மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


தென்னகத்தில் இடம்பெயர் தொழிலாளர்: வருகையும் பின்னணியும் !


இரா.சிந்தன்

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பற்றிய விவாதம் அவ்வப்போது பொதுத் தளத்தில் எழுகிறது. முன்பு அது பரவலாக நிகழ்ந்தபோது, அந்த விவாதத்திற்கு கொரோனா ஊரடங்கு காரணமாக இருந்தது. இந்தியாவின் சாலைகளில், சொந்த ஊர்களை நோக்கி, நடந்தே கடந்த தொழிலாளர்கள், மிகக் கடுமையான மனித வதைக்கு ஆளாயினர். இந்தக் கொடுமைக்கு எதிராக, ஒருமைப்பாட்டுணர்வு பரவலாக வெளிப்பட்டது.

இந்த முறை, வெறுப்புப் பிரச்சாரம், போலியான வீடியோக்கள் காரணமாக விவாதம் எழுந்தது.  தமிழ்நாட்டில் இந்தி மொழி பேசியதற்காக 15 பேர் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு பொய்யான தலைப்புச் செய்தியை தைனிக் பாஸ்கர் என்ற பீகார் நாளேடு வெளியிட்டது (பிப்ரவரி 2023). அதற்கு முன்பும், பிறகும், ஏராளமான போலி வீடியோக்கள் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவு சமூக ஊடக பக்கங்களில் திட்டமிட்டு பரப்பப்பட்டன. பீகார் மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர்கள் இதை வைத்து அரசியலை முன்னெடுத்தார்கள்.

இந்திய கிராமப்புறங்களில், வேளாண் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழலில், அதற்கு அடிப்படைக் காரணமாக அமைந்த நவதாராள-உலகமய கொள்கைகளை வேகமாக முன்னெடுக்கும் ஒன்றிய அரசாங்கம், போலிச் செய்திகளை திட்டமிட்டு பரப்புவதன் மூலமாக மக்களை திசைதிருப்ப முடியும் என்றும், இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களையே தம் வாக்காளர்களாக மாற்றவும் கருதுகிறது. பீகார், உ.பி., போன்ற மாநிலங்களில் வாழும் ஏழை, எளிய மக்கள் தமக்கு ‘பாஜகதான் ஒரே பாதுகாப்பு’ என உணரச்‌செய்யும்‌ முயற்சிதான் இந்த போலிச் செய்திகளுக்கு அடிப்படை ஆகும்.

இதே பாஜகதான், கொரோனா கால துயர காலத்தில் இடம்பெயர் தொழிலாளர் நலனுக்கான 1979ஆம் ஆண்டு சட்டம்‌ உட்பட, தொழிலாளர் சட்டங்களை செயலிழக்கச் செய்து, சாரமற்ற 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்து, தொழிலாளர்களுக்கு துரோகமிழைத்தது.

மேலே குறிப்பிட்ட போலிச் செய்தி சர்ச்சைகளுக்கு முன்பே, தமிழ்நாட்டில், வட இந்திய தொழிலாளர்களின் வருகை பற்றிய விவாதங்களும், சர்ச்சையான கருத்துக்களும் நிலவின. அரசியல் தளத்திலும் எதிரொலித்தன. குறிப்பாக, வட இந்திய தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் திட்டமிட்டு குடியேறுவதாகவும், பாஜகவின் வாக்காளர் தளமாக அவர்கள் மாறக்கூடும் என்றன அந்த வாதங்கள்.

எனவே, தெளிவற்ற விதத்தில் பொது விவாதத்தில் உலவக்கூடிய இந்த பிரச்சனையின் ஆழத்தை புரிந்துகொள்ள, இடம் பெயர்ந்து வந்து உழைக்கும் வட இந்திய தொழிலாளர்களைப் பற்றிய தரவுகளை ஆய்வு செய்வோம்.

நவதாராளமய சூழலில் இடம் பெயர்வு

மனித குல வரலாற்றில் இடம் பெயர்வுக்கு பல்வேறு காரணிகள் இருந்துள்ளன. குறிப்பாக, பிழைப்பிற்காக நடக்கும் இடம்பெயர்வுகள் ஆதிப் பொதுவுடைமை காலத்தில் இருந்தே  தொடர்கின்றன. சொத்துடைமை சமூகங்கள் உருவான பிறகு, உற்பத்தியின் தேவைக்காகவும், வணிகத்திற்காகவும், போர்களின் பேராலும் இடம்பெயர்வுகள் நடந்துள்ளன. இக்காலகட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அடிமை வணிகமும், நிர்ப்பந்திக்கப்பட்ட உழைக்கும் மக்களின் இடம்பெயர் குடியேற்றங்களும் நடந்துள்ளன.

நவீன முதலாளித்துவத்தின் உருவாக்கத்தில்தான் நவீன பாட்டாளி வர்க்கம் பிறப்பெடுத்தது. அவ்வாறே நாடுகளும் வடிவமெடுத்தன.  மார்க்ஸ் குறிப்பிட்டு விளக்கும், ‘ஆதித் திரட்டல்’ என்ற நிகழ்முறையின் (அதாவது, முதலாளித்துவத்திற்கு முந்தைய முறைகளை சார்ந்திருந்த உற்பத்தியாளர்களின் உற்பத்திச் சாதனங்களை வலுக்கட்டாயமாக பிடுங்கும்) போக்கில், ஏராளமானோர்‌ தம் நிலத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்து, ஓட்டாண்டிகளாகின்றனர். அவர்கள் தொழில் நகரங்களையும், நாடுகளையும் நோக்கி படையெடுக்கிறார்கள். சொத்துக்களை கொள்ளையடித்துச் சேர்ப்பதை ஒத்த இந்த ‘ஆதித் திரட்டல்’ நிகழ்வுப்போக்கு இன்றுவரை மீண்டும் மீண்டும் நடக்கிறது. அதனால் ஏதுமற்ற உழைப்பாளர் படையும் பெருகுகிறது.

