ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை 2023-24:மக்கள் மீதான துல்லிய தாக்குதல்


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்


ஆட்சியில் உள்ள ஆர்எஸ்எஸ்–பாஜக அரசின் இறுதி முழுநிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் பிப்ரவரி 1இல் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கம் போல நிதி அமைச்சர் பட்ஜெட் உரை வார்த்தை ஜாலங்கள் நிறைந்ததாக அமைந்தது. பங்கு சந்தையையும் பெரு முதலாளிகளையும் குஷிப்படுத்த பல அறிவிப்புகள் அவரது உரையில் இருந்தன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் வழக்கம் போல, அவ்வப்பொழுது குரல் ஒலியும் கர ஒலியும் எழுப்பினர். இருந்தும் அன்றைய தின பங்குச்சந்தை நிலவரங்கள் அரசின் அறிவிப்புகளால் உற்சாகம் அடையவில்லை. மாறாக, இந்த அரசுக்கும் பிரதமருக்கும் மிகநெருக்கமானவர் என்று கருதப்படும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வேகமாக சரிந்த வண்ணம் இருந்தன. பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட ஒரு வாரம் இருந்த நிலையில், ஜனவரி 24, 2023 அன்று அமெரிக்க கம்பனி ஹிண்டென்பர்க் இரண்டு ஆண்டுகள் அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆழமாக ஆய்வு செய்து, ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டிருந்தது. அக்குழுமத்தின் நெறிமுறை மீறல்களையும், அதன் பலவீனங்களையும், அக்குழுமம் செய்துள்ளதாக கருதப்படும் பல தில்லு முல்லுகளையும், அவ்வறிக்கை அம்பலப்படுத்தியது. அதானி குழுமத்தின் கடன்கள் பற்றியும் அக்குழுமத்தின் பங்கு விலைகள் செயற்கையாக உயர்த்தப்படுவதற்கு பயன்படுத்தப்பட்ட உத்திகள் பற்றியும், அவ்வறிக்கை தெரிவித்தது. இந்த அறிக்கையின் ஆதாரங்களையும் தரவுகளையும், தக்க விவரங்களை முன்வைத்து நிராகரிப்பதற்கு பதிலாக, அதானி நிறுவனம் ஹிண்டென்பர்க் நிறுவனத்தை எதிர்த்து வழக்கு தொடர்வதாக மிரட்டியது. பங்கு சந்தையில் இது எடுபடவில்லை. அதானி குழுமத்தின் சரிவு, தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதானி குழுமத்தின் மீது பொதுவெளியில் ஹிண்டென்பர்க் நிறுவனம் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க, ஒன்றிய அரசு முன்வரவில்லை என்பது மட்டுமின்றி, பாராளுமன்றத்தில் இப்பிரச்சினையை விவாதிக்க, தொடர்ந்து மறுத்து வருகிறது. இப்பிரச்சினை ஒருபுறம் இருக்க, ஒன்றிய பட்ஜெட் பற்றி சுருக்கமாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.


பட்ஜெட்டை விவாதிப்பது ஜனநாயகக் கடமை


பல ஆண்டுகளாகவே ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல் என்பது ஒரு மிகைப்படுத்தப்பட்ட ஊடக நிகழ்வாக மாறிவிட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் முன்பே ஒன்றிய அரசின் பட்ஜெட் பற்றி தேவையற்ற பரபரப்பை ஊடகங்கள் கிளப்பி விடுகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, அதுபற்றி ஊடக உலகில் ஆழமற்ற பரப்புரைகளும், பொழிப்புரைகளும், வந்தவண்ணமே இருக்கின்றன. உண்மையில் ஒன்றிய அரசின் பட்ஜெட்டிற்கு ஒரு எல்லைக்குட்பட்ட முக்கியத்துவம்தான் உண்டு. அரசு தனது பல நடவடிக்கைகள் மூலம் வருடம் முழுவதும் பொருளாதாரத்தின் மீது தாக்கம் ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அவ்வப்பொழுது பெரு முதலாளிகளுக்கு சலுகைகளை அறிவிப்பது, மக்கள் மீது வரிச்சுமையை அதிகரிப்பது, கச்சா எண்ணய் மற்றும் சமையல் எரிவாயு போன்ற அத்தியாவசிய பண்டங்கள் மீதான விலையை உயர்த்துவது, மாநிலங்களின் நிதி ஆதாரங்களுக்கு ஊறுவிளைவிக்கும் வகையில், வரிவருமான பகிர்வில் மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்துவருகிறது.
பட்ஜெட் உரை என்பது உண்மையில் ஒரு அரசியல் நிகழ்வே. அரசு பட்ஜெட் தாக்கல் செய்யும்பொழுது நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளை புறந்தள்ளி விட முடியாது. நாட்டில் பெரும்பகுதி  செல்வங்கள் ஒரு சிலரிடம் இருக்கிறது. அவர்கள்தான் பன்னாட்டு, இந்நாட்டு முதலாளிகள். அவர்கள்தான் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அரசியல் கொள்கைகளை அவர்கள்தான் நிர்ணயிக்கிறார்கள் முதலாளித்துவ அரசியல் கட்சிகளுக்கும் இவர்களிடமிருந்துதான் நிதி கிடைக்கிறது. உற்பத்தி சார் சொத்துக்களின் விநியோகமும் வருமான விநியோகமும் யார் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதை நிர்ணயம் செய்கிறது. அந்த வரம்புகளுக்கு உட்பட்டுதான் பட்ஜெட் அமையும் என்பது எதார்த்தம். பட்ஜெட்டுக்கு முந்தைய கலந்தாலோசனை என்ற ஒரு நாடகம் நடக்கிறது. அதற்கு பெரு முதலாளிகளை அழைக்கிறார்கள். தொழிலாளிகள், விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களை அழைத்து விவரமாக கருத்து கேட்பதில்லை. அரசு அந்நிய, இந்திய பெருமுதலாளிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.


  கடந்த 30 ஆண்டுகளாக தாராளமயக் கொள்கைகள் பின்பற்றப்படுவதால் இந்திய பொருளாதாரத்திற்கும் உலகப் பொருளாதாரத்திற்கும் பெருமளவு இணைப்பு ஏற்பட்டு இருக்கிறது. 1991இல் இந்தியாவின் மொத்த தேசிய உற்பத்தி மதிப்பில் இறக்குமதி, ஏற்றுமதி இரண்டும் சேர்ந்தே ஏழில் ஒரு பங்குதான் இருந்தது. ஆனால் இன்று அது தேச உற்பத்தி  மதிப்பில் 50 % க்கு மேல் இருக்கிறது. எனவே பன்னாட்டு சூழலை புறக்கணித்து பட்ஜெட் போடுவதிலும் சிரமம் இருக்கிறது. இந்த ஆண்டு பொருளாதார சூழல் எப்படி இருக்கிறது என்பதை சொல்வதற்கு பொருளாதார ஆய்வு அறிக்கை என்பது ஒரு முயற்சி. ஆனால் அவ்வறிக்கை பெரும்பாலும் ஆளும் அரசின் கொள்கைகளையும் செயல்பாடுகளையும் புகழும் ஆவணமாகி விட்டது. பட்ஜெட் தாக்கல் செய்வதில் பொருளாதாரம் மட்டுமல்ல; அரசியலும் கூட முக்கியத்துவம் பெறுகிறது. இந்த ஆண்டில் ஒன்பது மாநில தேர்தல்கள் வருகின்றன. 2024 இல் அகில இந்திய பொதுத் தேர்தல் வருகிறது. எனவே ஆளும் கட்சி இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் பட்ஜெட்டை உருவாக்கும்.
இந்த அரசாங்கம் அவ்வப்பொழுது சுங்க வரியை உயர்த்தி இருக்கிறது.

அவ்வப்பொழுது பெட்ரோல் விலையையும் உயர்த்தி இருக்கிறது. பாராளுமன்றத்தை கேட்காமலே அன்றாடம் அரசு பட்ஜெட் போட்டுக் கொண்டிருக்கிறது. அதேபோல, 2017இல் குளறுபடியான ஜிஎஸ்டி அறிமுகம், 2016 இல் மோடி எடுத்த முற்றிலும் தவறான பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை தொடர்ந்து நமது பொருளாதாரத்தை, குறிப்பாக முறைசாராத்துறை மற்றும் சிறுகுறு விவசாயிகள், தொழில்முனைவோர் ஆகியோரை, பாதித்து வருகின்றன.
தற்போதைய ஒன்றிய அரசாங்கம் தேச உற்பத்தி மதிப்பின் விகிதமாக செலவுகளை குறைத்துக் கொண்டே வருகிறது என்பதும் உண்மை. ஒன்றிய அரசு அதிதீவிர தாராளமய கொள்கைகளை பின்பற்றுகிறது. எனவே செலவுகளை குறைத்து வருகிறது.
பலவகைகளில் இவ்வாறு பட்ஜெட்டின் வர்க்கத்தன்மை நிர்ணயிக்கப்பட்டு விட்டாலும், நாம் பட்ஜெட்டை விவாதிப்பது அவசியம். பல ஆண்டு விவரங்களை வைத்து பார்த்தால் ஒன்றிய அரசின் மொத்த செலவு மற்றும் வரவு நமது உழைப்பாளி மக்களால் உருவாக்கப்பட்ட தேச உற்பத்தி மதிப்பில் ஏழில் ஒரு பங்கு, அதாவது, கிட்டத்தட்ட 14 சதவீதம் என்பதை சுற்றி வருகிறது. ஆகவே பொது வெளியில் பட்ஜெட்டை விவாதிப்பதும் வர்க்க நிலைபாட்டில் இருந்து விமர்சிப்பதும், இதனை தொடர்ந்து கிளர்ச்சி பிரச்சார இயக்கங்கள் மேற்கொள்வதும், அதன்மூலம் ஆளும் வர்க்கங்களை அம்பலப்படுத்துவதும் நமது ஜனநாயகக் கடமை.


ஆழமற்ற பட்ஜெட்


தொடர்ந்து சில வருடங்களாக ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டை Non budget அதாவது “பட்ஜெட் அற்ற பட்ஜெட்” என்றே கூறலாம்.* பெரும்பாலும் பல வெற்று அறிவிப்புகள் மற்றும் ஆளுங்கட்சிக்கு ஊக்கம் தரும் முனைவுகள்தான் பட்ஜெட்டில் உள்ளன. இந்த முறை தனிநபர் வருமான வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரசின் மொத்த செலவில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்பொழுது இந்த ஆண்டு பெரிய மாற்றம் எதுவும் இல்லை. 2022-23 ஆண்டின் மொத்த செலவுகள் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 41.9 லட்சம் கோடி. வரும் 2023-24 கக்கான ஒதுக்கீடு ரூ 45 லட்சம் கோடிதான். 7 சதவீதம் பண வீக்கத்தை கணக்கில் கொண்டால், இது உயர்வே அல்ல, உண்மையளவில் சரிவு. மேலும், தேச வருமானம், அரசின் தரவுகள்படி 7 % உயர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், தேச வருமானத்தின் விகிதமாக மொத்த ஒதுக்கீடு குறைந்துள்ளது. இது ஒட்டு மொத்த பொருளாதாரத்தில் முதலீடுகளை பெருக்கிட, வேலை வாய்ப்புகளை விரிவு செய்ய, கிராக்கியை உயர்த்திட, அதன் மூலம் மக்கள் வருமானத்தை உயர்த்த எந்த வகையிலும் உதவாது.


நிலையற்ற பன்னாட்டு சூழல், உலக அளவிலான விலைவாசி நிலைமைகள், மேலை நாடுகள் வட்டி விகிதங்களை உயர்த்துவது ஆகியவற்றை இணைத்து பட்ஜெட்டை பார்க்க வேண்டி உள்ளது. ஆனால் உலகத்திலேயே இந்தியாதான் ஒளிமயமான நாடு என்று அனைவரும் சொல்கிறார்கள் என்றும், 7 சதவீத வளர்ச்சி என்றும் நிதி அமைச்சர் பேசுவது நகைப்பிற்கு உரியது.


2014இல் ஆர்எஸ்எஸ் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்தது. ஒரு ஒன்றரை ஆண்டுகாலம் சாதகமான பன்னாட்டு சூழல் (குறிப்பாக, கச்சா எண்ணய் விலை சரிவு) இருந்தும், பணமதிப்பிழப்பு , ஜிஎஸ்டி கொள்கைகள் வீழ்ச்சியை நோக்கி பொருளாதாரத்தை தள்ளின. 2019-20லேயே வளர்ச்சி விகிதம் குறைந்து விட்டது. 2020இல் பெருந்தொற்று வந்தது. 2020-21இல் GDP பெருமளவு சரிந்தது (மைனஸ் 10.5%). அதனுடைய மீட்சிதான் 2021-22 மற்றும் 2022-23ல் ஏற்பட்டது. ஆகவே 7 சதவீதம் வளர்ச்சி என்று அரசு தம்பட்டம் அடித்துக்கொள்வதை ஏற்க இயலாது. இது பெரும் சரிவில் இருந்து ஏற்பட்டுள்ள மீட்சியின் பகுதியாக வருகிற வளர்ச்சி விகிதம் என்றே கூற வேண்டும். 2022-23 இல்தான் முதல் முறையாக தேச உற்பத்தி மதிப்பு 2019-20ஆம் ஆண்டின் மொத்த தேசிய உற்பத்தி அளவை எட்டி, அதை சற்று தாண்டி இருக்கிறது. அதாவது, மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட பூஜ்ய வளர்ச்சி!


வரி கொள்கைகள்


 பணவீக்கம் அதிகரிக்கும்பொழுது வரி அடுக்குகளும் மாறித்தான் ஆக வேண்டும். எனவே கொடுக்கப்பட்டுள்ள தனி நபர் வருமான வரி சலுகைகளை தவறு என்று கூற முடியாது. மிக சொற்பமான பலன்தான் சம்பள உழைப்பாளிகளுக்கு கிடைக்கும்.
இந்த ஒன்றிய அரசின் எட்டு ஆண்டு ஆட்சியில் கார்ப்பரேட் வருமான வரி விகிதங்கள் பெரிதும் குறைக்கப்பட்டது சொத்துவரி முற்றாக நீக்கப்பட்டது. பெரும் சொத்து மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகள் நிலவும் இந்தியாவில் வாரிசு வரியே இல்லை. Oxfam அறிக்கை இந்தியாவின் தீவிரம் அடைந்துவரும் வருமான ஏற்றத்தாழ்வுகளை ஆவணப்படுத்தியுள்ளது. இந்த விவரங்கள் பொது வெளியில் உள்ளன. ஆனால் அரசும் ஆளும் வர்க்கங்களும் இதனை பேச மறுக்கின்றன. கள்ள மௌனம் சாதிக்கின்றன. மோடி அரசின் செல்வந்தர் மற்றும் கார்ப்பரேட் சாய்மானத்தால் பல லட்சம் கோடி ரூபாய் வரி வருமானம் இழக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒன்றிய அரசின் வரிக்கொள்கைகளால் ஏற்பட்டுள்ள அரசு வருமான இழப்பு மாநிலங்களையும் கடுமையாக பாதிக்கிறது.


மேலும் ஒரு முக்கிய அம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாபம் உடைமையின் அடிப்படையில் கிடைக்கிறது. உழைப்பாளி மக்களின் வருமானம் உழைப்பின் அடிப்படையில் கிடைக்கின்றது. உழைப்பின் அடிப்படையில் வரும் வருமானத்திற்கு ஓரளவு வரிச்சலுகை கொடுத்தால் தவறில்லை. சம்பளம் வாங்குவோரில் ஒருபகுதிக்கு தரப்பட்டுள்ள வரி சலுகையைப்போல் பல மடங்கு வரி சலுகைகள் இந்திய அந்நிய பெரு முதலாளிகளுக்கு மோடி அரசால் தொடர்ந்து தரப்பட்டுவருகிறது. 2019லேயே நிதி அமைச்சர் கார்ப்பரேட்டுகளுக்கான வரியை 30 % லிருந்து 22 % ஆகக் குறைத்தார். இதனால் அரசுக்கு ஒரு ஆண்டுக்கு அன்றைய தேதியில் ஏற்பட்ட இழப்பு 145000 கோடி ரூபாய் என்றும் அவரே கூறினார். 2020 பட்ஜெட்டில் நேர்முக வரியில் 65,000 கோடி ரூபாய்கக்கு சலுகை அளித்து அரசுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் மந்த நிலையை காரணம் காட்டி ஏற்றுமதிக்கு 50,000 கோடி ரூபாய், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கு 10000 கோடி ரூபாய் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளுக்கு 25000 கோடி ரூபாய் என்று மொத்தம் 300000 கோடி ரூபாயை விரல் விட்டு எண்ணக்கூடிய பெரிய முதலாளிகளுக்கும், பணக்காரர்களுக்கும் 2019-20இல் பாஜக அரசு ஒதுக்கியது.


இதனை ஈடுகட்ட மக்களின் சொத்துக்களாகிய பொதுத்துறையின் பங்குகளை விற்க வேண்டும் என்று அரசு கூறுகிறது. ஆனால் அரசால் நினைத்த அளவிற்கு பங்குகளை விற்க முடியவில்லை. பட்ஜெட்டில் மூலதன வருவாய் என்பது கடன் வாங்குவது மற்றும் சிறுசேமிப்புகள் மூலம் வருகிறது. அது போக பிற மூலதன வரவுகள் என்பது பங்கு விற்பனை மூலம் வருவது. இதற்காக பெரும் இலக்குகளை அரசு நிர்ணயித்தாலும் அதில் ஒரு பகுதியைத்தான் நிறைவேற்ற முடிந்துள்ளது. வலுவான பொதுத்துறைகளை, அவற்றில் உள்ள உபரியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்ற சிந்தனை அரசுக்கு வரவில்லை. அதற்குப் பதில் தேசத்தின் பொதுத்துறை சொத்துக்களை மிகக்குறைந்த செலவில் பயன்படுத்திக்கொள்ள “தேசீய சொத்துக்களை பணமாக்கும்” திட்டத்தை அமலாக்க அரசு தீவிரமாக செயல்படுகிறது. அப்படியானால் மக்களுக்கான கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு ஆகியவற்றை யார் செய்வார்கள்? லாப நோக்கில் செய்தால் அது மக்களை சென்றடையாது. செல்வந்தர்கள் மட்டுமே அனுபவிப்பதாக இருக்கும். இது அரசின் கடமை என்று நினைத்த ஒரு காலம் உண்டு. இன்றைய தாராளமய சிந்தனையில், மக்களுக்கான தேவைகள் பின்னுக்குச் சென்று விட்டன. இந்த பட்ஜெட்டில் சாதாரண மக்களுக்கு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். வரி உட்பட பல சலுகைகள் செல்வந்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மறைமுக வரியினுடைய பங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 


GST அதிகமாக வசூல் ஆகிறது என்று அரசு பெருமையாக சொல்கிறது. அடுத்த வருடத்திற்கு 9,56,600 கோடி ரூபாய் வரும் என்று அரசு சொல்கிறது. பட்ஜெட் தரவுகளின்படி கார்ப்பரேட்டுகளிடம் வசூலிக்கும் மொத்த வரி சுமார் 900000 கோடி ரூபாய். உழைதது வருமானம் ஈட்டும் மக்களில் ஒருபகுதியினர் இதற்கு சமமான வருமான வரி கொடுக்கின்றனர். ஆனால் எக்சைஸ் வரி, சுங்க வரி, GST மற்றும் இதர மறைமுக வரிகள் ஆகியவை சேர்ந்து இதைவிட அதிகமாக உள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அனைத்தும் சேர்த்து வசூலிக்கும் வரி மொத்த தேச உற்பத்தி மதிப்பில் 16% அளவுக்கு உள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்கு மறைமுக வரி ஆகும். அதாவது மக்களை பாதிக்கின்ற வரி. மூன்றில் ஒரு பங்குதான் செல்வந்தர்கள் தரும் வரி. இந்த வரிமுறையானது பெரும்பான்மை மக்களுடைய வாங்கும் சக்தியை பாதிக்கும். ஆனால் செல்வந்தர்கள் முதலீடு செய்வார்கள் என்று உத்தரவாதம் இல்லை. ஏனென்றால் அதன் மீது எந்த கட்டுப்பாடும் இல்லை. அவர்கள் வெளிநாட்டில் கூட முதலீடு செய்யலாம்.  


இன்னொரு அம்சம், அறிவிக்கப்பட்ட சலுகைகள் என்னவாயிற்று? அதன் மூலம் கிடைத்த பயன்கள் என்ன? என்று கேள்வி உள்ளது. பெரு முதலாளிகளுக்கு சலுகைகள் அளித்தால் அவர்கள் முதலீடு செய்வார்கள். அதனால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற முதலாளிகளின் கதையாடல் மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படுகிறது. ஆனால் அதற்கான எந்த தரவுகளும்  இல்லை. பெரும் கார்ப்பரேட்களுக்கு அளித்த சலுகையினால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புகள் எவ்வளவு, இச்சலுகைகள் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, உற்பத்தி பெருகியிருந்தால், அதன் கணக்கு என்ன, சூழலுக்கு என்ன பாதிப்பு போன்ற தரவுகள் எதுவுமே மக்கள் மத்தியில் வைக்கப்படுவதில்லை. இடதுசாரிகள் இவை தொடர்பான வெள்ளை அறிக்கையை பல முறை கோரிவந்துள்ளனர். ஆனால் பதில் இல்லை. இதையெல்லாம் பரிசீலித்தால் பட்ஜெட் என்பது திருடன் சொல்லும் கணக்கு தானோ என்று யாராவது கேட்டால், பளிச்சென்று “இல்லை” என்று சொல்லிவிட முடியாது என்றே கருதவேண்டியுள்ளது!


 ஒதுக்கீடுகள்


இதுவரை துறைவாரி ஒதுக்கீடுகள் பற்றி நாம் விவாதிக்கவில்லை. இதனை மிக சுருக்கமாக காண்போம்.
2020-21இல் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது ரூ 98,468 கோடி. 2022-23 பட்ஜெட் மதிப்பீடு 73000 கோடி ரூபாய். திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி செலவழிக்கப்பட்டது 89400 கோடி ரூபாய். வேலை நாட்களும் குறைந்துள்ளன. ஆனால் 2023-24 இல் பட்ஜெட் மதிப்பீடு 60000 கோடி ரூபாய் மட்டுமே. ஊதியம் மற்றும் வேலை நாட்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ள இந்த சூழலில் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது ஒரு மக்கள் விரோத செயல். அரசின் சார்பாக பல அதிகாரிகளும் அமைச்சர்களும் பிற ஊரக வேலை வாய்ப்புகக்கு கூடுதலாக கொடுத்துள்ளதாக சொல்வதன் மூலம் சட்ட உரிமையான ரேகா வேலை நாட்களை குறைப்பதை நியாயப்படுத்த முடியாது. இந்த ஒதுக்கீட்டில் கூலி பாக்கிகளே ஒரு கணிசமான தொகையாக உள்ளது. அனைத்து ஊரக வேலை திட்ட ஒதுக்கீடுகளை கூட்டினாலும் பெரும் பள்ளம் விழுகிறது. அதுமட்டுமல்ல. உண்மையில் சட்டத்தில் உள்ளபடி வேலை கேட்கும் அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு ஆண்டில் 100 நாட்கள் வேலை கொடுக்க ரூ 2.72 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்! அதில் நான்கில் ஒரு பங்கு கூட இல்லை. ‘செலவழித்துவிட்டு கேளுங்கள், தருகிறோம்’ என்று அரசு கூறுவது ஏற்கத்தக்கதல்ல. நம்பத் தகுந்ததும் அல்ல.
ஊரக வளர்ச்சித்துறை, வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான துறை, கல்வித் துறை, ஆரோக்கியத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான ஒதுக்கீடுகள் எதிலும் கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடுகையில் சரிவு அல்லது மிகக் குறைவான உயர்வே காணப்படுகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகள், பட்டியலின் மக்கள், பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் ஆகிய பகுதியினர் முற்றிலும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் நலத்திட்டங்களில் குறைந்த ஊதியத்திற்கு, பல ஆண்டுகளாக பணியாற்றிவரும் ஊழியர்களுக்கு (இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்) எந்த நன்மையும் பட்ஜெட்டில் இல்லை. அரசின் முதலீட்டு செலவு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 7.5 லட்சம் கோடியில் இருந்து 10 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தம்பட்டம் அடிக்கிறது ஒன்றிய அரசு. ஆனால், இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட, சுங்க வரிகள் குறைக்கப்பட்டுள்ள பின்னணியில் இத்தொகையில் கணிசமான பகுதி அயல்நாட்டு இயந்திரங்களையும் தொழில்நுட்பங்களையும் பெற செலவிடப்படும், உள்நாட்டு தொழிலை வேகமாக முன்னேற்றவோ, வேலை வாய்ப்பை பெருக்கவோ பெருமளவிற்கு உதவாது என்பதையும் நாம் பதிவிட வேண்டும்.


அந்நிய இந்திய பெருமுதலாளிகள் நலன் சார்ந்த பட்ஜெட்


பட்ஜெட்டில் பல்வேறு விஷயங்கள் அறிவிப்புகளாகவே உள்ளன. ஒதுக்கீட்டுத் தொகை இல்லை. திட்டம் இல்லை. காலக்கெடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. அண்மைக்காலங்களில் அரசின் தரவுகள் நம்பிக்கையை இழக்கின்றன என்பதுதான் நிலைமை. விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன்களுக்கான ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. ஒவ்வொரு துறையிலும் இதே நிலைதான். உலகெங்கும் செல்வந்தர்கள் மீது வரிவிகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும், சொத்து வரி, வாரிசு வரி ஆகியவை பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வை தடுத்து, வேலை வாய்ப்புக்கும், கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட மனித வள முதலீடுகளுக்கும், உணவு பாதுகாப்பிற்கும், சுய சார்பு அடிப்படையிலான தொழில் வளர்ச்சிக்கும் கூடுதல் ஒதுக்கீடுகள் செய்து, கூடுதல் முனைவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி வருகின்றன. ஆனால் அந்தப் பாதையை முற்றிலும் புறக்கணித்துவிட்டு, அதி தீவிர தாராளமய பாதையில் ஒன்றிய பட்ஜெட் பயணிக்கிறது.


தொடர் தாராளமய கொள்கைகளின் விளைவாக நமது நாட்டிற்கு பொருட்களுக்கான ஏற்றுமதி-இறக்குமதி வர்த்தகத்தில் பற்றாக்குறை (இதனை சரக்கு வர்த்தக பற்றாக்குறை, merchandise trade deficit என்று அழைப்பார்கள்) அதிகமாக உள்ளது. ஆனால் சேவைத் துறையில் இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக உள்ளது. இது ஓரளவு பற்றாக்குறையை குறைக்க உதவுகிறது. ஆனால் அது போதுமான அளவு இல்லை. ஆனால் வெளிநாட்டில் வாழும் இந்திய உழைப்பாளி மக்கள் தங்கள் குடும்பத்திற்கு அனுப்பும் பணம் நமக்கு சாதகமாக உள்ளது. இதை கணக்கில் கொண்ட பின்னரும் ஒரு பள்ளம் உள்ளது. அதற்குப் பெயர்தான் அன்னிய செலாவணியில் நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current account deficit) என்பதாகும். இந்த பள்ளத்தை நிரப்ப நாம் பல சலுகைகளை கொடுத்து அந்நிய நிதி மூலதனத்தை ஈர்க்க முயல்கிறோம். வரும் ஆண்டில் மேலை நாடுகளின் பொருளாதார மந்தம் ஏற்படும் என்ற அனுமானம் வலுவாக உள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், நமது ஏற்றுமதி பாதிக்கப்படும். இதற்கிடையில் நாம் இறக்குமதி செய்யும் பொருட்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. இதனால் அந்நிய செலாவணி இடைவெளி அதிகரிக்கும். அது, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட நெருக்கடியை ஏற்படுத்தும். இதைப் பற்றிய குறைந்தபட்ச விழிப்புணர்வு கூட பட்ஜெட்டில் இல்லை.


அதானி விவகாரம் நமக்கு தரும் பாடங்களில் ஒன்று ஆயுள் காப்பீட்டுக்கழகம், ஸ்டேட் வங்கி போன்றவை கணிசமான உபரிகளை ஈட்டுகின்றனர். இந்த உபரிகளை பொதுத்துறை வாயிலாக நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த அரசு தயாராக இல்லை. மாறாக, இந்த நிறுவனங்களை பங்கு சந்தை ஊக வணிகத்தில் தள்ளி விடுகிறது. நாட்டுக்கு உபரி தரும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் தனியாருக்கு தாரை வார்ப்பதே ஒன்றிய அரசின் கொள்கையாக உள்ளது.


 மொத்தத்தில், இந்த பட்ஜெட் ஒரு ஆழமே இல்லாத, தேசம் சந்திக்கிற பொருளாதார பிரச்சினைகள் மீதான மேலோட்டமான அணுகுமுறை கொண்டது என்பது மட்டுமல்ல; ஆளும் வர்க்க நலனை தூக்கிப்பிடிக்கும் பட்ஜெட் என்பதுதான் உண்மை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s