மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


கீழவெண்மணித் தீயும் கூலிப் போராட்டமும்


கோ. வீரய்யன்

1968 டிசம்பர் 25ம் தேதி இரவு மிராசுதார்களால் கீழவெண்மணி விவசாயத் தொழிலாளர்களின் தெரு நெருப்பு வைத்து கொளுத்தப்பட்டது. ஆண்கள் துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டார்கள். இதைக் கண்டு அஞ்சிய பெண்களும் பிள்ளைகளும் சில வயது முதிர்ந்த ஆண்களும் ஓடி ஒளிந்த சிறுகுடிசை எரித்து சாம்பலாக்கப்பட்டது. அதில் 44 உயிர்கள் எரிந்து சாம்பலாயின. இந்த தீயின் வெளிச்சத்தில்தான் தமிழக அரசுக்கு கண் திறந்தது. திரு. கணபதியாப்பிள்ளை ஒரு நபர் கமிஷன் அறிவிக்கப்பட்டது. கமிஷன் விசாரணை செய்து அறிக்கை கொடுக்கும்வரை இந்த ஆண்டு சம்பா அறுவடைக்கு கூலி உடன்பாடு இல்லை என்றால், இந்த அடக்குமுறை கொலை வெறித்தாக்குதல் – குடும்பத்தோடு எரிப்பது, இதையெல்லாம் கண்டு அஞ்சி அடங்கிவிட மாட்டோம், வயல்கரையில் கூலி உயர்வுப் போராட்டம் நடந்தே தீரும் என்று விவசாயத் தொழிலாளர்களின் இயக்கம் அறிவித்தது.

தஞ்சை ஒப்பந்தம்: 1969 ஜனவரி 16ஆம் தேதி தஞ்சையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் ஒரு முத்தரப்பு மாநாடு கூடி, கமிஷன் இருப்பதால் இந்தச் சம்பா அறுவடைக்கு மட்டும் அறுவடை கூலி கலத்திற்கு,

4 லிட்டர் இருக்கும் இடத்தில் நாலரை லிட்டர்
நாலரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 லிட்டர்
5 லிட்டர் இருக்கும் இடத்தில் ஐந்தரை லிட்டர்
ஐந்தரை லிட்டர் இருக்கும் இடத்தில் 5 ¾ லிட்டர்
5 ¾ லிட்டர் இருக்கும் இடத்தில் ஆறு லிட்டர்
6 லிட்டர் இருக்கும் இடத்தில் 6 லிட்டர் மட்டுமே.

உள்ளூர் ஆட்களுக்கு வேலை கொடுக்கப்படவேண்டும் என்றும், இது இந்த ஒரு ஆண்டு அறுவடைக்கு மட்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இருதரப்பு விசாரணைகளையும் முடித்து கணபதியாப் பிள்ளை கமிஷன் கொடுத்த அறிக்கை, உள்ளூர் ஆட்களுக்கு வேலையும் ஒரே வித கூலியும் என்ற கோரிக்கையில் இருக்கும் நியாயத்தை மறுக்க இயலாது என்று கூறியது. வெளியாள் இறக்குமதிதான் பிரச்சனைகளுக்குக் காரணம் என்றும் கூறியது. ஒரு கடைநிலை ஊழியன் பெறும் ஊதியம்கூட ஒரு விவசாயத் தொழிலாளிக்கு வழங்கப்படாவிட்டால் அவன் எப்படி வாழ முடியும் என்ற கேள்வியையும் எழுப்பி, கீழ்க்கண்டவாறு கூலி வழங்க கமிஷன் சிபாரிசு செய்தது.

சாகுபடி காலத்தில் ஆண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல் ரூ 1.50 அல்லது 3. 00 ரூபாய். பெண்களுக்கு 5 லிட்டர் நெல் 50 காசுகள், அல்லது 1. 75 ரூபாய் என்றும், அறுவடையில் ஒன்பதில் ஒரு பங்கு (54 லிட்டரில் 6 லிட்டர்) என்றும், இந்தக்கூலி விகிதம் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றப்படவேண்டும் என்றும் அறிக்கை அறிவித்தது. அதை அரசு ஏற்று இதுவும் கீழ்த்தஞ்சைக்கு மட்டும்தான் அமுலாகும் என்று அறிவித்தது.

