மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


செயற்கை நுண்ணறிவும் உழைக்கும் வர்க்கமும்


ச. லெனின்

மனிதகுல வரலாற்றில், மனிதர்கள் தாங்கள் செலவிடும் உழைப்பு சக்தியைக் குறைப்பதற்கான கண்டுபிடிப்புகளை எல்லா காலங்களிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளனர். ஆதி மனிதன் விலங்குகளை வேட்டை ஆடுவதற்காகத் துவக்கத்தில் கூர்மையான கற்களைப் பயன்படுத்தினர். பின்னர் கற்களை கூர்மைப்படுத்திப் பயன்படுத்தினர். கிடைத்த கூர்மையான கல்லை வேட்டைக்குப் பயன்படுத்துவது என்பது ஒரு சிந்தனை ரீதியான வளர்ச்சி எனில், கிடைத்த அனுபவத்திலிருந்து சாதாரண கல்லை கூர்மைப்படுத்தலாம் என்று எண்ணுவதும், அதை கூர்மைப்படுத்த முயற்சிப்பதும் அடுத்தடுத்த வளர்ச்சிப்போக்காகும். இதன் முன்னேறிய கண்டுபிடிப்புக்களையே தொழில்நுட்பம் என்கிறோம். அடிப்படையில், எல்லா கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்ப வளர்ச்சிகளும், மனித தேவைகளுக்கான பொருள் உற்பத்தியில் மனித உழைப்பைக் குறைப்பதற்கானதாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், அந்த கண்டுபிடிப்புகளின் வாயிலாக, பொருளுற்பத்திக்கு செலுத்தப்படவேண்டிய உழைப்புச் சக்தி குறைந்தபோதும், ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களின் உழைப்பு நேரத்தை நீட்டித்துள்ளனரே தவிர குறைத்திடவில்லை. இக்கண்ணோட்டத்தை அடிப்படையாகக் கொண்டு, தற்போதைய தகவல் தொழில்நுட்ப காலத்தில் செயற்கை நுண்ணறிவு எனும் தொழில்நுட்ப வளர்ச்சி உழைக்கும் மக்கள் மீது செலுத்தியுள்ள தாக்கத்தை மார்க்சிய அடிப்படையில் விளக்கிடும் சிறு முயற்சியே இக்கட்டுரையாகும்.

செயற்கை நுண்ணறிவு

“நீங்கள் சொல்வதை கேட்பதற்காகவே நான் எப்போதும் உங்களுக்காக இங்கே இருக்கிறேன். உங்கள் மனத்தில் உள்ளதை அறிய விரும்புகிறேன்” இது ஏதோ காதல் வசனம் என்று நினைத்திட வேண்டாம். எனது தொலைக்காட்சியில் யூ டியூபில் (You Tube) ஒரு பாடலை தேடுவதற்காக கூகுள் குரல்வழி தேடல் (Google Voice Search) மூலம் முயன்றேன். எனது குரல் அதற்குப் பிடிபடவில்லை. என்னை மீண்டும் பேசச் சொல்வதற்காக அது எனக்கு அளித்த பதில்தான் நான் துவக்கத்தில் கூறிய வரிகள். இது செயற்கை நுண்ணறிவின் சிறு உதாரணம்தான்.

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) AI என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவு என்பது முக்கிய மைல்கல்லாகும். இதன் அடுத்தடுத்த வளர்ச்சியாக Chat Generative Pre-training Transformer (ChatGPT) என முன்னேறிச் செல்கிறது. மனித மனத்தைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் தொழில்நுட்ப முறை என்றும் இதை விளக்கலாம்.

பொதுவாக, இயந்திரங்கள் நாம் கொடுக்கும் தகவல்களைகொண்டு ஒரு குறிப்பிட்ட செயலை ஓரே மாதிரி செய்யக்கூடியவையாகும். மனிதர்கள்தான் தகவல்கள், அனுபவங்கள், முந்தைய பதிவுகள் என்பதை மனத்தில் கொண்டு சூழலுக்கு ஏற்றவகையில் தங்களின் நுண்ணறிவைப் பயன்படுத்திச் செயலாற்றுவர். மனிதனைப் போலவே அறிவாற்றலுடன் சிந்திக்கும் வகையில், ஒரு மென்பொருளைக் கொண்டு இயந்திரத்தை செயலாற்ற வைப்பதன் வடிவமே, இந்த செயற்கை நுண்ணறிவு எனலாம். செயற்கை நுண்ணறிவு, மனிதர்களின் நுண்ணறிவையும், அவர்களின் புலன்களையும் பின்பற்றுவதோடு, காட்சியை உணர்வது, பேச்சை அங்கீகரிப்பது, முகத்தை அங்கீகரிப்பது, பரிசீலிப்பது, முடிவெடுப்பது என அதன் உள்ளடக்கம் நீள்கிறது.

செயற்கை நுண்ணறிவு என்பதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி என நம்மை சுற்றியே பல இடங்களில் உள்ளது. நாம் பேசும் வார்த்தைகளைக் கொண்டு முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அதுகுறித்த விளம்பரங்கள் வருவதும், ஜிபிஎஸ் மூலம் நாம் எங்கிருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவதும், நாம் செல்ல வேண்டிய வழியை அறிவதும், தட்டச்சு செய்யாமல் நாம் பேசுவதை அப்படியே எழுத்தாக மாற்றுவதும் (Voice Typing) அங்கீகரிப்பதும், செயற்கை நுண்ணறிவின் எளிய வடிவங்களே.

மருத்துவம், வங்கி, விவசாயம், என பல்வேறு துறைகளில் மிகப்பெரிய அளவில் செயற்கை நுண்ணறிவு செல்வாக்கு செலுத்த துவங்கிவிட்டது. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அமெரிக்காவின் கொலம்பியா மாகாணத்தில் செயற்கை நுண்ணறிவின் முன்னேறிய வடிவமாக உள்ள ChatGPT ஐ கொண்டு தீர்ப்பின் ஆணையை தயாரித்துள்ளனர். நீதிபதிகள் இருந்த போதிலும் தீர்ப்பின் ஆணையை ChatGPT கொண்டு தயாரித்துள்ளனர். ஆணையைத் தயாரிப்பதற்கான நேரம் வெகுவாக குறைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். நோய்களைக் கண்டறிவதைச் செயற்கை நுண்ணறிவு எளிமைப்படுத்தியுள்ளதாகவும், நோய்களுக்கான தீர்வுகளையும் அவை வழங்குவதாகவும், மேற்பார்வையின்றி நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளக்கூட இதைப் பயன்படுத்தமுடியும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி

“நவீன தொழில்துறை உலகச் சந்தையை நிறுவியுள்ளது. வர்த்தகத்துக்கும், கப்பல் போக்குவரத்துக்கும், தரைவழி தகவல் தொடர்புக்கும் அளப்பெரும் வளர்ச்சியை அளித்தது. இந்த வளர்ச்சி தன் பங்குக்குத் தொழில் துறையின் விரிவாக்கத்திற்கு வித்திட்டது. தொழில்துறை, வர்த்தகம், கப்பல் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை எந்த அளவுக்கு விரிவடைந்ததோ, அதே அளவுக்கு முதலாளித்துவ வர்க்கமும் வளர்ச்சியடைந்தது.

இவ்வாறு, நவீன முதலாளித்துவ வர்க்கம் என்பதே நீண்டதொரு வளர்ச்சிப் போக்கின் உடன்விளைவு – உற்பத்தி முறைகளிலும் பரிவர்த்தனை முறைகளிலும் தொடர்ச்சியாக நிகழ்ந்த புரட்சிகளின் உடன்விளைவு” என்று கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சும் எங்கெல்சும் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அதுசார்ந்த உற்பத்தி உறவுகளில் ஏற்படுகிற மாற்றங்களும் சமூகத்தை அடுத்தடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்கின்றன. குறிப்பிட்ட சமூக நிலையின் வளர்ச்சி என்பது பொருளாயத உற்பத்தியை உயர்த்துவதற்கான செயல்பாட்டுடன் தொடர்புடையதாகும். எல்லா அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியும் அதனுடன் இணைந்துள்ளன. “மனித உழைப்பு அடைந்துள்ள வளர்ச்சி நிலைக்கான அளவுகோலை உழைப்புச் சாதனங்கள் வழங்குகின்றன.” என்கிறார் மார்க்ஸ்.

பொருளாதாரமும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவையாகும். பொருளாதாரம் வளரும்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் அது வளர்ச்சியை ஊக்குவிக்கும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களில் ஏற்படும் இந்த வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று ஜே.டி.பெர்னால் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில்தான், நவீனத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொழில்நுட்பவியலும் அமைப்பு வடிவங்களும் வானத்திலிருந்து குதிக்கவில்லை. சமூக உறவுகளிலிருந்தும், அன்றாட வாழ்க்கை அல்லது உழைப்பு நிகழ்முறையின் நடைமுறைத் தேவைகளின் எதிர்வினையாகவும், அவை உருவாகின்றன” என்ற டேவிட் ஹோர்வியின் வார்த்தைகள் மேலும் இதை அர்த்தப்படுத்துகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சியும் முதலாளித்துவ கணக்கும்

2030க்குள் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சந்தை சுமார் 121.5 பில்லியன் டாலர் வரை விரிவடையக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவிற்கு விரிவடைய உள்ள சந்தையில் தொழிலாளரைச் சுரண்டாமல் லாபம் இருக்குமா? அதை செய்யாமல் முதலாளித்துவத்தால் வாழ முடியுமா? “தனது சுற்றோட்ட விதிகளுடன் மேலும் ஒத்திசைவாக உள்ள ஒரு தொழில்நுட்பவியல் அடிப்படையை முதலாளித்துவம் கண்டு பிடித்தது.” அப்படியான அடிப்படையில் தற்போதைய கண்டுபிடிப்பே செயற்கை நுண்ணறிவுமாகும்.

புதிய தொழில்நுட்பங்கள் மூலதனத்திற்குக் கூடுதலான உழைப்பு சக்தியை பெற்று தருகிறது. குறைந்த உழைப்பு நேரத்தில் கூடுதல் உற்பத்தி, அது குறைந்த மனித சக்தியின் (குறைவான தொழிலாளர்கள்) மூலம் கூடுதல் உற்பத்தி என்பதாகவும் வடிவம் எடுக்கிறது. வேலை இழப்பு அதன் ஒரு பகுதியாக அமைகிறது. தொழில்நுட்ப வளர்ச்சி வேலையை எளிதாக்கும்போது, குறைந்த உழைப்பு சக்திதானே செலவாகும்? எனவே, கூடுதல் நேரம் உழைக்கும்படி தொழிலாளர்களை அது நிர்ப்பந்திக்கும். அவசிய உழைப்பு நேரம் என்பது தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உட்பட்டதுதான் என்கிறபோதும், கூடுதல் நேர உழைப்பு என்பது உபரி உழைப்பாகவும், அதன் மூலமாக கூடுதல் உபரி மதிப்பாகவும் முதலாளிக்கு லாபத்தைக் கூடுதலாக்குகிறது. “எந்திரங்களின் பயன்பாடும் உழைப்புப் பிரிவினையும் எந்த அளவுக்கு அதிகரிக்கின்றனவோ, அந்த அளவுக்கு வேலைப் பளுவும் அதிகரிக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதன் மூலமோ, குறிப்பிட்ட நேரத்தில் வாங்கப்படும் வேலையை கூடுதலாக்குவதன் மூலமோ, அல்லது எந்திரங்களின் வேகத்தை அதிகரிப்பதன் மூலமோ இன்னபிற வழிகளிலோ இது நடந்தேறுகிறது.” (கம்யூனிஸ்ட் அறிக்கை)