அன்றைய நாட்களில், இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்து உழைக்கும் அயர்லாந்து தொழிலாளர்கள் பற்றி கார்ல்‌ மார்க்ஸ் ஒரு கடிதத்தில் விவரித்துள்ளார். (1879, ஏப்ரல்) அதில் அயர்லாந்து தொழிலாளர்கள் குறைந்த கூலிக்கு சுரண்டப்படுவதால், அது ஆங்கிலேய தொழிலாளர்கள் பெறக்கூடிய கூலியையும் சரியச் செய்ததைக் குறிப்பிடுகிறார்.

இதே சிக்கலின் மறுமுனையை, வி.இ.லெனின், அமெரிக்காவை நோக்கிய இடம்பெயர்வைப் பற்றிய கட்டுரையில் விவரித்துள்ளார், அதில் “அதிவேகமாக வளர்ச்சியடைந்த தொழில் வளம் மிக்க நாடுகளில், விரிவான முறையில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டதால் உலகச் சந்தையில் இருந்து பிற்பட்ட நாடுகள் வெளியேற்றப்பட்டன. இதனால் அந்த (தொழில்வளம் மிக்க) நாடுகளின் தொழிலாளர்களுடைய கூலி விகிதம் சராசரிக்கும் மேல் உயர்ந்தது. இது பிற்பட்ட நாடுகளில் இருந்து தொழிலாளர்களை ஈர்த்தது” என்கிறார்.

சராசரிக்கும் அதிகமான கூலி விகிதம் உள்ள பகுதிகளை‌ நோக்கி தொழிலாளர் படை இயல்பாகவே ஈர்க்கப்படுகிறது. ஆனால் முதலாளித்துவமோ, கூலி விகிதத்தை மென்மேலும் குறைக்கும் விதத்திலேயே செயல்படுகிறது. எனவே அது ‘வேலையற்றோர் பட்டாளத்தை’ பெருகச் செய்கிறது. அதன் மூலம் கூலி சராசரியை சரியச் செய்து, தம்முடைய லாப விகிதத்தை கூட்டிக்கொள்ள முயல்கிறது.

இன்றைய ஏகாதிபத்தியம் ‘நவதாராள-உலகமயமாக’ இயங்குகிறது. இப்போதும், பின்தங்கிய நாடுகளிலும், நகரங்களிலும், ஊரகப் பகுதிகளிலும் இருந்து, முன்னேறிய பகுதிகளை நோக்கி தொழிலாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர். அதே சமயத்தில், தொழில் நிறுவனங்கள் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தம் உற்பத்தியில் குறைந்த திறன் தேவைப்படும் உற்பத்தியை பின்தங்கிய நாடுகளுக்கு மாற்றுகிறார்கள். தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியே கொடுத்தால் போதும் என்பதால் பன்னாட்டு மூலதனத்திற்கு லாபவிகிதம் பன்மடங்கு பெருகுகிறது. மேலும், பல்வேறு உலக வர்த்தக ஒப்பந்தங்களின் ஊடாகவும் பின்தங்கிய நாடுகளின் மீது ஆதிக்கம் நிறுவப்பட்டுள்ளது. அதுவும் தொடர்கிறது. இவ்வகையில், உழைப்பாளர்கள் மீது நேரடியாகவும், பின்தங்கிய நாடுகளின் மீதும், பின்தங்கிய பகுதிகள் மீதும் சுரண்டல் பல்வேறு நிலைகளில், பல்வேறு வடிவங்களில் தீவிரமாக நடக்கிறது.

இந்தியாவில் இடம்பெயர் தொழிலாளர்

இப்போது, இக்கட்டுரையில் இடம்பெயர்வு பற்றிய ஆய்விற்காக கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பது, இந்தியாவிற்குள்ளேயே நடந்துவரும் இடம்பெயர்வு ஆகும். அதிலும், வட இந்திய தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வரக்கூடிய பிரச்சனையை மட்டுமே பேசுகிறோம். பிற வகைகளில் வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும், மாநிலங்களுக்கு உள்ளேயும் நகரங்களுக்கும்,‌ கிராமங்களுக்கும் இடம்பெயர்வோரின் சிக்கலை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

தேசிய மாதிரி ஆய்வின் அடிப்படையில், இந்தியாவில் பிழைப்புக்காக இடம் பெயர்வோர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 32.5 கோடிகள் ஆகும். ஆனால் இதில் ஊரக பகுதிகளுக்குள்ளாகவே இடம் பெயர்ந்துகொள்வோரின் எண்ணிக்கைதான் அதிகபட்சமாக 57 சதவீதம். இவ்வகை இடம் பெயர்தலில் பெரும்பாலும் பெண்களே ஈடுபடுகின்றனர். ஊரகங்களில் இருந்து நகரங்களை நோக்கி இடம்பெயர்வது 22 சதவீதம். நகரங்களில் இருந்து வேறு நகரங்களுக்கு இடம்பெயர்தல் 15 சதவீதம். நகரத்தில் இருந்து ஊரகப் பகுதிகளுக்கு இடம்பெயர்வோரின் எண்ணிக்கை 6 சதவீதம் என்ற அடிப்படையில் உள்ளது. இருப்பினும், நகர்ப்புறங்களில் உற்பத்தி சார்ந்த தொழில்களில் இடம்பெயர் தொழிலாளர்களின் பங்களிப்பு அதிகம் என்று ஒன்றிய அரசு தெரிவிக்கிறது.

