மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


ஏங்கெல்ஸ் எழுத்துகளில் இந்தியா!


கார்ல் மார்க்சின் மிக  நெருங்கிய தோழர் என்ற முறையில், ஏங்கெல்ஸ் அவருடைய (அரசியல்/சித்தாந்த) கூட்டாளி மட்டுமல்ல; அவருடைய சீடரும் ஆவார். 1848இல் கம்யூனிஸ்ட் அறிக்கை எனும் மகத்தான ஆவணத்தை மார்க்சுடன் சேர்ந்து எழுதிய இணை ஆசிரியரும் ஆவார். ஏங்கெல்ஸ் தன்னடக்கமானவர். அதனாலேயே “மார்க்சிய அறிவுக் களஞ்சியத்துக்கு” அவரது பங்கை நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது.  இந்தியா குறித்து ஏங்கெல்சின் எழுத்துக்கள் அவரது ஆழமான மார்க்சிய ஆய்வுகளுக்கு ஒரு உதாரணம். இந்தியாவின் வரலாறு பற்றியும் பிரிட்டன் எப்படி இந்தியாவை சுரண்டியது என்பது பற்றியும் அவரது எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை.

இந்தியாவில் தாய்வழி சமூகங்கள்

இதுவரை உள்ள வரலாறு முழுவதும் வர்க்க போராட்டங்களின் வரலாறுதான் என கம்யூனிஸ்ட் அறிக்கை கூறினாலும், உபரி உற்பத்தி தோன்றிய பிறகுதான் சுரண்டலும் வர்க்கங்களும் தோன்றியிருக்க முடியும் எனும் ஆய்வு கருத்தாக்கம் உருவானது. அந்த சமயத்தில் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பற்றிய தொல்பொருள் ஆய்வு போதுமான அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை. எனினும் 1884இல் “குடும்பம், தனி சொத்துரிமை, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் மகத்தான படைப்பை ஏங்கெல்ஸ் எழுதிய பொழுது மொழியியலும் மானுடவியலும் கணிசமான முன்னேற்றத்தை கண்டிருந்தன. எல்.எச். மார்கன் அவர்களின் மானுடவியல் ஆய்வுகளை குறிப்பாக படித்த பின்னர், ஆதிகால சமூகங்களில் வர்க்கங்கள் மட்டுமல்ல; குடும்பம் மற்றும் அரசு ஆகிய நிறுவனங்களும் தோன்றியிருக்க இயலாது எனும் முடிவுக்கு ஏங்கெல்ஸ் வந்தார். கொலம்பியாவுக்கு முந்தைய அமெரிக்க சமூகங்களில் மட்டுமல்லாது, சில ஆதிகால இந்திய சமூகங்களிலும் குடும்பத்துக்கு முந்தைய தாய் வழி சமூகங்கள் இருந்தன என்பதை ஏங்கெல்ஸ் கண்டுபிடித்தார்.

மனித சமூகம் எப்படி “உபரி உற்பத்தியை” உற்பத்தி செய்ய முடிந்தது என்பதை அறிவதில் ஏங்கெல்ஸ் இயற்கையிலேயே ஆர்வமாக இருந்தார். உபரி உற்பத்தியின் தோற்றுவாய் விலங்குகளை, குறிப்பாக கால்நடைகளை வளர்ப்பதில்தான் இருந்திருக்க முடியும் என அவர் கருதினார். குறிப்பாக யூதர்கள்/ அரேபியர்கள்/ மத்திய ஆசியர்கள்/ஆரியர்கள் ஆகியோர் விலங்குகளை முதலில் வளர்த்தனர் என ஏங்கெல்ஸ் மொழியிலாளார்களின் ஆய்வுகளின் அடிப்படையில் கருதினார்.

