மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


சர்வதேச மகளிர் தினம் பற்றி அலெக்சாண்ட்ரா கொலந்தாய்


[ரஷ்யாவில் முதன்முதலாக 1913ஆம் ஆண்டு மார்ச் 8 அன்று (பழைய நாட்காட்டி அடிப்படையில் பிப்ரவரி 23) உழைக்கும் மகளிரின் சர்வதேச ஒற்றுமையின் வெளிப்பாடாக சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வை முன்னிட்டு கொண்டாட்டத்திற்கு ஒருவார காலத்திற்கு முன்பு அலெக்சாண்ட்ரா கொலந்தாயின் இக்கட்டுரை ரஷ்ய போல்ஷ்விக் கட்சியின் இதழான பிராவ்தாவில் வெளியானது. அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகளுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தியும், பிரச்சாரங்களை முன் வைத்தும், உழைக்கும் வர்க்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றும் வகையிலும், உழைக்கும் மகளிரின் உணர்வு நிலையை உயர்த்தும் நோக்குடனும் புனித பீட்டர்ஸ்பர்க் நகரில் இத்தினம் கொண்டாடப்பட்டது.]


மகளிர் தினம் என்பது என்ன? அப்படியான ஒரு தினம் அவசியம்தானா? பெண்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராடுபவர்களுக்கும் பெண்ணியவாதிகளுக்கும் முதலாளித்துவ வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கும் கொடுக்கப்படும் சலுகைதானே அது? அது தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஒற்றுமைக்கு ஆபத்தை விளைவிக்காதா? இப்படியான கேள்விகளை இப்போதும் ரஷ்யாவில் கேட்க முடிகிறது. இக்கேள்விகளுக்கான தெளிவான பதிலை  வாழ்க்கை நமக்கு முன்பே வழங்கியுள்ளது.


மகளிர் தினம் என்பது உழைக்கும் மகளிர் இயக்கத்தின் வலுவான, நீளமான சங்கிலியின் இணைப்புக் கண்ணியாகும். ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மகளிரின் திரட்டப்பட்ட அணி வளர்ந்து வருகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்சங்கங்களில் உழைக்கும் மகளிர் சிறு எண்ணிக்கையில்தான் இருந்தனர். தொழிலாளர் கட்சியிலும் மிகச் சில பெண்களே இருந்தனர். தற்போது பிரிட்டனில் 2,92,000 பெண்கள் தொழிற்சங்கங்களில் உள்ளனர். ஜெர்மனியில் 2,00,000 பேர் தொழிற்சங்கங்களிலும், 1,50,000 பேர்  தொழிலாளர் கட்சியிலும் உள்ளனர். ஆஸ்திரியாவில் 47,000 பேர் தொழிற்சங்கத்திலும், 20,000 பேர் கட்சியிலும் உள்ளனர்.


இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நார்வே, சுவிட்சர்லாண்ட் என எங்கும் உழைக்கும் மகளிர் தங்களை தாங்களே அணிதிரட்டி வருகின்றனர். சோஷலிச பெண்கள் படையில் சுமார் பத்து லட்சம் பேர் உள்ளனர்.  இது ஒரு சக்திமிக்க படையாகும். விலைவாசி உயர்வு, குழந்தை தொழிலாளர்கள், மகப்பேறு காப்பீடு, உழைக்கும் மகளிரைக் காப்பதற்கான சட்டம் என எல்லாம் கேள்விக்குள்ளாகும் இன்றைய நிலையில், உலகின் சக்திவாய்ந்த உழைக்கும் மகளிரைத் திரட்டுவதில் ஏற்பட்டுள்ள உயர்வு கவனிக்கத்தக்கதாகும்.


மூலதனத்திற்கு எதிரான போராட்டத்தின் சுமையை தாங்கள் மட்டுமே சுமக்க வேண்டுமென்று ஆண் தொழிலாளர்கள் நினைப்பதும், பெண்களின் உதவியில்லாமல் இந்த ‘பழைய உலகின்’ மீது தலையீடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கருதிய காலமும் இருந்தது. தங்களது கணவன, தந்தையோ வேலையிழந்த சூழலில், தவிர்க்க முடியாத காரணங்களால், பெண்கள் உழைக்கும் மகளிராக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர். பெண்களை வர்க்க உணர்வு அடையவிடாமல் தடுப்பதன் மூலமாகவே தங்களின் சுயநலனை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை ஆண் தொழிலாளர்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளனர்.


எந்த அளவிற்கு வர்க்க உணர்வு பெற்ற போராளிகள் அதிகரிக்கின்றனரோ அந்த அளவிற்கு வெற்றிக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. குடும்பம், சமூகம், அரசு என எங்கும் அதிகாரம் மறுக்கப்பட்ட நிலையில், அடுப்படியில் அமர வைக்கப்பட்டிருக்கும் பெண்கள் என்ன அளவிலான உணர்வைப் பெற்றிருக்க முடியும்? அவர்களுக்கென்று ‘சொந்த சிந்தனை’ எதுவுமின்றி, அவர்களது கணவனோ, தந்தையோ சொல்வதைக் கேட்டு, அதற்கேற்ற வகையில் கீழ்ப்படிந்து செயல்படுவதே அவர்களுக்கு வழக்கமாகிவிடுகிறது. எவ்வித உரிமைகளுமின்றி பின்தங்கிய நிலையில் பெண்களை வதைப்பதும், அவர்களை அலட்சியமாகவும் அடிமை போலவும் நடத்துவது உழைக்கும் வர்க்கத்திற்கு எவ்வித பலனையும் தராது. இன்னும் சொல்வதெனில் அது வர்க்க நலன்களுக்கு எதிரானதாகும். அதேநேரம் பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை இயக்கத்திற்குள் எவ்வாறு இணைப்பது? எனும் கேள்வியும் எழுகிறது.


வெளிநாடுகளில் உள்ள சமூக ஜனநாயகவாதிகளால் உடனடியாக இதற்கான தீர்வினை கண்டடைய முடியவில்லை. அங்கு தொழிலாளர் இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் இணைவதற்கான வாசல்கள் திறந்திருந்தபோதும் மிகச்சிலரே அதில் சேர்ந்துள்ளனர். ஏனெனில், தொழிலாளி வர்க்கத்தில் உள்ள பெண் தொழிலாளர்களே சட்ட ரீதியாகவும், சமூக ரீதியாகவும் கடுமையான இழப்புகளைச் சந்திக்கிறார்கள் என்கிற புரிதலை உழைக்கும் வர்க்கம் அங்குப் பெறவில்லை. நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, அச்சுறுத்துவது என்பது நிகழ்ந்து வருகிறது. எனவே, அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்கள் புரிந்துகொள்ளும் மொழியிலும் பேசி, அவர்களை மன ரீதியாகவும் இதய பூர்வமாகவும் இணைக்கும் வகையிலான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சுரண்டல் நிறைந்த, உரிமைகளற்ற இந்த உலகில் தொழிலாளர்கள் உடனடியாக சில முன்முயற்சிகளை வரவேற்க மாட்டார்கள். பெண்கள் உழைப்பை விற்பவர் என்கிற முறையில் (பொருளாதார ரீதியாக) சுரண்டப்படுவதோடு, தாய், பெண் என்கிற வகையில் (சமூக ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும்) ஒடுக்கப்படுகிறார்கள். உழைக்கும் மக்களின் சோஷலிஸ்ட் கட்சி இவற்றை  புரிந்து கொண்டுள்ளது. உழைப்பாளி என்ற வகையிலும் தாய், பெண் எனப் பெண்கள் ஒடுக்கப்படும் அனைத்து நிலைகளிலும், மிகத்துணிவோடு அவர்களுக்கு ஆதரவாக சோஷலிஸ்ட் கட்சி நிற்கிறது.


