மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கார்ல் மார்க்சின் இறுதி ஆண்டுகள்


கார்ல் மார்க்சுக்கு நல்ல ஆறுதலளித்து வந்த கார்ல்ஸ்பாத் வெந்நீர் ஊற்றுச் சிகிச்சையை ஜெர்மானிய சோசலிசத் தொழிலாளர் இயக்கத்துக்கு எதிராக பிஸ்மார்க் கொண்டு வந்த சட்டங்கள் தடுத்தன. 1878இலிருந்தே அவரது உடல் துன்பம் அதிகமாகி அவரது பணியையும் பெருமளவிற்குப் பாதித்தது. ஆனால் நோய்க்கும், வலிக்கும் விட்டுக் கொடுக்கும் மனிதரல்ல அவர். அந்த வகையில் அவர் இறுதி வரை தன் உடலோடு போராடிக் கொண்டேயிருந்தார்.

உடல்நிலையில் ஓரளவிற்கு முன்னேற்றம் ஏற்பட்ட உடனேயே அவர் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தார். தனது வலிமை அனைத்தையும் திரட்டிக் கொண்டு, மூலதனத்தின் இரண்டாவது தொகுதியை பதிப்புக்கு அனுப்ப தயாரிப்புகளைத் தொடர்ந்தார். எனினும் தாங்க முடியாத தலைவலி, சித்ரவதை செய்த இருமல், நரம்பு அழற்சி, உடல் பலவீனம் ஆகியவற்றின் தொடர்த்தாக்குதல்கள் அவரது முயற்சிகளை மீண்டும் மீண்டும் தகர்த்து வந்தன. இவை சத்தமில்லாத, எனினும் வீரமிக்க போராட்டம் நிறைந்த ஆண்டுகளாகவே இருந்தன. பின்னர் ஒருமுறை எங்கெல்ஸ் குறிப்பிட்டது போல, அந்தக் காலத்தில் மார்க்சின் தயாரிப்புக் குறிப்புகள், சோர்வடையச் செய்த உடல் துயரத்துக்கெதிரான அவரது கடும்போராட்டத்திற்கான சான்றுகளாகவே இருந்தன. தனது இரும்பு உறுதியைத் தாண்டி, மார்க்ஸால் மூலதனத்தின் இரண்டாவது, மூன்றாவது புத்தகங்களை பதிப்பிப்பதற்கான தயாரிப்புகளைச் செய்ய முடியவில்லை.

ஜென்னியின் கடைசி வருடம்

தனது மனைவி எதிர்நோக்கிய நோயினால் ஏற்பட்ட துன்பம் அவருடைய துன்பத்தைவிட மார்க்சை மிகவும் சித்ரவதை செய்தது. நீண்ட காலமாகவே இறுதிப்படுத்த முடியாதிருந்த நோய், பின்னர் குணப்படுத்த இயலாத குடல் புற்றாக இருக்கலாம் என்று கண்டறியப்படது. ஜென்னி தனது கடுமையான வலியை ஆச்சரியமூட்டும் பொறுமையுடன் எதிர்கொண்டார், எனினும் அவர் தனது உற்சாகத்தை மட்டும் விடவேயில்லை. வலியால் அவதியுற்றாலும் கூட, துணிச்சலை விடாத அவர் அச்சமயத்தில் ஒரு மருத்துவருக்கு எழுதியிருந்தார்: “நான் கையில் கிடைக்கும் ஒவ்வொரு சுள்ளியையும் பற்றிக் கொள்கிறேன். என் அருமை மருத்துவரே, நான் இன்னும் அதிக காலம் வாழ விரும்புகிறேன். இது குறிப்பிடத்தக்க ஒன்றுதான்: ஒருவரின் கதை முடிவுக்கு வரும் நேரம் நெருங்கி வர, வர, அவர் ‘கண்ணீரின் பூவுலக மதிப்புக்காக’ மேலும், மேலும் ஏங்குகிறார்.”

ஜென்னி மார்க்ஸ் தனது வாழ்க்கையின் இறுதிஆண்டுகளில் பல்வேறுநாடுகளில் செயல்பட்டு வந்த தொழிலாளர் இயக்கங்களின் ஒவ்வொரு முன்னேற்றத்தையும் ஆர்வத்துடன் கவனித்து வந்தார். 1880இன் இறுதியில் தமது வீட்டுக்கு வந்த ஆகஸ்ட் பேபலை வரவேற்பதில் அவரும், மார்க்சும் மிகவும் மகிழ்ச்சியுற்றனனர். லண்டனில் இருந்த இரண்டு “வயதான மனிதர்களிடம்” ஜெர்மன் கட்சியின் உள்நிலைமை, பொதுமக்களின் எண்ணப்போக்குகள் ஆகியவை குறித்து தகவல் தெரிவிக்கவே பேபல் அந்தப் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.. மார்க்ஸ் தம்பதிகளிடம் அவர் கட்சியின் உத்திகள் பற்றி விவாதித்ததுடன், சோஷியல்டெமாக்ரட் இதழுக்கு எழுதுவதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் அவர் அப்போது போட்டார். மார்க்ஸ், அவரது மனைவி ஜென்னி, எங்கெல்ஸ் ஆகிய மூவரும் நீண்டகாலமாகக் கடிதங்கள் மூலமாகவே தாங்கள் அறிந்திருந்த மக்களுடன் மிகநெருக்கமாக இருந்த ஜெர்மனி தொழிலாளர் வர்க்கத்தின் இந்த ஊக்கம் நிரம்பிய, அறிவார்ந்த தலைவர் மீது மிகுந்த தாக்கம் கொண்டனர்.. மார்க்ஸ் உடனடியாக அவரை மிகவும் சகோதர பாசத்துடன் “து”(அதிகாரபூர்வமற்றமுறையில் அழைப்பது. ஒருமை என்றும் கொள்ளலாம்) என்று விளித்தார். மார்க்சின் வீட்டுக்குத் தான் சென்றது குறித்து முப்பதாண்டுகளுக்குப் பிறகு பேசும்போது கூட பேபல் அதனை மிகுந்த நெகிழ்ச்சியுடன் இதைக் குறிப்பிட்டார்:

“நாங்கள் லண்டனில் கழித்த அந்த ஒரே ஞாயிற்றுக்கிழமையன்று, எல்லோரும் மார்க்சின் மேசைக்கு அழைக்கப்பட்டோம். நான் ஏற்கனவே திருமதி ஜென்னி மார்க்சுடன் அறிமுகமாகி விட்டேன். அவர் எனது பெருமதிப்பை உடனடி யாகப் பெற்றுவிட்ட, தனித்துவம் மிக்க ஒரு பெண்மணி. தனது விருந்தினர்களை எப்படி உற்சாகமாகவும், அன்புடனும் உபசரிப்பது என்பதை அவர் நன்கு அறிந்தவர். அந்த ஞாயிறன்று, தனது குழந்தைகளுடன் அங்கு வந்திருந்த, ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லாங்கெட்-ஐ மணம் புரிந்து கொண்டிருந்த ஜென்னியின் மூத்த மகளையும் சந்தித்தேன். அந்தக் காலத்தில் மனித குலத்தின் எதிரி என எங்கும் கண்டனம் செய்யப்பட்டு வந்த மார்க்ஸ் தனது பேரக் குழந்தைகளுடன் அவ்வளவு மென்மையாகவும், அன்புடனும் விளையாடிக்கொண்டிருந்தார், அந்தக் குழந்தைகள் தமது தாத்தாவை எவ்வளவு நேசித்தனர் என்பதைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். மூத்த மகள் ஜென்னியைத் தவிர அவரது இரண்டு இளைய பெண்களான டுஸ்ஸி என்று அழைக்கப்பட்ட எலியனார் (இவர் பின்னாளில் ஏவ்லிங்கின் மனைவி ஆனார்), பால் லஃபார்கின் மனைவியான லாரா ஆகியோரும் அங்கு இருந்தனர். கருத்த விழிகளைக் கொண்டிருந்த டுஸ்ஸி தனது தந்தையைப் போலவும், கருவிழிகளுடனும், சற்றே பொன்னிறக் கூந்தலுடன் இருந்த லாரா தனது தாயைப் போல வும் விளங்கினர். இருவருமே அழகாகவும், உற்சாகம் நிரம்பியவர்களாகவும் இருந்தனர்.”