விலங்குகளின் வலிமைக்கு பின்னர்தான் விவசாயம் உருவாகியிருக்க முடியும் என ஏங்கெல்ஸ் கருதினார்.   ஆனால் இப்பொழுது தொல்பொருள் ஆய்வுகளும் மொழியியல் ஆய்வுகளும் ஒரு தெளிவான சித்திரத்தை முன்வைக்கின்றன. விலங்குகளை வளர்ப்பதும் விவசாயமும் அடுத்தடுத்து உருவாகவில்லை; மாறாக ஒரே சமயத்தில் இரண்டும் நிகழ்ந்தன என்பது நிலைநாட்டப்பட்டுள்ளது. ஆய்வாளர் கோர்டன் சைல்டி இதனை  புதிய கற்கால புரட்சி என அழைக்கிறார்.  குறைந்தபட்சம் இந்தியாவில் இது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டப்பட்டு அதன் உச்சகட்டமாக இண்டஸ் எனப்படும் சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு.2500-1800) உருவானது. இது ஆரியர்கள் இந்தியாவில் காலடி வைப்பதற்கு பல நூறாண்டுகளுக்கும் முன்பே நிகழ்ந்தது.

ஆனால் விலங்கு வளர்ப்பும் விவசாயமும் ஒன்றுக்குப் பின் ஒன்றாக வந்தனவா அல்லது ஒரே சமயத்தில் நிகழ்ந்தனவா என்பது ஏங்கெல்சின் அடிப்படை கருத்தாக்கத்துக்கு முக்கியமல்ல. அவர் நிலைநாட்ட முனைந்தது இதுதான்: வரலாற்றின் ஒரு காலகட்டத்தில் மிகவும் பின்தங்கிய நிலைமை காரணமாக உபரி உற்பத்தி என்பது இல்லை; எனவே குடும்பம்/தனி சொத்துரிமை/ அரசு போன்ற அமைப்புகள் உருவாகியிருக்க முடியாது. இந்த முக்கியமான அம்சத்தை நிலைநாட்டிய பின்னர், உபரி உற்பத்தி உருவான பின்னர்தான் வர்க்கங்கள்/ வர்க்க சுரண்டல்/ அரசு அமைப்புகள்/ ஆண் தலைமையிலான குடும்பம் ஆகியவை பரிணமித்தன என்பதை ஏங்கெல்ஸ் வலுவாக பொதுமைப்படுத்துகிறார்.

இந்தியாவில் நீர்ப்பாசனம்: சர்வாதிகாரிகளும் நாகரிகவாதிகளும்

இந்த கருத்தாக்கத்தை முன்வைப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே ஆசிய சமூகங்களில் அரசு எப்படி உருவானது என்பதை ஆய்வு செய்ய ஏங்கெல்ஸ் ஆரவம் காட்டினார். 1853ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் ஏங்கெல்ஸ் அவர்கள் தான் பெர்சிய மொழி கற்று கொண்டதும் கவிஞர் ஹஃபீஸ் அவர்களின் கவிதைகளை ரசித்தது பற்றியும் குறிப்பிடுகிறார். 15ஆம் நூற்றாண்டை சேர்ந்த மிர் கோண்ட் அவர்களின் உலக வரலாறு படித்தது குறித்தும் சொல்கிறார். இந்த கடிதத்தில் ஏங்கெல்ஸ் அவர்கள் சகாரா முதல் அரேபியா- பெர்சியா-வடமேற்கு இந்தியா- துர்கிஸ்தான்-மங்கோலியா வரை பாலைவன தொடர்ச்சி இருப்பதையும் இந்த பகுதியில் விவசாயத்தின் முதல் முக்கிய தேவை “மனிதனால் உருவாக்கப்படும் நீர்ப்பாசனம்” எனவும் சுட்டிக்காட்டுகிறார். எனவே இந்த பகுதிகளை நிர்வாகம் செய்யும் அரசுகள் நிதி/போர் ஆகிய துறைகளுடன் சேர்த்து பாசனத்துக்காக பொதுப்பணி துறையையும் உருவாக்க வேண்டியிருந்தது எனவும் குறிப்பிடுகிறார். ஆனால் பிரிட்டன் அரசாங்கம் இந்த முக்கிய பணியை உதாசீனப்படுத்தினர் எனவும், எனவே இந்திய விவசாயம் அழியப்போகிறது எனவும் ஏங்கெல்ஸ் தீர்க்கதரிசனத்துடன் குறிப்பிட்டார்.

