மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


வைக்கம் 100 : போராட்டக் களம் தரும் பாடங்கள் !


பினராயி விஜயன்

கேரள முதல்வர்

(கேரளாவில் நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரக போராட்டத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவில், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆற்றிய உரை இங்கு தமிழில் தரப்படுகிறது ஆசிரியர்குழு)

வைக்கம் சத்தியாக்கிரக போராட்டம், ஈடு இணையில்லாத, மிகப்பெரிய போராட்டம் ஆகும். அந்த போராட்டத்தின் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தை இன்று தொடங்குகிறோம். கேரளத்தில் மாறுமரக்கல் சமரம், அருவிபுரம் சிலை வைத்தல், வில் வண்டி யாத்திரை, கல்லுமாரு சமரம், குருவாயூர் சத்தியாகிரகம் என பல்வேறு மறுமலர்ச்சி போராட்டங்களுடைய வரிசையில் மிகவும் முக்கியமானது வைக்கம் சத்தியாகிரகம் போராட்டம் ஆகும். இத்தனை போராட்டங்கள் நடந்திருந்தபோதும் வைக்கம் போராட்டம், தன்னளவில் ஈடு இணையற்ற ஒன்றாகும்.

மிகப் பெரிய மற்ற போராட்டங்களில் இருந்து இதனை மாறுபடுத்திக் காட்டுவது எது?.  சமூக விடுதலை இயக்கமும், தேச விடுதலை இயக்கமும் அதில் ஒருமித்து இணைந்திருந்தது என்பதே அதற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவத்தை உருவாக்குகிறது. மறுமலர்ச்சி நாயகர்களும், தேச விடுதலை இயக்க தலைவர்களும் தங்களுக்கே உரித்தான தன்மையுடன் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

விடுதலை இயக்கமும், சமூக இயக்கமும்

அதுகாறும் நடைபெற்ற சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களை சமூக விடுதலை இயக்கங்களே தலைமையேற்று நடத்தின. ஸ்ரீ நாராயண குருவும், சட்டம்பி சுவாமிகளும், அய்யன்காளி உள்ளிட்ட சமூக விடுதலைப் போராளிகளின் உயிர்ப்புடன் கூடிய வழிகாட்டுதல் இல்லாமல் போயிருந்தால் வைக்கம் சத்தியாகிரகத்தை போன்றதொரு முற்போக்கான இயக்கம் நடந்திருக்குமா என்பதும் சந்தேகமே.

ஸ்ரீ நாராயண குரு, ஒரு ரிக்‌ஷா வண்டியில் வைக்கம் கோயிலுக்கு அருகில் சென்றபோது, ஒரு சாதி இந்து (சவர்ண) பெண் அவரை தடுத்தார். அதுதான் வைக்கம் போராட்டத்திற்கு வழிவகுத்தது என்று அந்தக் காலத்தில் வாழ்ந்த மூலூர் எஸ். பத்மநாப பணிக்கர் ஒரு கவிதையில் விவரித்துள்ளார். தேச விடுதலை போராட்ட இயக்கங்களுடன் வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தை இணைத்ததில் டி.கே.மாதவன் வகித்த  பாத்திரம் மிகவும் முக்கியமானதாகும். மனிதத் தன்மையற்ற முறையில், குடிமக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான எழுச்சியாகவே வைக்கம் போராட்டம் உருவானது. வர்ணாசிரமத்தின் சாதீய அடக்குமுறைகளுக்கு எதிரான போர் முழக்கமாகவும் வைக்கம் போராட்டம் திகழ்ந்தது. குருவாயூர் சத்தியாகிரகத்தின் வழியாக அந்த போராட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன. ஆலய நுழைவுக்கான விளம்பரங்கள் வெளியிடப்படும் சூழல் உருவானதற்கும் வைக்கம் போராட்டத்தை தொடர்ந்து எழுந்த போராட்ட அலையே காரணமாகும்.

கேரளமும், தமிழ்நாடும்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் குறிப்பிட்டதைப் போல, வைக்கம் போராட்டமானது கேரளத்திற்கு மட்டுமல்லாது தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளது இதில் கவனிக்க வேண்டிய விசயம். பிராமணர் அல்லாதோரின் இயக்கமாக திராவிட இயக்கத்தை உருவாக்கிய பெரியார், தமிழ்நாட்டில் இருந்து வருகை தந்து வைக்கம் போராட்டத்தில் சிறைசென்ற விபரமும் நாம் அறிந்ததே. இந்த மாபெரும் வரலாறு, இரண்டு மாநிலங்களாலும் மறக்க முடியாதது. பல்வேறு சமூகப் போராளிகளும் வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவாக கேரளாவிற்கு வந்து சேர்ந்தனர். சி.ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீனிவாச அய்யங்கார், ஐயா முத்துக் கவுண்டர் என அந்த காலத்தில் தமிழ்நாட்டில் செயல்பட்ட ஏராளமானவர்கள்  வைக்கம் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

தமிழக முதலமைச்சரின் இன்றைய வருகையினை  இந்த வரலாற்று பின்புலத்தோடு பார்க்க வேண்டும். அப்போதுதான் அதன் தனிச் சிறப்பினை புரிந்துகொள்ள முடியும். ஒரே போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்ட, பெருமையினை பகிர்ந்துகொள்ளும் சகோதர மாநிலங்களாக தமிழ்நாடும் கேரளமும் உள்ளன. தோள்சீலை போராட்டத்தின் 200ஆவது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் நாங்கள் இருவரும் பங்கேற்றபோது வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களைப் பற்றியும் பேசினோம்.

வைக்கம் போராட்டம் ஒரு வலிமையான மாற்றத்தை முன்வைத்தது. போராட்டத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்பதுதான் அந்த மாற்றம். அவ்வாறே தமிழ்நாடு, கேரள மாநில மக்களின் மனங்கள் இணைந்தன. வருங்காலத்திலும் அந்த ஒற்றுமை தொடர்ந்திடும். சகோதரத்துவத்துடன் அது வலுப்படும். இந்தியாவிற்கே ஒரு மாற்றினை முன்மாதிரியாக உயர்த்திக் காட்டும் என்பதை மகாத்மா காந்தி, ஸ்ரீநாராயண குரு மற்றும் பெரியார் ஆகியோரின் நினைவுகளைத் தாங்கி நிற்கக் கூடிய இந்த வைக்கம் மண்ணில் நின்று கூறுவதில் பெருமைப்படுகிறேன்.

ஒன்றுபட்ட போராட்டம்

மற்றொரு மாற்றினையும் வைக்கம் போராட்டம் நமக்கு அளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்கள் தங்களுடைய உரிமைகளை வெல்வதற்கு தனியாக நின்று போராட வேண்டியதில்லை என்பதே அந்த செய்தியாகும். கே. கேளப்பன், கே.பி. கேசவமேனன், மன்னத்துப் பத்மநாபன், குரூர் நீலகண்டன் நம்பூதிரிபாட், டி.கே. மாதவன், டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர், கண்ணந்தோடத்து வேலாயுதமேனன் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பின்புலங்களைச் சேர்ந்தவர்கள் வைக்கத்தில் நடந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தினார்கள் என்பதை நாம் நினைவில் நிறுத்த வேண்டும்.

மன்னத்து பத்மநாபன் தலைமையில் வைக்கம் முதல் திருவனந்தபுரம் வரை ஒரு நடைபயணம் நடந்தது. அப்போது பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவரை தாக்க முயன்றவர்களை மன்னத்து பத்மநாபன் அவர்களே தடுத்து காப்பாற்றினார் என்பதும், அனைவரும் இணைந்து போராட்ட களம் கண்டத்தற்கு உதாரணம். அவர்ணர்களுக்கு (சாதிக் கட்டமைப்புக்கு வெளியே நிறுத்தப்பட்டவர்களுக்கு) பொதுச் சாலைகளை பயன்படுத்த உரிமை வழங்கவேண்டும் என்பதே அந்த நடை பயணத்தின் கோரிக்கையாகும்.

காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் தீண்டாமைக்கு எதிராகவும், ஆலைய நுழைவை ஆதரித்தும் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு மகாத்மா காந்தி வழங்கிய பாராட்டுக்களும், வைக்கத்திற்கு வந்த ஸ்ரீ நாராயண குருவின் பயணமும், தன்னுடைய மடத்தை போராட்டத்திற்கு வழங்கிய நடவடிக்கையும், தீண்டாமைக்கு எதிரான இயக்கத்தின் தொடக்கமும் வைக்கம் போராட்டத்தின் பின்னணியில் நாம் நினைவில் நிறுத்திட வேண்டிய முக்கியமான நிகழ்வுகள் ஆகும்.

போராட்டம் பற்றிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வந்த காந்தியாரும் கூட வைக்கம் மகாதேவர் ஆலையத்தை நிர்வகித்த இண்டம்துருத்தி  மனைக்கு உள்ளே அனுமதிக்கப்படாத செயலும் நடந்தேறியது. ஆலையத்தைச் சுற்றிலும் இருந்த பொது வழியை அனைவரும் பயன்படுத்த உரிமை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. காந்தியாரை அனுமதிக்க மறுத்து  அவமதித்த அந்த மனை தற்போது ‘கள் இறக்கும் தொழிலாளர்களுடைய  சங்கத்தின்’ அலுவலகமாக செயல்படுகிறது. வரலாறானது முன்னோக்கியே நகரும் என்பதற்கான முன்னுதாரணம் இது.

சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மீது சொல்லொண்ணா வகையில் தாக்குதல்கள் நடந்தன. ‘ராமன் இளையது’ என்ற பிராமணர் ஒருவர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அவருடைய கண்ணில் பிராமண சமூகத்தினர் சுண்ணாம்பை பூசினார்கள். அவர் தன்னுடைய கண் பார்வையை இழந்து இறுதி நாள் வரை துன்பப்பட்டார். இதைப் போன்ற பல்வேறு தாக்குதல்களை எதிர்கொண்டு, இவ்வாறான போராட்டங்களின் வெற்றிகளின் வழியாகத்தான் கேரள மாநிலம் இன்று இந்தியாவிற்கே முன் மாதிரியாக வளர்ந்துள்ளது.

அரசியலும் சமூக விடுதலையும்

இன்னபிற சமூக விடுதலைப் போராட்டங்களில் இந்த வைக்கப் போராட்டம் தனித்து தெரிவதற்கான மற்றொரு காரணம் அது தனியொரு நபரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டமாக இல்லை என்பதாகும். பல்வேறு சமூகப் போராட்டங்களை பெருமைக்குரிய தலைவர்கள் பலரும் வழிநடத்தியுள்ளார்கள். ராஜா ராம்மோகன் ராய் முதல் மகாத்மா பூலே வரையிலும் தேசிய அளவில் இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தினார்கள். ஸ்ரீ நாராயண குரு, அய்யங்காளி போன்ற தலைவர்கள் கேரளத்தில் போராட்டங்களுக்கு தலைமையேற்றார்கள். ஆனால் வைக்கம் போராட்டத்தில் தனி நபர் தலைமை இல்லை. அரசியல் கட்சிகளின் தலைமையுடன் சமூக விடுதலை இயக்கங்களும் இணைந்து நின்றன.

இன்று சிலர், சமூக விடுதலை இயக்கத்தில் அரசியல் கட்சிகளுக்கு எந்த பங்கு பாத்திரமும் இல்லை என்று வாதம் செய்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை என்பதற்கு வைக்கம் போராட்டக் களம் முன்னுதாரணமாக திகழ்கிறது. அன்றைக்கு நிலவிவந்த சமூக ஒடுக்குமுறைகளினால் துயருற்ற மக்கள் மட்டும் நடத்திய போராட்டமாக வைக்கம் போராட்டக் களம் அமைந்திருக்கவில்லை. எல்லா சாதிகளிலும் இருந்த முற்போக்குச் சிந்தனையுடையவர்கள் இந்த களத்தில் போராடினார்கள். கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களுடன் சீக்கியர்களும் இந்த போராட்டத்தில் பங்கு வகித்தனர்.

கே. அப்துல் ரகுமான் குட்டி, ஃபரிது சாகிம், எம்.கே. அப்துல் ரஹீம் ஆகியோர் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகளாக வைக்கம் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டார்கள். பாரிஸ்ட்டர் ஜார்ஜ் ஜோசப் போன்றோரின் பங்கையும் நாம் நினைவுகூற வேண்டும். வைக்கத்தில் உணவு சமைத்துக் கொடுப்பதற்காக சீக்கிய சகோதர்கள் பத்துப் பேர் வந்து சேர்ந்ததும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஒரு மதச்சார்பற்ற போராட்டமாக வைக்கம் சத்தியாகிரகம் அமைந்திருந்தது என்பதை நாம் உறுதியாக கூற முடியும்.

போராட்டமே வெற்றி தரும்

1865 ஆம் ஆண்டிலேயே அனைத்துப் பிரிவு மக்களும் பொதுப் பாதையை பயன்படுத்துவதற்கான உத்தரவினை திருவிதாங்கூர் சமஸ்தானம் வெளியிட்டிருந்தது. ஆனால் அது நடைமுறைக்கு வர 60 வருடங்கள் கழித்து மக்கள், வைக்கம் சத்தியாகிரகத்தை நடத்தும் தேவை எழுந்தது. உத்தரவுகளை பிறப்பிப்பதால் மட்டும் சமூக மாற்றங்களை உருவாக்கிட முடியாது. மக்கள் பங்கேற்புடன் கூடிய இயக்கங்களே அதற்கு வழிவகுக்கும் என்பதை வைக்கம் போராட்டம் நமக்கு உணர்த்துகிறது.

இந்தப் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட்டங்களுக்கு உத்வேகம் அளிப்பதாக அமைந்தது. இவ்வகையில் வைக்கம் போராட்டம் நாட்டுகே ஒரு வழிகாட்டியாக இருந்ததை மறுக்க முடியாது. 20 ஆம் நூற்றாண்டின் முதல் பகுதியில் உருவான சமூக போராட்டங்களை முன்னெடுத்த இயக்கங்கள்தான் தற்போது கேரளாவிலும், தமிழ் நாட்டிலும் ஆட்சியில் உள்ளன என்பது தற்செயல் அல்ல. பெரியாரும் அண்ணாவும் உருவாக்கிய திராவிட இயக்கத்தை காலச் சூழலுக்கு ஏற்ப அரசியல் படுத்தி ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் தமிழ் நாட்டில் செயல்படுகிறது. சமூக விடுதலை இயக்கங்களில் இருந்து ஊக்கம் பெற்ற ஒரு புதிய சமூகத்தை உருவாக்கிட இடது ஜனநாயக அரசாங்கம் முயற்சிக்கிறது.  இந்த இரண்டு இயக்கங்களும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சியில் இணைவது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவைகளை பாதுகாத்திட உருவாகும் ஒன்றுமையானது, மக்களையும், நாட்டையும் பாதுகாக்கும் போராட்டக் களத்திலும் பிரதிபலிக்கும். இந்த ஒற்றுமை மென்மேலும் வலுப்பட வேண்டும். சமூக விடுதலை மற்றும் தேச விடுதலைப் போராட்டங்களை ஒன்றிணைத்து, நாட்டின் ஒட்டு மொத்த நலனை, கட்சி வேறுபாடுகளைக் கடந்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒன்றுபட்டு நிற்போம்

சிறு, சிறு மாற்றுக் கருத்துக்களால் பிளவுபடாமல், ஒரு பெரிய ஆபத்தை எதிர்த்து வீழ்த்திடும் ஒற்றுமையை கூடுதலாக்குவதே நம்முடைய தேவை என்பதை வைக்கம் போராட்டம் நமக்கு கற்பிக்கிறது. அநீதிகளுக்கு எதிராகவும், ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகவும் போராடுபவர்கள் மட்டுமே நீடித்து நிலைத்திட முடியும். நம்முடைய விடுதலைப் போராட்டக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட முக்கியமான முழக்கங்களுக்கும், நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் எதிரான தாக்குதல்கள் நடந்துவரும் சமயத்தில் நாம் இங்கே கூடியிருக்கிறோம். அந்தச் சக்திகளைத் தோற்கடிக்கும் ஒற்றுமையை உருவாக்கிடப் போராட வேண்டும்.

மதச்சார்பின்மை, அரசியல் அமைப்பின் முக்கிய அம்சம் ஆகும். அதனைப் பின்னுக்குத் தள்ளி, இந்தியாவை மத நாடாக மாற்றும் முயற்சிகள் கெட்டிப்பட்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தினை நீர்த்துப் போகச் செய்து அதற்கு பதிலாக மனுநீதியை நிறுவிடும் முயற்சிகள் நடக்கின்றன. முந்தைய காலத்தில் நிலவிவந்த தீண்டாமை, ஜாதியப் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகளை மீண்டும் நிறுவ எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு தடுத்திட வேண்டும். வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டின் தொடக்க விழாவோடும், இதனைத் தொடர்ந்து 603 நாட்கள் நடக்கவுள்ள நிகழ்ச்சிகளோடும் வைக்கம் போராட்ட நினைவுகளை முடித்துக்கொள்ளக் கூடாது. வைக்கம் போராட்டத்தின் நினைவாக ஒரு நினைவு மண்டபத்தை கேரள அரசாங்கம் ஏற்படுத்தும். பழ.அதியமான் எழுதிய வைக்கம் போராட்டம் பற்றிய புத்தகத்தின் மலையாள மொழியாக்கத்தை டி.சி.புக்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதுவரை வெளிவராத பல்வேறு வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய அந்த புத்தகத்தை தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் இணைந்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று நாம் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு வைக்கம் போராட்டத்தில் நூற்றாண்டு கொண்டாட்டங்கள் உத்வேகமூட்டும் என வாழ்த்தி, நாங்கள் இந்த போராட்ட நூற்றாண்டினை தொடங்கி வைக்கிறோம்.

தமிழில்: நீலாம்பரன்

Advertisement


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: