மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


இந்தியமக்களின் விடுதலை – கம்யூனிஸ்டுகளின் தெளிவான மாற்றுப்பார்வை


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

சுதந்திர இந்தியாவின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டை அதிகார பூர்வமாக கொண்டாடிவரும் ஒன்றிய அரசின் தலைமை விடுதலை இயக்கத்தில் பங்கேற்காத ஒன்றாகும். இத்தலைமையின் அரசியல்-தத்துவார்த்த முன்னோடிகள் காலனி அரசிடம் மண்டியிட்டு, மன்னிப்புக் கேட்டு, சேவகம் புரிந்தவர்கள். அவர்களது இலக்கு, மதசார்பற்ற, பல்வேறு மொழிவழி தேசீய இனங்களும் தன்னாட்சி பெற்று இணைந்து வாழும் இந்திய ஒன்றியம் அல்ல. மாறாக, பெரும்பான்மை என்ற போர்வையில், இந்துராஷ்டிரா என்ற இலக்கைத்தான் இன்றைய ஆட்சியாளர்களின் அன்றைய குருமார்கள் முன்வைத்தனர். மகாத்மா காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனையிலிருந்து தப்பிய சவார்கர், முஞ்சே, ஆர் எஸ் எஸ். ஸின் பயங்கர இந்து ராஷ்டிரா இலக்கணத்தை விரிவாக முன்வைத்த கோல்வால்கர் உள்ளிட்ட அனைத்து ஆர் எஸ் எஸ் தலைவர்களுக்கும் எந்த ஒரு கட்டத்திலும் இந்திய மக்களின் விடுதலை இலக்காக இருந்ததில்லை. பன்முக இந்திய தேசத்தின் அரசியல் விடுதலையும் ஆர் எஸ் எஸ்  இலக்காக என்றுமே இருந்ததில்லை.

இந்திய தேசீய காங்கிரசின் விடுதலை இயக்கப் பார்வை

இந்திய விடுதலை இயக்கத்தில் தலைமை பாத்திரத்தை வகித்த காங்கிரஸ் கட்சி அரசியல் விடுதலை என்ற இலக்கை அக்கட்சி துவங்கி பல பத்தாண்டுகள் முன்வைக்கவில்லை. 1885 இல் துவக்கப்பட்ட இந்திய தேசீய  காங்கிரஸ் கட்சி 1930 இல் தான் இந்திய தேசத்தின் முழுவிடுதலை என்ற முழக்கத்தை  முறையாக அதன் அகில இந்திய மாநாட்டில் பிரகடனப்படுத்தியது. மக்கள் எழுச்சியின் காரணமாக விடுதலை முழக்கத்தை இவ்வாறு முன்வைத்தபோழுதும், விடுதலை  பெற்ற இந்தியா எத்தகைய சமூகமாக இருக்கவேண்டும் என்பது பற்றியெல்லாம் காங்கிரஸ் விரிவாகவோ ஆழமாகவோ பேசவில்லை. அடுத்தடுத்து வந்த காலங்களில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர பகுதி உழைப்பாளி மக்களையும் விடுதலை இயக்கத்தில் விரிவாக பங்கேற்க வைப்பதற்கு அவர்களது அன்றாட வாழ்வுசார் கோரிக்கைகளையும் முன்வைக்க வேண்டும் என்ற அவசியத்தை காங்கிரஸ் தலைமை, முன்பின் முரணின்றி இல்லாவிடினும் ஓரளவாவது உணர்ந்தது. இதனால் தான் உழுபவனுக்கு நிலம் சொந்தம், குறைந்தபட்சக்கூலி, வேலை நேரம் வரையறுக்கப்படுவது போன்ற பிரச்சினைகள் பற்றி அது பேசியது. 1930களில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் பெரும் வீழ்ச்சியில் பத்தாண்டு காலம் சிக்கி உழைக்கும் மக்கள் பெரும் வேலையின்மை, வறுமை பிரச்சனைகளை  சந்தித்துக்கொண்டிருந்த காலத்தில் சோசலிச சோவியத் ஒன்றியம் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சி மூலம் அனைவருக்கும் வேலையையும், தொடர்ந்து உயரும் வாழ்க்கை நிலையையும் உறுதிப்படுத்திய அனுபவம் இந்திய தேசீய காங்கிரஸ் தலைமையின் ஒருபகுதியினரை சோசலிசம் பற்றியும் திட்டமிடுதல் பற்றியும் பேச வைத்தது. எனினும் காங்கிரஸ் கட்சி விடுதலை இயக்க காலத்திலும், அதன் பின்பும், சொற்களைத் தாண்டி இத்திசைவழியில் வெகுதூரம் பயணிக்கவில்லை. முதலாளித்துவ வளர்ச்சிப்பாதைதான் காங்கிரஸ் கட்சியின் கனவாக விடுதலைபோராட்ட காலத்திலும் அதன் பின்பும் இருந்தது. இதுபற்றி தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாத் மிகச்சிறப்பாகவும் தெளிவாகவும் இந்திய சுதந்திரப்போராட்ட வரலாறு என்ற புத்தகத்திலும் நெருக்கடியில் இந்தியாவின் திட்டமிடல் என்ற நூலிலும் விளக்கியுள்ளார்.