1969-இல் அறிவிக்கப்பட்ட சட்டம் 3. 8. 72 உடன் முடிவதால் அரசு மறுபரிசீலனை செய்து, மூன்று ஆண்டுகளில் ஏறியிருக்கும் விலைவாசி உயர்விற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கப்படவேண்டும் என்று கோரப்பட்டது. அதற்கான இயக்கங்கள் நடத்தப்பட்டன. இருந்தும் அரசு 1.8 72 -இல் ஒரு அவசரச் சட்டத்தின் மூலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு அதே கூலி நீடிக்கும் என்று அறிவித்தது. இதை ஏற்க மறுத்து, போராட்டம் நீடித்தது. 3.8.72-இல் 2 இலட்சம் தொழிலாளர்கள் பொதுவேலை நிறுத்தம் செய்தார்கள். தொடர்ந்து 10 நாட்கள் போராட்டம் நீடித்தது. 1000க்கும் அதிகமானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். பிறகு 13. 8. 72-இல் விவசாய அமைச்சர் திரு. மன்னை நாராயணசாமி அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கே.ஏ. நம்பியார் தலைமையில் தஞ்சையில் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது.

அதன்படி, நெல்லும் பணமும் என்ற சட்டத்தில் உள்ள கூலி அப்படியே இருக்கும். பணமாக கொடுப்பவர்கள் ஆண்களுக்கு 70 காசுகளும், பெண்களுக்கு 20 காசுகளும் உயர்த்தித் தரவேண்டும் என்று ஒப்பந்தமானது.

இதுவரை இல்லாத அளவு மேலத்தஞ்சைக்கும் ஆண்களுக்கு ரூ 3.50, பெண்களுக்கு ரூ 2.25 என்று மாவட்ட ஆட்சித்தலைவரால் அவார்டாக அறிவிக்கப்பட்டது. இதுவும் ஒரு ஆண்டுக்கும் மட்டும் என்றும், அதற்குள் ஒரு கமிஷன் நியமிக்க அரசுக்குச் சிபாரிசு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கீழத்தஞ்சையை நீக்கிவிட்டு தமிழகம் முழுவதற்கும் ஒரு கூலி கமிஷன் போடப்பட்டது அதில் விவசாயத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் எவரும் இல்லை. எனவே அந்தக் கமிஷனை புறக்கணிப்பதென விவசாயத் தொழிலாளர் சங்கம் முடிவு செய்தது. அந்தக் கமிஷன் சிபாரிசு செய்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் (கீழத்தஞ்சை தவிர) ஆண்களுக்கு தினச்கூலி ரூ 3.00: பெண்களுக்கு 0.75 சிறுவர்களுக்கு ரூ 1.25 என்று அறிவிக்கப்பட்டது. அதுவும் அமுல் நடத்தப்படவில்லை.

மீண்டும் தஞ்சை ஒப்பந்தம்: 1973இல் தஞ்சைமாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கே.ஏ. நம்பியார் தலைமையில் முத்தரப்பு மாநாடு கூடியது. அதில் கீழத்தஞ்சையில் மட்டும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தலா 15 காசுகள் மட்டுமே கூலி உயர்வு தர இயலும் என்று மிராசுதார்கள் கூறிவிட்டார்கள். இதை அனைத்து சங்கங்களும் ஏற்றுகொண்டுவிட்டன. நமது சங்கம் மட்டும் ஏற்கவில்லை.

1974- இல் ஒரு கூலி ஒப்பந்தக் கூட்டம் தஞ்சையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராமதாஸ் தலைமையில் கூடியது. அதில், தினக்கூலி ஆண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 2.75; அல்லது பணமாகக் கொடுத்தால் ரூ 6.0, பெண்களுக்கு 5 லிட்டர் நெல்லுடன் ரூ. 1.50 அல்லது பணமாக கொடுத்தால் ரூ. 4.00; அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று என்று முன்பு உள்ளது போலவே இருக்கும் என்று ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்தக் கூலியையே பிறகு நியமிக்கப்பட்ட திரு வி. கார்த்திகேயன் அவர்களின் கமிஷனும் சிபாரிசு செய்தது. அதே போல் தமிழகம் முழுவதற்குமாக நியமிக்கப்பட்ட திரு. சீனிவாசன் கமிஷன் தினக்கூலி ஆண்களுக்கு ரூ 5/- என்றும், பெண்களுக்கு ரூ 2.75 என்றும் சிபாரிசு செய்தது. இந்த இரு சிபாரிசுகளும் 1975இல் சட்டமாயின.

