுகுமுறைகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. விடுதலை இந்தியாவில் தமிழகம் சார்ந்த கொள்கை ஆவணங்களில் 1956ஆம் ஆண்டுதான் முதன் முதலாக குடிசை பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1956இல் “குடிசை பகுதி (மேம்பாடு மற்றும் அகற்றுதல்) சட்டம்” இயற்றப்பட்டுள்ளது. மனிதர்கள் வாழ தகுதியற்ற நிலையில்தான் குடிசை பகுதிகள் இருக்கிறது என்று சட்டம் கூறுகிறது. ஒன்று குடிசை பகுதி மக்களை அவர்கள் வசிக்கும் இடத்திலேயே மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்து குடியிருக்க அனுமதிப்பது அல்லது அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி வேறு இடத்தில் குடியமர்த்துவது என்பதே அதன் முன்னால் இருக்கும் இரண்டு வழிகளாக அமைந்திருந்தது. இந்த இரண்டு வழிகளில் எதை அமலாக்குவது என்பதை அவ்வப்போது இருந்த சமூக, அரசியல், பொருளாதார சூழல்களே தீர்மானித்துள்ளன.

தேசிய திட்டக் குழுவின் மூலம் 1960களுக்கு முந்தைய இரண்டு தேசிய திட்டங்களிலும் குடிசை பகுதிகளை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்து பரிந்துரைகளை வழங்கியுள்ளன. குறிப்பாக, மும்பை மற்றும் கல்கத்தா சார்ந்து அதிகம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், நகர்ப்புறங்களின் விளிம்பில் அவர்களை மறு குடியமர்வு செய்யவும் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இதற்கு கூடுதல் செலவுகளை மேற்கொள்ள வேண்டி வரும் என்பதோடு, அவர்களின் வேலை, சமூகத் தொடர்பு, கல்வி உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும் என்பதால், அப்போது அது முன்னெடுக்கப்படவில்லை என்று டில்லி குடிசை பகுதி அகற்றம் குறித்த கட்டுரையில் கெர்ட்னர்தெரிவித்துள்ளார். 1960 முதல் 1970கள் வரை மறுகுடியமர்வு என்பதை விட அவர்கள் குடியிருக்கும் இடத்தை மேம்படுத்துவது என்பதாகவே இருந்து வந்துள்ளது. ஆனால், தற்போது உலக வங்கியின் கடன் மூலம் நிதி கிடைக்கிறது. மக்களின் வேலை, சமூக தொடர்பு, கல்வி குறித்த எவ்வித அக்கறையுமின்றி அரசு மக்களை நகரத்தின் விளிம்பிற்கு துரத்துகிறது.

விடுதலைக்கு பிந்தைய காலப்பகுதியில் சென்னையை நோக்கி வரும் மக்கள் கூட்டம் அதிகரித்தது. இது குடியிருப்பு குறித்த பிரச்சினைகளின்பால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது. போதுமான அடிப்படை வசதிகள் அற்ற நிலையில் உள்ள குடிசை பகுதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வேலைகளை அரசு மேற்கொள்ளும் என்று ஆட்சியாளர்கள் தெரிவித்தனர். குடியிருப்பு பிரச்சினைக்கான அரசின் தலையீடு என்பது சமூக நிர்ப்பந்தத்தால் விளைந்ததே அன்றி அது யாருடைய கனவு திட்டமாகவும் எழவில்லை. குறைந்த வருமானமுடைய ஏழை எளிய புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் குடிசை பகுதி மக்களுக்கு மேம்படுத்தப்பட்ட குடியிருப்புக்களை வழங்குவோம் என்று காங்கிரஸ் கட்சியினரை வாக்குறுதி வழங்க வைத்தது. இதன் தொடர்ச்சியாகவே, குடிநீர் வசதி, கழிப்பறைகள், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளை கொண்ட குடியிருப்புகளை உருவாக்குதல் என்கிற வகையிலேயே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் “மெட்ராஸ் மாகாண வீட்டு வசதி வாரிய சட்டம் 1961” உருவாக்கப்பட்டது. இதுவே தற்போது தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் என்றுள்ளது. குடிசை பகுதிகளை மேம்படுத்தி வாழ்வதற்கு தகுதியான அடிப்படை வசதிகளை கட்டமைப்பது என்கிற வகையில் இது துவங்கப்பட்டது. ஆனபோதும் அதில் போதுமான முன்னேற்றத்தை அதனால் ஏற்படுத்த முடியவில்லை.

1967இல் திமுக தமிழகத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தது. திமுக-விற்கு சென்னையின் குடிசைபகுதி மக்களிடம் வலுவான செல்வாக்கு இருந்தது.  அவர்களை உள்ளடக்கி திட்டமிடும் நோக்கில் 1970ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. இது தமிழகம் முழுவதும் உள்ள குடிசை பகுதிகளின் பிரச்சினைகளை மாநில அளவிளான நோக்கோடு அணுகிட வழி செய்தது. “தமிழ்நாடு குடிசை பகுதிகள் மேம்படுத்துதல் மற்றும் அகற்றுதல் சட்டம் 1971” இயற்றப்பட்டது. குடிசை பகுதிகளில் அதிகமான செல்வாக்கையும் கூடுதல் வாக்கு வங்கியையும் பெற்றிருந்த திமுக-விற்கு அப்பகுதி மக்களை அங்கிருந்து அகற்றி நகரத்தின் விளிம்பிற்கு துரத்துவது என்பது அப்போது விருப்பமானதாக இல்லை. எனவே, குடிசை பகுதிகளை கண்டறிதல், வரைமுறைப் படுத்துதல், மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலேயே புதிய கட்டிடங்களை கட்டுதல், பொதுக்கழிப்பிடங்கள் அமைத்தல், குடிநீர் விநியோகம் என்பனவற்றை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செய்தது. பொதுவாக சமூக நல திட்டங்களை அமலாக்குதல், பொது செலவீனங்களுக்கான நிதி ஒதுக்குவது என்பதெல்லாம் எளிய மக்களுக்கு குறைந்தபட்ச ஆதாரங்களை உருவாக்கும் நோக்கம் கொண்டதாக அமைந்தது. முழுக்க வர்க்க நோக்கோடு உழைக்கும் மக்களை மையப்படுத்தி அமலாக்கப்படாத போதும், பிரபலமான வகையில் சமூக நீதி என்கிற நோக்கோடு எளிய மக்களின் ஒரு பகுதியை அது ஆசுவாசப்படுத்தியது. “ஒவ்வொரு லிபரல் அரசாங்கமும் நிர்பந்திக்கப்படும்போது மட்டுமே சமூக சீர்திருத்தச் சட்டங்களை அவை கொண்டு வரும்…..”. உழைக்கும் மக்களின் அப்படியான போராட்டங்களும் எதிர்வினைகளுமே இன்றுவரை எளிய மக்களை பாதுகாக்கின்ற சட்டங்களையும் ஆணைகளையும் சாத்தியமாக்கியுள்ளன.

மாநில அரசின் கொள்கை மாற்றம்

“ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்” என்பதாகவே ஆரம்பக்கால நடவடிக்கைகள் துவங்கின. கொள்கை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்கள் ஏழைகளின் சிரிப்பை பறித்தது. குறிப்பாக 1970களின் மத்தியில் சர்வதேச நிதியத்தின் நிதி பங்களிப்பு குடிசை பகுதிகள் மேம்பாடு குறித்த கொள்கை திட்டங்களில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியது. 1975இல் தமிழகத்திற்கு உலக வங்கி நிதி பங்களிப்பு செய்தது. குடிசை பகுதிகள் மேம்பாட்டிற்காக 240 லட்சம் டாலரை நிபந்தனைக்குட்பட்ட கடனாக உலக வங்கி வழங்கியது. நிபந்தனையின் பகுதியாக அரசு கட்டிக் கொடுக்கும் வீடுகளுக்கு பயன்பாட்டுக் கட்டணம் வசூலிக்கும்படி கூறியது. தற்போது வரை இந்த உலக வங்கியின் கைகள் மக்களின் பாக்கெட்டில் உள்ள பணத்தை எடுப்பதற்கான துவக்கப் புள்ளியாக அமைந்தது. “மெட்ராஸ் நகர்புற மேம்பாட்டு திட்டம் 1இல் (1971) கொள்கை ரீதியான ஒரு மாற்றத்தை உட்கொண்டது. இதில் பயன்பாட்டாளர் பங்களிப்பு என்கிற வகையில் பணத்தை திரும்பப் பெறுதல் என்பது அறிமுகப்படுத்தப்பட்டது” என்கிறது 1982இல் வெளியான உலக வங்கி அறிக்கை. இதன் விளைவாக ஏழை எளிய மக்கள் வாடகை என்பதாகவோ, மேம்பாட்டிற்கான கட்டணம் என்றோ, பயன்பாட்டு கட்டணம் என்கிற வகையிலோ, பணம் செலுத்த வேண்டிய கட்டாயம் உருவானது. இது மக்கள் மத்தியில் எதிர்வினையை உருவாக்கக்கூடும். அது ஆட்சிக்கு எதிராக திரும்பும் என்கிற சிறு அச்சம் ஆட்சியாளர்களுக்கும் உண்டு. ஆனால், இவ்வாறான கட்டணங்களை வசூலிக்காவிட்டால், தங்களின் நிதி பங்களிப்பை இழக்க வேண்டிவரும் என்றும், பணத்தை வசூலிக்க தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் கூடுதல் முன்முயற்சி எடுக்க வேண்டும் என்றும், உலக வங்கியின் அறிக்கை தெரிவிக்கிறது. கட்டணமில்லா குடியிருப்பு வசதி மற்றும் மேம்பாடு என்பதாக இருந்த குடிசை பகுதி கொள்கை நிலையை உலக வங்கியின் தலையீடு மாற்றியமைத்தது. பல்வேறு நேரடியான மற்றும் மறைமுக காரணங்களால் அதை ஏற்று, ஆட்சியாளர்களும் அதற்கேற்ற வகையில் கொள்கை திட்டங்களை மாற்றி அமைத்தனர். எளிய மக்களிடம் கட்டணம் வசூலிப்பதும் அரசின் பங்களிப்பை குறைப்பதும் அவர்கள் பேசிய சமூக நீதிக்கும் எதிரானது என்பது வெளிப்படை.

இதற்கு பிறகு வந்த எம்ஜிஆர் தலைமையிலான அதிமுக அரசு புதிய கொள்கை திட்டத்திற்கு தன்னை முழுமையாக உட்படுத்திக் கொண்டது. திமுக ஆட்சியில் இருந்தபோது, அதனை எதிர்ப்பதற்கும், அந்த ஆட்சியை வீழ்த்தும் செயல்பாட்டிற்கும், ஒன்றிய அரசுடன் இணக்கம் பாராட்டிய அதிமுக, ஆட்சிக்கு வந்தவுடன் ஒன்றிய அரசின் கொள்கை திட்டத்திலும் தன்னை இணைத்துக் கொண்டது. மாநில நலன், தமிழ் நிலம் என்றெல்லாம் பேசிவந்த தமிழக அரசியல் களம் இந்த காலகட்டத்தில் மேலும் அமைதியானது. 1980களில் சர்வதேசிய நிதியத்தின் நிதியை ஏற்றுக் கொண்டது. உலக வங்கி கூறியபடி குடியிருப்புக்களை மேம்படுத்த அரசு செய்த செலவீனங்களை குறைத்துக் கொண்டு, மக்கள் செலுத்த வேண்டிய பயன்பாட்டு கட்டணத்தை அதிகரித்தது. ஏழைகளுக்காகவே வாழ்வதாக தனது படங்களில் நடித்ததின் விளைவாக மக்கள் மத்தியில் பெரிய பிம்பத்தை ஏற்படுத்திய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில்தான் இவையெல்லாம் நிகழ்ந்தது. உலக வங்கியின் பரிந்துரைகள்படி தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் செயல்பட துவங்கியது. இக்காலத்தில்தான் முந்தைய 240 லட்சம் டாலர் கடன் என்பதை கடந்து 3,000 லட்சம் டாலர் கடனை சர்வதேச நிதியம் வழங்கியது. இதுவும் நிபந்தனைக்குட்பட்ட கடன் என்பதை தனியாக சொல்ல வேண்டியதில்லை. இதைத்தொடர்ந்து 1990களில் தாராளமயத்தை உள்ளடக்கிய புதிய பொருளாதார கொள்கையை இந்திய அரசு அமலாக்கியது, மேலும் உழைக்கும் மக்களின் குடியிருப்பு பிரச்சினையை சிக்கலாக்கியது. தற்போது தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் என்பது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என பெயர் மாற்றம் கண்டுள்ளது. அது பெயர் மாற்றம் மட்டுமல்ல; அதன் உள்ளடக்கமும் மாறிவிட்டது. தனியார் பங்களிப்பு, அரசின் பங்களிப்பு குறைப்பு, பராமரிப்பு பணியிலிருந்து வாரியம் வெளியேறுவது, மக்களிடம் பயன்பாட்டு கட்டணத்தை கூடுதலாக பெறுவது என்று அதன் முழுமையான சமூக நோக்கு சிதைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி எனும் திராவிட சித்தாந்தம் இங்கு கடுமையாக பாதிக்கப்படுகிறது. தனியார்மயத்தை ஆதரிப்பதும், அதனை அமலாக்குவதும், எளிய மக்களை சிக்கலுக்கு உள்ளாக்கும். அது சமூகநீதிக்கு எதிரான அப்பட்டமான செயல்பாடுதான் என்பதை அனுபவங்கள் நிருபிக்கின்றன.

புதிய பொருளாதார கொள்கை அமலாக்கப்பட்ட காலத்திலும், அதற்கு பின்னரும், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகள்தான் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பில் மாறி மாறி இருந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் ஒன்றிய அரசுடன் இரு கட்சிகளும் உறவு பாராட்டி வந்துள்ளன. திமுக கணிசமான காலம் ஒன்றிய ஆட்சியில், அமைச்சரவையிலும் பங்கேற்றுள்ளது. பொதுத்துறையை விற்க நேரும் தருணங்களில், சில எதிர்ப்புகளை தெரிவித்ததை தவிர, தனியார்மயத்தையும், தாராளமயத்தையும் உள்ளடக்கிய உலகமயமாக்கலின் புதிய பொருளாதார கொள்கைகளை இவ்வரசுகள் எதிர்த்ததில்லை. இது மாநில அரசில் அவர்கள் மேற்கொண்ட கொள்கை மாற்றங்களிலும் வெளிப்பட்டது. அது குடியிருப்பு பிரச்சினையிலும் தாக்கத்தை செலுத்தியது.

வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் தனியார் பங்களிப்பு பிரதானமாக்கப்பட்டுள்ளது. அரசின் பங்களிப்பு வெட்டி சுருக்கப்பட்டது. இக்காலத்தில் குடிசை பகுதிகள் மேம்படுத்துவதற்கு பதிலாக அம்மக்களை நகரத்தை விட்டு அகற்றுவதற்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. குறிப்பிட்ட கட்சியின் கோட்டை, இங்குள்ள வாக்குகள் இன்னாருக்குத்தான் என்றில்லாமல் இம்மக்களின் வாக்கு செலுத்தும்முறை மாற்றம் கண்டு விட்டதும், எனவே, அவர்கள் மீதான கவனமும், அவர்களை அங்கேயே தக்க வைக்க வேண்டும் என்கிற தேவையும், ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனது.

குடிசை மக்கள் குடியிருக்கும் இடம் சுகாதாரமாக இல்லை; குடிநீர் சுத்தமாக இல்லை; கழிப்பறை இல்லை; வீடுகள் காற்றோட்டத்துடன் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை என்று பிரதானமாக பேசப்பட்டது. எனவே, இவற்றை அங்கு ஏற்படுத்திக் கொடுப்பது முதன்மையாக பேசப்பட்டது. அப்புறப்படுத்துதல் என்பது இரண்டாவதாக இருந்தது. இன்று தனியார் பங்களிப்பு அதிகரித்தவுடன் புதிய வகையில் இந்த விவாதங்கள் திட்டமிட்ட வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்படியான சூழலில், அவர்கள் அங்கு வாழ்வது ஆபத்தானது என்பதாக இருந்த விவாதம், கூவம் கரையோரம் அவர்கள் வாழ்வது அந்த ஆற்றை சீரழிக்கிறது என்றும், அந்த ‘ஆக்கிரமிப்பே’ சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது; இது சமூகத்திற்கே ஆபத்து என்று மாற்றப்பட்டது. கொசஸ்தலை ஆறும், அடையாறு ஆறும், கூவம் ஆறும் மாசு அடைந்ததற்கு அந்த மக்கள் எந்த வகையிலும் காரணம் இல்லை. மோசமான நகர்ப்புற திட்டமிடல், எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் கழிவுகளை கலப்பது போன்ற ‘வளர்ச்சிப் போக்குகளே’ காரணமாகும். ஆனால், கரையோரம் வாழும் மக்கள் மீது மிக எளிதாக பழி சுமத்தி மக்களின் பொதுப்புத்தியில் நச்சுக் கருத்தை புகுத்தி, சமூக ஒப்புதலுடன் அவர்களை நகரை விட்டே விரட்டியடிக்கிறது அரசு. இப்படியான பகுதிகளில் இருந்த மக்களை அகற்றிவிட்டு, அவை எதுவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கோடு பராமரிக்கப்படவில்லை என்பதுதான் நிதர்சனம். அவ்விடங்கள் தனியாரின் கைகளுக்கு மாற்றப்படுவதும், பொழுதுபோக்கு பூங்காக்கள், வணிகவளாகங்கள் (மால்கள்) என கட்டிடங்களின் தொகுப்பாகவே மாறுகிறது. சென்னையில் பங்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று கூறி கரையோரம் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். ஆனால், அரசின் ஆக்கிரமிப்பில் அந்த கால்வாயில் தூண்கள் போட்டுதான் பறக்கும் ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கூவம் ஆற்றங்கரையில் வாழ்ந்து வந்த மக்கள் இதேபோல் அப்புறப்படுத்தப்பட்டனர். அதே கூவத்தின் இடையில் தூண்களைர் அமைத்துதான் மதுரவாயல் முதல் துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டம் அமையவுள்ளது. இதே கூவம் மற்றும் பக்கிங்காம் கரையோரம் இருந்த குடிசைகள் இடிக்கப்பட்ட நிலையில், பெரிய பெரிய தனியார் கட்டிடங்கள் இடிக்கப்படவில்லை. இப்படியான நிலையில் இவர்கள் முன்வைத்த சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னவானது?

குடிசை பகுதிகள்தான் அனைத்து குற்றச் செயல்களுக்கும் ஆதாரமான இடம் என்று குறிப்பிடப்பட்டு, இது சுற்றுப்புற மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது என்கிற கருத்தும் பரவலாக்கப்பட்டது. சாராயம் காய்ச்சுவதை பார்க்கும் பார்வையோடு பீர் தொழிற்சாலை மற்றும் மது உற்பத்தி செய்யும் உரிமையாளரை பார்ப்பதில்லை. கஞ்சா உற்பத்தி எந்த குடிசை பகுதிகளிலும் நடக்கவில்லை. கப்பல்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவுமே கடத்தல்கள் நடக்கிறது. இந்த கனவான்கள்தானே உண்மையில் குற்றவாளிகள். ஆனால் பழி என்னவோ குடிசை பகுதி மக்கள் மீதுதானே?

நகரத்தைவிட்டு விரட்டப்பட்டவர்கள்

இயற்கை பேரிடர்களை காரணம் காட்டியும், குடிசைபகுதி மக்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக, சுனாமி காலத்தில் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புகிறோம் என்கிற பெயரில், கடற்புற மக்கள் நிரந்தரமாகவே வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வரிய குடியிருப்பு பகுதியில் சுனாமி குடியிருப்பு என்ற பெயரில் குடியிருப்புகள் உள்ளது. சென்னையின் மைய பகுதியிலிருந்து நகரத்தின் விளிம்பிற்கு துரத்தப்பட்ட மக்களின் வாழ்விட பிரச்சனை மேலும் கூடுதலான சிரமத்திற்குள் அவர்களை தள்ளியுள்ளது. துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் மட்டும் சுமார் 20ஆயிரம் வீடுகள் ஒரே இடத்தில் குவியலாக உள்ளது. இக்குடியிருப்பு சென்னையின் மையத்திலிருந்து பல பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  அங்கிருந்து மேலும்  10 கிலோ மீட்டர் தெலைவில் செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதியில் சுமார் 27,000 குடியிருப்புக்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அனைவரும் சென்னையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு விரட்டப்பட்டவர்களே. இவர்களுக்கான வேலை, கல்வி, சுகாதாரம் வாழ்வாதாரம் என எல்லாமும் கேள்விக்குறியாகவே உள்ளது. எந்த சுகாதார சீர்கேட்டிலிருந்து இம்மக்களை பாதுகாக்கப் போவதாக கூறி அரசு இவர்களை இவ்வளவு தெலைவில் விரட்டியடித்த்தோ அங்கு எவ்வித நலமும், சமூக பாதுகாப்பும் இல்லாமல் வசிக்கின்றனர்.

“முதலாளித்துவ வர்க்கம் நடைமுறையில் குடியிருப்பு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்பதற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். முதலாளித்துவ உற்பத்தி முறையில் நம்முடைய தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்கள் நோயின் பிறப்பிடங்களாக விளங்குகிறது. அத்தகைய கேவலமான பொந்துகள் மற்றும் நிலவறைகளை முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஒழிக்கப்படுவதில்லை. அவை வேறெங்காவது மாற்றப்படுபடுகிறது.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளின் உண்மையை, சென்னையை விட்டு விரட்டப்பட்டுள்ள மக்களின் தற்போதைய குடியிருப்புகள் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

சென்னை வெள்ளதின்போதும் அதை தொடர்ந்தும் பல்வேறு குடியிருப்புக்கள் அகற்றப்பட்டன. இங்குதான் குடிசை பகுதிகளை கடந்து அடுத்த நிலையில் உள்ள பட்டா இல்லாத குடியிருப்புகளில் வாழும் மக்கள் குடியிருப்புக்களின் மீது அரசின் கைகள் நீள்கிறது. மயிலாப்பூர் கோவிந்தசாமி நகர் குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது. ஒரு பொதுநல வழக்கை பயன்படுத்தி அரசு நிர்வாகம் குடியிருப்புகளை அகற்றுகிறது. ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள குடியிருப்புகளுக்கு ஆட்சியர் பரிந்துரைத்த பிறகும், மேய்ச்சல் புறம்போக்கு நிலம் என்று கூறி குடியிருப்புகளை அகற்ற துடிக்கின்றனர். பயன்பாடற்ற நீர்நிலை பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் குடியிருந்து வருகின்றனர். அரசு நீர்நிலை என வரையறுத்து கரைகளை கட்டிய பிறகும், பொதுப்பயன்பாட்டில் உள்ள நிலங்களை நீர்நிலை என வகைப்படுத்தி நீதிமன்றங்களின் துணையோடு அகற்ற முயற்சிக்கின்றனர். அடுத்தகட்டமா அரசே ஒதுக்கிய நிலம், குடிசைமாற்று வாரியத்தால் குடியிருப்பு பகுதி என வரையறுக்கப்பட்ட நிலத்தில் வசிப்போரையும் அகற்ற முயற்சிக்கின்றனர். இதற்கு சாதகமாக நீதிமன்றங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஆட்சியாளர்கள் தங்களின் வர்க்க நிலையை எடுத்துக் காட்டுகின்றனர்.

“முதலளித்துவ உற்பத்தி முறை நீடிக்கின்ற வரை குடியிருப்பு பிரச்சினை, அல்லது தொழிலாளர்களை பாதிக்கின்ற, வேறு சமூகப் பிரச்சினைனையை தனியாக தீர்க்க முடியும் என்று நம்புவது முட்டாள்தனமே.” “பாட்டாளி வர்க்கம், அரசியல் அதிகாரத்தை வென்றெடுத்த உடனே பொதுநன்மையைப் பற்றிய அக்கறையினால் தூண்டப்பட்டுகின்ற நடவடிக்கைகள்  நிறைவேற்றப்படும். (உடைமை வர்க்கத்திடமிருந்து சொத்துக்கள் பறிக்கப்பட்டு உழைக்கும் மக்களுக்கு வழங்கும் நடவடிக்கைகள்) இன்றைய அரசு செய்கின்ற உடைமை பறித்தல்கள், தங்குமிட ஆணைகளைப் போல், அதுவும் சுலபமாக நிறைவேறும்.” என்கிற எங்கெல்சின் வார்த்தைகளே உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கான போர்குரலாகும்.

——————————————————————————————————————–

CITY and Community என்கிற ஆங்கில இதழில் டிசம்பர் 2019இல் Pranath Diwakar எழுதியுள்ள A Recipe for Disaster: Framing Risk and Vulnerability in Slum Relocation Policies In Chennai, India. எனும் கட்டுரையில் உள்ள தரவுகளை அடிப்படையாக கொண்டு இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.



One response to “உலகமய காலத்தில் வாழ்விட உத்தரவாதமும் சமூக நீதியும்”

  1. முதலாம் நெல் மலர் உலகமுதல்வண் Avatar
    முதலாம் நெல் மலர் உலகமுதல்வண்

    சிறப்பான திறனாய்வு வாழ்த்துக்கள் அய்யா

    Like

Leave a comment