ஏங்கெல்சின் இந்த முக்கியமான கருத்தாக்கத்தை மார்க்ஸ் அவர்கள் 10.06.1853 தேதிய நியூயார்க் டெய்லி டிரிபியூன் இதழுக்கு எழுதிய “இந்தியாவில் பிரிட்டன் ஆட்சி” எனும் கட்டுரைக்கு பயன்படுத்தியது மட்டுமின்றி அந்த கருத்தாக்கத்தை மேலும் விரிவுபடுத்தினார். 25 ஆண்டுகளுக்கு பிறகு ஏங்கெல்ஸ் அவர்களே இந்தப் பிரச்சனை குறித்து கீழ்கண்டவாறு எழுதினார்:

“பெர்சியாவிலும் இந்தியாவிலும் எவ்வளவு சர்வாதிகார மன்னர்களின் ஆட்சிகள் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்டிருந்தாலும் அத்தகைய ஒவ்வொரு அரசும் ஒரு முக்கிய தேவையை உணர்ந்திருந்தனர். அவர்களின் முதல் கடமை பள்ளத்தாக்குகள் முழுவதிலும் பாசனத்தை உருவாக்க வேண்டும்; அது இல்லாமல் விவசாயம் என்பது சாத்தியமே இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். தங்களை மிகவும் அறிவாளிகள் என எண்ணிக்கொண்ட பிரிட்டஷ் ஆட்சியினர் இந்த முக்கிய கடமையைதான் மறந்தனர்.”

இந்தியாவின் கிராமிய சமூகங்கள்

1878ஆம் ஆண்டு டூரிங்குக்கு மறுப்பு எனும் நூலில் “கிராம சமூகங்கள்” எனும் அமைப்புகள் குறித்து ஏங்கெல்ஸ் தனது கவனத்தை செலுத்தினார். இதில் தனது (மார்க்ஸ் உட்பட) கிராம சமூகங்கள் குறித்த ஒரு இறுதியான மதிப்பீடை உருவாக்கினார். விவசாயத்தின் அடிப்படையிலான கிராம சமூகம் என்பது “பொது உழைப்பு” மற்றும் “பொதுவான நில உரிமை” அடிப்படையிலான ஒரு வடிவத்தில் இருந்தது எனவும், அது நவீன காலம் வரை அரசு என்ற நிறுவனம் இருந்தாலும், அதனுடன் இந்த கிராம சமூகமும் இணையாக இயங்கியது  எனவும் ஏங்கெல்ஸ் முன்வைக்கிறார். இத்தகைய அமைப்பு இந்தியாவிலும் இருந்தது என்பது ஏங்கெல்சின் மதிப்பீடு. நவீன காலத்தில்தான் ஏனைய சமூக முறைகளுடன் ஏற்பட்ட தொடர்பு காரணமாக “கிராம சமூகங்கள்” சிதைந்து “சொத்துரிமையில் அசமத்துவம்” உருவானது  எனவும் அவர் கூறுகிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மன்னராட்சியும் வெளி படையெடுப்புகளும் “கிராம சமூகங்கள்” எனும் அமைப்பை இந்தியாவில் சிதைக்க முடியவில்லை எனவும் அவர் கூறுகிறார். இத்தகைய “கிராம சமூகங்கள்” தமக்கென அதிகாரிகளை உருவாக்கிக் கொண்டனர் எனவும், அவர்கள்தான் பின்னாளில் இந்தியாவில் மிக எளிதாக ஆளும் வர்க்கங்களாக மாறினர் எனவும் ஏங்கெல்ஸ் ஒரு முக்கியமான மதிப்பீடை முன்வைக்கிறார். ஏங்கெல்ஸ் இதனை கூறிய பொழுது இது ஒரு மிகப்பெரிய “யூகம்தான்” என்றாலும் பின்னர் 1956ஆம் ஆண்டு கொசாம்பியின் மிக முக்கிய ஆய்வான “கீழிருந்து நிலப்பிரபுத்துவம்” என்பதுடன் இசைந்து போவதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் அரசு அமைப்புகள் குறித்த ஏங்கெல்சின் ஆய்வுகளுக்கு மீண்டும் வருவோம். காலனிக்கு முந்தைய இந்தியாவில் அதிக அளவுக்கு நகரமயம் இருந்தது என ஏங்கெல்ஸ் மதிப்பிட்டார் என்பது மிக முக்கியமானது. ஆப்கானிய மற்றும் முகலாய ஆட்சியாளர்கள் 14 மற்றும் 15ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆக்ரா/ தில்லி/ லாகூர்/முல்தான் போன்ற நகரங்களை உருவாக்கினர் என பாராட்டுகிறார். ஆகவே சில மேற்கத்திய ஆய்வாளர்கள் கூறுவது போல ஆசிய சமூகங்கள் பிற்போக்குத்தனமானவை எனவும், காட்டுமிராண்டி சமூகங்கள் எனவும் ஏங்கெல்ஸ் மதிப்பிடவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சியின் இந்தியக் கொள்ளை

மார்க்சை போலவே எங்கெல்சும் பிரிட்டன் ஆட்சி  இந்தியாவுக்கு எத்தகைய அழிவுகளை உருவாக்கியது என்பதில் தெளிவாக இருந்தார். 1890ஆம் ஆண்டு சி. ஸ்மித் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டன் காலனிய ஆட்சி இந்தியாவை வென்ற பொழுது அதன் தொடக்ககால நோக்கம் குறித்து கீழ்கண்ட முக்கிய கருத்தை குறிப்பிடுகிறார்:

“போர்த்துகீசியர்கள்/ டச்சுக்காரர்கள்/ஆங்கிலேயர்கள் 1500 முதல் 1800ம் ஆண்டு வரை இந்தியாவை வென்ற பொழுது அங்கிருந்து தமது தேசங்களுக்கு இறக்குமதி என்பதுதான் நோக்கமாக இருந்தது. எவரும் இந்தியாவுக்கு ஏற்றுமதி  குறித்து சிந்திக்கவில்லை. எனினும் இந்தியாவின் பல  பகுதிகளை கண்டுபிடித்ததும் அவற்றை வெற்றி கொண்டதும் முற்றிலும் வர்த்தக நோக்கங்களுக்குதான் என்றாலும் பின்னர் அவை எத்தகைய மலையளவு பின்விளைவுகளை தொழில்கள் மீது உருவாக்கின! இந்தியா போன்ற தேசங்களுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதிதான்  பிரிட்டனின் நவீன பெரிய தொழில்கள் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன.”

ஏங்கெல்ஸ் இந்த கருத்தை அச்சுக்கு எழுதவில்லை. மாறாக தனது சக போராளிக்கு கடிதமாக அவசரத்தில் எழுதுகிறார். எனினும் இந்த கருத்து மிக முக்கியமான செழுமையான மதிப்பீடு! இந்தியாவை காலனியம் வென்றதற்கு முக்கிய காரணம் இங்கிருந்து தம்முடைய நாடுகளுக்கு பொருட்களை இறக்குமதி செய்யவே! தம்முடைய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய அல்ல! எனினும் இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் பல பகுதிகளை கண்டுபிடித்ததும் வென்றதும் வேறு தொடர் விளைவுகளை உருவாக்கியது. இந்தியாவிலிருந்து இறக்குமதி என்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு தனது பொருட்களை ஏற்றுமதி என்பதும் முக்கிய நோக்கமாக மாறியது. இதன் விளைவாக இங்கிலாந்தின் பொருளாதார மாற்றமும் அதற்கு ஏற்ற வகையில் தொழில் புரட்சியும் இந்த ஏற்றுமதிக்கு இசைந்தவாறு உருவாயின. இப்பொழுது இந்தியாவும் ஏனைய காலனிய தேசங்களும் தொழில் வளர்ச்சி கண்ட பிரிட்டனுக்கு மட்டுமேயான சந்தையாகவும் செயல்பட வேண்டி வந்தது. ஒரு வருத்தமான அம்சம் என்னவெனில், ஏங்கெல்சின் இந்த முக்கிய மதிப்பீடை பிரிட்டனில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த பல  மேற்கத்திய மார்க்சிய ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ளவில்லை. உதாரணத்துக்கு 1945இல் லண்டனில் வெளியிடப்பட்ட மவுரிஸ் டாப் அவர்களின் “முதலாளித்துவத்தின் வளர்ச்சி குறித்த ஆய்வுகள்” எனும் ஆவணத்தில் ஏங்கெல்சின் இந்த கருத்து இடம்பெறவில்லை.

ஏங்கெல்ஸ் அவர்களே 1870 வரை பிரிட்டனின் தொழில் நகரமான மான்செஸ்டரில் ஆலையில் பணியாற்றினார். அவரது தந்தையின் நிறுவனம் பருத்தி வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தது.  எனவே எந்த அளவுக்கு பருத்தி இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது எனவும் இங்கிலாந்திலிருந்து ஆடைகள் எந்த அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது எனவும் அவர் அறிந்திருந்தார். இந்த வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள் பிரிட்டனின் வர்த்தக நெருக்கடியின் ஏற்ற  இறக்கங்களை பிரதிபலிக்கும் குறியீடாகவும் ஏங்கெல்ஸ் கணித்தார். 11.12.1868 அன்று மார்க்சுக்கு எழுதிய கடிதத்தில் பிரிட்டனின் நூல் மற்றும் பஞ்சாலை உற்பத்தியாளர்கள் எவ்வாறு மேலும் மேலும் இந்திய சந்தைகளை நம்பி உள்ளனர் என்பதை குறிப்பிடுகிறார். அதீத உற்பத்தி காரணமாக அந்த சந்தையும் தேக்கமடைவது பற்றியும் விவாதிக்கிறார். இந்தியாவின் மீதான கட்டுப்பாடு, குறிப்பாக வரிகள் மூலம், மிக முக்கிய தேவையாக பிரிட்டன் முன் எழுகிறது. 18.07.1892 அன்று டேனியல்சன் எனும் தமது நண்பருக்கு எழுதிய கடிதத்தில் “உலகின்  மையப்படுத்தப்பட்ட ஒரு பெரிய உற்பத்தி கூடமான இங்கிலாந்தின்” ஒரு பிரிவாக இந்தியா மாறிவிட்டது என்பதை குறிப்பிட்டு ரஷ்யாவும் தனது வரிகள் மூலம் தன்னை பாதுகாத்து கொள்ளவில்லை எனில் இந்தியா போல ஆகிவிடும் எனவும் எச்சரிக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்திய மக்களின் நன்மைக்காக எந்த ஒரு சீர்திருத்தத்தையும் செய்ய விரும்பவில்லை என மார்க்சை போலவே ஏங்கெல்சும் உறுதியாக நம்பினார். 1853ஆம் ஆண்டின் இந்தியா குறித்த சட்டத்தை   அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் ஆளும் கட்சியும் இந்தியாவை சீர்திருத்தும் மிகப்பெரிய சட்டம் என சிலாகித்தனர். ஆனால் இந்த  சட்டத்தின் முக்கிய நோக்கம் இந்தியாவில் பிரிட்டிஷாரின் பதவிகளையும் ஊதியத்தையும் உயர்த்திகொள்வதுதான் எனவும் இந்தியாவை கொள்ளை அடித்ததை தமக்குள் பிரித்து கொள்ளும் பிரிட்டன் ஆளும் கட்சியின் சூழ்ச்சிதான் என்பதையும் ஏங்கெல்ஸ் அம்பலப்படுத்தினார். இந்தியாவுக்கு இதனால் எந்த நன்மையும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்தினார்.

1857 மகத்தான கிளர்ச்சி குறித்து ஏங்கெல்ஸ்

1857 கிளர்ச்சியை பிரிட்டிஷார் அடக்கியதன் ராணுவ அம்சங்கள் பற்றி தனக்கு எழுதுமாறு மார்க்ஸ் ஏங்கெல்சை வேண்டினார். இந்த கிளர்ச்சி குறித்து பதினொரு கட்டுரைகளை ஏங்கெல்சின் பேனா 5.12.1857 முதல் 1.10.1858 வரை எழுதியது. இந்த கட்டுரைகளை பெரும்பாலானவற்றில் ஏங்கெல்ஸ் ராணுவ நிபுணரின் ஆய்வு போல  எழுதுகிறார். அவர் உண்மையிலேயே மிகப்பெரிய ராணுவ நிபுணர் என்பது நாம் அறிந்த ஒன்றுதான்! இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர்களின் அதிகாரபூர்வ கட்டுரைகளை விமர்சன ரீதியாகவே ஏங்கெல்ஸ் அணுகினார். எனினும் அந்த கட்டத்தில் இந்த கிளர்ச்சி குறித்து பிரிட்டனில் உலவிய ஆவணங்கள் இவை மட்டுமே என்பது நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவற்றை ஆய்வு செய்துதான் ஏங்கெல்ஸ் கட்டுரைகளை எழுதவேண்டி இருந்தது. ராணுவ ரீதியாக நவீன ஆயுதங்களை கொண்டிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளின் சரியான வியூகத்தையும் கிளர்ச்சியாளர்களிடையே இருந்த குழப்பங்களையும் மையப்படுத்தப்பட்ட தலைமையகம் இல்லாததையும் ஏங்கெல்ஸ் குறிப்பிடுகிறார். கிளர்ச்சியின் தோல்விக்கு இது ஒரு முக்கிய காரணம்.

கிளர்ச்சி அடக்கப்பட்ட பின்னர் பிரிட்டிஷார் ஏவிய கடும் கொலைவெறி அடக்குமுறையையும் கொள்ளைகளையும் ஏங்கெல்ஸ் கடுமையாக விமர்சிக்கிறார். அவுத் பகுதியில் பிரிட்டிஷார் அனைத்து நிலத்தையும் பறிமுதல் செய்து பிறப்பித்த கானிங் அறிக்கையை வன்மையாக கண்டித்தார். மக்களின் ஒவ்வொரு ஏக்கர் மட்டுமின்றி ஒவ்வொரு சிறு இடத்தையும்ம் கூட இந்த சட்டம் மூலம் பிரிட்டிஷ் ஆட்சி பறித்து கொண்டது. லக்னோவிலும் அதற்கு முன்னர் தில்லியிலும் பிரிட்டிஷார் அடித்த கொள்ளைகளை ஏங்கெல்ஸ் கடும் வார்த்தைகளில் கண்டிக்கிறார். 1870ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இதழுக்கு எழுதிய கட்டுரையில் பிரிட்டிஷ் ராணுவம் 1857 கிளர்ச்சியை அடக்கிய பின்னர் சிறைக் கைதிகளை சுட்டுக்கொன்றதும் பிரிட்டிஷார் நடந்து கொண்ட விதமும் போர் விதிகளை மீறியதாகும் எனவும் குறிப்பிடுகிறார்.

ஏங்கெல்ஸ் அவர்கள் கிளர்ச்சியாளர்கள் மீது பெரும் அனுதாபமும் ஆதரவும் கொண்டிருந்தார்.  அதனாலேயே அவர்கள் போர்க்களத்தில் செய்த சில தவறுகள் காரணமாக  கோபமும் கொண்டார். பகிரங்க போர் களத்தில் தோல்விக்கு பின்னர் கிளர்ச்சியாளர்கள் கொரில்லா போரில் ஈடுபடுவார்கள் என 1858 ஜூனில் அவர் எதிர்பார்த்தார். ஏனெனில் இன்னும் 1,50,000 கிளர்ச்சியாளர்கள் களத்தில் இருந்தனர். மேலும் அந்த தேசிய கிளர்ச்சியில் மக்களின் ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கு இருந்தது. பிரிட்டஷ் படைகள் சாதாரண மக்களிடம் எவ்வித உதவியையும் அல்லது தகவலையும் கூட பெற முடியவில்லை. அடுத்த மாதம் அவர் எழுதிய கட்டுரையில் இந்திய மக்கள் வெள்ளை முகத்தை கொண்ட ஆக்கிரமிப்பாளர்களை வெறுத்தனர் என்றாலும் கிளர்ச்சியாளர்கள் தமது போரை விரிவுபடுத்தவில்லை எனில் அவர்கள் அனைவரும் ஒடுக்கப்படும் ஆபத்து உள்ளது என மதிப்பிட்டார்.

இந்திய மக்கள் குறித்து அசாத்திய நம்பிக்கை

கிளர்ச்சி தோல்வி அடைந்த பின்னரும் ஏங்கெல்ஸ் நம்பிக்கையை கை விடவில்லை.  கிளர்ச்சி பற்றிய இறுதி கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதினார்:

“வங்காளத்தை சேர்ந்த ராணுவத்தின் கலகத்தால் தொடங்கப்பட்ட அந்த மகத்தான கிளர்ச்சி விரைவில் முடிவுக்கு வந்துவிடும் போல தோன்றுகிறது. ஆனால் இந்த இரண்டாவது வெற்றி மூலம் இங்கிலாந்து இந்திய மக்களின் மனதை வென்றுவிடவில்லை. உள்ளூர் இந்திய வீரர்கள் சில கொடூரங்களை மேற்கொண்டனர் எனக் கூறப்படும் மிகைபடுத்தப்பட்ட பொய்யான அறிக்கைகள் அடிப்படையில் பிரிட்டிஷ் துருப்புகள் நடத்திய பதில் வெறியாட்டமும் அவுத் பகுதியை மொத்தமாகவும் சில்லறையாகவும் கைப்பற்றியதும் வெற்றியாளர்கள் குறித்து எவ்வித சாதகமான பிரதிபலிப்பையும் இந்திய மக்களிடம் ஏற்படுத்தவில்லை. மாறாக இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இரு பிரிவினருமே கிறித்துவ ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக இதுவரை கண்டிராத பெரும் வெறுப்பை கொண்டுள்ளனர் என பிரிட்டன் ராணுவத்தினரே கூறுகின்றனர். “

1882ஆம் ஆண்டு அதாவது  1857 கிளர்ச்சியின் 25வது ஆண்டிற்கு சற்று முன்னதாக ஏங்கெல்ஸ் இந்திய புரட்சி பற்றி மதிப்பிட்டார். கார்ல் கவுட்சிக்கு செப்டம்பர் 12 அன்று அவர் எழுதிய கடிதத்தில் கூறினார்:

“இந்தியா நிச்சயமாக புரட்சியை நடத்தும் வாய்ப்பு உள்ளது. பிரிட்டனின் தொழிலாளி வர்க்கம் தனது சுய விடுதலை பயணத்தில் ஒரு காலனிய போரை நிகழ்த்த முடியாது. எனவே இந்திய புரட்சி தனது பயணத்தை பூர்த்தி செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். எனினும் இந்த புரட்சி எவ்வித அழிவும் (வன்முறையும்) இல்லாமல் நடக்கும் என கூறமுடியாது. ஆனால் இத்தகைய அம்சங்கள் எத்தகைய புரட்சியாக இருந்தாலும் பிரிக்க முடியாதவை!”

இந்த மதிப்பீடு எழுதப்பட்ட 66 ஆண்டுகளில் இந்தியா விடுதலை பெற்றது. ஏங்கெல்சின் மதிப்பீடு இந்திய மக்களின் விடுதலை தாகம் குறித்த அசாத்திய நம்பிக்கையின் அடிப்படையிலானது! இந்திய விடுதலையை பிரிட்டன் தொழிலாளி வர்க்கம் எதிர்க்கக் கூடாது எனும் அறிவுறுத்தலும் எச்சரிக்கையும் ஏங்கெல்சின் எழுத்துகளில் உள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

தமிழில்: அன்வர் உசேன்

(உப தலைப்புகள் மொழி பெயர்ப்பாளருடையது)



Leave a comment