கேரள மாநிலத்தில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை, வாழ்நிலை மற்றும் பிரச்சனைகள் குறித்து, அந்த மாநிலத்தின் திட்ட ஆணையம், கடந்த 2021 மார்ச் மாதத்தில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது. தமிழ்நாட்டில் அவ்வளவு விரிவாக இல்லாத போதும், கடந்த 2016ஆம் ஆண்டில் லயோலா சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும், இந்திய சமூக நிறுவனமும் (பெங்களூரு) சேர்ந்து – 3 மாவட்டங்களில் (காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர்) வாழும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலை குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டது. இந்த இரண்டு ஆய்வுகளின் விபரங்களை எடுத்துக் கொண்டு தமிழ் நாட்டில் முன்வைக்கப்பட்டுவரும் சில பிரச்சாரங்களுக்கு விடை தேடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

எங்கிருந்து இடம்பெயர்வு?

வடவர் வருகை, இந்தி தொழிலாளர்கள் என்று பொதுவாக அழைக்கப்பட்டாலும், இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற தெளிவு அந்த பெயர்களில் வெளிப்படவில்லை.

கேரள திட்ட ஆணையத்தின் ஆய்வறிக்கை ஒரு முக்கியமான கருத்தினை பின்வருமாறு சுட்டியுள்ளது.  ‘2001ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, அண்டை மாநிலங்களுக்குள்ளாகத்தான் இடம்பெயர்தல் அதிக எண்ணிக்கையில் நடந்துள்ளது.’  அதன் பின்னர் வட இந்திய மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இடம்பெயர்தல் தென் மாநிலங்களை நோக்கி அதிகரித்துள்ளது என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நாம் எடுத்துக்கொண்டுள்ள லயோலா ஆய்விலும், முதல் தலைமுறையாக இடம்பெயர்ந்து வந்துள்ளவர்களின் சதவீதம் 60 என தெரிகிறது. மேலும் 70% பேர், 4 ஆண்டு காலம் வரை இங்கே வசித்து வருவதாக சொல்லியுள்ளனர். எனவே இந்த இடம்பெயர்தல் அண்மையில்தான் அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் உழைக்கும் இடம்பெயர் தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில், பீகாரில் இருந்து வந்தவர்கள் 24%, உத்திர பிரதேசத்தில் இருந்து 14.4%, ஒதிசாவில் இருந்து 12.3%, அசாமில் இருந்து 12.2%, மேற்கு வங்கத்தில் இருந்து 9.6%, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 7.4% ஆவர். அவர்களில் 90.8% பேர் கிராமங்களில் இருந்தே வந்துள்ளார்கள். 91% பேர் ஆண்கள், 8.4% பேர் பெண்கள். மொழி அடிப்படையில்  இந்தி, பெங்காலி, ஒடியா, போஜ்பூரி, அசாமி, சந்தாலி, தெலுங்கு, மைதிலி, மேகாகி, சத்ரி, ராஜஸ்தானி, நேபாளி மற்றும் உராவுன்ஆகிய மொழிகளை பேசுவதாக தெரிவித்துள்ளனர்.

கேரளத்தை பொருத்தமட்டில், மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்களின் எண்ணிக்கை 13 லட்சம். அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து 9.8 லட்சம். உத்திர பிரதேசத்தில் இருந்து 4.1 லட்சம் பேர். பீகார் மற்றும் ஒதிசாவில் இருந்து தலா 1.2 லட்சம் பேர் வந்துள்ளார்கள்.

எனவே, இந்த தொழிலாளர்கள் ஒருசில மாநிலங்களில் இருந்து திட்டமிட்டு அழைத்து வரப்பட்டதாக மேலே‌ கண்ட விபரங்கள் காட்டவில்லை. மேலும் இவ்வாறு இடம்பெயரும் தொழிலாளர்கள் உறவினர்கள், நண்பர்கள் தொடர்புகளைக் கொண்டே இந்த பயணங்களை அமைத்துக் கொள்கின்றனர் என்றும், தங்கள் கிராமத்தில் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் ஏஜென்டுகள் குறைந்தபட்சம் 2 பேராவது இருப்பதாகவும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஏஜெண்டுகள் பெரும்பான்மையோர் பதிவுசெய்தோர் அல்ல.

குடியேற்றம் நடக்கிறதா?

வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வரக்கூடிய தொழிலாளர்கள் இங்கேயே தங்கிவிடுவது இயல்புக்கு மாறான எண்ணிக்கையில் நடப்பதாக ஒரு பிரச்சாரமும் உள்ளது.

கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு இந்த கேள்விக்கான பதிலை குறிப்பாக ஆராய்ந்துள்ளது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற ஆய்வு என்பதால், அந்த முடிவுகளையே முதலில் பார்ப்போம்.

பிற மாநிலங்களில் இருந்து கேரளத்திற்கு இடம்பெயர்ந்திருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 31.4 லட்சம் (2017-18) ஆகும். மாதிரி ஆய்வில் பதிலளித்த தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் (21 லட்சம்) குறுகிய காலத்திற்கு மட்டும் கேரளத்திற்கு இடம்பெயர்ந்து உழைக்கின்றனர். குறுகிய கால அடிப்படையில் வரக்கூடியவர்கள், ஆண்டுக்கு 2 முறையாவது சொந்த மாநிலத்திற்கு சென்று திரும்புகிறார்கள். அதாவது, வேலைக்காக மட்டும் வந்து, சற்று கூடுதலாக சம்பாதித்து, அதில் கிடைக்கும் உபரியை எடுத்துக் கொண்டு திரும்புகிறார்கள். முந்தைய காலங்களில் நடந்துள்ள இடம்பெயர்தலில் இந்த போக்கு தென்படவில்லை என ஆய்விக் தெரிகிறது.