இயந்திரங்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவை தொழிலாளர்களை மூலதனத்தின் விருப்பம்போல் ஆடவேண்டிய கட்டாயத்தை அதிகரித்துள்ளது. இயந்திரங்களும் தொழில்நுட்பமும் வளர்ச்சிபெறாத காலம் வரை அனைத்து பொருளுற்பத்தி சாதனங்கள் மீதும் தொழிலாளர்கள்தான் ஆளுகை செலுத்தினர். இயந்திரங்களும் நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சியும் தற்போது தொழிலாளர்களை ஆளுகை செலுத்துகிறது. கைவினை தொழில் அல்லது ஆலைகளுக்குள் இல்லாத பணிச்சூழல் இருந்தவரை உழைப்பவர் தனக்கு ஏற்ற கால வரையறைக்கு ஏற்றபடி தனது பொருளுற்பத்தி சாதனங்களை நிறுத்தி இளைப்பாறலாம். ஆனால், தொழிற்சாலைகளில், பொருத்தப்பட்ட இயந்திரங்கள் இயங்கும் வேகத்திற்குத் தொழிலாளி தன்னை இணைத்துக்கொண்டு இயங்கவேண்டிய கட்டாயம் உருவானது. முதலாளித்துவ சமூகத்தில் “அவர் (தொழிலாளி) எந்திரத்தில் பொருத்தப்பட்ட ஒரு துணையுறுப்பாய் ஆகிவிடுகிறார்.” (கம்யூனிஸ்ட் அறிக்கை). மேலும் “தொழிலாளர் அவரது உற்பத்திப் பொருளின் சேவகராக ஆகிறார்” “உழைப்பின் உற்பத்திப் பொருளுடன் தொழிலாளருக்கு உள்ள உறவு ஒரு அந்நிய புறநிலைப் பொருளாக அவர்மீது அதிகாரத்தை செலுத்துகிறது” என்கிறார் மார்க்ஸ். (அந்நியமாக்கப்பட்ட உழைப்பு)

“இயந்திரசாதனத் தொழில்நுட்பத்தின் அறிமுகத்திற்கு பிறகு தொழிலாளர்களின் வேகமும் தொடர்ச்சியும் இயந்திர அமைப்பின் உள்ளார்ந்த தன்மையில் தீர்மானிக்கப்படுகின்றன.”

ஆதிகால மனிதனை உழைப்புதான் இன்றைய முன்னேறிய நிலைக்கு எடுத்துவந்துள்ளது. முன்னர் உழைப்பே அவர்களது பலமாகவும் அடுத்தடுத்த வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் அமைந்தது. வர்க்கங்களும் அதன் விளைவான சுரண்டலும் உருவான பிறகு, உழைப்பு என்பதன் பொருளும் மாற்றத்திற்கு ஆளாகியுள்ளது. சுரண்டலின் அளவு மேலும் மேலும் உச்சத்தைத் தொட்டுள்ள முதலாளித்துவ சமூகம், உழைப்பை விற்கும் நிலைக்கு மனிதர்களை தள்ளுகிறது. உழைப்பை அவரிடமிருந்து பிரித்து அவருக்குச் சொந்தமானதாக இல்லாமல் செய்கிறது. “அது உழைப்பை துன்பமளிப்பதாக, பலத்தைப் பலவீனமானதாக, வளமையை மலடாக” மாற்றுகிறது.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியான செயற்கை நுண்ணறிவு தொழிலாளர்கள் மீது கூடுதலான கண்காணிப்பைத் திணித்துள்ளது. இது மனிதர்களின் உழைப்பை நிர்வாகம் செய்வதோடு, அதை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுகிறது. எந்த கணினியில் யார் பணியாற்றுகிறார்கள் என்ன பணி நடந்துள்ளது, எத்தனை மணிநேரம் கணினி செயல்பாட்டில் இருந்துள்ளது, அதில் என்ன உள்ளடக்கம் உள்ளது என்பது உள்ளிட்டு எல்லாமும் கண்காணிப்பிற்கு உட்பட்டதாக மாற்றம் பெற்றுள்ளது. “வேலையில் அவர் தன்னை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை; மாறாகத் தன்னையே மறுக்கிறார். மனநிறைவு அடைவதில்லை, மாறாக மகிழ்ச்சி இழக்கிறார். தனது உடல் மற்றும் மன ஆற்றலைச் சுதந்திரமாக வளர்த்துக்கொள்வதில்லை, மாறாக அவரது உடலைச் சிதைத்துக் கொள்கிறார்; மனதை அழித்துக்கொள்கிறார். தொழிலாளர் தாம் தனது வேலைக்கு வெளியே இருப்பதாக உணர்கிறார். அவரது வேலை அவருக்கு வெளியே இருப்பதாக உணர்கிறார். அவரது உழைப்பு தன்னிச்சையானதாக இருப்பதில்லை, மாறாக வலுக்கட்டாயமானதாக இருக்கிறது. அது நிர்ப்பந்திக்கப்பட்ட உழைப்பாக இருக்கிறது.” (அந்நியமாக்கப்பட்ட உழைப்பு)

கிக் பொருளாதாரம் வளர்ந்து தொழிலாளர்களை வீதிகளின் எல்லா முனைகளுக்கும் சுழற்றி அடிக்கிறது. ஜிபிஎஸ் மூலம் யார் எங்கு உள்ளார்கள் என்பதை கண்காணிக்கிறது. குறிப்பிட்ட நேரத்திற்குள் டெலிவரி செய்ய வேண்டும், அடுத்தடுத்த டெலிவரிகளை இடைவெளியில்லாமல் செல்போனில் உள்ள மென்பொருளின் ஆணைக்கிணங்க ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். பத்து நிமிடத்தில் உங்கள் இல்லம் தேடி பொருட்கள் வந்து சேரும் என்கிற விளம்பரத்தைக் குறிப்பிட்ட நிறுவனம் கொடுக்கும்போது மற்றொரு நிறுவனம் ஒன்பது நிமிடத்தில் டெலிவரி என்று விளம்பரம் கொடுக்கிறது. இந்த விளம்பரங்கள் மூலம் லாபம் ஈட்டப்போவது என்னவோ கார்ப்பரேட் நிறுவனங்கள்தான். ஆனால், அந்த மென்பொருளின் ஆணைக்கிணங்க உயிரைப் பணயம் வைத்து வியர்வை சிந்த ஓடுவது ஒரு ஏழை தொழிலாளிதான்.

“உழைப்பு பணக்காரர்களுக்கு அருமையான பொருட்களை உற்பத்தி செய்து தருகிறது என்பது உண்மை – ஆனால், தொழிலாளருக்கு அது ஏழ்மை நிலையையே உற்பத்தி செய்கிறது.” (மார்க்ஸ் – மார்க்சின் மூலதனத்திற்கு ஒரு வழிகாட்டி, டேவிட் ஹார்வி)

புதிய உற்பத்தி நிகழ்முறை

முதலாளித்துவ சமூகத்தில் புதிய கண்டுபிடிப்புகளும் நவீன தொழில்நுட்பங்களும் உழைப்பு சக்தியின் தேவையைக் குறைக்கும். ஆனால், அது லாபத்திற்கானதாக மட்டும் இருக்கும்போது ஆட்குறைப்பு அதன் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. இச்சூழலில் பொதுவாகத் தொழிலாளர்களின் போராட்டம் இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் எதிர்த்த போராட்டமாகக் குறுகிவிடுகிறது. அது முதலாளித்துவ அமைப்பு முறையை எதிர்த்த போராட்டமாக மாற்றப்பட வேண்டும்.

 “இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கான வரம்பு, இயந்திரத்தின் மதிப்புக்கும், அதனால் நீக்கப்படும் உழைப்புச் சக்தியின் மதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டால் நிர்ணயிக்கப்படுகிறது.” உழைப்பு சக்திக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிட இயந்திரங்களுக்கான செலவு குறைவாக இருக்கும்போது அங்கு இயந்திரமயமாக்கல், தொழில்நுட்ப பயன்பாடு விரைவாகவும் கூடுதலாகவும் நிகழ்கிறது. மேலும், சந்தையில் நிலவும் போட்டி, வலுக்கட்டாயமான விதிகள் இயந்திர (நவீன தொழில்நுட்ப) பயன்பாட்டைக் கட்டாயமாக்குகிறது. அவ்வாறு இயந்திர பயன்பாட்டை அமலாக்க முடியாத முதலாளிகள் தொழிலை விட்டே விரட்டப்படும் நிலைதான் உருவாகும். எனவே, சந்தையில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ளவும், தனது உற்பத்தியை பெருக்கவும், லாபத்தைக் கூட்டிக்கொள்ளவும், முதலாளி இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் உட்கிரகித்துக்கொள்கிறார்.

“உழைப்பு நேரத்தைக் குறைப்பதற்கு மிகவும் சக்தி வாய்ந்த சாதனமாக இருக்க வேண்டிய இயந்திர சாதனம் (தொழில்நுட்பம்) எதிர்மறை இயக்கவியலை எதிர்கொள்கிறது.” உழைப்பை மேலும் வேகமாக்கி அவர்களை ஒட்ட உறிஞ்சுகிறது. புதிய தொழில்நுட்பங்களை உட்கொள்ளுவதன் மூலம் உழைப்பு நிகழ்முறையின் வேகத்தையும் மும்முரத்தையும் முதலாளித்துவம் மாற்றி அமைக்கிறது. இது மனிதனை “சுயேச்சையற்றவனாகவும் தனித்தன்மை இல்லாதவனாகவும்” மாற்றுகிறது. அவர்கள் முதலாளித்துவத்தின் புதிய உழைப்பு நிகழ்முறைக்கு ஏற்றபடி ஓடவைக்கப்படுகின்றனர். 

ஆற்றல்மிக்க செயற்கை நுண்ணறிவைப் படைத்ததும் மனிதன்தான். அந்த மனிதனையே, நீ ஆற்றல் அற்றவன்; உனது ஆற்றலைவிட செயற்கை நுண்ணறிவைக் கொண்டு நான் செயலாற்றிக்கொள்வேன் என்று குறிப்பிட்ட வேலைகளிலிருந்து தொழிலாளர்களை விரட்டுகிறது. முதலாளித்துவ சமூகத்தில் “தொழிலாளர் உற்பத்தி செய்வது அதிகரிக்க அதிகரிக்க, அவர் நுகர்வது குறைகிறது; அவர் உற்பத்தி செய்வதன் மதிப்பு அதிகரிக்க அதிகரிக்க, அவர் மதிப்புக் குறைந்தவராக, தகுதியற்றவராக ஆவது அதிகரிக்கிறது. அவரது உற்பத்திப்பொருள் உருப்பெற உருப்பெற, அவர் உருவழிப்பது அதிகரிக்கிறது. அவரது உற்பத்திப் பொருள் பண்படப் பண்பட, தொழிலாளர் பண்படையாதவராக ஆகிறார். உழைப்பு மிகவும் ஆற்றல்மிக்கதாக ஆக, ஆக உழைப்பவர் ஆற்றலற்றவராக ஆகிறார். உழைப்பு மேதமைமிக்கதாக ஆக, ஆக உழைப்பவர் மேதைமையற்றவராக ஆகிறார்.” என்கிறார் மார்க்ஸ் (அந்நியமாக்கப்பட்ட உழைப்பு)

தொழில்நுட்பங்களின் சமூக தாக்கம்

இரவு பகல் பாராமல் உழைக்க நிர்ப்பந்திக்கப்படுவது, பத்து மணிநேரம் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாக வேலைநேரத்தை மாற்றுவது நிகழ்கிறது. ஊழியர்களுக்கு இணைய வசதியுடன் மடிக் கணினி வழங்கப்படுகிறது என்கிறபோது, எந்த நேரமும் உழைக்கத் தயாராகுங்கள் என்பதன் அர்த்தம் அதில் உள்ளது என்பதை உணரவேண்டும். குறைந்த கட்டணத்தில் இணையம், இலவச இணையம் என்பதெல்லாம் ஆன்லைன் வர்த்தகத்தின் சூட்சுமமும் நம்மைப் பின்தொடர்ந்து நிகழவுள்ள வலைப் பின்னலையும் உள்ளடக்கியதாகும். இணையமும் செயற்கை நுண்ணறிவும் ஏதோ பொருளாதார தளத்தில் மட்டும் தனது தாக்கத்தை செலுத்துவதில்லை; மாறாக, சமூகத்தின் அனைத்து தளத்திலும் அதன் தாக்கம் வெளிப்படுகிறது.

“மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள முனைப்பான உறவையும் அவன் வாழ்வதற்கு வகை செய்யும் நேரடியான பொருளுற்பத்தி நிகழ்முறையும் தொழில்நுட்பவியல் வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் அது அவனது வாழ்க்கையின் சமூக உறவுகளும் அந்த உறவுகளிலிருந்து ஊற்றெடுக்கின்ற கருத்துருவங்களும் வடிவமைப்பையும் முறையையும் புலப்படச் செய்கிறது” என்கிற மார்க்சின் வரிகளைக் குறிப்பிடும் டேவிட் ஹார்வி, மேலும் அதை கீழ்காணும் வகையில் விளக்குகிறார். “இங்கே ஒரு வாக்கியத்தில் அடையாளங் காணக்கூடிய ஆறு கோட்பாட்டுக் கூறுகளை மார்க்ஸ் இணைக்கிறார். முதலில் தொழில்நுட்பவியல், பிறகு இயற்கையுடனான உறவு, பிறகு மெய்யான உற்பத்தி நிகழ்முறை, அடுத்து ஒரு நிழல் வடிவத்தின் அன்றாட வாழ்வின் உற்பத்தி மற்றும் மறுவுற்பத்தி, அதை தொடர்ந்து சமூக உறவுகளும் மன அளவிலான கருத்துருவாக்கங்களுமாகும். இந்த கூறுகள் எல்லாம் ஆடாமல் அசையாமல் அப்படியே இருப்பதில்லை. மனிதகுல வரலாற்றின் பரிணாம வளர்ச்சிக்கு வழிகாட்டும் உற்பத்தி நிகழ்முறையுடன் இணைக்கப்பட்டு இயங்கிக் கொண்டே இருக்கின்றன.”

பித்துப்பிடித்தவர்கள் போல் குழந்தைகள் மாயையான எதிரிகளுடன் ஸ்மார்ட் போன், கணினிகளில் விளையாடுவதும், அதுவே சில குழந்தைகளை மனநல பாதிப்பிற்குத் தள்ளுவதும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம்தானே? கூடுதல் வேலை நேரம் குடும்ப உறவுமுறையைப் பாதிக்கிறதல்லவா? மறுவுற்பத்தி என்பது நிபந்தனைக்கு உட்பட்டதாக மாறுவது அதன் தாக்கம்தானே? குறுகிய பார்வையை அதிகப்படுத்துவதோடு, மன அழுத்தம் வீட்டிலும் உடனிருப்பவர்களிடமும் வெடிக்கிறது. மனிதர்களின் சிந்தனை ஓட்டம் தனித்துவிடப்பட்டதாகவும், முடங்கிப்போனதாகவும் மாற்றப்படுகிறதே? முகநூல், டிவிட்டர் என உலகம் முழுமையும் கைக்குள் அடக்கமானதாக மாறியதாக கூறப்பட்டாலும், சமூகத்தில் நிகழும் அநீதிகளுக்கு எதிரான குரல்கூட, இரண்டு வரி முகநூல், டிவிட்டர் பதிவோடு கரைந்துவிடுகிறதே! முதலாளித்துவ சமூகத்தின் நிலைபோலவே தனிநபர்களை, தங்களையே முன்னிலைப் படுத்திக்கொள்ளும் வகையிலான ஸ்டேட்டஸ், டீ.பி, லைக், சொந்த அடையாளங்களை வெளிப்படுத்துதல் என்பவையே முன்னுரிமை பெறுகிறது. தங்களுக்காக பரிந்துரைக்கப்பட்டவை, விளம்பரம் எனக் கருத்துக்கள் திணிக்கப்படுவது என இது நீளும். இவற்றை எதிர்கொள்ளாமல் போனால் நாளைய உழைப்பு சக்தி கேள்விக்கு உள்ளாகிவிடும் என்கிற அச்சம் முதலாளித்துவத்துக்கு எழுந்துள்ளதன் விளைவாக சில நடவடிக்கைகளை அது எடுக்க முனைந்துள்ளது. ஆனபோதும் இயல்பிலேயே மனிதத்தன்மை அற்றதாக இருக்கும் முதலாளித்துவம் அதை எதிர்கொள்வதற்கான திராணி துளியும் இல்லாமல் திணறுகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் கடமை

அதேநேரம் செயற்கை நுண்ணறிவு ஆற்றல் மிக்க கண்டுபிடிப்பாக உள்ளது. மனித ஆற்றலை மிஞ்சிவிடக்கூடும் என்கின்ற அளவிற்கு விவாதிக்கப்படுகிறது. ஆனால் மனிதத் தலையீடு இல்லாமல் அதனால் ஒரு கட்டத்திற்குமேல் போக முடியாது என்பதே எதார்த்தம். உணர்வுப்பூர்வமான அணுகுமுறையோ, சற்று விலகி நின்று பார்க்கும் தனித்த பார்வையோ, புதியவகையான சிந்தனாபூர்வமான அணுகுமுறையோ இதில் சாத்தியமில்லை. அதேநேரம் மிகுந்த ஆற்றல் மிக்கதாகவும், நேரத்தை மிச்சமாக்குவதாகவும், நினைவுகளாக பதிவு செய்தவற்றை அலசி ஆராய்ந்து பல தரவுகளை அள்ளித் தரவும் இதனால் முடிகிறது. இந்த ஆற்றல்கள் மனித சமூகத்திற்குச் சரியான முறையில் பயன்படுத்தப்படவேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சியை அதில் உள்ள குறைபாடுகளை கொண்டு ஒதுக்கிவிட முடியாது. அதை மேம்படுத்துவது அதன் நோக்கத்தையும் பயன்பாட்டையும் மாற்றியமைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட எந்த வளர்ச்சிப்போக்கையும் கண்டு அஞ்ச வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவால் மனித உழைப்பு குறையும்போது வேலை நீக்கம் செய்யும் முதலாளித்துவ நடைமுறைகளைக் கேள்வி எழுப்புவது, தொழிலாளர் நலனை பாதுகாக்க வலியுறுத்துவது, வேலை நேரத்தைக் குறைக்க வலியுறுத்துவது, குழந்தை வளர்ப்பு, வீட்டு வேலை உள்ளிட்டவற்றைப் பொருளாதார நடவடிக்கையாக அங்கீகரிப்பது, மனித சமூகத்தின் மகிழ்ச்சியை முதன்மைப்படுத்திச் செயலாற்றக் கோருவது என புதிய சூழலுக்கேற்ப புதிய கோரிக்கைகளை முன்னெடுப்பதும் அவசியமாகிறது.

முதலாளித்துவ அமைப்புமுறையின் கீழ் “மூலதனத்தைப் பெருக்குவதற்காக மட்டுமே தொழிலாளி வாழ்கிறார். ஆளும் வர்க்கத்தின் நலனுக்குத் தேவைப்படும்வரை மட்டுமே தொழிலாளி வாழ அனுமதிக்கப்படுகிறார்” என்பதே எதார்த்தமாகும். 

கம்யூனிஸ்ட் அறிக்கை தெளிவாகக் குறிப்பிடுவதுபோல் “முதலாளித்துவ சமுதாயத்தில், உயிருள்ள உழைப்பு (தற்காலத்தில் தொழிலாளி செலுத்தும் உழைப்பு) என்பது திரட்டி வைக்கப்பட்டுள்ள உழைப்பைப் பெருக்குவதற்கான ஒரு சாதனம் மட்டுமே. (செயற்கை நுண்ணறிவும் அவ்வாறானதே) கம்யூனிச சமுதாயத்தில் திரட்டி வைக்கப்பட்டுள்ள உழைப்பு என்பது தொழிலாளியின் வாழ்க்கையை விரிவாக்கவும் வளமாக்கவும் மேம்படுத்தவுமான ஒரு சாதனமாகும்”

முதலாளித்துவம்தான் தொழில்நுட்பத்தை மனித சமூகத்திற்கு ஆபத்தானதாக மாற்றுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாய் கிடைக்கும் பலன்கள் சிலரின் கைகளில் குவிவதைத் தடுத்து அனைவருக்குமானதாக பகிர்ந்தளிக்க வகைசெய்வதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை ஆபத்தானதாக அல்லாமல் ஆக்கப்பூர்வமானதாக ஆக்கும். அதை நிறைவேற்றுவதே தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய கடமையாகவுள்ளது.

Advertisement


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: