மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


அதானி ஊழல், குற்றவாளிக் கூண்டில் கார்ப்பரேட்-இந்துத்துவா அரசு!


பேரா.வெங்கடேஷ் ஆத்ரேயா

அறிமுகம்

அதானி குழுமத்தின் பல நடவடிக்கைகளை ஹிண்டென்பர்க் என்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனம் அம்பலப்படுத்தியதை தொடர்ந்து அக்குழுமத்தின் சந்தை முதலீட்டு மதிப்பு மிகக்கணிசமான அளவிற்கு சரிந்துள்ளது. சில காலமாகவே அரசல் புரசலாக பேசப்பட்டு வந்த பல விஷயங்கள் பொதுவெளிக்கு வந்துள்ளன. சட்டமீறல்கள், பங்குமதிப்புகளை செயற்கையாக உயர்த்திக்காட்ட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், முப்பத்தெட்டு ஷெல் நிறுவனங்கள் மூலம் செய்யப்பட தில்லுமுல்லுகள் என்று குற்றப்பட்டியல் நீள்கிறது. அதானி குழுமம் பற்றி பொதுவெளியில் வந்துள்ள தரவுகள் பற்றி ஒரு கட்டம் வரை கள்ளமௌனம் சாதித்த ஒன்றிய அரசு, நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினை பற்றிய விவாதத்தை அனுமதிக்க மறுத்தது. பின்னர், இப்பிரச்சினை தொடர்பான ஒரு வழக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் தக்க பரிந்துரைகளை உருவாக்க ஒரு “நிபுணர்கள்” குழுவை அமைத்துள்ளது. கடந்த சில நாட்களில் அதானி குழுமம் ஓரளவு தனது சந்தை மூலதன மதிப்பில் ஏற்பட்ட பெரும் இழப்பில் இருந்து முன்னேற்றம் கண்டுள்ளது. ஊடகங்களில் ஒன்றிய அரசுக்கும் – குறிப்பாக இந்தியப் பிரதமருக்கும்  – அதானி குழுமத்திற்கும் உள்ள நெருங்கிய உறவு பற்றி பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பங்கு சந்தை விவகாரங்கள் மட்டுமின்றி, ஒன்றிய அரசு அதானி குழுமத்திற்கு அளித்துள்ள சலுகைகள் பற்றியும், ஆஸ்ட்ரேலிய நாட்டில் நிலக்கரி உற்பத்தி சார்ந்த ஒப்பந்தங்களை அதானி குழுமத்திற்கு பெற்றுத்தரவும் இதற்கு தேவையான கடன் வசதியை செய்து கொடுக்குமாறு ஆகப்பெரிய இந்திய பொதுத்துறை வங்கியான  இந்திய ஸ்டேட் வங்கிக்கு அழுத்தம் தரவும் இந்திய ஒன்றிய அரசு களம் இறங்கியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அதேபோல் இலங்கையிலும் அதானி குழுமத்திற்கு பெரும்லாபம் தரவல்ல திட்டங்களை அளிக்குமாறு அந்த நாட்டின் அரசிடம் இந்திய அரசு பரிந்துரைத்ததாகவும் இலங்கை அரசு வட்டாரங்களில் இருந்தே செய்திகள் வெளியாகியுள்ளன. முந்தைய காங்கிரஸ் அரசுக்கு எதிராக “நிலக்கரி ஊழல்” பிரச்சினையை உரக்கப் பேசிய மோடி அவர்கள் ஆட்சியில் அதானிக்கு பெரும் பலன் தரும் வகையில் கனிம தொழில் மற்றும் சுற்று சூழல் தொடர்பான விதிகள் மாற்றப்பட்டது மற்றும்  மீரப்பட்டது தொடர்பாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் ஒரு நீண்ட, நெருக்கமான உறவு இருந்து வருகிறது என்பது புதிய செய்தியல்ல. 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம் சிறுபான்மை மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டதும் அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்பட்டதும், அச்சமூகத்தை சார்ந்த  பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறை உள்ளிட்டு கொடிய தாக்குதல்களுக்கு உள்ளானதும் உலகறிந்த துயரச்செய்திகள். இந்த நிகழ்வுகளின் பின்புலத்தில் அச்சமயம் குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி கடும் விமர்சனத்திற்கு உள்ளானார். அன்றைய பாஜக கட்சியின் தலைவரும் இந்திய ஒன்றிய அரசின் பிரதமருமான வாஜ்பாயி அவர்கள்கூட “அரசியல் தருமம் கருதி மோடி பதவி விலகவேண்டும்” என்று சொன்னதாக பரவலாக செய்திகள் வெளிவந்தன. பல நாடுகள் மோடி தங்கள் நாட்டுக்கு வருவதை விரும்பவில்லை என்றுகூட அறிவித்தன. அப்படி மோடி தனிமைப்பட்டிருந்த சமயத்தில் அவரின் நெருங்கிய நண்பராக தொடர்ந்தது மட்டுமின்றி மோடிக்கு பக்கபலமாக செயல்பட்டவர் அதானி. மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலேயே குஜராத் அரசு அதானி குழுமத்தின் வளர்ச்சிக்கு பலவகைகளில் உதவியது என்பதும் விரிவாக பதிவாகியுள்ள செய்தி.