1967ஆம் ஆண்டு மன்னை ஒப்பந்தம் கீழ்த்தஞ்சைக்கு மட்டும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு, அடுத்து ஒவ்வொரு முறையும் முத்தரப்பு மாநாடு கூடும்போதும் மாவட்டம் முழுவதற்கும் ஒரு ஒப்பந்தம் வேண்டும் என்று விவசாயத் தொழிலாளர் இயக்கத்தால் வற்புறுத்தப்பட்டது. கூலி கோரி பாபனாசம், குடந்தை, தஞ்சை வட்டங்களில் இயக்கங்களும் நடத்தப்பட்டன.

1972-ஆம் ஆண்டு கண்டமங்கலம் கூலி உயர்வு இயக்கம் பலமானதாக மாறியது. அதனால் விவசாயத் தொழிலாளர்கள், மிராசுதார்கள் தஞ்சை தாசில்தார் தலைமையில் கூடி ஒரு கூலி உடன்பாடு ஏற்பட்டது. அதுதான் பிறகு 1.8.72இல் கூடிய முத்தரப்பு மாநாட்டில் மேலத்தஞ்சை முழுவதற்குமான கூலி அவார்டாக, ஆட்சித்தலைவரால் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமம் கிராமமாக கூலி உயர்வுக்கான இயக்கங்கள் துவங்கின. அங்கு கூலி உயர்வுடன் மட்டுமல்லாமல், அரசின் தரிசு நிலங்கள் பெறும் இயக்கமாகவும், மிராசுதார்களிடம் கூலியும், அரசிடம் நிலமும் கோரும் இயக்கமாக பரவியது. இதன் வளர்ச்சியில் வழக்கம்போல் அடக்குமுறை உபயோகப்படுத்தப்பட்டது. இதில் ஒரத்தூர் நிலத்திற்கு நடைபெற்ற இயக்கம் குறிப்பிடத்தக்கது. அவசரகால நிலையில் அதை உபயோகப்படுத்திக் கொண்டிருந்த விவசாயத் தொழிலாளர்களிடமிருந்து பறித்துவிட சகல முயற்சிகளும் செய்யப்பட்டது. என்றாலும், அந்த நிலம் விவசாயத் தொழிலாளர்களால் பாதுகாக்கப்பட்டது.

திருவையாறு வட்டம் காருகுடி கிராமத்தில் விவசாயத் தொழிலாளர்கள் சுடுகாட்டிற்கு இடம் கேட்டு நடத்திய இயக்கமும், சுடுகாட்டிற்கு இடம் கிடைக்காத நிலையில், காவிரி ஆற்றிலேயே எங்கள் குடும்பங்களில் யாரும் இறந்தால் அந்த பிணத்தை வைத்து எரிப்போம் என்று கூறியது மட்டுமல்ல; அவசர காலத்தில் 1976இல் ஒரு பிணம் காவிரி ஆற்றில் வைத்து எரிக்கப்பட்டது. இதன் பிறகுதான் அங்கு சுடுகாட்டிற்கு இடம் கொடுக்கப்பட்டது.

இந்த இயக்க வளர செங்கொடி இயக்கம்தான் காரணம் என்றும், அதற்கு அதன் தலைவர் தியாகி என். வெங்கடாசலம்தான் காரணம் என்றும் எதிரிகள் குறிவைத்தார்கள்; கூடினார்கள்; திட்டமிட்டார்கள்; மொட்டைக் கடிதம் எழுதினார்கள். அதன் பிறகு, 1977 செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 8 மணி வாக்கில் சோழகம்பட்டி ரயில்வே நிலையத்திலிருந்து இறங்கி தனியே செல்லும்போது தோழர் என் வெங்கடாசலத்தை கடத்திக்கொண்டு போய் கொலை செய்து, எரித்துச் சாம்பலாக்கிவிட்டார்கள். அதிலும் அவரை கொலை செய்தவர்கள் யார் என்று கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. திறமைமிக்க தமிழக காவல்துறைக்கு தியாகி என். வெங்கடாசலத்தை கடத்திச்சென்று கொலை செய்தவர்கள் யார் என்று இன்னும் கூறும் திறமை ஏற்படவில்லை என்று வைத்திருக்கிறார்கள்.

ஜாதிய சமூகக் கொடுமைகளை எதிர்த்து, மிதிபட்டு, அடித்தட்டில் கிடந்த மக்களை விடுவித்து, மனிதனாக்கி, பண்ணையாளும் ஊராட்சித் தலைவனாக வர முடியும் என்று உயர்த்தி, ஒரு சமூகம் மதிக்க வேண்டிய, மதிக்கக்கூடிய, மனிதனாக உயர்த்தியிருக்கிறது செங்கொடி. இயக்கம் இருக்கும் எந்த கிராமத்திலும் ஜாதியின் பெயரால் ஏழைகள் மீது யாரும் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

கூலிக்கு நடத்தும் இயக்கத்துடன் உபரி நிலம், தரிசு நிலம், பினாமி நிலம் ஆகிய அனைத்திலும் கூலிக்காரர்களை நிலசொந்தக்காரர்களாக்கவும் போராடி வருகிறது. பலரை நிலச் சொந்தக்காரர்களாகவும் ஆக்கியிருக்கிறது.

1974ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டம் 1977இல் முடிந்து விட்டது. மேலும் ஒரு ஆண்டும் சென்றுவிட்டது. இந்தச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று இயக்கம் கோரியது. 1978 தஞ்சையில் கூடிய முத்தரப்பு மாநாடு எந்த முடிவும் மேற்கொள்ளாமல் கலைந்தது.

பிறகு கமிஷன்கள் அமைக்கக் கோரி இயக்கத்தை நடத்தியது. அதன்படி கீழத்தஞ்சைக்கு மட்டும் திரு. எஸ். ராமச்சந்திரன் கமிஷனும், கீழத்தஞ்சை நீங்கலாக தமிழகம் முழுவதற்கும் திரு. கே திரவியம் கமிஷனும் அமைக்கப்பட்டது. அவர்கள் சிபாரிசு செய்தபடி,
கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் ரூ 2.80 அல்லது ரூ 7.20, பெண்களுக்கு தினக்கூலி 6 லிட்டர் நெல்லுடன்
1.80 அல்லது ரூ 5.60 என்று நியாயக் கூலிச்சட்டமும், கீழத்தஞ்சை தவிர்த்த தமிழகம் முழுவதற்கும் ஆண்களுக்கு ரூ 7.00 பெண்களுக்கு ரூ 5. 00 என்றும், அறுவடை கூலி எட்டில் ஒரு பங்கு என்று குறைந்த பட்சக் கூலிச்சட்டமும் திருத்தப்பட்டது. 1980-இல் நியாயக் கூலிச்சட்டம் திருத்தப்பட்டு, பணக் கூலியில் தலா 60 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கிறது.

1980இல் நியாய கூலிச்சட்டப்படி கீழத்தஞ்சையில் ஆண்களுக்கு தினக்கூலி 7 லிட்டர் நெல்லுடன் 2.80 அல்லது 7.80. பெண்களுக்கு 6 லிட்டர் நெல்லுடன் ரூ 1.80 அல்லது ரூ 6.20. அறுவடை கூலி ஒன்பதில் ஒன்று.

குறைந்தபட்சக் கூலிச் சட்டப்படி, கீழத்தஞ்சை தவிர, தமிழகம் முழுவதும் ஆண்களுக்கு தினக்கூலி ரூ. 7, பெண்களுக்கு தினக்கூலி ரூ 5, சிறுவர்களுக்கு ரூ 4. அறுவடையில் எட்டில் ஒரு பங்கு. வேலை நேரம் 7 மணி என்ற இரண்டு கூலிச்சட்டங்கள் இன்று தமிழகத்தில் அமுலில் உள்ளது. 1943இல் துவங்கி 1980 வரை விவசாயத் தொழிலாளர்களுக்காகப் போராடிய, போராடி வருகிற இயக்கம் என்று முத்திரை பதித்திருக்கிறது விவசாயத்தொழிலாளர் சங்கம்.

நன்றி:  விவசாய சங்கத்தின் வீர வரலாறு – கோ. வீரய்யன் (1981, கார்க்கி நூலகம் வெளியீடு)



Leave a comment