இவ்வாறு இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளில் சுமார் 17.5 லட்சம் எண்ணிக்கையில் பணியாற்றுகின்றனர். உற்பத்தி துறையில் 6.3 லட்சம் என்ற எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். விவசாயம் சார்ந்த பணிகளில் 3 லட்சம் பேர் உள்ளார்கள்.

கேரளத்திலேயே 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றும் – நீண்ட காலம் தங்கி உழைக்கக் கூடிய இடம்பெயர் தொழிலாளர்களின் எண்ணிக்கை 10 லட்சம் ஆகும். அதில் 5 சதவீதம் பேர் தங்களுடைய குடும்பங்களோடு கேரளத்தில் தங்கியுள்ளார்கள். அதிகபட்சமாக, எர்ணாகுளம் மாவட்டத்தில் 14,500 குடும்பங்கள் உள்ளனர். திருச்சூரில் 7,000 குடும்பங்கள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக 2 குழந்தைகள் என கணக்கிட்டால் 98 ஆயிரம் குழந்தைகளும் இடம்பெயர்ந்த குடும்பங்களில் இருப்பதாக கருதலாம். 81 சதவீதம் குழந்தைகள் பள்ளிகளில் படிக்கிறார்கள். எனவே 61 ஆயிரம் பேர் படிக்கலாம்‌ என ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

சென்னை போரூரை அடுத்து அமைந்துள்ள மவுலிவாக்கம் பகுதியில் பிரைம் ஸ்ருஷ்டி நிறுவனம் கட்டி வந்த 11 மாடி கட்டடம் 2014 ஆம் ஆண்டு ஜூலையில் தரைமட்டமானது. இவ்விபத்தில் 61 தொழிலாளர்கள் பலியாகினர். பெரும்பாலும் இடம்பெயர் தொழிலாளர்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து தொழிலாளர் துறை சார்பில் தனியார் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வு 2016 பிப்ரவரி மாதம் வெளியானது. இந்த ஆய்வில் 10.67 லட்சம் தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து தமிழ்நாட்டில் வாழ்வதாக கூறப்பட்டது. (அப்போதே இந்த மதிப்பீடு குறைவு என்ற விமர்சனமும் வைக்கப்பட்டது) இடம் பெயர்ந்த தொழிலாளர்களில் 27% உற்பத்தி சார்ந்த தொழில்களிலும், 14% துணி உற்பத்தி, 11.41% கட்டுமான துறையிலும் பணியாற்றுகின்றனர் என்று அந்த ஆய்வு தெரிவித்தது . மிக அதிகபட்சமாக இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் 20.0% காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாழ்கிறார்கள். காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூரில் 51% பேர் உழைக்கிறார்கள். என்று அந்த ஆய்வு காட்டியது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 12.1%, திருப்பூரில் 9% பேர் உள்ளனர் என்றது.

நாம் இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் லயோலா ஆய்வு 2016ஆம் ஆண்டில், மேற்சொன்ன அறிக்கைக்கு பின் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் 77 சதவீதம் பேருக்கு திருமணமாகியிருந்த போதிலும், குடும்பமாக இடம்பெயர்ந்தவர்கள் மொத்தத்தில் 10 சதவீதம் மட்டுமே என்றும் காட்டியது. 98.6 சதவீதம் பேர் சொந்த ஊருக்கே திரும்பிவிட விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். எனவே தமிழ் நாட்டிலும் கேரள ஆய்வின்‌ நிலை பிரதிபலிப்பதாக கொள்ளலாம்.

தொழிலாளர்களின் சமூக பின்னணி

இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் கல்வித் தகுதியும், சமூகப் பின்னணியும் பொதுப் புத்தியின் எதிர்பார்ப்பில் இருந்து மாறுபட்டுள்ளன. கேரளத்தை பொருத்தமட்டில் இடம் பெயர்ந்த தொழிலாளர்களில் 56 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். அந்த மாநிலத்தில் இடம் பெயர்ந்துள்ள இந்துக்களில் பிற்படுத்தப்பட்ட சாதியினர் சரிபாதிக்கும் கூடுதலாக உள்ளனர். மறுபகுதி பட்டியல் சாதி மற்றும் பழங்குடிகள் ஆவர்.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி இடம்பெயர் தொழிலாளர்களில் இந்துக்கள் 78.4%, முஸ்லிம்கள் 16.4%, கிறுத்துவர்கள் 4.8 சதவீதம்.  இந்து என குறிப்பிட்டோரில் பிற்படுத்தப்பட்டோர் சதவீதம் 42.6, பட்டியல் சாதியினர் சதவீதம் 18.1 பட்டியல் பழங்குடியினர் சதவீதம் 16.7 [சாதி குறிப்பிடாதவர்கள் 2.7]. இதில் பிற்படுத்தப்பட்டோரும், முற்பட்ட சாதிகளும் ஆகப்பெரும்பான்மையாக உற்பத்தி சார்ந்த தொழில்களிலேயே உழைக்கின்றனர். பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் கூடுதலான எண்ணிக்கையில் கட்டுமான பணிகளில் உள்ளார்கள்.

பட்டியல் பிரிவினர் மற்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை தேசிய சராசரியை விட இடம்பெயர்ந்தோர் சதவீதம் அதிகமாக இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. உற்பத்தி சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர் படித்தவர்களாகவும் உள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்களில் 12 ஆம் வகுப்பு தேர்வானவர்கள் 42 சதவீதம், மேலும் 15.3 சதவீதம் பத்தாம் வகுப்பு முடித்துள்ளார்கள்.

தங்கள் மாநிலத்தில் சொந்த வீடு இருப்பதாக 96.7% பேரும், நிலம் இருப்பதாக 62.3% பேரும் தெரிவித்துள்ளனர். 67.7 பேரின் வீடுகளில் கழிப்பிடம் உள்ளது ஆனால் பயன்படுத்தும் நிலையில் இல்லை. மேலும், பொருளாதார தேடலுக்காகவே இடம்பெயர்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜனநாயக உரிமைகள்

இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் அரசியல் செயல்பாடுகள் பற்றிய கேள்வியை கேரள ஆய்வு முன்வைத்துள்ளது.

அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் வாக்களித்தீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றே பெரும்பான்மையோர் பதிலளித்துள்ளனர்.

சொந்த ஊருக்கு சென்று திரும்புவதற்கு ஆகும் செலவு காரணமாகவும், வாக்களிக்கும் உரிமை பற்றிய போதிய விழிப்புணர்வின்மையும் இதற்கான காரணங்களாக பட்டியலிட்டுள்ளனர். எனவே, அரசியல் உணர்வுபெற்ற பகுதியாக அவர்களை கருத முடியவில்லை.

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த கேள்வி நேரடியாக கேட்கப்படவில்லை என்றபோதிலும், அடையாள அட்டைகள் உள்ளனவா என்ற கேள்வியை கேட்டுள்ளனர். சுமார் 90 சதவீதம் தொழிலாளர்களுக்கு உள்ளூர் சார்ந்த அடையாள அட்டைகள் எதுவும் இல்லை. தொழிலாளர் அடையாள அட்டை கூட இல்லை என்பது தெரிய வருகிறது. வாக்காளர் அட்டை உள்ளது.

பணியிடத்தில் சுரண்டல்

உள்ளூர் தொழிலாளர்களை விட குறைவான கூலியில் இடம்பெயர்ந்த தொழிலாளர் சுரண்டப்படுகிறார்கள் என்பது வைக்கப்படும் முக்கியமான வாதம் ஆகும். குறைவான. கூலி மட்டுமல்லாது, இன்னும் பல்வேறு முனைகளில் கூடுதலான சுரண்டலை இந்த தொழிலாளர்கள் எதிர்கொள்வது ஆய்வுகளில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நிலைமையும், கேரளத்தின் நிலைமையும் ஒத்ததாக இல்லை. எனினும் சமவேலைக்கு சம ஊதியம் மறுக்கப்படுவது பொதுவான சிக்கலே.

தமிழ்நாடு

லயோலா ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகியவை அதிகம் நகரமயமானவை, பன்னாட்டு மூலதனத்தை அதிகம் ஈர்க்கக்கூடியவை. இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பன்னாட்டு நிறுவனங்களிலும் பணியாற்றுகிறார்கள். அவ்வாறான நிலையில், அவர்களில் 60% பேர் 8 மணி நேரத்திற்கும் கூடுதலாக வேலை வாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது கவனிக்க வேண்டியது. இதற்காக ஓவர்டைம் கூலி பெறுவது மிகச் சிறு பகுதியே என்பதும் தெரிகிறது. நேரக் கட்டுப்பாடே இல்லாமல், வேலையை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அகலவேண்டும் என்ற நிர்ப்பந்தமும் நிலவுகிறது.

5 நாட்கள் மட்டும் வார விடுப்பு இருப்பதாக தொழிலாளர்கள்தெரிவிக்கின்றனர். விடுமுறை மாதத்தில் ஒரு நாள் கூட கிடைப்பதில்லை என்று 41% பேர் தெரிவித்துள்ளனர். 43.7 சதவீதம் பேர் இயந்திர கருவிகளை பயன்படுத்துகின்றனர். 32.2% பேர் உடல் உழைப்பை செலுத்துகின்றனர். ஒப்பந்ததாரர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக 66.7% பேர் தெரிவிக்கின்றனர். 33% மட்டுமே நேரடியாக முதலாளிக்கு கீழ் உழைக்கின்றனர்.

சரிபாதிக்கும் அதிகமானவர்கள் பணியிடத்தில் விபத்தை எதிர்கொண்டுள்ளனர், இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீடு கூட பெரும்பான்மையானவர்களுக்கு (81.1%) இல்லை.

மாத சம்பளமாக பெறுவோர் 86% பேர்.  மாத ஊதியம் ரூ.8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். வருகைப் பதிவேடு இல்லை. குறைந்தபட்ச கூலி சட்டம் 1948, போனஸ் சட்டம் 1965, சம வேலைக்கு சம ஊதியம் சட்டம் 1976, உழைப்பாளர் ஈட்டுத்தொகை சட்டம் 1923 ஆகிய தொழிலாளர் நலச் சட்டங்களை பற்றி பெரும்பான்மையானவர்களுக்கு தெரியவில்லை. இடம்பெயர் தொழிலாளர் 1979ஆம் ஆண்டு சட்டமும் அமலாகவில்லை.  இ.எஸ்.ஐ., மற்றும் பி.எப்., ஓவர் டைம் சம்பளம், வார விடுப்பு, மாதாந்திர விடுப்பு உள்ளிட்ட உரிமைகள் பற்றி தெரியவில்லை.

வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடிய தொழிலாளர்களை பதிவு செய்யும் நடைமுறையே தமிழ்நாட்டில் பெரிதாக இல்லை. குறிப்பாக, ஏஜெண்டுகள் வழியாக வரக்கூடியவர்களிடம் கமிசன் தொகையும் சுரண்டப்படுகிறது. தாங்கள் ஏதேனும் ஒருவிதத்தில் ஒடுக்குமுறைகளை எதிர்கொள்வதாகவும் பெரும்பான்மையானவர்கள் தெரிவித்துள்ளனர்.

88% பேரிடம் ரேசன் அட்டை இல்லை. அதனால்சந்தைவிலையிலேயேஉணவுப்பொருட்களைவாங்கிபயன்படுத்துகிறார்கள். குடிநீருக்காக கேன் தண்ணீரை சார்ந்திருப்போர் 50.7% ஆகும்.  28.5 சதவீதம் பேர் தற்காலிக குடியிருப்பில் வாழ்கிறார்கள்.29.3 சதவீதம் பேர் வாடகைக்கு சிறு வீட்டில் வாழ்கின்றனர்.29.2 சதவீதம் பேர் ஒரே அறையில் தொகுப்பாக (டார்மெட்ரி) வாழ்கிறார்கள். வீட்டுக்கான வாடகைத் தொகை சம்பளத்தில் பிடிக்கப்படுவதாக கணிசமானோர் கூறியுள்ளனர்.

கேரளம்

கேரளத்தில் உள்ள மொத்த தொழிலாளர்களில் 1.4% இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் என துல்லியமாக அந்த ஆய்வு கணக்கிட்டுள்ளது. மேலும் அவர்கள் பெறக்கூடிய கூலி, ஒரு மாதத்திற்கு உள்ளூர் தொழிலாளரை விடவும் ரூ.3,500 குறைவாக உள்ளதை கண்டறிந்துள்ளனர். சில மாவட்டங்களில் இந்த வித்தியாசம் ரூ. 3,900 வரை உள்ளது.  இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சராசரியாக மாதம் ரூ.16,000 சம்பாதிக்கின்றனர். இருப்பினும் குறைந்தபட்சமாக தெரிவிக்கப்பட்டுள்ள கூலி ரூ. 10,000க்கும் குறைவாக இருக்கிறது. உள்ளூர் தொழிலாளருக்கு வழங்கப்படுவதை விட கூலி குறைவாக இருக்கும்போதிலும், அவர்களுடைய சொந்த மாநிலத்தில் தரப்படும் கூலியை விட இது அதிகம் என்பதால் ஒப்புக்கொள்கிறார்கள்.

இடம் பெயர்ந்த தொழிலாளர்களில் 44 சதவீதம் மட்டுமே வங்கி சேவையை பயன்படுத்தி பணம் அனுப்புகிறார்கள். குறுகிய காலம் வந்து உழைத்து திரும்புகிறவர்கள் வங்கிச் சேவையை பயன்படுத்துவதில்லை. மாதம் சராசரியாக ரூ. 4 ஆயிரம் சொந்த ஊருக்கு அனுப்ப முடிகிறது. வங்கிகள் வழியாக ஆண்டுக்கு ரூ. 750 கோடி வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மாதம் ரூ.12 ஆயிரம் கேரளத்தின் சந்தையிலேயே செலவிடப்படுவதாக எடுத்துக் கொண்டால், குறைந்தபட்ச சாத்தியத்தை கணக்கிட்டால் கூட சுமார் ரூ.40 ஆயிரம் கோடிகள் அந்த மாநிலத்தின் சந்தையில் செலவிடப்படுகிறது.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களில் 55.6% பேருக்கு பிரதான நோய்கள் உள்ளன. சர்க்கரை நோய் 34.4%, இரத்த அழுத்தம் 33.5%, விபத்தினால் ஏற்பட்ட காயம் 10.3%, மன அழுத்தம் 19%, தீராத நோய்கள் (ஹெச்.ஐ.வி, கேன்சர்) 2.7%. 86 சதவீதம் பேருக்கு சமூக பாதுகாப்பு ஏற்பாடுகள் உறுதி செய்யப்படவில்லை. கேரள அரசின் இன்சூரன்ஸ் திட்டத்தில் 13% பேர் மட்டுமே உள்ளனர்.

வெளிமாநில தொழிலாளர்களை விரும்புவதற்கு முதலாளிகள் தெரிவிக்கும் காரணங்கள் முக்கியமானவை. முதலாவது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகமாக விடுப்பு எடுப்பதில்லை என்பது. இடம்பெயர்தல் காரணமாக சமூக நடவடிக்கைகளில் இருந்து துண்டித்துக் கொண்டிருப்பதால், உள்ளூர் தொழிலாளர்களைப் போல அவர்கள் அதிகம் விடுப்பு கேட்பதில்லை.

இரண்டாவது விசயம் கூலி உயர்த்தி கேட்பதில்லை என்பது. சங்கமாக இணைவதற்கான சாத்தியங்களோ, கூட்டு பேரத்திற்கான வாய்ப்புகளோ மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் அவர்களை கட்டுப்படுத்துவது மிகவும் சுலபம் என்கிறார்கள் முதலாளிகள்.

பொதுவாக தொழில்வளம் மிக்க பகுதிகளில் சராசரி கூலி அதிகமாக உள்ளது. அதை நோக்கியே பின்தங்கிய பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் ஈர்க்கப்படுகின்றனர் என்றபோதிலும், அவர்களுடைய கூலி அதிகரிப்பு, சொந்த மாநிலத்தின் நிலைமைகளைச் சார்ந்தே‌ உள்ளது

குறிப்பாக தொழிலாளர்களின் கலாச்சார வேறுபாடுகளில் கவனம் குவிகிறபோது, சங்கம் அமைத்தல் போன்ற கூட்டு பேர உரிமைக்கான போராட்டங்கள் பலவீனப்படுகிறது. எனவே, வெளிமாநில தொழிலாளர்களின் வருகையும், அங்கு நிலவக்கூடிய வேளாண் நெருக்கடியும், தொழிலாளர்களின் வேறுபாடுகள் சார்ந்து நிலவக்கூடிய கசப்புணர்வும் என அனைத்தும் மூலதனம் சுரண்டிக் கொழுக்க உதவியாக உள்ளது.