எனினும் இக்கட்டுரையின் நோக்கம் அதானி குழுமம் தொடர்பாக பொதுவெளிக்கு வந்துள்ள விஷயங்களை விவாதிப்பது அல்ல. மாறாக, இத்தகைய ஒரு தருணத்தில், அரசின் மீது செல்வாக்கு செலுத்திவரும் ஒரு பெருமுதலாளி குழுமத்தின் லீலைகள் அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில்,  மார்க்சிஸ்ட் பார்வையில் நின்று இந்திய முதலாளித்துவமும், குறிப்பாக இன்றைய கார்ப்பரேட் ஹிந்துத்வா ஒன்றிய அரசும் பின்பற்றிவரும் “வளர்ச்சி” பாதையின் தன்மையை சற்று ஆழமாக ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.     

இந்திய வளர்ச்சிப்பாதையின் வர்க்கத்தன்மை

இந்தியா, காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையில் 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.  இந்த காலகட்டம் முழுவதும் அரசின் வர்க்கத்தன்மையில் அடிப்படை மாற்றம் எதுவும் இல்லை. முதலாளி வர்க்கமும் நிலப்ரபு வர்க்கமும் இணைந்த வர்க்க ஆட்சிதான் நடைபெற்றுவருகிறது. இந்த இருவர்க்க அணிக்கு தலைமை தாங்குவது பெருமுதலாளிகள். இப்பெருமுதலாளி வர்க்கம் அந்நிய நிதி மூலதனத்துடன் மேலும் மேலும் அதிகமாக உறவுகொண்டு செயல்படுகிறது. இந்திய அரசின் வர்க்கத்தன்மை பற்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் இந்த வரையறை துல்லியமானது. இதன் பொருள் புறச்சூழல்கள் மாறும் பொழுது அரசின் கொள்கைகள் மாறாது என்பது அல்ல. நாடு விடுதலை அடைந்த பொழுது இருந்த உள்நாட்டு, பன்னாட்டு புறச்சூழலில் ஏராளமான மாற்றங்கள் கடந்த 75 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.  அரசின் கொள்கைகள் மாறும் ஆனபோதும் அவற்றின் வரக்கத்தன்மை மாறாது. இதுதான் இந்தியாவின் அனுபவம்.

இந்திய குடியரசின் முதல் 30 ஆண்டுகளுக்கு (1950 முதல் 1980 வரை) ஓரளவு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சி பாதையை நாடு பின்பற்ற முடிந்தது. பன்னாட்டு சூழல் – வலுவான சோசலிச முகாம், பலவீனம் அடைந்திருந்த ஏகாதிபத்திய முகாம்,  காலனி ஆதிக்கம் கிட்டத்தட்ட உலகம் முழுவதும்  தகர்ந்தது ஆகிய அம்சங்கள்  – பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் பெரிதாக இருந்த இந்தியாவில் இத்தகைய முதலாளித்துவ வளர்ச்சியை அனுமதித்தன. எனினும் காலப்போக்கில் இந்திய அரசின் வர்க்கத்தன்மையில் இருந்த அடிப்படை பலவீனங்கள், தொடர்ந்த பொருளாதார விரிவாக்கத்தை கடினமாக்கின. நாடு விடுதலை பெற்றபின் கட்டமைப்பு வசதிகளை வேகமாக உருவாக்கிட திட்டமிடுதல், பொதுத்துறையின் மையப்பங்கு, இறக்குமதிக்கு மாற்றாக உள்நாட்டு உற்பத்தி, ஒரு எல்லைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்தம் ஆகியவை வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றம் காண உதவின. ஆனால் நிலப்பிரபுக்கள் ஆளும் வர்க்க அணியில் இருந்தமையால் நிலச்சீர்திருத்தம் சிறிய அளவிற்கே நடந்தது. மக்கள் மீது மறைமுக வரிகளை சுமத்தி கிடைத்த வரி வருமானத்தில் வளர்ச்சிக்கான முதலீடுகளை அரசு மேற்கொள்வது போதாது என்ற நிலையில் ஆளும் வர்க்க கூட்டணியின் தலைமையில் இருந்த பெருமுதலாளிகள் மீது உரிய வரிகளை விதித்து வசூலித்து வளர்ச்சிக்கான முதலீடுகளை திரட்டுவதும் மிகக்கடினமாக இருந்தது. 1960களின் நடுப்பகுதியில் இருந்தே இந்திய பொருளாதார வளர்ச்சி இக்காரணங்களால் நெருக்கடிக்கு உள்ளாகியது. எனினும் சோசலிச முகாம் உதவியுடன் ஓரளவு வளர்ச்சி காண முடிந்தது.

பன்னாட்டு நிதி மூலதனத்தின் அசுர வளர்ச்சி

இதே 1950-80 காலத்தில் பன்னாட்டு அரங்கில் நிலைமைகள் வேகமாக மாறிக்கொண்டிருந்தன. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் மேலை ஏகாதிபத்திய நாடுகள் மீண்டும் வலுப்பெற்று வந்தன. முப்பதாண்டுகால உலக முதலாளித்துவ வளர்ச்சியில் பன்னாட்டு ஏகபோகங்கள் ஏராளமான  லாபங்களை ஈட்டிக் குவித்தன. இப்பெரும் மூலதன சேர்க்கையால் பன்னாட்டு நிதி மூலதனம் ஆகப்பெரிய பன்னாட்டு பொருளாதார சக்தியாக உருவெடுத்தது. 1970களில் ஏற்பட்ட பெட்ரோலியம் கச்சா எண்ணய் விலை உயர்வில் கிடைத்த பெரும் உபரிகளும், மேலை நாட்டு மக்களின் சேமிப்புகளின் கணிசமான பகுதியும் பன்னாட்டு வணிக வங்கிகளில் போடப்பட்டு, நிதி மூலதனம் குவிய வழிவகுத்தன. இந்நிலைமை, அரசின் வர்க்கத்தன்மையால் வரிகள் மூலம் வளம் திரட்டும் வலுவின்றி இருந்த  இந்தியா உள்ளிட்ட பல வளரும் நாடுகளுக்கு அன்னியக்கடன் பெற்று வளர்ச்சிக்கான முதலீடுகளை  மேற்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தின. குவிந்து கொண்டிருந்த பன்னாட்டு நிதி மூலதனம் கடன் கொடுப்பதன் மூலமும் வேறுபல வழிகளிலும் உலகின் பல நாடுகளுக்குள் நுழைந்து லாபம் ஈட்ட முனைந்தது. இதன் பகுதியாக கடன் பெரும் நாடுகள் தங்கள் நாட்டு சந்தைகளை முழுமையாக திறந்துவிட நிர்ப்பந்திக்கப்பட்டன. இத் “திருப்பணிகளில்” IMF -உலக வங்கி கடன்பெறும் நாடுகளின் மீது வர்த்தக தாராளமய கொள்கைகளை திணித்தன.

ஏகாதிபத்திய நாட்டு நிதி நிறுவனங்களில் குவிந்திருந்த பன்னாட்டு நிதி மூலதனம் தங்குதடையின்றி நாடுவிட்டு நாடு பாய்வதை உறுதிப்படுத்தும் வகையில் செயல்பட, வளரும்  நாடுகள் அனைத்தும் நிர்ப்பந்திக்கப்பட்டன. இப்பொதுவான சூழலில், இந்தியாவை பொருத்தவரையில் 1980களில் ஏராளமாக அன்னியக்கடன் பெறப்பட்டது. இந்திய அரசு கடன்மூலம் வளங்களை திரட்டி முதலீடுகளை மேற்கொண்டு வளர்ச்சியை வேகப்படுத்தியது. கடனின் நிபந்தனைகள் இறக்குமதி தாராளமயத்தை நிர்ப்பந்தித்தன.

1990களுக்குள் நுழையும்பொழுது இதே நேரத்தில் சோசலிச முகாம் பலவீனம் அடைந்தது. இந்தியாவின் அன்னியக்கடன் பிரச்சினை, நெருக்கடியாக மாறியது. இது இந்திய ஆளும் வர்க்கங்களை ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் IMF, உலகவங்கி, (பின்னர், WTO என்ற உலக வர்த்தக அமைப்பு), ஆகிய நிறுவனங்களின் பிடியில் சிக்கும் நிலைக்கு கொண்டுவந்தது. 1991 இல் ஒன்றிய ஆட்சிக்கு வந்த நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு நவீன தாராளமய கொள்கைகளை ஏற்றுக்கொண்டு தீவிரமாக அமலாக்கத் துவங்கியது. இக்கொள்கைகளுக்கு தாராளமயம், தனியார்மயம் மற்றும் உலகமயம் என்ற மூன்று முக்கிய அம்சங்கள் உண்டு. இதில் மிகுந்த அழுத்தம் பெறுவது நிதித்துறை தாராளமயமாக்கல். இதனை கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வரும் ஒன்றிய அரசுகள்  முன்பின் முரணின்றி அமலாக்கி வருகின்றன. அதானி வகையறா லீலைகளுக்குப் பின் நிற்கும் நிதித்துறை தாராளமயத்தின் முக்கிய அம்சங்களையும் விளைவுகளையும் ஆழமாக புரிந்துகொள்வது அவசியம்.

நிதித்துறை தாராளமயம்

1980களில் பெரும் வல்லமையாக உருவான பன்னாட்டு நிதிமூலதனம் பொருளாதாரத்தில் அரசுகள் தலையிட்டு செலவுகளை மேற்கொண்டு கிராக்கி நிலையை உயர்த்தி நிறுத்தி வேலையின்மையை குறைக்க முனைவது என்ற கொள்கைகளை கடுமையாக எதிர்த்தது. இரண்டாம் உலகப் போருக்கு பின் சோசலிச முகாம் வலுவாக இருந்தபொழுது மேலை நாடுகளில் வேலையின்மையை கட்டுக்குள் வைக்க வேண்டிய வர்க்க நிர்ப்பந்தம் இருந்தது. 1990களின் துவக்கத்தில் சோசலிச வீழ்ச்சி ஏற்பட்ட பின்பு இந்த நிர்ப்பந்தம் பலவீனமானது. உலகெங்கும் தங்கு தடையின்றி உலா வந்து பங்கு சந்தை, நாணய சந்தை உள்ளிட்ட ஊக வணிக நடவடிக்கைகள் மூலம் லாபம் ஈட்டுவதில் குறியாக இருந்த பன்னாட்டு நிதி மூலதனம், அனைத்து நாடுகளிலும் இதன் நடவடிக்கைகளுக்கு சாதகமான நெறிமுறைகளை உருவாக்குவதில் பெரும் கவனம் செலுத்தியது. இதன் பகுதியாக, பொருளாதாரத்தில் அரசு மேலாண்மை நிறுத்தப்படவேண்டும் என்பதிலும் மூலதனங்கள் மீதான வரிவிதிப்பு குறைக்கப்பட்டு நிதிமூலதன நடவடிக்கைகள் பெருக வேண்டும் என்ற நிலைபாட்டை பொதுபுத்தியில் திணிப்பதிலும்  பன்னாட்டு நிதி மூலதனம் வெற்றியும் பெற்றது. அரசின் செலவை குறைப்பதில் தொழிலாளி வர்க்கம் போராடிப்பெற்றிருந்த சேமநல திட்டங்களையும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல உரிமைகளையும் பறிப்பதும் முக்கிய பங்கு வகித்தன. (தொழிற்சங்கங்களை பலவீனப்படுத்துவது, சோசலிச முகாமை வீழ்த்துவது, வளரும் நாடுகளை கடன்பிடியில் சிக்க வைத்து புதிய காலனீய சுரண்டல் முனைவுகளுக்கு களம் அமைத்துக்கொள்வது ஆகியவையும் இந்த நிகழ்ச்சி நிரலின் பகுதியாக இருந்தன, இருந்துவருகின்றன). அரசை பின்னுக்குத்தள்ளி அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் (தொழில் மூலதனமும் நிதி மூலதனமும் இணைந்து செயல்படும்) பன்னாட்டு நிதி மூலதனம் ஆதிக்கம் வகிக்கும் சூழல் மேலைநாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதும் நிலவுகிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அரசு பின்பற்றிவரும் தாராளமய கொள்கைகள் இதன் பகுதியாக உள்ளது.       

 “சிக்கன நடவடிக்கைகள்” என்ற பெயரில் அரசின் செலவுகளை குறைப்பது, செல்வந்தர்கள் மற்றும் பெருமுதலாளிகள் மீதான வரி விகிதங்களை குறைப்பது, நிதிமூலதன செயல்பாடுகளின் மீதான அனைத்து அரசு கட்டுப்பாடுகளையும் நீக்குவது என்ற பாதை ஊக வணிகம் மூலமே பிரதானமாக லாபம் ஈட்டுவது என்ற நிலையை ஏற்படுத்துகிறது. தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தில் நிகழ்ந்துள்ள மாபெரும் முன்னேற்றம், இணையதளம் உள்ளிட்ட மாற்றங்கள் உலகெங்கும் உள்ள நிதிச்சந்தைகளை இணைத்துவிட்டது. பன்னாட்டு நிதி மூலதனத்தின் ஊகவணிக லாபவேட்டைக்கான களம் உலகம் முழுவதுமே என்று ஆகிவிட்டது. நாடுகள், அவற்றின் அரசுகள் சுயேச்சையான பொருளாதார கொள்கைகளை பின்பற்றுவது மிகவும் கடினமாக்கப்பட்டுள்ளது.

இம்மாற்றங்களின் பின்புலத்தில் இந்திய ஆளும் வர்க்கம் பன்னாட்டு நிதிமூலதன செயல்பாடுகளின் மீதான அரசு கட்டுப்பாடுகளை பெரும்பாலும் நீக்கிவிட்டது. இப்பாதையின் பகுதியாக 1990களில் துவங்கி பொதுத்துறை வங்கிகள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன. அவை பொதுத்துறை வங்கிகளாக நீடித்தாலும் நாட்டின் வேளாண் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு பயன்படுவதற்குப் பதிலாக பங்குச்சந்தையில், இதர ஊகவணிக முனைவுகளில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்படுகின்றன. பங்கு சந்தைக்கும் வணிக வங்கிகளுக்கும் இடையில் இருந்த நெறிமுறை சுவர்கள் இடித்து தள்ளப்பட்டு தனியார் பெரும் நிறுவனங்களின் பங்குகளையே அடமானமாக ஏற்றுக்கொண்டு கடன் வழங்குவது என்பது நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதில் துவக்கத்தில் விதிக்கப்பட்ட சில பாதுகாப்பு நெறிமுறைகளும் பெரும்பாலும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன.  புதிய நிதித்துறை ‘சரக்குகள்’ என்ற பெயரில் சூதாட்ட நடவடிக்கைகள் ஊக்குவிக்கப்பட்டு இவற்றின் மூலம் தனியார் முதலீடுகளை ஊக்குவித்து வளர்ச்சியை சாதிக்க அரசு கொள்கைகள் முற்படுகின்றன. மறுபுறம் நிதிமூலதனம் அரசு தலையீட்டை விரும்பாது என்ற அடிப்படையில் அரசின் கவனம் முழுவதும் தனது செலவை குறைப்பதில் உள்ளது. அரசின் செலவுகளை, மக்களுக்கான உணவு, எரிபொருள், ரசாயன உரம் உள்ளிட்ட மானியங்களை வெட்டுவதன் மூலமும் ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட மக்கள் நல திட்டங்களை வெட்டியும் ஒன்றிய அரசு குறைத்து வருகிறது. மறுபுறம் முதலாளிகள் மற்றும் செல்வந்தர்கள் மீதான வரிவிகிதங்களை தொடர்ந்து குறைத்து, அவர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்ள  ‘ஊக்கம்’ அளித்து, அதன் மூலம் வளர்ச்சியை ஊக்குவிக்க முனைகிறது. தாராளமய கொள்கைகளின் அமலாக்கத்தில் துவக்கத்தில் அரசு அதிகம் கவனம் செலுத்தியது வங்கி மற்றும் காப்பீடு ஆகிய நிதித்துறைகளில் தான்.    இந்த “வளர்ச்சி” பாதை இந்திய, அந்நிய பெருமுதலாளிகளின் நலன்களை மையப்படுத்தியது மட்டுமல்ல. அவர்கள் கையில் பொருளாதாரத்தை ஒப்படைப்பதும் ஆகும். ஆகவே தான் அவர்களை கேள்வி கேட்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள மறுக்கிறது. இதில் அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகளுக்கு இன்றைய ஒன்றிய அரசுடன் தனிப்பட்ட நெருக்கம் இருப்பது ஒரு அம்சம். இந்த அம்சம் இன்றைய ஒன்றிய அரசின் கூட்டுக்களவாணி முதலாளித்வத்தை அம்பலப்படுத்துகிறது. ஆனால் அதுவே பிரதான அம்சம் என்று கருதுவது தவறு. அதேபோல், அதானி விவகாரத்தை ஒரு பங்குச்சந்தை ஊழல் என்று மட்டும் பார்ப்பது பொருத்தமல்ல. ஒட்டுமொத்த தாராளமய கொள்கைகளின் விளைவாக இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் மீண்டும் பன்னாட்டு பங்கு சந்தைகளிலும் இதர நிதி சந்தைகளிலும் அரங்கேறி வருகின்றன. இந்திய, அந்நிய பெருமுதலாளிகளை சார்ந்த வளர்ச்சி பாதையை தாராளமய காலகட்டத்தில் இந்திய ஆளும் வர்க்கங்கள் தொடர்ந்து பின்பற்றி வருகின்றன என்பதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.

அதானி குழுமத்தின் பங்குகளில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற பொதுத்துறை நிதி நிறுவனங்கள் ஏன் முதலீடு செய்தன என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இதனை விவாதிப்பதில் தவறில்லை. ஆனால் நிதிமூலதனம் ஆதிக்கம் செலுத்தும் அரசின் தாராளமய கொள்கை சட்டகத்தில் பொதுத்துறை நிதி நிறுவனங்கள் பங்கு சந்தையில் பங்கேற்று நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும். உண்மையில், மார்க்சிஸ்ட் நிலைபாட்டில் நின்று நாம் எழுப்ப வேண்டிய கேள்வி இது தான்:  பொதுத்துறையை நாசமாக்கி அடிமாட்டு விலைக்கு விற்க வெறிபிடித்து அலையும் ஒன்றிய அரசு அதற்குப் பதில் ஸ்டேட் வங்கி, ஆயுள் காப்பீட்டுக்கழகம் போன்ற நிதி நிறுவனங்கள் வருடம் தோறும் ஈட்டும் உபரிகளை ஏன் பொதுத்துறை நிறுவனங்கள் மூலமாக தொழில் மற்றும் வேளாண் வளர்ச்சிக்கும் கட்டமைப்பு மேம்பாட்டிற்கும் மக்கள் நல முதலீடுகளுக்கும் பயன்படுத்த மறுக்கிறது? நிதித்துறை தாராளமாயமாக்கத்தின் பகுதியாக நீண்டகால தொழில் கடன் அளித்துவந்த ஐடிபிஐ, ஐசிஐசிஐ, ஐஎப்சிஐ போன்ற வளர்ச்சி வங்கிகளை தனியாரிடம் தாரை வார்த்துவிட்டு, பின்னர் அதானி உள்ளிட்ட இந்திய பெரும் தொழில் குழுமங்களுக்கு பொதுத்துறை வங்கிகளை  நீண்டகால கடன் கொடுக்க வைத்துவிட்டு இன்று பத்துலட்சம் கோடிகளுக்குமேல் அவர்கள் கடன்களை ரத்து செய்து வங்கி அமைப்பை திவாலாக்கும் திருப்பணியை ஏன் ஒன்றிய அரசு செய்கிறது?      

இப்போதைய ஒன்றிய அரசின் தனி இலக்கணம் என்பது பெருமுதலாளிகள் ஆதரவு கொள்கைகளை தீவிரமாக பின்பற்றுவதோடு, ஹிந்துத்வா சித்தாந்தத்தை மிக தீவிரமாக அமல்படுத்தும் அரசு என்பது தான். உழைப்பாளி மக்களை பிளவுபடுத்தி ஆளும் வர்க்கங்களை வலுப்படுத்த இத்தந்திரம் பெரும் பங்கு ஆற்றுகிறது என்பதையும் கவனிப்பது அவசியம்.

காலாவதியாகிவிட்ட முதலாளித்துவம்            

இறுதியாக, லெனின்  நூறு ஆண்டுகளுக்கும் முன்பே கூறியபடி, தனது ஏகாதிபத்திய கட்டத்தில் முதலாளித்துவம் என்ற உற்பத்தி அமைப்பு காலாவதி ஆகி வருவதை நாம் இன்று கண்கூடாக காண்கிறோம். 1991இல் சோவியத் வீழ்ச்சிக்குப்பின் வரலாறு முடிந்துவிட்டது, சோசலிசம் தோற்றுவிட்டது, முதலாளித்துவம் இறுதி வெற்றி பெற்றுவிட்டது என்று முதலாளித்துவ ஆதரவு அறிவுஜீவிகள் கொக்கரித்தனர். ஆனால் 2008இல் வெடித்த உலக முதலாளித்துவ நெருக்கடிக்குப்பின், ஒருபுறம் நவீன அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம் நிகழ்ந்துவந்தாலும் மேலை முதலாளித்துவ நாடுகளால் வளர்ச்சியை மீட்டெடுக்க முடியவில்லை.  சுற்றுச் சூழல் உள்ளிட்ட பல புதிய நெருக்கடிகளை முதலாளித்துவம் சந்திக்க இயலாமல் கடும் நெருக்கடியை சந்திக்கிறது. இதற்கு மாறாக, இரண்டாம் உலகப் போருக்குப்பின் வளர்ச்சி பயணத்தை துவக்கிய பின்தங்கிய நாடுகளில் தென் கொரியா மட்டுமே முதலாளித்துவப்பாதையில், அதுவும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தொடர் உதவியுடனும், அரசின் முக்கிய பங்குடனும், பொருளாதார வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட அனைத்து இதர வளரும் நாடுகளிலும் முதலாளித்துவம் தொடர் வளர்ச்சியை சாதிப்பதில் வெற்றி பெற இயலவில்லை. கடந்த பத்து ஆண்டுகளாகவே இந்தியாவிலும் இதர வளரும் நாடுகளிலும் மந்தநிலை தொடர்கிறது. வளர்ச்சி அவ்வப்பொழுது அறிவிக்கப்பட்டாலும் வறுமையும் வேலையின்மையும் தொடர்கின்றன. முதலாளித்துவ பாதையை நிராகரித்து, குறிப்பாக தாராளமய கொள்கைகளை நிராகரித்து, அரசின் மையப்பங்கு, சோசலிச உடமை உறவுகள், திட்டமிட்ட பொருளாதாரம், அதிகாரப்பரவலாக்கம், ஏற்றத் தாழ்வுகளை கட்டுக்குள் வைத்தல் ஆகிய தன்மைகளை கொண்ட சோசலிச வளர்ச்சி பாதை மக்கள் சீனத்திலும் இதர சோசலிச நாடுகளிலும் நிலையத்துக்கு வளர்ச்சி தொடர்கிறது. அம்பானி, அதானி, கூட்டுக்களவாணி முதலாளித்துவத்தை அம்பலப்படுத்துவதுடன், இந்திய முதலாளித்துவ அமைப்புக்கு எதிரான வர்க்க வெகுஜன போராட்டங்களை முடுக்கிவிட்டு, அவற்றிற்கு சரியான அரசியல் வழிகாட்டுதல் அளித்து முன்னேறுவதே நம் முன் உள்ள முக்கிய கடமை. 



Leave a comment