அடுத்த நாள் பேபல் விடைபெற வந்தபோது, மார்க்சின் மனைவி மீண்டும் வலியில் துடித்தபடி படுக்கையில் இருந்தார். அவை மிகவும் கொடுமையான மாதங்களாகவே அவருக்கு இருந்தன. மார்க்ஸ் தனது மனைவியை விட்டு விலகாமல் அருகிலேயே இருந்தார். அவருக்கு மகிழ்ச்சியூட்டும் நோக்கத்துடன், மூத்தபெண்ணையும், அவரது குழந்தைகளையும் பார்ப்பதற்காக 1881 ஜூலை, ஆகஸ்டில் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்ல ஒரு பயணத்தையும் ஏற்பாடு செய்தார். மீண்டும் அவர்கள் லண்டனுக்குத் திரும்பியபோது ஜென்னி மிகவும் களைத்துப் போயிருந்தார்.

மார்க்சுக்கு நிகழ்ந்த மிகக் கசப்பான அடி

மனைவியின் உடல்நிலை குறித்த பதற்றத்தாலும், தூக்கமின்மையாலும் முற்றிலும் சோர்ந்து போன மார்க்ஸ் 1881 இலையுதிர் காலத்தில் கடும் நிமோனியாவால் தாக்கப்பட்டார். எலியனோர், லெச்சென் டெமுக் ஆகியோரின் தன்னலமற்ற பணிவிடையின் காரணமாகவே அவர் மீண்டார். ஜென்னியும், மார்க்சும் சேர்ந்து வாழ்ந்த கடைசி நாட்களைப் பற்றி எழுதிய எலியனோர், “என் அன்னையின் அறைக்குச் செல்லப் போதிய பலத்தை அவர் பெற்ற காலை நேரத்தை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது” என்று குறிப்பிடுகிறார். “அந்த நேரத்தில் அவர்கள் மீண்டும் இளைஞர்களாக ஆனார்கள். புதியதொரு வாழ்க்கையைத் தொடங்கப் போகும் தம்பதியாக, அவள் அன்பான ஓர் இளம் பெண்ணாகவும், அவர் காதல்வயப்பட்ட ஓர் இளைஞனாகவும் அப்போது தோன்றினர். நோயால் தகர்ந்துபோன ஒரு முதியவராகவோ, மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு முதிய பெண்மணியாகவும், நிரந்தரமாக ஒருவருக்கொருவர் விடைபெறப் போகின்றவர்களாக அவர்கள் இருவரும் அப்போது இல்லை.”

ஜென்னி அனுபவிப்பதற்கு இன்னும் சில மகிழ்ச்சியான தருணங்கள் மீதமிருந்தன. மூலதனத்தின் மூன்றாவது பதிப்பு தேவைப்படுவதாக ஜெர்மனியிலிருந்து ஒரு செய்தி வந்தது. இங்கிலாந்திலிருந்து முதன்முறையாக மார்க்சை குறிப்பிடத்தக்க ஒரு விஞ்ஞானி எனவும், சோசலிச சிந்தனையாளர் என்றும் பாராட்டி ஒரு முன்னணிப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அக்டோபர் இறுதியில் வென்றெடுத்த ஒரு தேர்தல் வெற்றியின் மூலமாக, நெருக்கடிநிலைச் சட்டங்களைத் தாண்டி தான் போராடுவதையும், மார்க்சின் படிப்பினைகளால் அதிகமான அளவில் தாக்கம் பெற்று வருவதையும் ஜெர்மானியத் தொழிலாளர் இயக்கம் வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.

எங்கெல்சின் பாராட்டு

1881 டிசம்பர் 2 அன்று ஜென்னி காலமானார். மார்க்ஸ் தாங்க வேண்டியிருந்த மிகவும் கசப்பான தாக்குதல் அது. தனது அன்பிற்குரிய மனைவியின் இளைப்பாறும் இடத்துக்குக்கூட அவரால் உடனே செல்ல முடியவில்லை. அவரது பலவீனமான உடல்நிலை காரணமாக, ஹைகேட் கல்லறைக்குச் செல்லும் ஜென்னியின் இறுதி யாத்திரையில் பங்கேற்க மருத்துவர்கள் மார்க்ஸை அனுமதிக்கவில்லை. கல்லறையில் ஜென்னியின் இறுதி நிகழ்ச்சியில் அஞ்சலை உரை நிகழ்த்திய எங்கெல்ஸ், கணவர் மீதும், குடும்பத்தினர், தோழர்கள் மீதும் ஜென்னி வைத்திருந்த பாசம் குறித்தும், சர்வதேசத் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தின் மீதான அவரது விசுவாசம் குறித்தும் சுட்டிக் காட்டினார். பின்வரும் வார்த்தைகளுடன் அவர் தன் உரையை நிறைவு செய்தார்:

“இவ்வளவு கூர்மையான, விமர்சனப் புரிதலுள்ள ஒரு பெண்மணி, இவ்வளவு பாசமும் ஊக்கமும் உடையவர், இவ்வளவு பெரும் அர்ப்பணிப்புத்திறன் கொண்ட ஒருவர் – புரட்சிகர இயக்கத்துக்குச் செய்த பங்களிப்புகள் குறித்து ஒருபோதும் வெளிப்பார்வைக்குத் தென்பட்டதில்லை; எந்தப் பத்திரிகையும் அதை வெளியிட்டதுமில்லை. அவருடன் வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே அவர் செய்தது தெரியும்.

அவரது தனிப்பட்ட குணநலன்கள் குறித்து நான் பேசவேண்டியதில்லை. அவரது நண்பர்களுக்கு அவற்றைக் குறித்து தெரியும், அவர்கள் அதை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். மற்றவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில் ஒரு பெண் தனது சொந்த மகிழ்ச்சியைக் கண்டிருப்பார் என்றால், அது இந்தப் பெண்தான்.”

தனது மனைவியின் மரணத்திலிருந்து கார்ல் மார்க்சால் விடுபடவே முடியவில்லை. “மூர்-உம் (மார்க்ஸின் நண்பர்கள் அவரை மூர் என்றே அழைப்பார்கள்) இறந்துவிட்டார்” என்று ஜென்னி இறந்த அந்த நாளில் எங்கெல்ஸ் உண்மையாகவே குறிப்பிட்டார். எனினும் வாழவேண்டும் என்ற உறுதி அவருக்குள் மீண்டும் எழுந்தது. அவரை செயலின்மைக்குத் தள்ளிய அந்தத் துன்பமிக்க நோயை வெல்ல அவர் உறுதியோடு இருந்தார். “நான் மீண்டு எழுவதற்கு சிறிது காலத்தை இழக்க வேண்டியுள்ளது என்பது துரதிர்ஷ்டம்தான்” என்று அமெரிக்காவிலிருந்த நண்பர் சோர்கேவுக்கு அவர் கடிதம் எழுதினார்.

அல்ஜீரியப் பயணம்

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நல்ல பருவநிலை நிலவிய இடங்களில் அடுத்த சில மாதங்களைக் கழித்து தன்னை மீட்டுக்கொள்ள அவர் முயன்றார். வைட் தீவின் வெண்ட்னோருக்கு அவர் முதலில் சென்றார். 1882 வசந்த காலத்தில் அவர் அல்ஜியர்சுக்குச் சென்றார். ஆனால் ஜென்னி இல்லாத மனவலி அவரை எங்கும் பின்தொடர்ந்தது. அத்தருணத்தில் அவர் எங்கெல்சுக்கு நெகிழ்ச்சியுடன் எழுதினார்,

“நடைமுறையில் சோக உணர்வுக்கு எதிராக மிகச்சில மனிதர்களே இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனினும், எனது சிந்தனைகளின் பெரும்பகுதி என் மனைவியின் நினைவுகளாலேயே நிரம்பியுள்ளது என்பதை நான் ஏற்கவில்லையெனில் அது பொய்யாகவே இருக்கும். அவள் எனது வாழ்வின் மிகச்சிறந்த ஒரு பகுதி.”

எனினும், மிகவும் நோயுற்றிருந்த போதும் இந்த வாரங்களில் கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள் வதற்கு அவர் பயன்படுத்திக் கொண்டார். அல்ஜியர்சில் தனது மருமகனின் நண்பரான லாங்கெட்டை அவர் சந்தித்தார். லாங்கெட் அரபு மக்கள் அவதிப்பட்ட காலனிய ஒடுக்குமுறையின் நாகரீகமான, கொடூரமான வடிவங்களைப் பற்றிய பல முக்கியமான விவரங்களை மார்க்சுக்கு எடுத்துரைத்தார். அதேபோன்ற கவனத்துடன் அவர் ஐரோப்பியத் தொழிலாளர்கள் பற்றிய செய்திகளைத் தெரிந்துகொண்டு, கடிதங்கள் வாயிலாக எங்கெல்சுடன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வந்தார்.

அல்ஜீரியப் பயணம் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தெற்கு பிரான்சில் தங்கியதும் எந்தவித முன்னேற்றத்தையும் தரவில்லை. பின்னர் தனது மூத்த மகள் ஜென்னியை பாரிசின் அருகில் பார்க்கச் சென்றதும், பின் கோடையில் சுவிட்சர்லாந்துக்குச் சென்றதும்தான் அவருக்கு சற்று மெலிதான ஆறுதலை வழங்கியது. இதற்கிடையில் பேபலின் மரணம் அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. அவர் எங்கெல்சுக்கு எழுதினார்:

“இது நமது கட்சிக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஜெர்மானிய (ஐரோப்பிய என்றும் குறிப்பிடலாம்) தொழிலாளி வர்க்கத் தில் தனித்துவமிக்க தலைவர் அவர்.”

அதிர்ஷ்டவசமாக, விரைவில் அந்தச் செய்தி பொய் என்று தெரிய வந்தது.

மூத்த மகளின் மரணம்

அக்டோபரில் மார்க்ஸ் சற்று வலுவான உடல்நிலையுடன் இங்கிலாந்து திரும்பினார். அவர் மூலதனம் நூலின் இதர தொகுதிகளுக்கான தனது பணியை மீண்டும் துவக்கவும், (ஜெர்மன்) கட்சிப் பத்திரிகையான “தெ சோசியல் டெமாக்ரட்”டுக்குக் கட்டுரைகள் எழுதவும் ஏற்கனவே சிந்தித்துக் கொண்டிருந்தார். எனினும் அவரது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றம் தற்காலிகமானதாகவே இருந்தது. நவம்பர் மாதத்தில் லண்டனின் பனியிலிருந்து தப்பிக்க அவர் வெண்ட்னாருக்குச் சென்றார். ஆனால் அங்கும்கூட பனிக்காலத்தின் குளிரும், ஈரமும், அவரது உடல் நிலைக்கும் மேலும் துன்பத்தை ஏற்படுத்தின. அது இன்னும் மோசமாகும் வகையில், அவரது மூத்த மகள் ஜென்னியின் மரணச் செய்தி வந்து சேர்ந்தது; இந்தச் சோகச் செய்தியை அவரிடம் கொண்டு வந்த எலியனார் எழுதினார்:

“வாழ்வில் எனக்கு பல சோகமான தருணங்கள் இருந்துள்ளன, ஆனால் அவை எதுவும் இவ்வளவு சோகமயமானதாக இருந்ததில்லை.” தன் தந்தைக்கு ஜென்னியின் மரணம் எத்தகைய துயரத்தை ஏற்படுத்தும் என்பதும் அவருக்குத் தெரியும். “என் தந்தைக்கு நான் மரண தண்டனையை விதித்து விட்டதாகவே எனக்குத் தோன்றியது. மிக நீண்ட, அச்சத்திற்குரிய இந்தப் பயணத்தில் இந்தச் செய்தியை நான் தந்தையிடம் எப்படிச் சொல்வது என்றுதான் மூளையைக் கசக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் துயரச் செய்தியை அவரிடம் சொல்ல வேண்டிய தேவையே இருக்கவில்லை; என் முகமே என்னைக் காட்டிக் கொடுத்து விட்டது. மூர் உடனடியாகக் கூறினார்: “எனதருமை ஜென்னிசென் இறந்து விட்டாள்!”. அதன் பிறகு உடனடியாக பாரிசுக்குச் சென்று ஜென்னியின் குழந்தைகளுக்கு உதவுமாறு எனக்கு அவர் உத்தரவிட்டார்.”

தூக்கத்தில் மரணம்

மறுநாள் மார்க்ஸ் லண்டன் திரும்பினார். தொண்டைக்குழாயில் ஏற்பட்டிருந்த அழற்சியுடன் சேர்ந்து இன்னொன்றும் அவரை மீண்டும் படுக்கையில் தள்ளியது. பல வாரங்களுக்கு அவரால் நீராகாரம் மட்டுமே எடுத்துக்கொள்ள முடிந்தது. பிப்ரவரியில் அவருக்கு நுரையீரலில் கட்டி உருவானது.

மார்ச்சில் அவர் மீண்டு வருவார் என்ற நம்பிக்கை அதிகரித்தது. லென் சென்னின் கனிவான கவனிப்பில் அவரது முக்கிய நோய்கள் கிட்டத்தட்ட சரியாகின. ஆனால் மார்க்சின் தோற்றம் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. இந்தக் காலத்தில் தினமும் வீட்டுக்குச் சென்று அவரை பார்க்கும் எங்கெல்ஸ் மார்ச் 14 அன்று மதியநேரம் அங்கு வந்து சேர்ந்தார். லென் சென் அவரைப் பார்த்து மார்க்ஸ் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாகக் கூறினார். “நாங்கள் அறைக்குச் சென்றபோது, அவர் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார், ஆனால் ஒரு போதும் இனி எழமாட்டார் என்றும் தெரிந்தது. அவரது நாடித் துடிப்பும், மூச்சும் நின்று போயிருந்தன. அந்த இரண்டே நிமிடத்தில் அமைதியாக, வலியின்றி அவர் உயிரை நீத்திருந்தார்” என்று அவர் மார்க்சின் நண்பர் சோர்கேவுக்கு பின்னர் எழுதினார்.

எங்கெல்ஸ் மேலும் எழுதினார்: “மனித இனத்தில் ஒரு தலை குறைந்து விட்டது, இந்தத் தலை நம் காலத்தில் மிகவும் பெரிய தலை. தொழிலாளர்களின் இயக்கம் தொடர்கிறது. ஆனால் பிரெஞ்சுக்காரர்களும், ரஷ்யர்களும், அமெரிக்கர்களும், ஜெர்மானியர்களும் தீர்மானகரமான தருணங்களில் ஆலோசனை வேண்டித் திரும்பிய, மறுக்கமுடியாத, தெளிவான ஆலோசனையைக் கொடுத்து வந்த அந்த மையப்புள்ளி இப்போது மறைந்து விட்டது. முழுநிறைவான அறிவுபெற்ற ஒரு மேதையால்தான் அத்தகைய அறிவுரைகளைக் கொடுக்க முடியும்.”

எங்கெல்சுடன் சேர்ந்து உலகின் அனைத்து நாட்டுத் தொழிலாளர்களும் அஞ்சலி செலுத்தினர். 1883 மார்ச் 17 அன்று கார்ல் மார்க்ஸ் ஹைகேட் இடுகாட்டில் தன் மனைவியின் உடலுக்கருகே அடக்கம் செய்யப்பட்டார்.

உலகத் தொழிலாளர் இயக்கம் தனது மாபெரும் தலைவருக்கு விடைகொடுத்தது. வில்லியம் லீப்னெஹ்ட் ஜெர்மனி தொழிலாளி வர்க்கத்தின் சார்பில் மார்க்சின் கல்லறையில் உறுதியேற்றார். “இத்தருணத்தில் நாம் சோகத்தில் ஆழ்வதற்குப் பதிலாக, மறைந்த தலைவரின் உணர்வின்படி செயல்படுவோம். அவர் நமக்குக் கற்பித்ததையும், ஆசைப்பட்டதையும் கூடிய விரைவில் நிதர்சனமாக்க, அனைத்து வலுவுடனும் நாம் போராடுவோம். இந்த வழியில் அவரது நினைவைப் போற்றுவோம்! மிகுந்த அன்பிற்குரிய நண்பரே! நீங்கள் எங்களுக்குக் காட்டிய பாதையில் இறுதிவரையில் நடைபோடுவோம். உங்கள் கல்லறையில் அதை உறுதிமொழியாக அளிக்கிறோம்!”

தமிழில்: ரமேஷ்          

(பீப்பிள்ஸ் டெமாக்ரசி இதழில் வெளியானது)



Leave a comment