இங்கிலாந்திற்கு இடம்பெயர்ந்த அயர்லாந்து தொழிலாளர்களும், அவர்களுக்கு எதிராக வெறுப்புற்ற ஆங்கிலேய தொழிலாளர்களும்‌ பற்றி மார்க்ஸ் எழுதும்போது,  இருவேறு எதிர் முகாம்களாக அவர்கள் பிரிந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறார். மேலும் ஆளும் வர்க்கங்களே இந்த உணர்வினை ஊட்டி வளர்த்தார்கள் என்பதையும், அவரின் கடிதம் உணர்த்துகிறது. ஊடகங்கள் எதிர்ப்புணர்வினை தூபம் போட்டன. இதன் விளைவாக, ஆங்கிலேயத் தொழிலாளி, ஆங்கிலேய ஆளும் வர்க்கத்தின் தரப்பில் தம்மை நிறுத்திக் கொண்டார். தொழிலாளர்களின் வர்க்க உணர்வை மழுங்கடித்ததன் ரகசியம் இதில் ஒளிந்திருக்கிறது என்பதை அம்பலப்படுத்தினார் மார்க்ஸ்.

இந்த சிக்கலின் மறுமுனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், தாம் சேமிக்கும் உபரியுடன் ஊர் திரும்பவே விரும்புகிறார்கள். ஆனால் கணிசமான பகுதியினருக்கு சேமிப்பு மிஞ்சுவதில்லை. வட மாநிலங்கள் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் ஊரக பகுதிகளில் தீவிரமாகியிருக்கும் நெருக்கடியே இவ்வாறு அலைக்கழிக்கிறது.

தொழிலாளர்கள் பற்றாக்குறை?

மிகக் குறைவாகவே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் மற்றும் ஒரு அம்சம், தொழிலாளர் பற்றாக்குறை பற்றியது. சிறு முதலாளிகள் மத்தியில் இருந்து இந்தக் குரல் தொடர்ந்து எழுகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் அதற்கான பதில் கிடைக்கவில்லை.

கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, இந்த சிக்கலை சுட்டிக்காட்டியுள்ளது. திறன் மிக்க தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் கேரளத்திற்கு, குறைந்த திறனுடைய தொழிலாளர்களின் தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என்பதாலும்,  இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை நகரமயமாதலுக்கு உதவுகிற காரணத்தாலும் இந்த போக்கு நீடிக்கும் என்றே அந்த அறிக்கை விளக்குகிறது.

உழைப்புச் சந்தையில் ‘வேலையற்றோர் பட்டாளம்’ அதிகரிக்கும்போது சராசரி கூலியில் வீழ்ச்சி ஏற்படுகிறது. அதைப் போலவே உழைப்புச் சந்தையில் போதுமான தொழிலாளர்கள் இல்லையெனில் அதுவும் நெருக்கடியையே ஏற்படுத்தும். எனவே,  உற்பத்தி சார்ந்த தொழில்கள், கட்டுமானம் மற்றும் வேளாண் துறைகளின் வேறுபட்ட தேவைகளுக்கு ஏற்ப தொழிலாளர்களின் தேவை மற்றும் வரத்து குறித்து விரிவான ஆய்வு தேவை. உதாரணமாக விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறபோது அது நீண்டகால அடிப்படையில் உணவுப் பாதுகாப்பினை சிதைத்துப் போடக்கூடும்.

நவதாராள-உலகமயம் ஏற்படுத்தும் மற்றொரு சிக்கல், கச்சாப்பொருட்களின் ஏறுமாறான விலையேற்றம் ஆகும். அதன் காரணமாக குறிப்பாக சிறு-குறு தொழில்களின் லாப விகிதங்கள் குறைகின்றன. எனவே தம்முடைய லாப விகிதத்தை உயர்த்திக் கொள்ள வேலை நேரத்தை நீட்டிப்பது, வார விடுப்பு, மாத விடுப்பு உள்ளிட்ட உரிமைகளை மறுப்பது போன்ற சட்டவிரோத வாய்ப்புகளையும் அந்த முதலாளிகள் தேடுகிறார்கள். உதாரணமாக, திருப்பூரின் பின்னலாடை தொழிலை எடுத்துக் கொண்டால் அங்கு உற்பத்தியாகும் பருத்தி சார்ந்த ஆடைகள் மேற்கத்திய சந்தைக்காக உற்பத்தி செய்யப்படுகின்றன. அதே சமயத்தில் மேற்கத்திய நாடுகள் பருத்தி கொள்முதல் தொடர்பாக மேற்கொள்ளும் கொள்கை முடிவுகளும், (சீனாவின் ஜிங்ஜியாங் மாகாணத்தில் இருந்து பஞ்சு பயன்படுத்துவதை குறைப்பது), பஞ்சு ஏற்றுமதியில் இந்திய ஆளும் வர்க்கங்கள் கடைப்பிடிக்கும் லாபவெறிக் கொள்கைகளும் (உலகச் சந்தைக்கு ஏற்ப விலையை ஏற்றி இறக்கி லாபம் பார்ப்பது) உள்நாட்டில் ஆயத்த ஆடைத் தொழிலுக்கான கச்சாப்பொருள் விலையில் அதீத ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்துகின்றன. இதனால் நூல்விலை பலமடங்கு உயர்த்தப்பட்டதை அண்மையில் பார்த்தோம். இந்த காரணங்களால் தம்முடைய லாப விகிதத்தை உயர்த்துவதற்காக தொழிலாளர்களை அத்துக் கூலிக்கு சுரண்டுவதை நோக்கியே சிறு மூலதனம் பாய்கிறது. நவதாராள-உலகமயத்தின் விதிகளை எதிர்க்காமல் இந்த நிலைமையை மாற்றிட ஏற்படுத்த முடியாது.

உண்மையின் பின்னணியில்

மேலே நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் சிக்கல், வட இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில் இருந்து தென்னகம் நோக்கி இடம்பெயரும் தொழிலாளர்களைப் பற்றியது மட்டுமே. ஆனால் இது அவர்களுடைய சிக்கல் மட்டுமல்ல. தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்டங்களின் இடையிலும் இடம் பெயர்தல் நடக்கின்றன. வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்து உழைக்கும் தொழிலாளர்களும் மூலதனத்தால் சுரண்டப்படுகிறார்கள்.

நவதாராள-உலகமயம் காரணமாக வேளாண் நெருக்கடி தீவிரமாகிறது. அதனால், ஊரக பகுதிகளில் வேலையின்மை அதிகரிப்பது இந்தப் பிரச்சனையின் ஒரு பகுதியாகும், திறன் குறைந்த உற்பத்தியை பின் தங்கிய நாடுகளில் மேற்கொள்ளும் பன்னாட்டு மூலதனமும், கச்சாப்பொருட்களின் அதீத விலையேற்றத்தால் பாதிக்கப்படும் சிறு மூலதனமும், தம்முடைய லாப விகிதத்தை அதிகமாக பராமரிக்க விரும்புவது  இரண்டாவது பகுதியாகும். இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் தம்முடைய கூட்டு பேர வலிமையை பயன்படுத்த முடியாத நிலையில், பண்பாட்டு வேற்றுமைகளை ஆளும் வர்க்கங்கள் தூண்டிவிடுவதும், கூர்மைப்படுத்துவதும் மூன்றாவது பகுதி ஆகும்.

மேற்சொன்ன விதத்தில் பிரச்சனையை பகுத்து, ஒருங்கிணைந்த முறையில் எதிர்கொள்ள முடியாதபோது அங்கே குழப்பத்திற்கு வழி ஏற்படுகிறது. லாப-விகிதத்தை உயர்த்திட சுரண்டலை தீவிரப்படுத்தும் முனைப்புடன் ஆளும் வர்க்கமும், மக்களின் பிற உணர்வுகளை தூண்டிவிட்டு அரசியல் லாபமடையும் முனைப்புடன் ஆட்சியாளர்களும் செயல்படுகின்றனர்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்துத்துவா – பெருநிறுவன கள்ளக்கூட்டணி இந்த திசையில்தான் இயங்குகிறது. மக்களின் மீதான சுரண்டலையும், ஒடுக்குமுறைகளையும் தீவிரப்படுத்திக்கொண்டே, மறுபக்கத்தில் தேசியவாத வெறி முழக்கத்தையும், பெரும்பான்மைவாத கூச்சலையும் வேகப்படுத்துகிறது. ஆர்.எஸ்.எஸ் முன்னெடுக்கும் இந்துத்துவா சித்தாந்தம் இதற்கான வாகனமாக இருக்கிறது. அதன் அடிப்படைகள்  ‘படிநிலை ஒடுக்குமுறையை நியாயப்படுத்தும் இந்துப் பழமைவாதம், ஆரிய இன மேன்மை, சமஸ்கிருத வகைப்பட்ட இந்தி மற்றும் கலாச்சார மேன்மையை முன்னெடுத்தல்’ ஆகிய 4 அம்சங்கள் என்பதை மனதில் கொண்டு இந்த அரசியலை பார்க்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் இந்தி பேசும் தொழிலாளர்கள் மத்தியில் தம்முடைய அரசியலுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்க அது முயற்சிக்கிறது. அதனை செய்வதால், மக்கள் தம் துயரங்களுக்கான உண்மையாக காரணங்களை கண்டுகொள்ள முடியாமல் அரசியல் களம் வெகுதூரம் விலக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இந்துத்துவா சார்ந்த அரசியல் வலுப்பட முடியாத சூழலில், தேசிய இன அடிப்படையிலான அடையாள அரசியல் கருத்துக்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த பிரச்சாரமும் உடனடியாக பன்னாட்டு-உள்நாட்டு மூலதனத்திற்கு சாதகமானதே. இந்த பிரச்சாரம் மூலதனத்தின் கொடுங்கரங்களில் அல்லலுறும் தொழிலாளர்களின் மற்றொரு பகுதியையே எதிரிகளாக கட்டமைக்க அது வழிவகுக்கிறது. ஆனால் இந்த பிரச்சாரம் காலப்போக்கில் நெருக்கடிக்கே வழிவகுக்கும். ஒட்டுமொத்த இடம்பெயர் தொழிலாளர்களும் திரும்பிச் சென்றாலும்கூட அதனால் ஏற்படும் பொருளாதார விளைவுகள் இங்குள்ள உழைக்கும் மக்களையே துயரத்தில் ஆழ்த்தும்.

தீர்வுக்கான பாதையை நாம் மார்க்சிய வெளிச்சத்திலேயே அடைய முடியும்.

  • அதிகரித்துவரும் ஊரக நெருக்கடிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்படாமல், இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்நிலையை மேம்படுத்த முடியாது. அப்போதுதான் தொழிலாளர் தேவை அதிகரிக்கும் பகுதிகளில் சராசரி கூலியை தக்கவைப்பதற்கும், அதிகரிப்பதற்குமான சாத்தியங்கள் அதிகரிக்கும்.
  • பண்பாட்டு வேறுபாடுகள் இருக்கும்போதும், சம-வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் கூட்டு பேரத்திற்கும், சுரண்டலுக்கு எதிராகவும் வர்க்க ஒற்றுமையை அது சாத்தியமாக்கும்.
  • நவதாராள-உலகமய கொள்கைகளுக்கு எதிரான பரந்துபட்ட ஒற்றுமையில் சிறு-குறு முதலாளிகள் உட்பட இணைக்க வேண்டியுள்ளது. கச்சாப்பொருட்களின் விலைக் கட்டுப்பாடு, திறன் வாய்ந்த தொழிலாளர்களின் வரத்தினை பராமரிக்கும் விதத்தில் திட்டமிட்ட பொருளாதார தலையீடுகளை உறுதி செய்வதும் இப்பிரச்சனைக்கு எதிரான போராட்டத்தின் பகுதிகளே ஆகும்.
Advertisement


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: