மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


2023-24: தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து


பேரா. வெங்கடேஷ் ஆத்ரேயா

2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான தேர்தல் கூட்டணி  பெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து திமுக தமிழகத்தின் ஆளும் கட்சியானது. பத்தாண்டு அதிமுக ஆட்சியை மக்கள் நிராகரித்து, திமுகவை ஆட்சி கட்டிலில் அமர்த்தினர். மக்களிடம் நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. திமுக பல வாக்குறுதிகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்திருந்தது அதன் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றியது. புதிய அரசின் நிதி அமைச்சராக முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பொறுப்பேற்றார்.

நிதியமைச்சர் அவர்கள் தனது முதல் பட்ஜெட்டை 2021 ஆகஸ்ட் 13 அன்று தாக்கல் செய்வதற்கு முன்பாக, தமிழக நிதி நிலை பற்றிய விரிவான அறிக்கை ஒன்றை 2021 ஆகஸ்ட் 9 அன்று வெளியிட்டார். இவ்விரண்டு அறிக்கைகளிலும் நிதியமைச்சர் அதிமுக  ஆட்சியை வலுவாக விமர்சித்தார். ஒன்றிய பாஜக அரசு மாநிலங்களின் தன்னாட்சி வாய்ப்புகளை பறித்து, அதிகாரங்களை ஒன்றிய அரசிடம் மையப்படுத்தும் போக்கை சுட்டிக்காட்டி, கடுமையாக விமர்சித்தார். எனினும் அவரது விமர்சனத்தின் கூர்முனை அதிமுக மீது தான் கூடுதலாக இருந்தது என்பது மட்டுமல்ல; ஒன்றிய அரசின் தாராளமய கொள்கைகளை அவர் பெரும்பாலும்  விமர்சிக்கவில்லை என்பதும் முக்கியமான செய்தி. 2021 ஆகஸ்ட் 13 அன்று அவர் தாக்கல் செய்த பட்ஜெட் அரை ஆண்டுக்கானதாக இருந்ததால் பெட்ரோல் விலை குறைப்பு, அரசு பணியில் உள்ள பெண் ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டது ஆகியவை  தவிர புதிதாக குறிப்பிடத்தக்க மக்கள் நல முனைவுகள் எதுவும் அதில் இல்லை. தீவிர தாராளமய நடவடிக்கைகள் எதுவும் 2021 பட்ஜெட்டில் இல்லை. ஆனால் ஒரு விஷயம் அந்த பட்ஜெட் உரையில் காண முடிந்தது. அமைச்சரின்  அணுகுமுறை தாராளமய சட்டகத்திற்குள்தான் இருந்தது. மாநில பொதுத்துறை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து, அந்நிறுவனங்களை பாதுகாத்து,  மேம்படுத்தவும்  ஊழியர்களின் நலன் காக்கவும் உடனடி  நடவடிக்கை தேவை என்ற பார்வை 2021 பட்ஜெட்டில் இல்லை. மாநில அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை மீட்டெடுப்பதில் கேரள இடது ஜனநாயக முன்னணியின் சிறப்பான முனைவுகள் தமிழகத்திற்கு நல்ல படிப்பினைகள் அளிக்கும் என்ற பார்வையும் இல்லை. தனியார் மயமாக்கலையும்  ஆட்குறைப்பையும் நிராகரிப்போம் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்படவில்லை.  ஃபிஸ்கல் பற்றாக்குறை இலக்கை அரசின் செலவுகளை குறைப்பதன் மூலம் அடைவது என்ற அணுகுமுறையை நிதியமைச்சர் நிராகரிக்கவில்லை. எனவேதான் நகர்ப்புற வேலை உறுதி சட்டம் கொண்டுவர அவர் முன்மொழியவில்லை. ஊரக வேலை உறுதி திட்ட ஒதுக்கீட்டையும் வேலை நாட்களையும் தினக் கூலி அளவையும் உயர்த்தவேண்டும் என்று அவர் குரல் கொடுக்கவில்லை. 

கடந்த 2022 மார்ச் மாதம் 18 அன்று நடப்பு நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை பற்றி மார்க்சிஸ்ட் இதழில் நான் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: 

 “தமிழக நிதிநிலை அறிக்கையைநிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 18 அன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தனது உரையில் பல முறை ‘திராவிட மாடல்’ என்று தனது பட்ஜட்டை வர்ணித்துள்ளார். இதன் பொருள் என்ன என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. எனினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் மட்டுமே இலக்கு என்று இல்லாமல், மக்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு முன்னெடுக்கும் என்று சிலர் இதை புரிந்து கொள்ளக்கூடும். ஆனால் உண்மையில் தமிழக அரசின் பட்ஜட் வளர்ச்சியை ஏற்படுத்த உதவாது. இதர, மக்கள் நலன் சார்ந்த முனைவுகளும் இந்த பட்ஜட்டில் மிகக்குறைவுதான். இதன் பின்புலம் என்னவெனில் நிதி அமைச்சர் ஒன்றிய அரசின் தீவிர தாராளமய கொள்கைகளை பெருமளவிற்கு  பின்பற்றுகிறார். அரசின் வரவு-செலவு இடைவெளி இலக்கை அடைவதற்கு செலவுகளை குறைப்பது  மட்டுமே வழி என்ற தாராளமய கோட்பாட்டை அவர் ஏற்கிறார்.”

மேலும் பெரும்பாலான துறைகளுக்கான ஒதுக்கீடுகள் 2022-23 நிதி நிலை  அறிக்கையில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், உண்மை அளவில் சரிந்தோ அல்லது மிகக்குறைவாகவே அதிகரித்தோ இருந்தன என்பதை சுட்டிக்காட்டிவிட்டு 2022-23 பட்ஜெட் பற்றி கீழ்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்:

வேளாண் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, சமச்சீராக, தொடர்ந்து வேளாண்மையை நவீனமயமாக்குவதற்கான உட்கட்டமைப்பை  மேம்படுத்தவேண்டும். அதைப்போன்ற அதிமுக்கியமான இலக்குகளை நிறைவேற்றுவதற்காகச் செலவுகளை அதிகப்படுத்தும் முயற்சிகள் என்று எதுவுமில்லை. கிராம வேளாண் தொழிலில் மதிப்புக்கூட்டல் அம்சத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் வளர்ச்சி என்பது பரவலாக்கப்படும்; கிராமப்புற வேலையின்மைப் பிரச்சினை ஓரளவு குறையும். நகர்ப்புற வேலை உத்தரவாதத் திட்டத்தை சரியான சட்டத்தின் ஆதரவோடு நகரப்புறம் முழுவதும் முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பு இல்லை. மகாத்மா காந்தி தேசிய கிராம வேலைவாய்ப்புத் திட்டத்தை வலுப்படுத்தவும்  முயற்சி இல்லை. 2021-22 ஆண்டிலேயே சிக்கன நடவடிக்கைகள் மூலம் பிஸ்கல் பற்றாக்குறையை மாநில மொத்த உற்பத்தி மதிப்பில்  3.8 % ஆக குறைத்துள்ளார் நிதி அமைச்சர். பதினைந்தாவது நிதி ஆணையம் அனுமதித்துள்ள 4.5% என்பதை பயன்படுத்தி வளர்ச்சிக்கான முதலீடுகளை அதிகமாக செய்திருக்க முடியும். வரும் 2022-23 ஆண்டிலும் கூடுதலாக மூலதனச் செலவுகளை மேற்கொண்டிருக்க முடியும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்கு நிவாரணத்தை கூட்டவும் கிராக்கியை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க நிதி அமைச்சர் தவறிவிட்டார்.

நிதி ஆண்டு 2022-23க்கான திருத்தப்பட்ட ஒதுக்கீடுகளை பரிசீலித்தால் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருந்த நிதியைக் கூட மாநில அரசு செலவு செய்யவில்லை என்பதைக் காண முடிகிறது. பட்ஜெட்டில் ரூ 2,84,188 கோடி வருவாய் கணக்கு செலவுகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 2,76,136 கோடி தான் செலவிடப்பட்டுள்ளது. அதேபோல் மூலதன கணக்கில் ரூ 43,043 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி ரூ 38,347  கோடி தான் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆக மொத்தம் சுமார் 13,000 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. இவற்றின் விளைவாக ஃபிஸ்கல் பற்றாக்குறை மாநில மொத்த உள் உற்பத்தி மதிப்பில் (GSDP) 3.63% என்று பட்ஜெட் மதிப்பீட்டில் கணக்கிடப்பட்டிருந்தும்  திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி 3 % ஆக குறைந்துள்ளது. அரசின் தாராளமய அணுகுமுறைக்கு இது ஒரு சான்றாக உள்ளது. தமிழக மாநில உற்பத்தி மதிப்பில் 4.5% என்ற அளவிற்கு ஃபிஸ்கல் பற்றாக்குறை இருக்கலாம் என்ற நிலையில், சிக்கன தத்துவப்பிடியில் (Austerity) அமைச்சர் இருந்ததால், அதனை 3% ஆக குறைத்து, மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 1.5% என்ற அளவிற்கு மக்கள் நல திட்டங்களுக்கும், மாநில வளர்ச்சிக்கும், கூடுதலாக செலவு செய்ய வாய்ப்பிருந்தும், தனது தாராளமய அணுகுமுறையால் அதனை செய்ய தவறியுள்ளார்.

தமிழக பட்ஜெட் 202324

நிதியமைச்சர் அவர்கள் தனது முதல் இரண்டு  வரவு-செலவு அறிக்கைகளிலும் (2021-22, 2022-23) அரசின் ஃபிஸ்கல் (Fiscal) பற்றாக்குறையை குறைப்பதையே தனது முக்கிய குறிக்கோளாக எடுத்துக்கொண்டு நவீன தாராளமய கொள்கை சட்டகத்தை ஏற்று பட்ஜெட்டை செதுக்கினார் என்பதை நாம் குறிப்பிட்டோம். வரும் நிதி ஆண்டு(202324)க்கான பட்ஜெட்டிலும் தாராளமய பாதை அப்படியே தொடர்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு அமைச்சர் சமர்ப்பித்துள்ள பட்ஜெட்டில் மாநில அரசின் பிஸ்கல் (fiscal) பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்திமதிப்பில் 3.25%ஐ தாண்டாது என்ற நிலைபாட்டின் அடிப்படையில்  பட்ஜெட்டை தயாரித்துள்ளார். இது சென்ற ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டான  3.63% ஐ விடவும் குறைவு. இதன் விளைவாக பல துறைகளின் ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டின் ஒதுக்கீடுகளை ஒட்டியே அமைந்துள்ளன. இது மக்களுக்கு சாதகமான அணுகுமுறை அல்ல. பெரும் தொற்றில் வீழ்ந்த பொருளாதாரம் மீள வேண்டிய சவால் நம் முன்பு உள்ளது. இதற்கு பல துறைகளின் ஒதுக்கீடுகள் மேலும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.

சில வரவேற்புக்குரிய நடவடிக்கைகள்   

  தமிழக பட்ஜெட் 202324 இல் வரவேற்கத்தக்க சில அம்சங்களும் உள்ளன.  30,000க்கும் மேற்பட்ட தமிழக அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவரும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கப்படும் என்பது சிறப்பான திட்டம். இதற்கு ஆகும் செலவு ரூ 500 கோடி தான் என்பதை குறிப்பிட வேண்டும். செப்டம்பர் மாதம் துவங்கி இந்த ஆண்டின் மீதமுள்ள 7 மாதங்களுக்கு மாதம் ரூ 1,000 மகளிருக்கு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு ரூ 7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு கோடி பெண்கள் பயன்பெறுவர் என்றும் அரசு அறிவித்துள்ளது. எந்த அடிப்படையில் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை. பட்ஜெட் உரையில் வரவேற்கத்தக்க மூன்றாவது அம்சம் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான உப திட்டங்களுக்கு (மக்கள் தொகை விகிதாச்சார) நெறிமுறைப்படி  போதுமான நிதி ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும் என்ற அறிவிப்பு  ஆகும்.    

ஒதுக்கீடுகள்

ஒதுக்கீடுகளை பொருத்தவரையில் சில துறைகளில் மட்டுமே குறிப்பிடத்தக்க உயர்வை காண முடிகிறது. சமூக நலம் மற்றும் ஊட்டச்சத்து துறையில் மகளிருக்கு மாதம் ரூ 1,000 திட்டம் மற்றும் தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் இரண்டும் புதிதாக சேர்க்கப்பட்டதால், இத்துறைக்கான  2023-24 பட்ஜெட் ஒதுக்கீடு 2022-23 ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட 52% அதிகமாக உள்ளது. இதே வகையில் கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு என்ற துறைக்கு ஒதுக்கீடு 14% அதிகரிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் பாலங்கள் என்ற வகையிலான ஒதுக்கீடு 27% உயர்த்தப்பட்டுள்ளது. பாசனம் மற்றும் வெள்ளக்கட்டுப்பாடு துறைக்கான ஒதுக்கீடு 22% அதிகரிக்கப் பட்டுள்ளது. மறுபுறம், ஆற்றல் துறைக்கான ஒதுக்கீடு 53% குறைந்துள்ளது. வேறு பல துறைகளுக்கான ஒதுக்கீடுகளில் மிகச்சிறிய அளவிலான மாற்றங்களே காணப்படுகிறது. வேளாண் மற்றும் வேளாண் சார் துறை, ஊரக வளர்ச்சி ஆகிய துறைகளில் சிறு சரிவும் ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் துறை ஒதுக்கீட்டில் சிறிய உயர்வும் உள்ளன.

ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் மிக முக்கியமான துறை. எதிர்வரும் காலம் பொது சுகாதாரத்திற்கு பெரும் சவாலாக இருக்கும். சிகிச்சை சேவை தேவைகளும் அதிகரிக்கும். இத்தகைய சூழலில் இத்துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டு ரூ 17,902 கோடி என்பதிலிருந்து வரும் ஆண்டில் ரூ 18,661 கோடியாக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. இது 4 % உயர்வு தான். பணவீக்கத்தைக் கூட ஈடு செய்யாது. பள்ளி கல்வி துறைக்கான ஒதுக்கீடு நடப்பு ஆண்டு பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ 36,896 கோடி வரும் ஆண்டில் ரூ 40,299 கோடி. இந்த உயர்வு பணவீக்கத்தை ஈடுசெய்யும். ஆனால் மாநில உற்பத்தி மதிப்பு 7% உயர்ந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில், அதன் சதவிகிதமாக குறையும். உயர் கல்விக்கான பட்ஜெட் ஒதுக்கீடு நடப்பு ஆண்டில் ரூ 5,669 கோடி. இது ரூ 6,967 கோடி என்று வரும் ஆண்டில் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.  ஆனால் உயர் கல்வியின் சமகால தேவைகளை கணக்கில் கொண்டால் இத்தொகை மிகவும் குறைவே.

நடுத்தர மற்றும் சிறுகுறு தொழில் துறைக்கான ஒதுக்கீடு 2022-23  நிதி ஆண்டில் ரூ 911 கோடி என்பதில் இருந்து வரும் நிதி ஆண்டில் 1,509 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றாலும், இன்று அத்துறை சந்திக்கும் கடும் நெருக்கடியை கணக்கில் கொண்டு மேலும் கணிசமாக உயர்த்தப்படவேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பு தருவதில் இத்துறை – குறிப்பாக, சிறு குறு  தொழில்கள் – முக்கிய பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்குதல் துறைக்கு ஒதுக்கீடு 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ 20,400 கோடி. வரும் நிதியாண்டில் துறை ஒதுக்கீடு ரூ 24,476 என உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல்,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் ஒதுக்கீடு ரூ 8,738 கோடியில் இருந்து ரூ 13,969 கோடி என கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவை இரண்டும் வேகமாக  நகரமயமாகிவரும் தமிழகத்திற்கு பொருத்தமான ஒதுக்கீடுகளே. பொதுவாக, நகரமயமாதலையொட்டி, சென்னை மாநகரம் மற்றும் அதன் அருகாமை பகுதிகளுக்கு சிறப்பு கவனம் அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளிகள் அதிகமாக வாழும் வட சென்னை பகுதிக்கு விசேஷமாக ரூ 1000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் நடைமுறைபடுத்தப்படும்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பங்கேற்பு பெறப்படுவது அவசியம். மதுரை, கோவை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படும் என்ற செய்தி காலம் தாழ்ந்து வந்தாலும் அவசியமான முனைவு என்று வரவேற்கலாம்.

வேலை வாய்ப்பு

பட்ஜெட் கிட்டத்தட்ட வேலை வாய்ப்பு என்ற பிரச்சினையை புறக்கணிக்கிறது என்று கூறலாம். தனது உரையின் துவக்கத்தில் பட்ஜெட்டின் நோக்கங்கள் பற்றி விவரிக்கும் பொழுது வேலை வாய்ப்பையும் நிதி அமைச்சர் குறிப்பிடுகிறார். ஆனால் அது குறித்த முனைவுகள் எதுவும் குறிப்பிடப்படும் அளவிற்கு இல்லை. பன்னாட்டு முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி தனது உரையில் குறிப்பிடுகையில் அமைச்சர் மே 2021 இல் இருந்து தற்சமயம் வரை 2,70,020 கோடி ரூபாய் அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் 3,89,651 நபர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் குறிப்பிடுகிறார். கணக்கு பார்த்தால் பத்து கோடி ரூபாய் முதலீடு என்பது 15 நபர்களுக்கு வேலை தரலாம் என்று தெரிகிறது. இது தமிழக வேலை வாய்ப்பு சவாலை எதிர்கொள்ள முக்கிய நடவடிக்கையாக இருக்க முடியாது. நேரடியாக, குறிப்பாக சிறுகுறு தொழில்கள், விவசாயம், ஊரக வளர்ச்சி, விரிவடைந்த மக்கள் நல திட்டங்கள் ஆகியவை தான் கூடுதல் வேலை வாய்ப்பை உருவாக்க முடியும். இந்நாட்டு, பன்னாட்டு பெரும் வணிக நிறுவனங்களுக்கு ஏராளமான சலுகைகள் அளித்து முதலீட்டை ஈர்ப்பது என்பது வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வாகாது.

திக்கு தெரியாத காட்டில்…

சுருங்க சொன்னால், பட்ஜெட்டில் எந்த திசைவழியில் தமிழக பொருளாதாரம் செல்லவேண்டும், மக்கள் வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை எது, வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்பு ஆகிய முக்கிய பிரச்சினைகளில் பட்ஜெட் எத்தகைய பங்கு ஆற்ற முடியும் போன்ற கேள்விகள் குறித்து ஆழமான சிந்தனைகள் எதுவும் பட்ஜெட்டில் வெளிப்படவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமான சில ஒதுக்கீட்டு மாற்றங்கள், கவனம் ஈர்க்கும் ஓரிரு சேமநல திட்டங்கள் என்ற வகையில்தான் பட்ஜெட் அமைந்துள்ளது. மாநிலத்தின் வளர்ச்சி பற்றியோ, மக்கள் சந்திக்கும் வாழ்வாதார சவால்கள் பற்றியோ எந்த ஒரு தொலை நோக்கு பார்வையும் இல்லாத, ஃபிஸ்கல் பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மை சட்டத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு, செலவுகளை சுருக்கி எப்படியோ சமாளிப்பது என்ற பாணியில் பட்ஜெட் அமைந்திருப்பதால், மாற்று சிந்தனைகளுக்கு, முனைவுகளுக்கு இடமே தராத, ‘திக்கு தெரியாத காட்டில் பயணம்’  போலவே நிதி அமைச்சர் பயணித்துள்ளார். தாராளமய அணுகுமுறையை கைவிட்டால்தான் மாற்று பாதை பற்றிய பயனுள்ள விவாதம் நடத்த முடியும். இதனை செய்ய முன்வராமல் சமூக நீதி பாரம்பரியம் பற்றி மட்டும் பேசுவது முன்னேற்றத்திற்கு வழி வகுக்காது. உணவு, உடை, உறைவிடம், கல்வி, ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, உழைப்பை மதிக்கும் சமூக விழுமியங்கள்  ஆகியவை நாகரிகமடைந்த ஒரு சமூகத்தில் மக்களின் உரிமைகள் என்று பார்க்கப்பட வேண்டும்.

ஒரு மாநில அரசு இந்திய ஒன்றிய அமைப்பில் பல வரம்புகளை எதிர்கொண்டு தான் பட்ஜெட் போடுகிறது. ஒன்றிய அரசின் கொள்கைகளும் நடைமுறைகளும் மாநில அரசின் முடிவெடுக்கும் பரப்பை கணிசமான அளவிற்கு சுருக்குகின்றன. ஒன்றிய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குறைகள் நிறைந்த ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறைகள், ஒன்றிய அரசின் அதி தீவிர தாராளமய கொள்கைகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள், பெரும் தொற்றின் தாக்கம், அதிலிருந்து நிகழ்ந்துவரும் மந்தமான மீட்சி, மேலும் சிக்கலாகி வரும் பன்னாட்டு சூழல் ஆகியவை அடங்கிய பின்புலத்தில் தமிழக பட்ஜெட் போடப்பட்டுள்ளது என்பதை நாம் உணர்கிறோம். எனினும் ஒன்றிய அரசின் கொள்கை சட்டகத்தை கேள்விக்கே உள்ளாக்காமல்,  தற்காலிகமாக அங்கொன்றும் இங்கொன்றும் ஓட்டுப்போட்டு, தாராளமயகொள்கைகளை ஏற்று பிரச்சினைகளை  சமாளிக்க முனைவது சரியான அணுகுமுறை அல்ல. தாராளமய பார்வையால் அரசு ஊழியர் ஓய்வு ஊதிய பிரச்சினையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை புறம் தள்ளி கண்டுகொள்ளாமல் பயணிப்பது இதன் ஒரு வெளிப்பாடு ஆகும்.

குஜராத் மாடல் என்ற கதையாடலை தகர்த்தெறிவதில் தமிழக வளர்ச்சி அனுபவம் ஓரளவிற்கு உதவும் என்பது சரியே. ஆனால் பிற அணுகுமுறைகளையும் கணக்கில் கொண்டு முன்னேற வேண்டியுள்ளது. இதில் உள்ளாட்சி ஜனநாயகம், பொதுத்துறை பாதுகாப்பு, மாநில வளர்ச்சியில் மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல், புலம் பெயர் தொழிலாளிகள் உள்ளிட்டு அனைவருக்குமான சமூக பாதுகாப்பு கொள்கைகள் ஆகியவற்றில் கேரள மாநில அனுபவத்தை பரிசீலித்து பொருத்தமானவற்றை உள்வாங்குவது தமிழ் நாட்டிற்கு உதவும். இது பட்ஜெட் போடுவதற்கும் உதவும்.

ஒன்றிய அரசின் அதிகார மையப் போக்கு, இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சித் தன்மையை சிதைப்பது, மாநிலங்களின் உரிமையை பறிப்பது ஆகிய போக்குகளை எதிர்த்து 2021இல் வலுவாக குரல் எழுப்பிய  நிதி அமைச்சர்,  கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களுடனான வியூகத்தை அமைத்து மாநிலங்களின் உரிமைகளுக்கும் நிதி ஆதாரங்களுக்கும் போராடும் தேவை தமிழகத்திற்கும் உள்ளது என்பதை முழுமையாக உணர வேண்டும். இதன் பொருள் தாராளமய கொள்கைகளை விமர்சன பூர்வமாக அணுகவேண்டும் என்பதாகும். அத்தகைய விமர்சன பார்வை அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் இருக்குமா?



Leave a comment