எத்தகைய மாண்புகளும் விழுமியங்களும் இந்திய விடுதலை போராட்டத்தில் உயர்த்திப் பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் காங்கிரஸ் முன்னுக்குப்பின் முரணான நிலைபாடுகளைத்தான் கொண்டிருந்தது. சாதி அமைப்பையும் சமூக ஒடுக்குமுறைகளையும் தீவிரமாக காங்கிரஸ் எதிர்க்கவில்லை. பொதுவாக மதசார்பின்மை என்ற விழுமியத்தை ஏற்றுக்கொண்ட போதிலும் நடைமுறையில் காங்கிரஸ் கட்சி அதனை முரணின்றி பின்பற்றவில்லை. பெரும்பாலும் நிலப்ரபுக்களையும் ஜமீன்தார்களையும் மன்னராட்சிகளையும் எதிர்த்து காங்கிரஸ் களம் இறங்கவில்லை. மாறாக, இந்திய முதலாளிகளின் நலம் காக்கும் நோக்குடனே செயல்பட்ட காங்கிரஸ் இயக்கம், கிராமப்புற ஆதிக்க சக்திகளுடன் மோதலை தவிர்க்கவே முயன்றது. சாதி ஒடுக்குமுறையை தகர்க்கவோ, பழங்குடி மக்களின் உரிமைகளை நிலைநாட்டவோ காங்கிரஸ் தலைமை குறிப்பிடத்தக்க எந்த முயற்சியும் எடுத்ததாக சான்றுகள் இல்லை. விடுதலைக்குப்பின் இந்திய தேசீய காங்கிரஸ் பகிரங்கமாகவே கிராமப்புற பெருநில உடமையாளர்களுடன் சமரசம் செய்துகொண்டது. மக்கள் எழுச்சியின் காரணமாகவும் முதலாளித்துவ வளர்ச்சியின் தேவை அடிப்படையிலும் கிராமப்புற மற்றும் வேளாண் உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஒரு எல்லைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டது. ஆனால் அடிப்படையில் பெருமுதலாளிகளின் தலைமையிலான முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியைத்தான் காங்கிரஸ் நடத்திவந்தது. அப்பாதையின் நெருக்கடி 1980 – 1991 காலத்தில் மேலும் மேலும் தீவிரமடைந்த பின்னணியில், பன்னாட்டு அரங்கில் சோவியத் ஒன்றியத்திலும் பல கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோசலிச அமைப்புகள் தகர்க்கப்பட்ட சூழலில், 1991 இல் இருந்து காங்கிரஸ் நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக அமலாக்கியது. இந்த நிகழ்ச்சிப்போக்குகள் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இந்திய அரசின் வர்க்கத்தன்மை பற்றிய கீழ்கண்ட மதிப்பீடு மிகச்சரியானது என்று நிரூபிக்கின்றன: “இந்திய அரசு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களின் அரசு. இதற்கு தலைமை தாங்குவது பெருமுதலாளிகள். இப்பெருமுதலாளிகள் மேலும் மேலும் கூடுதலாக அந்நிய நிதி மூலதனத்துடன் இணைந்து செயல்படுகின்றனர்.”

இக்கட்டுரையின் நோக்கம் விடுதலை இயக்கத்திலும் அதன் பின்பும் இந்திய தேசீய காங்கிரஸ் எடுத்த பல்வேறு நிலைபாடுகள், அவற்றில் இருந்த முரண்கள் மற்றும் அவற்றின் வர்க்கத்தன்மை ஆகியவற்றை ஆய்வது அல்ல. எனினும் இந்திய நாட்டின் விடுதலை இயக்கத்தையும் இந்திய மக்களின் விடுதலை என்ற இலக்கையும்  பொது உடமை இயக்கம் எவ்வாறு முன்பின் முரணின்றி இணைத்துப் பார்த்தது என்பதை புரிந்து கொள்ள உதவும் வகையில் தேச விடுதலை இயக்கத்திற்கு தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை தொடர்பான கருத்துக்கள் இங்கே இடம் பெற்றுள்ளன.

விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்டுகளின் மாற்று பார்வை

இந்திய தேசீய காங்கிரஸ் என்ற அரசியல் அமைப்பின் வாயிலாக இந்திய முதலாளிவர்க்கம் 1885 ஆம் ஆண்டிலேயே அரசியல் களம் புகுந்துவிட்டது. இதற்குப்பின் பல பத்தாண்டுகளுக்குப் பின் தான் நவீன தொழிலாளி வர்க்கம் உருவாகி எண்ணிக்கையில் வேகமாக அதிகரித்த நிலையில், உலகெங்கும், குறிப்பாக ரஷ்யாவிலும் எழுந்த புரட்சிகர அலைகளின் பின்புலத்தில் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் உணர்வும் விடுதலை வேட்கையும் வேகமாக வளர்ந்து அரசியல் களத்திற்கு வருகிறது.1917இல் ரஷ்யாவில் வெடித்த மகத்தான அக்டோபர் புரட்சியின் தாக்கம் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது.

1921இல் காங்கிரஸ் முன் கம்யூனிஸ்டுகள் வைத்த கடிதம்

1920இல் முதன்முறையாக கூடிய அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (ஏஐடியுசி ) வளர்ந்துவந்த தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒரு குறியீடு என்றால், 1921இல் காங்கிரஸ் கட்சியின்  அகமதாபாத் நகரில் கூடிய அகில இந்திய கமிட்டி கூட்டத்திற்கு இந்திய பொது உடமை இயக்கத்தின் துவக்கத்தில் பங்கேற்ற M.N.ராய் மற்றும் அபானி முகர்ஜி ஆகிய இருவரும் சமர்ப்பித்த கடிதத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்ட அறைகூவல் விடுதலை இயக்கத்தில் சில இடதுசாரி கருத்துக்களை பிரகடனப்படுத்தியது. நிறைகுறைகள் இருந்தாலும், இது கவனிக்கத்தக்க ஆவணம். அடுத்த ஆண்டு கயாவில் காங்கிரஸ் கூடிய பொழுதும் இக்கடிதம் அனுப்பப்பட்டது. இக்கடிதம் முழு சுதந்திரம் – “பூரண ஸ்வராஜ்” – என்ற கோரிக்கையை விடுதலை இயக்கத்தில் முதன் முறையாக எழுப்பியது. இந்த கோரிக்கையை 1929 இல் தான் காங்கிரஸ் ஏற்றுகொண்டது. அது மட்டுமல்ல; விடுதலைப் போராட்டத்தில் விவசாயிகளையும் தொழிலாளிகளையும் இதர உழைக்கும் மக்களையும் ஈர்க்கும் வகையில் அவர்களின் உடனடி வாழ்வுசார் பிரச்சினைகளை காங்கிரஸ் கையில் எடுக்க வேண்டும் என்று கடித வடிவிலான இந்த பிரகடனம் வலியுறுத்தியது. அது கூறியது: “(காங்கிரஸ்) தொழிற்சங்கங்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை தனது கோரிக்கைகளாக ஏற்கட்டும்; விவசாய சங்கங்களின் திட்டத்தை தனது திட்டமாக ஏற்கட்டும்…. விரைவில் எந்த இடையூறும் காங்கிரஸ் முன்னேறுவதை தடுக்க இயலாது. தங்களின் பொருள்சார் நலனுக்காக உணர்வுபூர்வமாக போராடும் அனைத்து மக்களின் எதிர்கொள்ள முடியாத வலிமை காங்கிரசுக்கு பின்பலமாக இருக்கும்.” இந்த அறைகூவலை தொடர்ந்து தோழர் சிங்காரவேலர் காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் அறிவிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் என்ற முறையில் முழு சுதந்திரம் என்ற முழக்கத்தை ஏற்குமாறு வற்புறுத்தி உரை நிகழ்த்தினார்.

வகுப்புவாத எதிர்ப்பில் இடதுசாரிகள்

தொடர்ந்து காலனி அரசின் கடும் தாக்குதலுக்கு உள்ளான போதிலும் கம்யூனிஸ்ட் கட்சி தன்னை புனரமைத்துக்கொண்டு 1926ஆம் ஆண்டு மே மாதத்தில் வகுப்பு வாதவாத பிரச்சினை பற்றி தனது அறிக்கையை வெளியிட்டது. 1922 முதல் 1927 வரை ஏராளமான வகுப்பு கலவரங்கள் நிகழ்ந்தன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் தலைவர்கள் வகுப்புவாத சிந்தனைகளுக்கும் செயல்பாட்டுக்கும் மாறினர். இந்துமஹாசபா தலைவராக இருந்த சவார்கர் எழுதிய இந்துத்வா என்ற புத்தகம் 1923இல் வெளிவந்தது. 1925இல் ஆர் எஸ் எஸ் அமைப்பு உருவாக்கப்பட்டது. இத்தகைய சூழலில் கம்யூனிஸ்ட் கட்சி வகுப்புவாதத்தை சமரசமின்றி எதிர்ப்பது என்ற தனது நிலைபாட்டை உறுதிபட கடைப்பிடித்தது. காங்கிரசைப் போல் அல்லாமல், வகுப்புவாத அமைப்பை சார்ந்த எவரும்  கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக முடியாது என்ற நிலையை அது ஏற்கெனவே எடுத்திருந்தது. தோழர்கள் முசபர் அஹமதும் பாகர்ஹட்டாவும் இணைந்து வெளியிட்ட கடிதத்தில் இந்துக்களும் முஸ்லிம்களும் அந்நிய மற்றும் இந்திய முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களால் சமமாக சுரண்டப்படுகின்றனர் என்றும், இருசாராரின் பொருளாதார நலன்களும் ஒன்றானவையே என்றும் வலியுறுத்தினர். வர்க்க பேதமற்ற சமூகத்தை இருசாராரும் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும் என்றும் அக்கடிதம் அறைகூவல் விடுத்தது. காலனி ஆதிக்க சுரண்டலை எதிர்க்கவும் அழைத்தது.

1930இல் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த நடவடிக்கைக்கான திட்டம்

1920கள் முழுவதும் காலனி அரசால் வேட்டையாடப்பட்டு வந்தபோதிலும் கம்யூனிஸ்டுகள் உறுதியுடன் எதிர்காலப் பணிகள் பற்றி முனைப்புடன் சிந்தித்தனர். 1930ஆம் ஆண்டு நடவடிக்கைக்கான நகல் திட்டம் என்ற கம்யூனிஸ்ட் கட்சி ஆவணம்  இந்திய மக்களின் விடுதலை பற்றி கம்யூனிஸ்டுகளின் கண்ணோட்டத்தை பதிவு செய்தது. அது கூறியது:

இந்திய மக்களின் அடிமைத்தளைகளை அழித்தொழிக்கவும், தொழிலாளி வர்க்கத்தையும் விவசாயிகளையும் அவர்களை கசக்கிப் பிழியும் வறுமையில் இருந்து விடுவிக்கவும், தேசத்தின் விடுதலையை அடைவது அவசியம். விவசாய புரட்சி என்ற பதாகையை உயர்த்திப் பிடிப்பது அவசியம்……இந்தியாவின் புரட்சிகர விடுதலைக்கு பிரிட்டிஷ் முதலாளித்துவத்திற்கு எதிராகவும் நிலப்பிரபுத்துவத்திற்கு எதிராகவும் விவசாய புரட்சியை சாதிப்பது தான் அடிப்படை.

இதனை செய்வது யார் என்ற கேள்விக்கு அந்த அறிக்கை தொடர்ந்து கூறியது:

உலக வரலாறும் இந்தியாவில் வர்க்கப் போராட்டம் அளித்துள்ள படிப்பினைகளும் இந்திய மக்களின் விடுதலை, தேச அடிமைநிலையை ஒழிப்பது, தேச வளர்ச்சிக்கு குறுக்கே நிற்கும் அனைத்து தடைகளையும் தகர்த்தெறிவது, (சுரண்டும் வர்க்கங்களின்) நிலங்களை பறிமுதல் செய்து, புரட்சிகர தன்மையிலான மிகப்பெரிய அளவிலான ஜனநாயக புனரமைப்பை சாதிப்பது ஆகிய அனைத்தும் தொழிலாளி வர்க்கத் தலைமையின் கீழ் மட்டுமே சாத்தியம் என்பதை நிரூபிக்கின்றன.

1930 அறிக்கை முன்வைத்த மக்களுக்கான கோரிக்கைகள் 

மக்களுக்கான விரிவான திட்டத்தையும் அறிக்கை முன்வைக்கிறது. அதன் அனைத்து அம்சங்களையும் நாம் இங்கே விளக்கவோ விவாதிக்கவோ இயலாது. எனினும் நம்மை வியக்க வைக்கும் வகையில் தொலைநோக்குப் பார்வையுடன் பல விஷயங்களை அத்திட்டம் முன்வைத்துள்ளதை கோடிட்டுக் காட்டலாம். ஆவணம் முன்வைக்கும் கோரிக்கைகளில் சிலவற்றை பார்ப்போம்:

  • பிரிட்டிஷ் ஆட்சியை தூக்கி எறிந்தபின், அனைத்து (அந்நிய) கடன்களையும் ரத்துசெய்தல்; அனைத்து பிரிட்டிஷ் தொழிற்சாலைகள், வங்கிகள், ரயில், கடல் மற்றும் நதி சார் போக்குவரத்து, மலைத்தோட்டங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நாட்டுடமை ஆக்குதல்.
  • நிலப்பிரபுக்களின் நிலங்கள், வனங்கள், இதர சொத்துக்கள் ஆகியவற்றை நட்டஈடுஇன்றி பறிமுதல் செய்து உழைக்கும் விவசாயிகளிடம் ஒப்படைத்தல். (இது, மன்னர்கள்,பிரிட்டிஷ் அரசு அலுவலர்கள், லேவாதேவிகாரர்கள் ஆகியோருக்கும் பொருந்தும்). வங்கிகளுக்கும் லேவாதேவிக்காரர்களுக்கும் விவசாயிகள் தரவேண்டிய கடன்கள் ரத்து செய்யப்படும். அனைத்து ஆண்டான்-அடிமை ஒப்பந்தங்களும் ரத்தாகும்.
  • எட்டு மணி நேர வேலைநாள், தொழிலாளர் பணிநிலைமைகளில் மிகப்பெரிய முன்னேற்றம், கூலி உயர்வு ஆகியவை உறுதிசெய்யப்படும். வேலைகிடைக்காதவர்களுக்கு அரசு பராமரிப்பு வழங்கப்படும்
  • ஊடக சுதந்திரம், தொழிலாளர்களுக்கான அமைப்பு மற்றும் வேலை நிறுத்த உரிமை.
  • மறியலுக்கு தடை விதித்தல் உட்பட அனைத்து தொழிலாளர் விரோத சட்டங்கள் ரத்தாகும்.
  • அரசில் இருந்து மதம் முழுமையாக விலக்கப்படும்.
  • சாதி அமைப்பும் சாதி ஒடுக்குமுறைகளும் முழுமையாக அழித்தொழிக்கப்படும்.

பெண்கள் உரிமைகள்

இந்திய சமூகத்தில் பெண்களின் துயரநிலையை முடிவுக்கு கொண்டுவர பல நடவடிக்கைகளை 1930ஆம் ஆண்டு அறிக்கை பேசுகிறது. பெண்களின் முழுமையான சமூக, பொருளாதார, சட்டரீதியான சமத்துவத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராடும் என்று ஆவணம் கூறுகிறது. இதுபற்றிய விவரமான கருத்துக்கள் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அன்றே, கருவுற்றிருக்கும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறுக்கு முன்பு இரண்டு மாதம், பின்பு இரண்டு மாதம் முழு சம்பளத்துடன், தக்க இலவச மருத்துவ வசதிகளுடன்  விடுப்பு தரப்படவேண்டும் என்று அறிக்கை கூறியுள்ளது. பெண்கள் வேலை செய்யும் ஆலைகளில் ஆலை உடைமையாளர் செலவில் குழந்தை காப்பகங்கள் அமைக்கப்பட்டு செயல்படவேண்டும் என்ற கோரிக்கையையும் இந்த ஆவணம் முன்வைத்துள்ளது. பெண்தொழிலாளர்கள் அவர் தம் சிசுவிற்கு பாலூட்ட தனி அறை, இப்பெண்களுக்கு 6 மணி நேரம் மட்டுமே வேலைநாள் என்ற கோரிக்கைகளும் அறிக்கையில் இடம் பெறுகின்றன.

கல்வி, இளைஞர் நலம்

16 முதல் 20 வயதுவரையிலான இளைஞர்களுக்கு வேலைநாள் நான்கு மணிநேரமாக இருக்கவேண்டும் என்றும் 16 வயதுக்கு குறைவான குழந்தைகளை பணி அமர்த்தக்கூடாது அறிக்கை கோருகிறது. 16 வயதுவரை, கட்டாய இலவச கல்வி அரசால் வழங்கப்படவேண்டும் என்றும் அது கோருகிறது. அனைத்து மாணவர்களுக்கும் பாடபுத்தகங்கள், உணவு, உடை ஆகியவை அரசால் வழங்கப்படவேண்டும் என்பது அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

1930கள், 1940கள்

கட்சியின் முதல் திட்ட ஆவணம் 1930 இல் தயார் செய்யப்பட்டது. அப்பொழுது மீரட் சதிவழக்கு நடந்துகொண்டிருந்தது. மீரட் சதிவழக்கில் சிறை சென்ற தோழர்கள் வெளியே வந்தபிறகு நகல் அரசியல் கருத்துரு ஒன்று டிசம்பர்  1933 இல் அன்றைய “தற்காலிக (புரோவிஷனல்)”   மத்தியக் குழுவால் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 1936 இல் மூன்றாவது திட்ட ஆவணம் – நடவடிக்கைக்கான மேடை – ஏற்றுக்கொள்ளப்பட்டது. முந்தைய இரு ஆவணங்களில் இருந்த சில தவறுகளை நீக்கிய  இந்த ஆவணத்தின் அடிப்படையில் சர்வதேச அகிலத்துடன் இந்திய கம்யூனிஸ்ட் இணைப்பு பெற்றது. பின்னர் 1943இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  முதல் அகில இந்திய மாநாட்டில் கட்சி திட்டம் தொடர்பான வழிகாட்டுதல்கள் தரப்பட்டன. சர்வதேச மற்றும் இந்திய நிலைமைகள் பற்றிய மதிப்பீடுகள் தொடர்பாக  இந்த ஆவணங்களில் சில வேறுபாடுகள் இருந்தபோதிலும், நாட்டு விடுதலையிலும் மக்கள் விடுதலையிலும் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி மக்களை விடுதலை இயக்கத்தில் திரட்டவேண்டும் என்ற புரிதல் தொடர்ந்தது. பின்னர், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புரட்சியின் கட்டம் பற்றியும், அதன் தலைமை வர்க்கம் பற்றியும், பங்கேற்கும் வர்க்கங்கள் பற்றியும், இந்திய அரசின் வர்க்கத்தன்மையை மதிப்பீடு செய்வதிலும், அதிலிருந்து புரட்சியின் பாதையை இனம் காண்பதிலும் கடுமையான வேறுபாடுகள் எழுந்தன. நீண்ட போராட்டத்திற்குப்பின், மக்கள் ஜனநாயக புரட்சி என்ற இலக்கை நோக்கி இயக்கம் பயணிக்க வேண்டும் என்ற, விடுதலை இயக்க காலத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்த  புரிதலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொடர்ந்து முன் எடுத்துச் சென்றுள்ளது. இந்த வரலாறுக்குள் செல்வது இக்கட்டுரையின் வரம்பிற்கு அப்பாற்பட்டது.

இறுதியாக

இக்கட்டுரையின் நோக்கம், முதலாளித்துவ கட்சிகளைப்போல் இல்லாமல், கம்யூனிஸ்ட் இயக்கம் வர்க்கப் பார்வையில் நின்று விடுதலை இயக்கத்தில் செயல்பட்டது என்பதை தெளிவு படுத்துவது தான். அரசியல் விடுதலையின் அவசியத்தை நன்கு உணர்ந்து, இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி ஊசலாடிக்கொண்டிருந்த பொழுதே, 1921இலேயே முழுவிடுதலை என்ற கோரிக்கையை முன்வைத்த கம்யூனிஸ்டுகள் வெறும் அரசியல் விடுதலை மட்டும் நமது நோக்கமாக இருக்கமுடியாது என்பதையும் வலுவாக முன்வைத்தனர். வர்க்க அடிப்படையில் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைக் கையில் எடுப்பது அவசியம் என்று வலியுறுத்தினர். இத்தகைய பாதையின் மூலம் தான் உண்மையான ஜனநாயகத்தன்மை கொண்ட நாடாக இந்தியா மாற இயலும் என்பதை 1921,1930 ஆவணங்களில் மட்டுமின்றி, அதற்குப் பின்பும், விடுதலைப் போராட்ட காலத்திலும், இன்று வரையிலும் கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். அதேபோல் சமூக ஒடுக்குமுறையை முடிவுக்கு கொண்டு வருவதும் பழங்குடி மக்களின் சம உரிமைகளை நிலை நாட்டுவதும் பாலின சமத்துவத்தை நோக்கி பயணிப்பதும் இந்திய நாட்டு மக்களின் விடுதலைப் பயணத்தின் இன்றியமையாத அம்சங்கள் என்ற புரிதலுடன் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி செயல்படுகிறது. இந்தியா பல மொழிவழி தேசீய இனங்களைக்கொண்ட நாடு என்பதையும் மக்களின் முழுமையான விடுதலை என்பதன் இலக்கணத்தின் பகுதியாக முன்வைக்கிறது. அதேபோல், மதச்சார்பின்மையையும் நவீன இந்தியாவின் இலக்கணத்தின் பகுதியாக நாம் பார்க்கிறோம். நவீன தாராளமய கொள்கைகளை நிராகரித்து, வலுவான பொதுத்துறை, திட்டமிட்ட பொருளாதாரம் என்ற திசைவழியில் பயணித்தால் தான் ஏகாதிபத்திய தாக்குதலை எதிர்த்து நிற்கவும், பாடுபட்டு பெற்ற அரசியல் விடுதலையை பாதுகாக்கவும் இயலும். இந்த அம்சங்கள் அனைத்தும் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சமகாலப்படுத்தப்பட்ட திட்டத்தில் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கப்பட்டுள்ளன.

சமகாலத்தில் பல்வேறு அரசியல் பார்வைகளும் “மாடல்களும்” உரத்த குரலில் முன்வைக்கப்படுகின்றன. ஒருபுறம் ஆர் எஸ் எஸ் சின் கார்ப்பரேட் இந்துத்வா மாடல் ஊடகங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. மறுபுறம் மதசார்பின்மை பற்றி அவ்வப்பொழுது பேசினாலும் தாராளமய பாதை தான் சரியான மாடல் என்று காங்கிரஸ் கருதுகிறது. விவசாய புரட்சியின்றி, சில சமூக சீர்திருத்த முனைவுகள், சில நலத்திட்டங்கள் மற்றும் தாராளமய கொள்கைகள் மூலம் வளர்ச்சி காணலாம் என்ற சில மாநில முதலாளித்துவ கட்சிகளின் மாடல்கள் முன்மொழிகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் சமூக ஒடுக்குமுறையையும் பொருளாதார சுரண்டலையும் இணைந்தே எதிர்ப்பது தான் சரியான, புரட்சிகரமான வர்க்கப்பார்வை என்ற புரிதலில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதுதான் மக்கள் விடுதலை என்ற இலக்கை அடைய சரியான பாதை. எனவே தான், தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் விவசாயிகளையும் இதர உழைக்கும் மக்களையும் திரட்டி போராடுவதோடு, சாதி ஒடுக்குமுறையை தகர்ப்பது, பாலின சமத்துவத்தை நிலைநாட்டுவது, பழங்குடி மக்களின் உரிமைகளை உயர்த்திப்பிடிப்பது, தாராளமய பாதையை நிராகரிப்பது, பொதுத்துறையை வலுப்படுத்துவது, மாநில உரிமைகளுக்கு குரல் கொடுப்பது, மதசார்பின்மையை பாதுகாப்பது ஆகிய அம்சங்களும் மக்கள் ஜனநாயக புரட்சிப் பயணத்தின்  இன்றியமையாத அம்சங்கள் என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.



Leave a comment