பெண்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்கு! பெண் தொழிலாளர்களுக்குச் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடு! தாய் மற்றும் குழந்தைகளுக்குக் காப்பீடு வழங்கு! என்பன உள்ளிட்ட பெண்களுக்கு ஆதரவான கோரிக்கைகளை அனைத்து நாடுகளிலும் சோஷலிஸ்டுகள் முன்வைக்கின்றனர். தொழிலாளர்களின் கட்சி மிகத்தெளிவாக இக்கோரிக்கைகளை முன்னெடுத்தது. அதேபோல், பெண் தொழிலாளர்களும் மிகுந்த விருப்பத்துடன் கட்சியில் இணைந்தனர். பெண்களுக்கான தனித்துவமான, அத்தியாவசியமான கோரிக்கைகளை முன்னெடுப்பதில் தொழிலாளர்களின் கட்சியே முதன்மை பாத்திரம் வகிக்கிறது என்றும் வரவேற்றனர். உழைக்கும் மகளிர் தங்களை அமைப்பாக ஒருங்கிணைத்துக் கொண்டதும், அதன்மூலம் வர்க்க உணர்வு பெற்றதுமே, இந்த இலக்குகளைத் தெளிவுபடுத்துவதற்கான மிகச்சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

சோஷலிச இயக்கத்தின்பால் உழைக்கும் மகளிரை ஈர்க்கும் கடினமான பணி தற்போது நம்முன் உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கான செயற்குழு மற்றும் தலைமைக் குழுக்கள் உள்ளன. இக்குழுக்கள் அரசியல் உணர்வு பெறாத பெண்கள் மத்தியில் பணியாற்றி, அவர்களை அணி திரட்டி, அவர்கள் மத்தியில் வர்க்க உணர்வை வளர்க்கின்றனர். பெண்களை அதிகம் பாதிக்கும் பிரச்சனைகளையும் அடையாளம் காண்கின்றனர். விலைவாசி உயர்வுக்கு எதிராகவும், குடியிருப்புகளை மேம்படுத்துவதற்கான கோரிக்கைகளை முன்வைத்தும், பெண்களுக்கான அரசியல் உரிமைகளுக்காகவும், பெண் தொழிலாளர்களுக்கான சட்ட பாதுகாப்பிற்காகவும், பாலூட்டும் தாய்மார்களுக்கான உணவு மற்றும் பாதுகாப்பிற்காகவும், குழந்தை இறப்பு மற்றும் விபச்சாரத்திற்கு எதிரான பிரச்சாரம் என்பன உள்ளிட்டவற்றை அவர்கள் முன்னெடுக்கின்றனர்.


கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் பொதுவான வர்க்க நலன்களுக்காகப் போராடுவதோடு, தாய், குடும்பத் தலைவி, பெண் என்கிற வகையில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், அவர்களுக்கான தேவைகளையும், பெண் தொழிலாளர்கள் முன்வைக்கின்றனர். கட்சியும், இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துப் போராடுகிறது. பொதுவான தொழிலாளர் நல அம்சங்களின் ஒருபகுதியே  உழைக்கும் மகளிரின் இக்கோரிக்கைகளுமாகும். மகளிர் தினத்தன்று தங்களுக்கு மறுக்கப்பட்டுள்ள உரிமைகளை வென்றெடுக்க அணி திரட்டப்பட்ட பெண்கள் போராடுகின்றனர்.

எதற்காகப் பெண் தொழிலாளர்களைத் தனியாக அணிதிரட்ட வேண்டும்? தொழிலாளி வர்க்கத்தைச் சார்ந்த பெண்களுக்கு தனியான துண்டுப் பிரசுரங்கள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஏன் நடத்த வேண்டும்? இது இறுதியில் முதலாளித்துவ பெண்ணியவாதமாகவோ, முதலாளித்துவ ஜனநாயகம் முன்வைக்கும் வெறும் வாக்குரிமைக்கான விஷயமாகவோ ஆகிவிடாதா? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். வாக்குரிமைக்கான போராட்டத்தை மட்டும் முன்வைக்கும் முதலாளித்துவ ஜனநாயகத்திற்கும், தீவிரமான சோஷலிச பெண் இயக்கத்திற்குமான வித்தியாசத்தை அறியாதவர்கள்தான் இப்படியான கேள்விகளை எழுப்புவர்.


முதலாளித்துவ சமூக அமைப்பில் அவர்களின் தந்தையும், கணவரும் மற்றும் சகோதரர்களும் பெறும் உரிமைகளை தாங்களும் அடைவது மட்டுமே முதலாளித்துவ பெண்ணியவாதிகளின் இலக்காகும். பிறப்பின் அடிப்படையிலோ, செல்வ வளத்தின் அடிப்படையிலோ நிலவும் அனைத்து சலுகைகளையும் ஒழிப்பதே உழைக்கும் மகளிரின் இலக்காகும். தங்களை ஆளுகைக்கு உட்படுத்துவது ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், உழைக்கும் மகளிர் அதை எதிர்ப்பதில் எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை. ஏனெனில், ஒரு தொழிலாளி என்கிற வகையில் இந்நிலையை அவர் மிக எளிதில் அடைகிறார்.


எங்கும் எப்போதும் முதலாளித்துவ பெண்ணியவாதிகள் சம உரிமை என்று கோருகின்றனர். உழைக்கும் மகளிரோ, ஆண், பெண் என அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமை கோருகிறோம். அதே நேரம் குடிமக்கள், தொழிலாளி என்பதாக மட்டுமல்லாமல், பெண்கள் தாய்மார்களாகவும் உள்ளனர் என்பதை நாங்கள் மறப்பதற்கில்லை. ஒரு தாய் என்கிற வகையில் எதிர்காலத்திற்கான தலைமுறையை உருவாக்குபவர்கள் பெண்கள்தான். எனவே, அரசும் சமூகமும் அவர்களையும், அவர்கள் பெற்றெடுக்கும் குழந்தைகளையும், பாதுகாப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்கிறோம்.


முதலாளித்துவ பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றனர். உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பிற்குள்ளேயே அவர்கள் வசதியாக செயல்படுவதற்கான சூழலையே அவர்கள் முன்வைக்கும் அரசியல் உரிமைகள் கூறுகின்றன. (உழைக்கும் மக்களைச் சுரண்டிக் கொழுக்கும் இவ்வுலக அமைப்பையே தூக்கியெறிந்துவிட்டு) உழைக்கும் மக்களின் அரசைப் படைக்கும் மிகக் கடினமான பாதையை உள்ளடக்கியதே உழைக்கும் மகளிர் முன்வைக்கும் அரசியல் உரிமையாகும்.


உழைக்கும் மகளிருக்கும் முதலாளித்துவ வாக்குரிமையை மட்டும் கோருவோருக்குமான பாதைகள் வெவ்வேறானவை. வாழ்க்கை அவர்களுக்கிடையில் அவர்களின் இலக்குகளை தீர்மானிப்பதில் ஒரு பெரிய வித்தியாசத்தைக் கொடுத்துள்ளது. எஜமானருக்கும் சேவகனுக்கும் இருப்பது போன்ற ஒரு முரண்பாடு, முதலாளித்துவ பெண்ணுரிமையாளர்களுக்கும், உழைக்கும் மகளிருக்குமிடையே உள்ளது. இவர்களுக்கிடையில் எவ்வித தொடர்போ, சமரசமோ இல்லை. எனவே, உழைக்கும் வர்க்க பெண்களுக்கான சிறப்பு மாநாடு குறித்தோ, தனியான மகளிர் தினம் குறித்தோ, ஆண் தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.
ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான போராட்டத்தில் பங்கேற்கச் செய்வதற்கான உணர்வினை பெண் தொழிலாளர்கள் மத்தியில் உருவாக்குவதே உழைக்கும் வர்க்க பெண்கள் மத்தியில் ஆற்ற வேண்டிய தனித்துவமான பணியாகும். மகளிர் தினம், பெண் தொழிலாளர்கள் மத்தியில் நிதானமாகவும், அதேநேரம் கவனமாகவும், ஒரு சுய விழிப்புணர்வை அவர்களிடம் ஏற்படுத்துகிறது. அது தொழிலாளி வர்க்கத்தை பிரிக்கவில்லை; மாறாக ஒன்றிணைக்கிறது.


உழைக்கும் மகளிர், வர்க்க விடுதலைக்கான போராட்டத்தோடு பெண் விடுதலை என்பதையும் இணைத்து  மகளிர் தினக் கொண்டாட்டத்தில் இணைய வேண்டும்.

தமிழில்: ச. லெனின்

பிப்ரவரி  1913, லெக்சாண்ட்ரா கொலந்தாய், தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள், முன்னேற்றப் பதிப்பகம்,1984 மற்றும் marxist.org (2000)

முதலில் வெளியானது: பிராவ்தா,  No. 40(244), 17 பிப்ரவரி 1913, புனித பீட்டர்ஸ்பர்க்





Leave a comment